|
|
|
|
சாலையோரத்தில் யாரோ ஒரு டஜன் பலாப்பழங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். "யாரும் எடுத்துர மாட்டாங்களா?" என்று கேட்டேன். "எடுத்துட்டு எங்க ஓடறது?" என்று பசு சிரித்தான். மலையெங்கும் பலா மரங்கள் ஏராளம், யாரும் கண்டுகொள்வதில்லை. இரண்டு கிலோமீட்டர் நடந்திருப்போம். சிறிய குடியிருப்புப் பகுதி சாலையோரமாக இருந்தது. பத்திருபது வீடுகள். ஒரு வீட்டு முன்பு தாமரை இலை மாதிரியும் இல்லாமல் வாழையிலை மாதிரியும் இல்லாமல் பெரிதாக ஓரிரண்டு இலைகளுடன் சிறிய மரம் இருந்தது. அதனருகே நின்றிருந்த ஒடிசலான உயரமான முதியவரிடம் விசாரிக்க "அதுவா. சேப்பங்கிழங்கு" என்றார். அட! கிழங்கெல்லாம் பூமிக்கு அடியிலிருக்க போனால் போகிறதென்று அரையடிக்கு வெளியில் செடிமட்டும் இருப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். இங்கே அப்படி ஒரு செழிப்பு.
வற்றாயிருப்பில் தலைகாணித்தெருவில் தொழுவம் ஒன்று இருந்தது. மக்கள் பசுக்களையம் கன்றுகளையும் ஓட்டிக்கொண்டு அதிகாலையில் அங்கு வந்துவிடுவார்கள். பால் கறக்கும் யாதவர்கள் காத்திருப்பார்கள். கன்று ஓரிரு நிமிடங்கள் தாய்ப்பசு மடியில் வாய்வைத்துப் பால்குடிக்க ஆரம்பிக்கும் தருணத்தில் சட்டென இழுத்துக்கட்டி பசுவிடம் பால் கறப்பார்கள். கடைசியில் கன்றுக்குக் கொஞ்சம் மிச்சம் வைப்பார்கள். அதுவரை கன்று துடியாய்த் துடிக்க, பசு ஆறுதலாக நக்கிக்கொடுக்கும். எவ்வளவு கறக்கவேண்டும், எவ்வளவு மிச்சம் இருக்கும் என்ற அளவெல்லாம் கறப்பவர்களுக்குத எப்படித் தெரியும் என்று யோசித்திருக்கிறேன். அதைவிடக் கொடுமையான காட்சி வைக்கோலடைத்த கன்றுகளைக் காண்பித்துப் பால்கறப்பது. வைக்கோல் கன்றை நக்கிக்கொடுக்கும் பசுவின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவேன். இந்தத் தலைமுறைக்கு இதெல்லாம் எங்கே தெரிகிறது. எனது குட்டிப்பெண் துர்கா பால் எங்கே கிடைக்கிறது என்ற கேள்விக்கு ’மார்க்கெட் பேஸ்கட்’டில் (காய்கறி, பலசரக்குகள் கிடைக்கும் அங்காடி) என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நடுச்சாலையில் இன்னொரு நாய் படுத்திருந்தது. எங்களைப் பார்த்ததும் சட்டென எழுந்து, எங்களைச் சுற்றி வந்து வாலாட்டியது. பிஸ்கட் ஒன்றை அதற்குக் கொடுத்துவிட்டு அதைத் தாண்டி நடக்க, தார்ச்சாலை சட்டென்று முடிந்து, எட்டிப்பார்த்தால் படு பாதாளம்! ஒருவேளை களூர் மலைச்சரிவில் இருக்கிறதோவென்று எட்டிப் பார்த்தேன். இல்லை. திரும்பவும் வந்த வழியில் கொஞ்சதூரம் நடந்ததும் அந்தச் சேப்பங்கிழங்குப் பெரியவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
"ஐயா. களூர் எங்கிட்டு இருக்கு?"
"இதேன் களூரு!" என்று அவருக்குப் பின்னாலிருந்த பத்திருபது வீடுகளைக் காட்டினார். "எங்கிட்டு போவணும்?"
"கீழ இறங்கணும். பழனியப்பர் கோவிலுக்கு".
