|
மனிதன் மனிதனாக இருக்க ஆன்மிகம் அவசியம் |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2008| |
|
|
|
மனிதனால் மட்டுமே இந்த பூமியைச் சூறையாட முடியும். விலங்குகளை அழிக்க முடியும். ஆனால் மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம்.
கனிமொழி
***
பல்வேறு பகுதிகளின் நடை, மண்வாசனையின்படி யாரும் பேசலாம். ஆனால், அதுவே எழுத்து நடையாக மாறிவிடக் கூடாது. பேச்சு நடை என்பது அடுத்தவர்களைப் போய்ச் சேருவதற்காக மட்டுமே! ஆனால், எழுத்து நடை என்பது கோடிக்கணக்கான மக்களை எட்டுவதற்காக.
க.அன்பழகன்
***
திருக்குறள் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்குப் போய்ச் சேரணும்னு ஒரு புது முயற்சியில் ஈடுபட்டிருக்கோம். அதாவது பாடகர் ப்ளாசேயோடு சேர்ந்து கர்நாடிக் ஸ்டைலில் தமிழிலேயே பாடி, அதை இங்கிலீஷ் ராப்பில் கொண்டுவரப்போகிறோம். விரைவில் அதைக் கேட்கலாம். இந்த ஆல்பத்தைத் தயாரிப்பது மட்டுமே நான்.
ஏ.ஆர். ரஹ்மான்
***
காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்த வெற்றி காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி.யின் கொள்கைகளுக்கோ, கோட்பாட்டுக்கோ கிடைத்த வெற்றியில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் எப்படியாவது வாக்குகளைப் பெற்று வெற்றி பெறவேண்டும் என்பதில்தான் இருந்ததே தவிர மக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை.
மாயாவதி
***
காதலில் தோல்வியுற்ற ஒரு பெண்ணுக்கு சக்தி கொடு என்பதற்காகவே வல்லமை தாராயோ என்று பாரதியின் பாடல் வரியைத் தலைப்பாக வைத்தேன். சிறு வயதிலிருந்து பாரதியார்மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. என்னுடைய படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டி நாங்கள் கத்திரி வைக்காத ஒரு படம் இது என்றார்கள்.
மதுமிதா, இயக்குனர்
*** |
|
அவர் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. எளிமையான குடும்பம். நடிக்கச் சென்னை வரும் போது அவரிடம் கையிருப்புகூட இல்லை. அதனால் ஏழை மக்கள் படும் கஷ்டத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்து அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று மனசார நினைக்கிறார். அவர் மனதில் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற வேண்டும் என்ற எண்ணமும் நிறையவே உண்டு. தமிழகத்தைப் பசுமைமிக்க நாடாக மாற்ற வேண்டும் என்றும் அவரின் ஆழ்மனதில் நிறைய ஆசைகள் உண்டு. இந்தியா ஏழைநாடு இல்லை. ஏழை ஆக்கப்பட்ட நாடு. இதுபோன்ற சூழலை மாற்றத்தான் அவர் அரசியலில் ஈடுபட்டார். அவர் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து அவர் மனைவியாக நான் அரசியலில் அவருக்கு ஒரு பக்கபலமாக இருப்பேன்.
பிரேமலதா விஜயகாந்த்
***
தமிழ்நாட்டில் 34 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருந்தது. மதுக் கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது.
டாக்டர். ராமதாஸ்
***
குழந்தையாக இருந்தபோது ஸ்டாலின், ஊக்கை விழுங்கிவிட்டார். இப்போதுதான் தெரிகிறது, அவர் ஊக்கை விழுங்கவில்லை; ஊக்கத்தை விழுங்கியுள்ளார் என்று. மேயராக இருந்தார்... அமைச்சராக இருக்கிறார்... இன்னும் என்னென்னவோ ஆகப்போகிறார்.
மு.கருணாநிதி
***
வரும் தேர்தலில் நாங்கள் பிரசாரம் செய்ய தேவையே இல்லாமல் எங்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.
ஜெயலலிதா
***
மன்னராட்சி என்ற போதிலும், கண்ணகி அரசவைக்குள் நுழைந்து அரசனைக் கேள்வி கேட்க முடிகிறது. ஆனால், மக்களாட்சியில் எந்தவொரு அமைச்சரையும் மக்கள் கேள்வி கேட்க முடியாத நிலைதான் உள்ளது. அமைச்சர்கள் அதிகாரத்தைச் சொந்த நலனுக்காக பயன்படுத்துபவர்களாக, அறம் பிழைத்தோராக இருக்கின்றனர்.
பழ.கருப்பையா, இலக்கியவாதி, பேச்சாளர் |
|
|
|
|
|
|
|