|
|
தமிழ்ச்சிறுகதையின் படைப்புத்தளம் பன்முகம் கொண்டது. தமிழில் சிறுகதை அறிமுகமாகி நவீன தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியாகப் பரிணமித்த வரலாற்றில் பன்முகப் பாங்குடைய படைப்பியல் நுட்பங்களையும் ஆளுமைகளையும் இனங் காணலாம்.
தமிழர் மொழிசார்ந்து ஒரு குழுமமாக இருந்தாலும் வர்க்கம், மதம், சாதி, வட்டாரம், பிரதேசம், பால்நிலை, நாடு எனப் பல்லினத்தன்மை உடையவர்களாகவே உள்ளார்கள். அதாவது வாழ்புலம் -சிந்தனை - பண்பாடு வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் தன்னகத்தே கொண்டவை. அதைவிட தனித்தன்மைகளையும் கொண்டவை. இவையாவும் தமிழ்ப் படைப்புலகிலும் தீர்க்கமான செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தப் பின்னணியில் தான் 'முஸ்லிம் சமுகம்' படைப்புலகில் புதிய களங்களை, அனுபவங்களை, வாழ்வியல் மதிப்பீடுகளை அறிமுகம் செய்கின்றன.
இன்று 'இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்' என்று தனித்து அடையாளப்படக் கதை கூறும் முறை தமிழில் ஆழமாக வேர் விட்டுள்ளது. குறிப்பாக 1950-களுக்குப் பின் இத்தகைய சிறுகதை மரபு வளர்ச்சிப் போக்கிலேயே உள்ளது. இந்தப் பின் புலத்தில் எழுத்துலகில் நுழைந்தவர் ஜே.எம். சாலி.
1955-ம் ஆண்டில் ஜே.எம். சாலி சிறுவர் எழுத்தாளராக அறிமுகமானார். இவர் ஆனந்தவிகடனில் துணை ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். சாலியின் எழுத்துக்கள் சிங்கப்பூர், மலேசிய இதழ் களிலும் வெளிவந்து பலரது பாராட்டைப் பெற்றன. வெகுசன வாசிப்புச் சார்ந்து சீர்திருத்தக் கருத்துகளை எழுதும் திறன் இவருக்கு இயல்பாக இருந்தது.
தமிழக முஸ்லிம் மக்களின் சமூக கலாசார வாழ்வியல் தன்மைகளை வெகு இயல்பாக சித்தரிக்கும் போக்கு சாலியிடம் தெளிவாக இருந்தது. சமூக மாற்றங்களின் அடியாக முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுவரும் வாழ்வியல் மோதல்கள், முரண்கள், இஸ்லாமியச் சமயப் பழக்க வழக்கத்தின் சாயல்களை ஊடறுத்து வெளிப்படும் கதைக் களங்களில் எதிரொலித்தது. இந்த மாற்றம் சார்ந்த படைப்பியல் உருவாக்கத்துக்கு ஜே.எம்.சாலி பாதை கண்டார். |
|
சாலியின் சில கதைகள் அடங்கிய தொகுப்பொன்று 'விலங்கு' என்ற தலைப்பில் 1977-ல் வெளிவந்தது. இதைத் தவிர 'தமிழக முஸ்லிம் சிறுகதைகள்' என்ற தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளார். இதில் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பத்தொன்பது பேரின் சிறுகதைகளைத் தொகுத்துள்ளார். மேலும் 'அலைகள் பேசுகின்றன' 'சொல்லித் தெரிவதில்லை' போன்ற தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சாலியின் எழுத்து நடையில் ஒரு வேகம் உண்டு. கதா பாத்திரங்களை வளர்த்துச் செல்லும் பாங்கு இயல்பானது. இதைவிட சமூகம்சார் கட்டுப்பாடுகளை, வழக்காறுகளை உணர்த்தும் தன்மையில் எதார்த்தம் பளிச்சிடும். கதைகூறும் முறையில் எளிமை உண்டு. பொதுவில் வாசகரைத் தன்பால் ஈர்க்கும் ஆற்றல் உண்டு. சாதாரண வாசகர் இவரது படைப்பில் லயித்து வருவதற்கான முழுச்சாத்தியத்தையும் கொண்டுள்ளது என்றே கூறுலாம். தாம் உணர்த்த எண்ணும் கருத்தை இயல்பாகக் கதையோட்டத்தில் இழையோடவிடும் பாங்கு சாலியின் படைப்பு வெற்றி ஆகும். இதழியல்சார் நுட்பங்கள் யாவற்றையும் புரிந்து கொண்டு செயற்பட்டார்.
ஆனந்த விகடன் கல்கி உள்ளிட்ட சஞ்சிகைகள் உருவாக்கிய சனரஞ்சக இலக்கிய எழுத்துத் தேவையை இவர் நிறைவு செய்பவராகவும் இருந்தார்.
அதே நேரம் சாலி பொழுதுபோக்குக்கான எழுத்தை மட்டுமே படைக்கவில்லை. மாறாக, சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வெளிப் படுத்துவதற்கான கதைக்களங்களைத் தேர்வு செய்து எழுதினார். அத்துடன் முஸ்லிம் வழக்குகளான தலாக், தர்கா, முக்காடு, கபூல், மஹர் போன்ற இன்ன பிற சொற்களை கருத்துப் புரியும்படிப் பயன்படுத்தும் நயம் பாராட்டத்தக்கது.
தமிழில் முஸ்லிம் சமுகத்தின் வாழ்புலம், பண்பாடு வழக்காறுகள் உரியமுறையில் கருத்துத் தெளிவுடன் இலக்கியக் கலை யாக்கமாக வெளிப்படும் மரபின் தொடக்க மாக ஜே.எம். சாலி இருந்திருக்கிறார் என்றே கூறலாம்.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|