"எங்கூட வாங்க" என்று சொல்லிவிட்டு அச்சிறிய வீடுகளூடே நடந்தார். அவருக்கு எழுபது வயதுக்கு மேலிருக்கும். ஒல்லியாக உயரமாக ஆரோக்கியமாக இருந்தார். இடதுகையை ‘ட’ மாதிரி முதுகுப்பக்கம் வைத்து வலது முழங்கையைப் பிடித்துக்கொண்டு விடுவிடுவென்று நடந்தார். கிட்டத்தட்ட எல்லா வீட்டு முன்பும் சிறிய டிஷ் ஆண்டெனா இருந்தது. பெண்மணிகள் உள்ளே மெகாசீரியல்களில் பிஸியாக இருந்தார்கள் போல - சில குழந்தைகள் வீறிட்டுக் கொண்டிருந்தன.
நான்கைந்து வீடுகள் தாண்டியதும் மலைச்சரிவைக் காட்டி "இங்கிட்டு இறங்கிப் போங்க" என்றார். பாதையென்று எதுவுமே இல்லாத சரிவு அது. "ராத்திரி மழை பேஞ்சுதுல்ல? வளுக்குதுன்னு யாரும் இன்னிக்கு எறங்கலை" என்றார். களூர், ஒத்தக்கடை போன்ற மலையுச்சி மக்கள் பலாப்பழம், மாம்பழம் என்று பறித்து அதிகாலை இறங்கி நகரத்திற்குச் சென்று அங்கிருக்கும் சிறு வியாபாரிகளிடம் விற்றுவிட்டுப் பலசரக்கு, அரிசி எல்லாம் வாங்கி வருவார்கள். ஒரே ஆள் தலையிலும் தோளிலும் மூன்று, நான்கு பலாப்பழங்களை சுமந்துகொண்டு இறங்குவார். பேருந்தில் சென்றால் நேரத்திற்குச் சென்று திரும்பவர முடியாது என்பதால் தினமும் மலையேறி இறங்குவார்கள். களிமண்ணும் பாறைகளுமாக இருக்கும் மலைச்சரிவில் சுமையில்லாமல் இறங்குவதே கடினம். பழச்சுமையோடு இறங்குவது சாத்தியமே இல்லை. மழையினால் அவர்களது ஒருநாள் பிழைப்பு போகிறது என்பதில் வருத்தம். "நல்லவேளை நீங்க இன்னிக்க வந்தீங்க" என்றவரிடம் நன்றிசொல்லி இறங்கத் தொடங்கினோம். இறங்கினோம் என்பதைவிட நத்தை போல ஊர்ந்தோம் என்று சொல்வதுதான் பொருத்தம். அபாயமான சரிவு, பயங்கரமாக வழுக்கியது. மிகக் கவனமாக இறங்கினோம். பலமணி நேரம் மலையேறிச் சோர்வடைந்திருந்த கால்கள் ஒவ்வொரு அடி வைத்து இறங்கும்போதும் நடுங்கின. கால் விரல் நுனிகள் காலணிகளுக்குள் நசுங்கி வலித்தது. பசு சொன்னான், "இருக்கறதுலேயே இதுதான் ரொம்ப சொகுசான மலைப்பயணம்"! |
|
|
பிரபு சங்கர் என்ற இருபத்தைந்து வயது இளைஞர். பிரேக் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்தவர். காடு, மலைகள் என்று பயணம் செல்வதில் மிகுந்த காதல் கொண்டவர். இப்படி மலைமலையாகச் சுற்றிக்கொண்டிருக்கிறாரே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த தந்தையிடம் "இதாம்ப்பா கடைசி ட்ரெக்" என்று சொல்லிவிட்டுச் சென்றது ஆந்திராவின் நகரி மலைக்காடுகளுக்கு. தமிழக ஆந்திர எல்லைக்கருகே திருப்பதியிலிருந்து நாற்பத்தைந்து கி.மீ. தூரத்தில் இருக்கிறது நகரி. Peter Van Geit என்ற பெல்ஜியக்காரர் உருவாக்கி நடத்திவரும் சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் உறுப்பினர். பலமுறை மலையேறிய அனுபவமுள்ள உறுப்பினர்கள் குழுத்தலைவர்களாகப் புதிய உறுப்பினர்களை வழிநடத்திச் செல்வார்கள். மொத்தம் பதினோரு பேர் குழுவாகச் சென்றிருக்கிறார்கள். ஒரு சனிக்கிழமை காலையில் பயணத்தைத் துவக்கிய அந்தக் குழுவுக்கு அது சோதனையான நாள். குழுவிலிருந்து பிரிந்து வழிதவறிப் போன மூன்று பேரில் பிரபுவும் ஒருவர். அவர்களைத் தேடியலைந்து, திங்களன்று காட்டுக்குள்ளே ஒரு நீர்க்குட்டையருகே இரண்டு பேரை மயக்கநிலையில் கண்டுபிடித்தார்கள். அவர்கள் உடல் முழுதும் தேனீக்கள் கொட்டிய காயம். அவர்களிடமிருந்த முதலுதவி மருந்துகள் மிகச்சிறு காயங்களுக்கானவை - தேனீக் கடிக்கெல்லாம் மருந்துகள் அவர்களிடம் இல்லை. குழுவில் சிலர் மருந்துகள் வாங்கவும் உதவிகோரவும் நகரிக்குச் செல்ல, இவர்கள் பிரபுவைத் தேடியிருக்கிறார்கள். அந்தக் குட்டையில் மிதந்த ஒரு ஜோடிக்காலணிகள் பிரபுவினுடையவை. மலைத்தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக குட்டையில் குதித்திருக்கிறார் பிரபு. அவருக்கு நீச்சல் தெரியாது.
