|
|
|
|
மலையேறுவது ஒருவிதத்தில் கடினமானது என்றால் இறங்குவதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதிலும் சரியான பாதையில்லாத செங்குத்தான மலைச்சரிவில் இறங்கும் அனுபவத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் இருக்கிறாரில்லையா. ஆக்சுவலி - ரெண்டு பிள்ளையார்கள்! மலையடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகர் ரொம்ப சமர்த்து. சுற்றி பரபரப்பான கடை கண்ணிகள், பத்துப் பதினைந்து அடி தள்ளி செருப்பு வைக்குமிடம், எப்போதும் தேனீக்களாக மக்கள், வாகனங்களின் பேரிரைச்சல், அவரைத் தாண்டி சில படிகள் ஏறினால் இன்னொரு சிறிய தெரு வரும்; அந்தத் தெருவுக்குச் செல்வதற்காகச் செருப்புகளைக் கையிலெடுத்துக்கொண்டு கன்னத்தில் தப்பு போட்டுக்கொண்டு மாணிக்க விநாயகரைச் சுற்றியேறிச்செல்லும் மக்கள் என்று ஏகக் களேபரத்திற்கு நடுவில் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் அவர். அந்தத் தெருவில் இடப்பக்கம் திரும்பிக் கொஞ்சதூரம் நடந்தால் சில மாடுகள், அடிபம்பு, விளையாடும் சிறுவர்களைக் கடந்து மலையைக்குடைந்து பல்லவர்கள் அமைத்திருக்கும் அமைதியான குகைக்கோவில்! ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒட்டுவேலை எதுவுமில்லாது கல்லைக்குடைந்து தூண்களெல்லாம் செதுக்கி அமைக்கப்பட்ட அக்கோவிலை ஒரு வார்த்தை பேசாது அமைதியாக அணுஅணுவாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
மாணிக்க விநாயகரைத் தாண்டி யானையிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு (நாணயங்கள் சில்லறையாக வைத்திருக்கவும். உஷாரான யானை அது!) நுழைவுச்சீட்டு வாங்கி 350 படிகள் - நம்மைத் தாண்டித் தாவித்தாவிப் படுவேகமாக முந்திக்கொண்டு ஏறும் வானர....ஸாரி....வாண்டுகளைப் பார்த்துப் பொறாமைப் பட்டுக்கொண்டே - மூச்சிறைக்க நின்று நின்று ஏறி, தாயுமானவரைத் தாண்டி கைப்பிடிக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஒழுங்கற்ற கடைசிக் கட்டப் படிகளையும் ஏறிக்கடந்தால் உச்சிப் பிள்ளையார். தாயுமானவர் கோவில் உள்ளே மேற்கூரையிலிருந்து (கற்கூரை) தொங்கும் ஒரே கல்லிலான சங்கிலிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு பெரிய மலையில் எளிமையாகச் சிறிதாக உச்சிப்பிள்ளையார் கோவில். சுற்றிலும் திருச்சி மாநகரம், தூரத்தில் இக்கரையிலிருந்து அக்கரைவரை கரைபுரண்டு மணல் ஓடும் காவிரி, அதன் மேல் வெட்டியாக வாகனங்களுக்கும், ரயில்களுக்கும் எனச் சில பாலங்கள், அதைத் தாண்டித் தென்னை, மா, வாழை, நெல் வயல் என்று பச்சைப் பட்டாடை உடுத்தி ஜொலித்துக் கொண்டிருந்த, இப்போது புற்றீசல் கட்டடங்களால் பச்சைக் கோவணத்தை அணிந்திருக்கும் ஸ்ரீரங்கம். சுற்றி நடக்கும் எல்லா அழிவுகளையும், இழிவுகளையும் பார்த்துக்கொண்டு "நடக்கட்டும் நடக்கட்டும்" என்று அலட்சிய பாவனையுடன் காவிரி நோக்கிக் கம்பீரமாக நிற்கும் அரங்கநாதர் கோவிலின் ராஜகோபுரம் என்று வீசியடிக்கும் காற்றில் பறந்துவிடாமல் அழுந்த நின்றுகொண்டு பார்த்து ரசிக்கலாம். பிள்ளையாரைப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கத் தொடங்கும்போது அப்படிகளின் ஒழுங்கற்ற தன்மையால் நம்மைத் தள்ளுவது போல ஒரு பிரமையெழும். இத்தனைக்கும் உச்சிப் பிள்ளையார் உட்கார்ந்திருப்பது கிட்டத்தட்ட 85 மீட்டர் உயரத்தில். இங்கே நாங்கள் இறங்கிக்கொண்டிருப்பது 1000 மீட்டருக்குப் பக்கத்தில நிற்கும் கொல்லிமலை. அங்கே படிகள். இங்கே கற்கள், பாறைகள். கற்பனை செய்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து நாங்கள் இறங்க தூரத்தே வெடிச்சத்தம் பலமாகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கேட்டுக்கொண்டேயிருந்தது. மலைத்தொடரில் எங்கோ பாறைகளை வெடி வைத்துத் தகர்த்துப் பெயர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். இப்படித்தான் மதுரையில் மேலூர் அருகே மேலவளவு என்று நினைக்கிறேன் - சில மலைகள் இருந்தன. இதேபோல் அவ்வப்போது வெடிச்சத்தம் கேட்கும். மலைக்கப்பால் என்ன இருக்கிறது என்று அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் நினைத்துக்கொள்வோம். இப்போது ரொம்பவும் யோசனை செய்து கஷ்டப்படவெல்லாம் தேவையில்லை. ஏனெனில் இப்போது மலைகளையே காணவில்லை! அதை நினைத்துக்கொண்டிருக்கும்போதே இன்னொரு வெடிச்சத்தம். ஒரு நிமிடம் நின்று அதுவரை இறங்கியிருந்த மலையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேன். சில வருடம் கழித்து வந்தால் இருக்குமோ, என்னவோ? |
|
|
அருகில் எங்கோ தண்ணீர் ஓடும் சத்தம். இறங்க இறங்க அந்தச் சத்தம் எங்களுடனே வந்தது. வெயில் ஏறியிருந்ததால் பயங்கரமாகத் தாகம் எடுக்க, பக்கத்தில் ஓடை கீடை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து அந்தச் சத்தத்தைப் பின்தொடர்ந்தோம். அரைமணி நேரமாகியும் தண்ணீர் கண்ணில் தட்டுப்படாமல் கண்ணாமூச்சி ஆடியது. ஸ்ரீநிவாஸன் கடைசியாக பாறைக்கடியில் ஊற்றாக ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைக் கண்டுபிடித்துவிட்டார். அந்தச் சிறு ஓடையை நெருங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. மொத்தமே சில அடிதான் தண்ணீர் கண்ணுக்குத் தெரிந்தது - மற்றபடி எல்லாம் பாறைக்கடியில்! அவர் ஏதோ சாகசமெல்லாம் செய்து ஒருவழியாக அருகில் சென்று தண்ணீரை முகத்தில் அறைந்துகொண்டு குடித்துப் பார்த்துவிட்டு எங்களைப் பார்த்த பார்வையிலேயே அதன் அற்புதச் சுவை தெரிந்தது. காலி பாட்டில்களைக் கொடுக்கச் சொல்லிக் கைகாட்ட நானும் பசுபதியும் குடித்துவிட்டு பையில் வைத்திருந்த காலி பாட்டில்களை அவரிடம் எறிந்தோம். அவர் நிரப்பி அனுப்பிய முதல் பாட்டிலை மின்னல் வேகத்தில் இருவரும் காலி செய்தோம்.
இயற்கை தரும் பரிசுத்த நீர் எங்களுக்குள் ஆத்மாவை நிரப்புவதுபோல் இறங்கியது. மற்ற பாட்டில்களை நிரப்பிக்கொண்டு மீண்டும் இறங்கினோம். ஏறும்போது கவட்டை மாதிரி பிரிந்ததே, அந்த இடத்திற்குச் சென்று சேர்ந்துவிட்டோம். சிறுசிறு கற்களால் குவித்துச் செய்த பிரமிடு அப்படியே அங்கிருந்தது. அதைத் தாண்டி நடக்க இரண்டாவது அத்தியாயத்தில் நம்மைக் கடந்து சென்ற ஆடுகளெல்லாம் பெரிய பாறையொன்றின் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. தலைமையாடு ஒன்று - தாடிக்கார ஆடு - எழுந்துவந்து பாறை விளிம்பில் நின்று எங்களை முறைத்துப் பார்த்தது. "எங்கள் ஏரியாவுக்கு வராதே!" என்று சொல்லும் பார்வை அது. அவற்றைத் தாண்டி நீரோடிய பரந்த பாறைப் பரப்புக்கு வந்தோம். மரம்வெட்டும் சிறுவர்கள் அரிவாட்களோடு உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் அரட்டையை நிறுத்திவிட்டுச் சிரிப்பை அடக்கக் கஷ்டப்பட்டார்கள். "போட்டோ எடுங்கண்ணே" என்றான் ஒருவன். எடுத்து கேமராவின் எல்ஸிடி திரையில் காட்டினோம். இன்னும் சிரித்தார்கள். "ஸ்கூலுக்குப் போலயா?" என்று பசு கேட்டான். "இன்னிக்கு லீவுண்ணே. சுள்ளி பொறுக்க வந்தோம். போட்டோ அனுப்புறீங்களாண்ணே?". அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிக் கொஞ்சதூரம் வந்ததும்தான் முகவரி வாங்காமல் வந்தது உறைத்தது. திரும்பச் செல்லத் தெம்பு யாருக்கும் இல்லை! அடுத்ததடவை பசு திரும்ப கொல்லிமலை ஏறும்போது அச்சிறுவர்களைப் பார்க்க நேர்ந்தால் கட்டாயம் முகவரி வாங்கச் சொல்லவேண்டும். ஒருவேளை அச்சிறுவர்கள் சற்று பெரியவர்களானதும் இணையத்தொடர்பு கிடைத்து கூகுளாண்டவர் அருளால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.
