சாயி வாக்கு சத்தியவாக்கு
|
|
சிறையில் பொழிந்த செழுங்கருணை |
|
- மதுரபாரதி|நவம்பர் 2015| |
|
|
|
|
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவை நினைத்த மாத்திரத்தில் மனதில் தோன்றுவது தன்னலமற்ற அன்பு, சேவை இரண்டும்தான். அதனால்தான் நவம்பர் 23ம் தேதி வரும் அவரது 90வது திரு அவதார தினத்தை உலகின் 150 நாடுகளிலுள்ள அன்பர்கள் தம் வீட்டுக் கல்யாணம்போலக் கொண்டாடுகிறார்கள். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரான பகவானின் உணவு பெரும்பாலும் ‘ராகி முத்தா’ எனப்படும் ராகிக்களி உருண்டையும், வேர்க்கடலைச் சட்னியும்தான். அதிலும் அவர் சாப்பிட உட்காருவதும் தெரியாது, எழுந்திருப்பதும் தெரியாது, இரண்டே நிமிடங்கள்தாம். புட்டபர்த்தியிலும் பெங்களூருவிலும் உள்ள உலகத்தரம் வாய்ந்த சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளும், இவ்விரண்டு இடங்கள் தவிர அனந்தப்பூரிலும் உள்ள கல்லூரிகளும் இன்ன பிறவும் அவர் புகழைச் சுமந்துநிற்கின்றன.
இப்போது நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போவது வேறெங்கும் இதுவரை அச்சேறாதது. நான் என் நேரடியாக அறிந்தது.
2010ம் ஆண்டு, பாபா இன்னும் தன் உடலில் இருந்த காலம். தமிழ்நாடு சத்திய சாயி சேவா நிறுவனம் ஒரு சிறப்பான சேவையைத் தொடங்கியது. புழல் சிறையில் இருக்கும் தண்டனைபெற்ற இல்லவாசிகளுக்கு ஆறுதலும், ஆற்றுப்படுத்தலும் தரும் நிகழ்ச்சி அது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறன்று ஒரு சிறிய தொண்டர்குழாம் (சேவாதளம்) அங்கே சென்று துதிப்பாடல்கள் (பஜனை, தேவாரம், பிரபந்தம், சர்வமதப்பாடல்), நல்லுரை, நற்பண்புகளை விதைக்கும் விளையாட்டு என்று இரண்டு மணிநேரம் அவர்களோடு செலவிட்டு வருவர். இல்லவாசிகளும் திருக்குறள், விநாடிவினா என்று தம்மால் இயன்ற நிகழ்ச்சிகளை உற்சாகத்தோடு வழங்குவார்கள். குடும்பத்தைப் பிரிந்து, தொழிலை இழந்து, மரியாதை இழந்து, அன்புகாட்டுவோர் இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் வாழும் அந்தச் சகோதரர்களுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் வழங்கும் இந்தப் பணியில் பங்குபெறும் வாய்ப்பு எனக்கும் அருளப்பட்டது.
நாங்கள் போகத் தொடங்கிய சில மாதங்களிலேயே பல அற்புதங்கள் அங்கே நடந்தன. முக்கியமாக, பாபா கூறுவதுபோல, ‘மனித இதயத்தின் உயர்மாற்றம்தான் நான் செய்யும் பெரிய அற்புதம்’ என்கிற அந்தவகை மாற்றங்கள் பார்க்கப் பார்க்க ஆனந்தம் கொடுப்பனவாக இருந்தன. இல்லவாசிகளையும் ‘சாயி சகோதரர்கள்’ என்று அழைத்தபடி அவர்களுடன் இரண்டு மணிநேரம் போவதே தெரியாமல் நாங்கள் செலவிடுவோம். அதில் ஒரே ஒரு அற்புதத்தை இங்கே சொல்லப்போகிறேன்.
ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆயுள்தண்டனைக் குற்றவாளி. வயது முப்பதுக்கும் கீழே. சாயி தொண்டர்கள் நடத்தும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்கத்தான் வரத் தொடங்கினார். அவருக்கு பாபாவைப்பற்றிப் பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை. சிறைக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய 13 வயது மகள் ராதாவின்மீது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ராமு உயிரையே வைத்திருந்தார். மனைவி இல்லை. சகோதரியின் வீட்டில் ராதா தங்கிப் படித்துக்கொண்டிருந்தாள். சகோதரி, அவள் கணவர் மற்றும் நண்பர்கள் வரும்போதெல்லாம் ‘என் மகளைக் கொண்டுவந்து எனக்குக் காட்டுங்கள்’ என்று கேட்பார், கெஞ்சுவார், மன்றாடுவார். யாரும் அதற்குச் செவிசாய்க்கவில்லை. தந்தையின் ஏக்கம் அதிகமாகிக்கொண்டே வந்தது.
மற்றொரு சிறைவாசியான பட்டேல் என்பவருக்கு நடந்த சில அற்புதங்களை ராமு பார்த்தார். (அவற்றைப் பின்னர் ஒருசமயம் விவரிப்போம்). "நான் மனிதர்களை எல்லாம் கேட்டுப் பார்த்துவிட்டேன். என் மகள் வரவில்லை. பாபா இவர்களுக்கெல்லாம் அருள் செய்கிறாரே, அவரைக் கேட்டுப் பார்க்கலாம்" என்ற எண்ணம் ராமுவுக்குத் தோன்றியது. அதேபோல மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். அது ஒரு சனிக்கிழமை. |
|
மறுநாள் ஞாயிறு. மதிய உணவு முடித்தபின் தனியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் ராமு. மனமெல்லாம் மகளைப் பார்க்கும் ஏக்கம். கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. அப்போது ஒரு குரல், "அப்பா, நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? நான் வந்துட்டேன்ப்பா!". இந்தக் குரல் அவர் கேட்ட 10 வயது ராதாவின் குரலல்ல, 13 வயது மகளின் குரல்! அதிர்ந்து உட்கார்ந்தார் ராமு. மகளையே நினைத்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பகற்கனவோ! இப்படி யோசித்துக் கொண்டிருந்ததில் ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை.
அப்போது மற்றொரு இல்லவாசி வந்து "ராமு உன்னைப் பாக்க யாரோ வந்திருக்காங்களாம்பா" என்று குரல் கொடுத்தார். அன்றைக்கு விசிட்டர் நாள். சிறைவாசிகளைப் பார்க்க மற்றவர்கள் வரலாம். ராமு எழுந்து ஓடிப்போனார்.
மூன்று இரும்புகேட்டுகளைத் தாண்டிப் போனால்தான் வந்திருப்பவரைப் பார்க்கலாம். இரண்டாவது கேட்டைத் தாண்டிய உடனேயே தன் மச்சானோடு மகள் நிற்பதைப் பார்த்துவிட்டார் ராமு. மகள் உரக்கக் கூவினாள், "அப்பா, நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? நான் வந்துட்டேன்ப்பா!" சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தபோது அவர் காதில் விழுந்த அதே கேள்விகள், அதே வரிசையில், அதே குரலில்! பாபாவிடம் பிரார்த்தனை செய்தது வீண் போகவில்லை. ‘நான் உன் மகளை அழைத்து வந்திருக்கிறேன்’ என்பதற்கு அடையாளமாக மகள் கேட்கப்போகும் கேள்விகளை முன்கூட்டியே அவருக்கு அதே குரலில் கேட்கச் செய்துவிட்டார்.
இரண்டாவது கேட்டின் அருகேயே நின்று விக்கி விக்கி அழுதார் ராமு. மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர் அழுகிறார் என்று நினைத்த நண்பர்கள், "போப்பா! போயி பொண்ணுகிட்ட பேசு" என்றார்கள். இவரோ பகவான் இந்தச் சிறைக்குள் எனக்குக் கருணை பொழிந்தாரே என்று நினைத்து அழுதுகொண்டிருந்தார். அடுத்த வாரம் நாங்கள் சாயி நிகழ்ச்சிக்கு அங்கே சென்றபோது இதை விவரித்த ராமு என்கிற அந்தப் பாசமுள்ள தந்தையால் மீண்டும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
மதுரபாரதி |
|
|
More
சாயி வாக்கு சத்தியவாக்கு
|
|
|
|
|
|
|