"காடோ, மலையோ எங்க போனாலும் அதுக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு. அதைப் பின்பற்றாததால வர்ற வினை இது" என்றான் பசு. இம்மாதிரியான அசம்பாவிதங்களில் பெரும்பாலானவை அஜாக்கிரதை, முன்னெச்சரிக்கையின்மை, வழிமுறைகளைப் பின்பற்றாமை போன்றவற்றால் நிகழ்பவை என்பது வருத்தத்தைத் தந்தது. வண்ண ஆடைகளையும், வாசனைத் திரவியத்தையும் கட்டாயமாகத் தவிர்க்கவேண்டும் என்று மறுபடி நினைவூட்டினான்.
மெதுவாக இறங்கினோம். மலையாடுகள் பலவற்றைப் பார்த்தோம். பலவித வண்ணங்களில் பூச்சிகளும் வண்டுகளும் ஆங்காங்கே ஓடிக்கொண்டிருந்தன. காய்ந்த இலைபோன்று பழுப்பாகச் சில பட்டாம்பூச்சிகள் பறந்தன. மோடம் போட்டிருந்தாலும் மதியச் சூரியனின் வெம்மை பரவியிருக்க உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்தது. ஒரு பெரிய பாறையொன்று எதிர்ப்பட்டது. அதன் மேலேறினோம். எதிரே தெரிந்த பரந்த கொல்லிமலைத் தொடரையும் பள்ளத்தாக்கையும் இன்னொரு முறை பார்த்து ரசித்தோம். சற்றே இளைப்பாறலாம் என்று அமர்ந்தால் கடுகளவில் நூற்றுக்கணக்கான செவ்வெறும்புகள்! அதன் வரிசையைக் கலைக்காமல் தள்ளியமர்ந்து பிஸ்கெட் பொட்டலமொன்றைப் பிரித்துக் கொறித்தோம். பாறையின் மேற்பரப்பில் ஒரு சிறிய குழிவில் மழைநீர் தேங்கியிருந்தது. "கைலருக்குற தண்ணியெல்லாம் காலியாயிடுச்சின்னா இது மாதிரி தேங்கியிருக்கிற தண்ணியைக் குடிச்சுக்குவோம்" என்றார் அதுவரை அமைதியாக வந்துகொண்டிருந்த ஸ்ரீநிவாஸன்.
நீ்ண்டதூரப் பயணங்களில் கிடைத்தவற்றைத் தின்று, குடித்துச் செல்லவேண்டிய நிலைமை பலமுறை ஏற்பட்டிருக்கின்றது என்றார். "அப்படியே மண்டி போட்டு மேலாப்புல தண்ணிய உறிஞ்சிக் குடிச்சுக்கணும்" என்றார். இங்கு தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் Man Vs Wild தொடர் நினைவுக்கு வந்தது. இன்னொரு நண்பரோடும் அவரது இரு மகன்களோடும் சென்ற மலையேற்ற அனுபவத்தைப்பற்றிச் சொன்னார். கிளம்பும்போது கொஞ்சிக் குலாவிக் கொண்டும் கொண்டுவந்த தின்பண்டங்களைப் போட்டிபோட்டுப் பகிர்ந்து கொண்டும் வந்தவர்கள் பாதிவழியில் நீரும் உணவும் தீர்ந்துபோனதும் எப்படி ஒருவரையொருவர் ஜன்ம விரோதிகளாகப் பாவித்து அடித்துக் கொண்டார்கள் என்பதையும் ஒரு கட்டத்தில் சண்டை போடக்கூடத் தெம்பில்லாமல் கெஞ்சி அழுததையும் சொன்னார். உயிருக்கு ஆபத்து என்ற தருணங்களில் மனித மனத்தின் விசித்திரமான பக்கங்கள் திறக்கின்றன!
(தொடரும்)
வற்றாயிருப்பு சுந்தர், போஸ்டன் |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|