|
இணையத்தில் தஞ்சாவூர் வலை |
|
- சரவணன்|ஏப்ரல் 2002| |
|
|
|
"தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு சோழ, நாயக்க மற்றும் மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். இந் நகரினுடைய பெயர்க் காரணம், தஞ்சம் என்னும் அரக்கன் இந்நகரையும் சுற்றுப் புறங்களையும் சூரையாடினான். அவ்வரக்கனை விஷ்ணுவும் ஸ்ரீ ஆனந்த வள்ளி அம்மனும் இணைந்து வதம் செய்தனர். மரணத் தறுவாயிலிருந்த அவன் கேட்டுக் கொண்டதற் கிணங்க அவனுடைய பெயரால் தஞ்சாவூர் என வழங்கப்பட்டது" என்று தஞ்சாவூரைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் இந்தத் தளம் பார்வையாளர்களை வரவேற்கிறது.
தமிழகத்தின் மிகப் புகழடைந்த நகரங்களுள் தஞ்சாவூருக்குச் சிறப்பான இடமுண்டு. இராஜ ராஜ சோழன் ஆண்ட ஊர் இது. தமிழர்களின் நுண்கலை, இசை, நடனம் ஆகியவற்றைப் போற்றி வளர்த்த ஊர் தஞ்சாவூர்.
தமிழ் ஓவிய மரபில் தஞ்சைப் பாணி ஓவியங்களுக்கென்று தனி இடம் உண்டு. சோழர்களின் பெருநகரமான தஞ்சாவூர் ஆதி காலந் தொட்டு தமிழ் வளர்த்து வந்ததை யாவரும் அறிவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவ்வூரில் அமைந்து தமிழ் வளர்க்கும் சீரிய பணியை மேற்கொண்டு வருகிறது.
தமிழர்களின் சிற்பக் கலையின் உச்சத்தை தஞ்சாவூர் பெரிய கோயில் இன்னும் உலகுக்குப் பறைசாற்றியபடி சிறந்த சுற்றுலாத் தலமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய பெருஞ் சிறப்புகள் பெற்ற தஞ்சாவூரை இணையத்தில் 'தஞ்சாவூர் வலை' (www.thanjavur.com) எனும் பெயரில் இடம் பெறச் செய்துள்ளார்கள். இந்தத் தளத்தின் வழியாக தஞ்சாவூரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரைப் பற்றிய தகவல்கள், தமிழ் நாட்டைப் பற்றிய தகவல்கள், தமிழ் மொழி குறித்த தகவல்கள், சுற்றுலா குறித்த தகவல்கள் என நான்கு பிரிவுகளினடிப்படையில் இந்தத் தளம் விவரங்களை அள்ளித் தருகிறது. மேற் கண்ட நான்கு பிரிவுகளிலும் பிற இணையத் தளங்களுக்கான இணைப்புகள் தரப்பட்டுள்ளன.
தமிழ் வானொலி, இலக்கியம், இசை, நாட்டியம், திரைப்படம், சமையல், போன்ற தமிழர்களின் நுண்கலைகளை விளக்கும் இணையத் தளங்களுக்கான இணைப்புகள் தரப்பட்டுள்ளன. மேலும் ஆனந்த விகடன், தினகரன், தினமலர், தினமணி, கல்கி, கணையாழி, குமுதம், குயில் மாணவர் மாத இதழ், மலேசிய நண்பன், நக்கீரன், தினபூமி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தமிழ் நாள்காட்டி, விடுதலை, தமிழ் ஈழச் செய்திகள், இந்தியா டுடே, இந்தியா வேர்ல்டு, உயர்வோம்... ஆகியவை உள்ளிட்ட மிகப் பெரும்பாலான தமிழ் இதழ்களுக்கான இணைய இணைப்புகள் வாசகர்கள் வசதி கருதி இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தமிழ் வளர்ப்பது தவிர்த்து வெளிநாடுகளில் தமிழ் வளர்ப்பது குறித்த இணையப் பக்கங்களுக்கும் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இந்த வகையில் கலிபோர்னியா பல்கலைக் கழகம் பெர்கிளி, தென்னாப்பிரிக்க தமிழர்களின் வலை ஆகிய இணையத் தளங்களின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.
தமிழ் தகவல் தொழில் நுட்பப் பக்கங்கள், அகில இந்திய இணைய வானொலி, அகில இந்திய வானொலி, பிபிசி தமிழ்ச் சேவை, சிங்கப்பூர் வானொலி, தமிழ்ச் செய்திப்பக்கம் ஆகியவையும், சரஸ்வதி மகால் பற்றிய செய்தி களும், உலகத் தமிழ் வலை, நியூசிலாந்தில் தமிழர்கள், தமிழ் திருக்குறள், பாரதியார் பாடல்கள், ராசா முத்தையா ஆராய்ச்சி நூலகம், கண்ணதாசன் படைப்புகள், கலைஞர் படைப்புகள் போன்றவையும் இந்தத் தளத்தில் இடம் பெற்றுள்ளன.
தஞ்சை தமிழை மட்டும் வளர்க்கவில்லை; தமிழர் இசையையும் வளர்த்தது என்னும் பெருங் கூற்றின் படி இசை தொடர்பான பக்கங்களும் இந்தத் தளத்தில் இடம் பெற்றுள்ளன. கர்நாடக இசை, எம்.எஸ்.சுப்புலட்சுமி பக்கம், கர்நாடக இசைத் தொகுப்பு, ஆரியக்குடி ராமானுச அய்யங்கார் பக்கம், முத்துச்சாமி தீட்சிதர், மகாராசா சுவாதி திருநாள், தஞ்சாவூர் இசைக் கலைஞர்கள், வீணை வாசித்தல், தியாகராசரின் வாழ்க்கையும் பாடல்களும், தமிழ் கிராமிய மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவைகள் தொடர்பான இணைப்புகள் தரப்பட்டுள்ளன.
பரதநாட்டியம், தமிழ்த் திரையிசைப் பாடலா சிரியர்கள், இசையமைப்பாளர்கள், தமிழ்த் திரப்படம், இளையராஜாவின் சிறப்புப் பக்கம் போன்ற பக்கங்கள் படிப்பவர்களுக்கு முழுமையான தகவல்களைத் தர முயற்சியளிக்கின்றன.
தமிழ் சமையல் குறிப்பு, இந்தோலிங்க் சமையல் குறிப்பு போன்றவைகள் இல்லத் தரசிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, சிவகாசி, விருதுநகர், பாண்டிச்சேரி, திருப்பூர், ஏற்காடு, கொடைக்கானல், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு, திருநெல்வேலி, ராஜபாளையம் போன்ற ஊர்களுக்கான இணையத் தளங்களின் இணைப்பு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களது சொந்த மண் குறித்த தகவல் களை வாசகர்கள் எளிதாகப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக தமிழ்நாட்டுச் சுற்றுலாத் துறையின் அதிகாரப் பூர்வமான இணையத் தளத்தின் இணைப்பும், தமிழ்நாட்டின் பிற அரசு அலுவலகங்களின் அதிகாரப்பூர்வமான இணையத் தளங்களின் இணைப்பும் தரப்பட்டுள்ளன.
தமிழ் நாடு என்று வந்து விட்டால் அரசியல் கட்சிகள் இல்லாமல் இருக்குமா? இந்தத் தளத்தில் அதுவும் இருக்கின்றன. அனைந் திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்ற கட்சிகள், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. |
|
சுற்றுலாப் பயணிகளுக்குப் பயன்படும் விதத்தில் தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள், போக்குவரத்து வசதிகள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சுற்றுலாத் தலங்களைப் பற்றிய சிறு குறிப்புகள் என உபயோகமான பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
இடங்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் மிக உபயோகமாக இருக்கின்றன. எடுத்துக் காட்டுக்கு ஒன்று; 'சரசுவதி மகால் நூலகம். இந்தியாவில்லேயே அரிய ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து வரும் ஒரு உன்னத நூலகமாகும். இந் நூலகம் கி.பி 1700-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந் நூலகத்தில் 44,000 ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் உள்ளன. சுமார் 80 சதவிகித ஓலைச் சுவடிகள் சமஸ்கிருத மொழியில் உள்ளன. இவற்றில் சில மிக அரியவைகளாகும். தமிழில் மருத்துவம் மற்றும் சங்க இலக்கியத்தின் குறிப்புகள் உள்ளன' என்று விலாவரியாக அந்தக் குறிப்பிட்ட இடங்களைப் பற்றி விளக்கியிருப்பது மிகுந்த பயனளிக்கக் கூடிய ஒன்றாகும்.
மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்கள் www.thanjavur.com என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தஞ்சாவூர் வலை இணையத் தளத்திலிருந்து...
