|
|
"கடந்த 25 ஆண்டுகால விருதுநகர் மாவட்ட மக்களின் மனோபாவங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் என் கதைகளை ஆய்வு செய்தாலே போதும். அப்படியான ஒரு வரலாற்று ஆவணமாக என் கதைகள் உள்ளன" என்று உறுதியாகவும் தெளிவாகவும் கூறுபவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. இவர் முற்போக்கு இடதுசாரி இலக்கிய இயக்க மரபில் தனித்துவமாக நிற்பவர். தமிழ்ச் சிறுகதை மரபில் கதை சொல்லும் தன்மையாலும் உணர்வாலும் வித்தியாசமானவர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலாண் மறை நாடு எனும் குக்கிராமத்தில் பிறந்து, ஐந்தாம் வகுப்பு வரையே படித்தவர். மார்க்சிய இயக்க அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதன் மூலம் இவர் தனது அனுபவத்தளத்தையும் தத்துவப் புரிதலையும் விரிவாக்கி வளர்த்துக் கொண்டார். ஒரு தேர்ந்த வாசகராக வளம் பெற்றார். தொடர்ந்த தேடல், வாசிப்பு, இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட வைத்தது.
1969-களில் வாசிப்பில் தீவிரமாக ஈடுபட்டு 1972 முதல் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானார். செம்மலர் பத்திரிகை 'செ.பொன்னுச்சாமி' என்கிற பெயரை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை தமிழின் தீவிர எழுத்தாளராக அவரை நிறுத்தியுள்ளது. இதுவரை 16 சிறுகதை நூல்களையும், 5 குறுநாவல் தொகுதிகளையும் 6 நாவல்களையும் எழுதி தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
இவர் வரித்துக் கொண்ட கருத்துநிலை இலக்கியக் கொள்கைக்கு அப்பால் அல்லது அவற்றுடன் உடன்படாதவர்கள் இவரது படைப்புகள் குறித்து பலதள விமரிசனங்களை முன்வைக்கின்றார்கள். குறிப்பாக இவர் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கியது முதல் இன்றுவரை ஒரே மாதிரியாகவே எழுதிக் கொண்டிருக்கிறார். அனுபவ மாற்றங்கள், அவற்றின் விரிவுக்கேற்ற படைப்பு அனுபவம், மொழி, கதைகூறும் தன்மை, உணர்திறன் யாவற்றிலும் 'மாற்றம்' எதனையும் அங்கீகரிக்காத மனப்பாங்குடன் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது அது.
"உள்ளடக்கத்தை இங்கே வைத்துக் கொண்டு வடிவத்தை வேறு ஒரு தேசத்திலிருந்து - வேறோரு பண்பாட்டுப் பின்புலத்திலிருந்து - இறக்குமதி செய்தால் அந்த வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும். பொருந்தாமல் போகிற ஆபத்து இருக்கிறது. இந்த மண்ணுக்கான வாழ்க்கையை இந்த மண்ணுக்கான மொழியிலே, நமது கதை சொல்லும் மரபிலே நான் கதை சொல்லணும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்" என்று உறுதியாக மேலாண்மை குறிப்பிட்டாலும், அதுவொரு பகுதி உண்மைதான்.
நாம் தேர்ந்தெடுக்கும் உள்ளடக்கத்துக் கேற்ப வடிவம் தீர்மானிக்கப்படும். அது கூட ஒவ்வொரு கணமும் புதிய புதிய படைப்பு மொழியின் கதை கூறும் தன்மையால், புனைவால் புதிதாக அமைவது தவிர்க்க முடியாது. இருப்பதை அப்படியே ஒப்புவிப் பதற்குப் படைப்பாளி தேவையில்லை. படைப்பாளி என்பவர் சமூக விஞ்ஞானியாக, கலைஞராக இருக்கவேண்டும். அப்பொழுது தான் படைப்பிலக்கியத்தின் உச்ச வெளிப் பாட்டுத்தன்மைகளை நோக்கிப் பயணிக்க முடியும். |
|
ரஷ்ய, சீன முற்போக்கு இடதுசாரி இலக்கியங்களை வாசிப்பதன் மூலம் நாம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறோமா அல்லது படைப்பு உந்துதல் பெற்றுப் புதிது படைக்க அவாப்பட்டு நிற்கிறோமோ, அதுபோல் தமிழ் இலக்கியமும் பிறநாட்டுப் படைப்பாளிகளின் அனுபவத்தை, அறிவை விரிவாக்க வேண்டும். இந்தப் பொறுப்புணர்வு தமிழில் எழுதும் எந்தப் படைப்பாளிக்கும் உதவும். மேலாண்மை பொன்னுச்சாமியும் இதற்கு விதிவிலக்கல்ல.
எவ்வாறாயிலும் மேலாண்மையின் படைப்பு வெளி அங்கு தரிசனமாகும் மனிதர்கள், வாழ்க்கை மாற்றங்கள், மனிதர்களின் விருப்பு வெறுப்புகள், போராட்டங்கள் யாவும் இன்றைய தமிழகச் சூழலின் யதார்த்தம். இந்த யதார்த்த மோதுகையின் வெளிப் பாடாகவும் இலக்கியம் உருவாகும். இவற்றையும் உள்ளடக்கித்தான் நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் விசாரிப்பு உள்ளது. இதன் குறியீடுகளில் ஒருவர் தான் மேலாண்மை.
"என் மக்களின் வாழ்க்கையை, அவர்களது சலனங்களை, மாறுதல்களை, வளர்ச்சிகளை அவர்களது மொழியிலேயே, அவர்களது கதை சொல்லும் மரபிலேயே அந்தந்தக் காலங்களிலேயே உடனுக்குடன் என் கதைகளில் பதிவு செய்கிறேன்" என மேலாண்மை கூறுவது மிகையான கூற்று அல்ல. அதுவே இவரது இயக்கத்தின் இருப்பின் அடையாளம். இன்று முற்போக்கு இதழ்கள் மட்டுமல்ல வெகுசன இதழ் களிலும் அதிகம் எழுதக் கூடிய எழுத்தாளராகவும் பரிணமித்துள்ளார். அவற்றிலும் மேலாண்மையின் தனித்தன்மை துலங்கவே செய்கிறது.
கு. சின்னப்பபாரதி, டி. செல்வராஜ் போன்றோர் வரிசையில் மேலாண்மை பொன்னுச்சாமியும் ஒருவர். இவரது சிறுகதைகள், இவரது படைப்பாளுமையைத் தக்கவைக்கப் போதுமானவை. வெகுசன கவர்ச்சி, பரவல் இவரது எழுத்துக்கான அங்கீகாரமாகவும் மாறியுள்ளது. எவ்வாறாயினும் மேலாண்மை உள்ளிட்ட படைப்பாளர்கள் தமிழில் உருவாகி அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்களாக மாறுவதற்கு முற்போக்கு இடதுசாரி இயக்கங்கள் பின்புலமாக உள்ளன.
தமிழில் முற்போக்கு இடதுசாரி இலக்கிய இயக்கவாதிகளுள் மேலாண்மையும் ஒருவர். இவரது படைப்பாளுமை தமிழ் முற்போக்கு இடதுசாரி மரபின் செழுமையை உணர்ந்து கொள்வதற்கான அதேநேரம் அதன் போதாமையைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு அடையாளமாகவும் உள்ளது.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|