|
நாம் கட்டாயம் ஜெயித்தாக வேண்டும் |
|
- |ஏப்ரல் 2003| |
|
|
|
இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஒரு நாள் எனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காகப் போயிருந்தேன். அப்போது பள்ளி முதல்வர் சொன்ன சில விஷயங்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. போட்டிக்கு முந்தைய தினம், 2ஆம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை அவரிடம் வந்து, ''நாம் கட்டாயம் அந்தப் போட்டியை ஜெயித்தாக வேண்டும்'' என்று சொன்னதாம்.
''எதற்காக நாம் அந்தப் போட்டியை ஜெயிக்க வேண்டும்'' என்று கேட்டிருக்கிறார் முதல்வர். ''ஏனென்றால் அது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி. அவர்கள் நம் எதிரிகள்'' என்றதாம் குழந்தை.
இந்த வெறுப்பு இன்றைய தலைமுறையினரிடம் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதன் வேர்கள் இன்னும் ஆழமாக இறங்குகின்றன. முதலில் அரசியல்வாதிகளை இந்தப் பிரச்சனைகளிலிருந்து தள்ளி வைக்க வேண்டும். பிறகு இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
உமர் அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர், மார்ச் 19 'இந்தியா டூடே' இதழ் கட்டுரையில்.
*****
இந்தியப் பொருள்கள் சர்வதேசத் தரத்துக்கு இல்லாததால், சர்வதேசச் சந்தையில் நம்மால் போட்டியிட இயலவில்லை. ஜப்பானியர்களிடம் காணப்படுவதைப் போன்ற தொழில் ஈடுபாட்டைப் பெரும்பாலான இந்தியத் தொழிலாளர்களிடம் காண முடிவதில்லை.
தொழிற்சாலையின் செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாத தொழிலாளர்களால் தரமான பொருள்களைத் தரமுடியாது.
பி. எஸ். ராமமோகன்ராவ், தமிழக ஆளுநர், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில்.
***** |
|
தமிழகத்தில் ஒரு பெரியார், ஓர் அண்ணா, ஓரு எம்.ஜி.ஆர். தான் தோன்றினார்கள். ஆனால் மூவரும் சேர்ந்த வடிவம் தான் ஜெயலலிதா. நூறு ரூபாய் நோட்டால் பிச்சைக்காரர்கள் கூடகாது குடையலாம் என்ற அளவுக்கு பணப்புழக்கத்தை உருவாக்கியவர் முதல்வர்.
கா. காளிமுத்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவர், தருமபுரி அரசுவிழாவில் பேசிய போது.
*****
பொதுவாக என்னுடைய எழுத்துக்களுக்கு முன்னோடி அறிஞர் அண்ணா. திரைக்கதை எழுதுவதற்கும், வசனங்கள் அமைப்பதற்கும் தேவையான பயிற்சியை சேலம் மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் அவர்களிடமும், கோவையில் ஜூபிடர் பிக்சர்ஸ் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களிடமும் பெற்றேன்.
மு. கருணாநிதி, திமுக தலைவர் திரைப்பட வசனகர்த்தா, மார்ச் மாத 'தீராநதி' இதழுக்கு அளித்த பேட்டியில்.
*****
பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு என்று தனியாக ஆதரவுக் கட்சி எதுவும் கிடையாது. அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். சாத்தான்குளத்தில் அதிமுக எப்படி ஜெயித்தது என்று எனக்குத் தெரியாது. இந்தியா மிகப் பெரிய குடியரசு. ஆனால் மக்கள் இன்னும் தெளிவடையவில்லை. பெரும்பாலும் படிப்பறிவில்லாத மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள். இந்தக் குடியரசு எப்படி நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கமுடியும்?
தேர்தல் வெற்றியைப் பல காரணங்கள் தீர்மானிக்கின்றன. கிறிஸ்தவ மக்கள் பெரும்பாலும் தங்கள் ஊர் மதத் தலைவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். அப்படிக் கேட்டு ஓட்டு போட்டிருக்கலாம். அல்லது ஓட்டே போடாமல் இருந்திருக்கலாம். அவர்கள் பெயரில் வெளியிலிருந்து ஓட்டு வந்து விழுந்திருக்கலாம்.
பிஷப் ஆரோக்கியசாமி மதுரை ஆர்ச் பிஷப் ரோமன் கத்தோலிக், 'ஜூனியர் விகடன்' இதழுக்கு அளித்த பேட்டியில்.
*****
மாநிலங்களின் தற்போதைய நிதிநிலை சீர்குலைவுக்கு மூலக்காரணம் மத்திய அரசுதான். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தவரை நிதிநிலை எப்போதும் கட்டுப்பாட்டில் இருந்தது. வருவாய்க்கு உட்பட்டுத்தான் செலவு இருந்தது. பிரிவினை, பஞ்சம், பட்டினி, சீனப்படையெடுப்பு, பாகிஸ்தான், வங்கதேசப்போர் ஆகிய நிகழ்வுகளின் போதும் இதில் மாற்றம் ஏற்படவில்லை. வருமான வரம்புக்கு உட்பட்டுத்தான் செலவு செய்வது என்பதில் நிதியமைச்சர்கள் தீர்மானமாக இருந்தனர்.
இரா. செழியன், முன்னாள் எம்.பி. தமிழக மூத்த அரசியல்வாதி. |
|
|
|
|
|
|
|