"மகாபாரத காலத்திற்கு முன்னரே தமிழகத் தில் சோழ, சேர மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். சோழ நாடே தமிழகத்தில் உள்ள மற்ற இரு நாடுகளையும் விட இலக்கியம், கலை, விஞ்ஞானம், மெய் ஞானம் ஆகிய வற்றைத் தொன்று தொட்டு ஆதரித்து வளர்த்து வந்திருக்கிறது. சோழ நாட்டின் தலை நகர், எப்பொழுதும் ஒரே இடத்தில் இருந்ததில்லை. மனுநீதிச் சோழன் காலத்தில் திருவாருர் தலைநகராயிருந்தது. அதன் பின்னர் காவிரிப் பூம்பட்டினம் தலை நகரமாயிருந்தது. பின்னர் உறையூர், பழை யாரை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் தலைநகரமாக மாறின.
தஞ்சாவூரை பெரும்பிடுகு முத்தரையனிடம் இருந்து விஜயாலய சோழன் (கி.பி 846 - 880) கைப்பற்றியதாக வரலாற்று வல்லுனர்கள் நம்புகின்றனர். ராஜராஜ சோழ காலம் வரை தஞ்சாவூர் தழைத்தோங்கியிருந்தது. சோழ மன்னர்கள் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு 13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தனர். ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். அதன் பின்னர் சோழ ஆட்சி வலுவிழந்தது. தஞ்சையை பாண்டியர்கள் கைப்பற்றினர்.
விஜய நகர மன்னர்கள் தஞ்சாவூரை 14-ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினர். அப்போதைய தளபதியான செவப்ப நாயக்கர் (கி.பி 1549-1572), தஞ்சையில் நாயக்கர் ஆட்சியை எற்படுத்தினார். தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு நாயக்க மன்னர்கள் சுமார் நூற்று இருபத்தியைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். நாயக்க மன்னர் விஜயராகவனை மதுரையை ஆண்ட சொக்கநாதன் கி.பி 1662-இல் தோற்கடித்தார். அதன் பின்னர் பாண்டிய தளபதி அழகிரிபதி நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். நாயக்க மன்னர் விஜயராகவனின் மகன் செங்கமலதாஸ் ஆட்சியை பிடிக்க பீஜப்புர் மன்னரின் உதவியை நாடினார்.
சத்ரபதி சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் தான் தளபதி வெங்காஜி அழகிரியைத் தோற்கடித்தார். பின்னர், நாயக்கர்களிடையே ஒற்றுமை இல்லாததால் கி.பி 1676-ஆம் ஆண்டு ஆட்சியை தன்வசம் ஆக்கிக் கொண்டார். தஞ்சாவூரில் மராட்டிய மன்னர்கள் சுமார் நூற்று எழுபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். முதன்முதலாக ஆங்கிலேயர்கள் கி.பி 1749-ஆம் ஆண்டு தஞ்சை ஆட்சியில் தலையிட்டனர்.
கி.பி 1758-ஆம் ஆண்டு பிரான்சுக்காரர்கள் தஞ்சையைத் தாக்கிக் கைப்பற்றினர். ஆனால், கி.பி 1773-ஆம் ஆண்டு மீண்டும் தஞ்சாவூர் ஆங்கிலேயர் வசம் ஆனது. தஞ்சாவூர் கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்பின் கீழானது. தஞ்சாவூர் கி.பி 1799-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழானது. அப்போதைய மன்னரான இரண்டாம் சர போஜிக்கு தஞ்சாவூர் கோட்டையையும் அதன் சுற்றியுள்ள இடங்களையும் அவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தந்தது. அவருக்கு அடுத்து ஆண்ட மன்னர் சிவாஜி வாரிசு இல்லாமல் கி.பி 1855-இல் காலமானார். அதன் பின் தஞ்சாவூர் ஒரு துளி இரத்தம் சிந்தாது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆட்சியின் கீழானது. இது போல்தான் மராட்டியர்களும் நாயக்கர்களிடம் இருந்து அரசைக் கைப்பற்றினர்.
தஞ்சையை ஆண்ட மன்னர்களில் சோழர்களே தஞ்சாவூருக்கு பெரிய கோவிலெனும் அற்புத பிரகதீஸ்வரர் ஆலயத்தை அர்ப்பணித்திருக்கின்றனர். உயர்ந்த கோபுரத்தை உடைய இக்கோவில் சிவகங்கை கோட்டைக்குள் உள்ளது. இக்கோட்டையை மன்னர் செவப்ப நாயக்கர் கட்டியதாகக் கருதப்படுகிறது. ஊரைச் சுற்றியுள்ள பெரிய கோட்டையையும் அரண்மனையையும் மன்னர் விஜயராகவன் கட்டினார்.
சரவணன் |
|
|
|
|
|
|
|
|