|
|
வணக்கம்.
தேர்தல் முடிந்தது. மறுநாள் பத்திரிக்கையாளர் கூட்டத்தில், `Democrats ran a better campaign' என்று ஆரம்பித்து பேசிய அதிபர் புஷ்க்கு விரைவில் தெரிய வந்திருக்கும், மக்கள் தங்கள் கருத்துக்களை தங்கள் கட்சி கொள்கைகளையும் தாண்டி கூர்ந்து எண்ணி வாக்களித்திருப்பது. இங்கு மக்கள் யாரையும் எளிதில் நம்பக்கூடியவர்கள். மற்றும் மக்கள் பொதுவாக மாற்றத்தை எதிர்கொள்ள தயங்குபவர்கள். இருந்தும், அவர்களின் ஒப்புதலை வெகு நாட்களுக்கு, என்ன நடப்பினும், எடுத்துக்கொள்ள முடியாதென்று இத்தேர்தல் மூலம் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்த மற்றொரு கட்டுரையும் இந்த இதழில் இடம்பெறுகிறது.
சீனா-ஆப்ரிக்க ஒத்துழைப்புக்கான உச்சிமாநாட்டை சமீபத்தில் சீன அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பெய்ஜிங்கில் நடந்த இந்த மாநாட்டில் இரு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களைத் தவிர மற்ற அனைத்து ஆப்பிரிக்க நாட்டு தலைவர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன், அமெரிக்கா கருத்தியல் கோட்பாடுகளுடனும் (ideological policies) சீனா விரைந்து பொருளாதார கோட்பாடுகளுடனும், திசை திரும்பிக்கொண்டு இருக்கிறதோ என்று என்னை எண்ண வைத்தது. நடந்து முடிந்த தேர்தல் நம்மை மீண்டும் அரசியல் திறன், புதிய உத்திகள் உருவாக்குவது, அடிப்படை ஆய்வு, போன்ற பாதைகளில் ஈடுபடுத்தும் என்ற நம்பிக்கைக்கு வித்திட்டுள்ளது. நம்புவோமாக...
சில உயிர் இழப்புக்களும், அந்த உயிர் இழக்கும் முறையும், சக மனிதர் என்ற முறையில் நம்மை பெரிதும் பாதிக்கின்றன. முன்னாள் ரஷ்ய ஒற்றர் அலெக்ஸாண்டர் லிட்வினென்கொவவின் உயிர் இழந்த முறை நம்மை சிந்திக்க வைத்திருக்கிறது. மறைவு குறித்த விசாரணையில் வரும் தகவல்களுக்கு பொறுத்திருப்போம். |
|
இந்த இதழ் சிறப்புப்பார்வையில் ஐ.நா. பொது செயலாளர் திரு. கோஃபி அன்னான், எப்படி அவர் தனது சிறு வயதில் கற்றுக் கொண்ட கொள்கை நெறி, அவருக்கு 46 ஆண்டுகள் ஐ.நா. வில் சேவை செய்ய உந்துதலாக இருந்து நோபல் பரிசும் பெற்றுத் தந்திருக்கிறது என்பதை அறிவீர்கள்.
தென்றல் தற்போது Boston பகுதியிலும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு நம் வாழ்த்துக்கள். தென்றல் வாசக குடும்பத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி நவிலல் நாள் விடுமுறையில் குழந்தைகளுடன் ஒரு திரைப்படம் (White Fang II) பார்க்க நேர்ந்ததில், அதில் வந்த ஒரு வசனம் எங்களுள் ஒட்டிக்கொண்டது. ஒரு வல்லுனர் அம்பை எய்தும் துவக்க நிலை மாணவருக்கு மெல்லிய குரலில் சொல்லும் மந்திரம் - `There is nothing in the world, but you, the arrow and the tree (target); And they are all just one'. இது நாம் செய்யும் அனைத்து முயற்சிக்கும் பொருந்தும் என்று எங்கள் பேச்சு தொடர்ந்தது.
அனைவருக்கும் மகிழ்வான விடுமுறை, கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன், சி.கே. வெங்கட்ராமன் பதிப்பாளர் - தென்றல். டிசம்பர் 2006 |
|
|
|
|
|
|
|