|
|
சரஸ்வதி தேவி மட்டும் தனியாக மூலஸ்தானத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கோவில் கூத்தனூரைத் தவிர வேறு எங்கும் கிடையாது எனச் சொல்லப்படுகிறது.
புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் ஒட்டக்கூத்தரால் இக்கோவில் கட்டப்பட்டது. கூத்தரால் இவ்வூரும் ஆலயமும் உண்டானதால் கூத்தனூர் என்று அழைக்கப்படுகிறது. ஒட்டக்கூத்தர் சிறந்த கவிபாடும் திறன் கொண்டவர். அன்னை சரஸ்வதியின் பரிபூரண அருளைப் பெற்று 'வரகவி'யாக வேண்டும் என நினைத்து சரஸ்வதியை ஆவாஹனம் செய்து வழிபட தனிமையான இடம் தேடி அரசிலாற்றங்கரையைத் தேர்ந்தெடுத்துத் தவம் செய்தார்.
கூத்தரின் பக்திக்கும் தவத்துக்கும் மகிழ்ந்து அன்னை சரஸ்வதிதேவி இளநங்கை உருவில் கூத்தரின் முன் தோன்றி ஆசீர்வதித்து தனது நாவில் இருந்த தாம்பூலத்தை கூத்தரின் வாயில் உமிழ்ந்து மறைந்தார். அன்னையின் பேரருளைப் பெற்ற கூத்தர் வரகவியானார். 'வரகவி' என்றால் கவி பாடியதும் நினைத்தது உடனே நடக்கும் என்பர். புகழேந்திப் புலவர், ஒளவையார், கம்பர் ஆகியோர் கூத்தரின் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ஆவார்கள். கம்பரும் அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர். கம்ப ராமாயணம் எழுதிப் புகழ் பெற்றவர்.
ஒட்டக்கூத்தர் தனக்குக் காட்சி கொடுத்த சரஸ்வதிக்கு தனி ஆலயம் எழுப்ப உறுதி பூண்டார். அப்போது வாழ்ந்த சோழ மன்னனும் உதவி செய்யவே, அரசிலாற்றங்கரையில் அழகிய ராஜகோபுரத்துடன் கூடிய கோவில் உருவானது.
தேவி கோவில் மூலஸ்தானத்தில் நான்கு கரங்களுடன் கையில் வீணையை ஏந்தி அமர்ந்துள்ளார். முருகன், சிவன், அம்பாள், விநாயகர் சன்னிதிகளும் உள்ளன. இருப்பினும் இக்கோவிலில் சரஸ்வதியே பிரதானம். கூத்தருக்கும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. |
|
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் சென்று, அங்கிருந்து மயிலாடுதுறை பஸ் மார்க்கத்தில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. அவ்வூருக்கு மேற்கே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூத்தனூர். சிறிய கிராமம் என்றாலும் பசுமை நிறைந்து நன்செய், புன்செய்ப் பயிர்கள் செழித்து தென்னை, மா, விண்ணைத் தொடும் மூங்கில்களுடன் விளங்குகிறது.
இக்கோவிலில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக சரஸ்வதி விழா, கலைமகள் விழா என்ற பெயரில் நடைபெறுகிறது. கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்காக வருடாந்திரத் தேர்வு, பொதுத் தேர்வு சமயங்களில் கோவிலில் யாகங்கள் செய்யப்படுகின்றன. கோவில் வாசல் கடைகளில் சரஸ்வதி படத்துடன் பேனாக்களும் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கி அன்னையின் பாதத்தில் வைத்துத் தேர்வு எழுத எடுத்துச் செல்கின்றனர்.
சரஸ்வதி தேவியின் மூலமந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் நல்ல நினைவாற்றலும் கவிபாடும் திறன், கல்வி, பணம், புகழ், பதவி, 16 செல்வங்கள் அனைத்தும் கிட்டும் என்பது திண்ணம். கூத்தனூரில் அமர்நத சரஸ்வதியை வெள்ளைத் தாமரை மலரால் அர்ச்சனை செய்திட ஞானம், பதவி உயர்வு, செல்வம், புகழ், கீர்த்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது. தன்னை நம்பிய அடியவருக்கு தயை புரிந்து தக்க தருணத்தில் காத்திடும் சரஸ்வதியின் திருவடியை நாமும் நம்பிக்கையுடன் பணிவோம்.
சீதா துரைராஜ் |
|
|
|
|
|
|
|