"பழங்காலத்துல இந்த மலையெல்லாம் இன்னும் Wild-ஆ இருந்துருக்குமில்லையா?" என்றான் பசு.
"ஆமா."
"அப்பல்லாம் ஆம்பளையாளுங்க மலைக் காடுகளுக்குள்ள தொழிலுக்காகப் போய்வர ரொம்ப நாளாகுமில்லையா? சில சமயம் மாசக்கணக்காக்கூட ஆயிரும். அப்படி அவங்க கிளம்பும்போது வீட்டுப் பொம்பளையாளுங்க பூஜையெல்லாம் பண்ணி ஒரு கட்டு கட்டி தொங்க விட்ருவாங்களாம். அப்றம் எதாச்சும் எமெர்ஜென்ஸி, அதுக்கு வீட்டுகாரர் திரும்ப வரணும்ங்கற சிச்சுவேஷன் வந்திருச்சின்னா வீட்டுக்காரம்மா அந்தக் கட்டைப் பிரிச்சு கீழ போட்ருவாங்களாம். அப்படிக் கீழ போடறது காட்டுக்குள்ள இருக்கறவங்களுக்குத் தகவல் மாதிரி எப்படியோ போய் அவங்க வீட்டுக்குத் திரும்ப வந்துருவாங்களாம்" என்று சொல்லிவிட்டு "கிட்டத்தட்ட எல்லாப் பக்கமும் ஆளுங்க இதைச் சொல்றாங்க. இன்னுங்கூட இது வழக்கத்துல இருக்கு போலருக்குது - அந்தக்கால SMS செய்தி!" என்றான்.
"அஞசு வருஷத்துக்கு முன்னாடி நடந்த இன்னொரு சம்பவத்தைப் பத்திச் சொல்றேன்" என்று சொல்லத் தொடங்கினான்.
Safe Outdoors என்ற மலையேற்றக்குழுவை நடத்திவந்தவர் தேஜா மூர்த்தி - மலையேற்றத்தில் அனுபவசாலி. மலையேறும் குழுக்களுக்குப் பயிற்சியாளர். தேஜாமூர்த்தியும் அவரது நண்பர்கள் வசந்த்குமார், பாஸ்கர் பாபுவை அழைத்துக்கொண்டு மாருதிவேனில் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே ஒரு தேனீர்க்கடை பக்கத்தில் நிறுத்திவிட்டு மலையில் ஏறிப் புதிய வழித்தடம் ஒன்றைக் கண்டுபிடிக்கச் சென்றிருக்கிறார்கள். திரும்ப வரவில்லை. உள்ளூர் மக்கள், காவல்துறை என்று ஏராளமானோர் அப்பகுதியில் தேடியது கொஞ்சநஞ்ச நாளல்ல; கிட்டத்தட்ட ஒன்பது மாதம். சுவடே தெரியவில்லை. பத்து மாதம் கழித்து மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஷுரடி காடுகளில் அரமனே குட்டா (Aramane Gudda) என்ற இடத்தில் மலைவாசிகள் மூன்று எலும்புக்கூடுகளைக் கண்டிருக்கிறார்கள். ஆடைகள், சாதனங்கள், ATM அட்டைகளை வைத்துத்தான் அம்மூவரை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அவர்கள் மலையேறத் தேர்ந்தெடுத்த பகுதி இருப்பதிலேயே அபாயகரமான, கடினமான வழித்தடம். கடும்மழை, மூடுபனி, வழுக்கும் தரை, செங்குத்தான பாறைகள் என்று இயற்கை ஆவேசத்துடன் இருக்கும் பகுதி. வழிதவறிப்போனது, பசி, காட்டுமிருகங்களின் தாக்குதல் என்று அவர்களின் மரணத்திற்குப் பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன. மலையேறுவதில் ஜாம்பவான்களுக்கே அசம்பாவிதங்கள் நடக்கின்றன என்பதைப் பசு விவரித்தபோது எனக்கு மயிர்கூச்செறிந்தது.
இயற்கையை வெற்றி கொள்ள மனிதன் அதீத முயற்சி மேற்கொள்வது புதிதல்ல. இவை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மலைகளின் பிரம்மாண்டம் மனிதனை குறுகச் செய்வதில்லை. அவன் அவற்றை வெற்றிக்கொள்ளத் துடிக்கிறான். காடு, கடல், மலை என்று பரந்து விரிந்த இயற்கையை, இவ்வுலகைத் தன் கட்டுக்குள் கொண்டுவிட முயற்சிகளைத் தொடர்கிறான்.
இயற்கையின் விரல் சொடுக்கைக்கூட நாம் தாங்கமாட்டோம் என்பதையும் இதில் வெற்றி என்று ஒன்றுமே இல்லை என்ற உண்மையையும் மனித மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இயற்கை நம்மைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் கண்களைத் திறந்து வைத்தபடியே உறங்கிக் கொண்டிருக்கிறோம்.
(தொடரும்)
வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன் |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|