|
|
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளராகக் கணிக்கப்படுவர்களுள் த. நா. குமாரஸ்வாமியும் ஒருவர். வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம், விஷவிருட்சம் போன்ற நாவல்களுடன் பரிச்சயம் கொண்டிருப்போருக்கு குமாரஸ்வாமியின் பெயர் மறக்காது. தமிழில் மொழிபெயர்ப்பாளர் என்ற தகுதியுடன் மட்டும் த. நா. குமாரஸ்வாமி நினைவுபடுத்தக் கூடியவர் அல்ல.
தமிழின் ஆரம்பக்காலச் சிறுகதை எழுத்தாளர்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவராகவும் குமாரஸ்வாமி உள்ளார். அவரின் முதல் சிறுகதை 'கன்யா குமாரி' 1934-ல் தினமணியில் வெளியானது. இக்கதை காவியத்தன்மைகள் பெற்ற கதை என்ற விமர்சகர்கள் கூறுவர். "கடவுள் தத்துவத்தை, காத்தலை, காதல், அன்பை, மரபுரீதியிலும், சரித்திரப் பின்னணியிலும் அவர் எழுதினார்" என்று எழுத்தாளர் சா. கந்தசாமி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
குமாரஸ்வாமி தொடர்ந்து ஆனந்த விகடன், கலைமகள் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தார். அவர் காலத்தில் எழுதியவர்களின் சிறுகதையில் இருந்து அவரது சிறுகதைகள் வேறுபட்டிருந்தன. இயல்பான நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக அழுத்திச் சொல்வதை விட்டுவிட்டு, காவியத்தொனியில் மென்மையாகவும் அழகுறவும் ஓர் இனிய இலக்கிய அனுபவமாகவும் சிறுகதைகளை எழுதி வந்தார். சிறுகதையின் பொலிவில் குமார ஸ்வாமியின் பார்வையும் பதிவும் வேறுபட்ட பரிணமிப்பில் வெளியிடப்பட்டன.
குமாரஸ்வாமி 1907-ல் சென்னையில் பிறந்து 1928-ல் பச்சையப்பன் கல்லூரியில் தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். மேலும் ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஆழ்ந்த படிப்பினையும் சிந்தனையும் கொண்டவராக வெளிப்பட்டார். இதுவே அவரது இலக்கிய ஆளுமை நன்கு பளிச்சிடுவதற்கு அடித்தளம் இட்டது. அவர் எழுதிய ஒவ்வொரு கதையும் அவரின் சிறப்பை இனங்காட்டியது. 1934-லிருந்து 1939 வரை அவர் எழுதிய சிறுகதையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கதைகள் பதினைந்து கொண்ட "கன்ணாகுமரி முதலிய கதைகள்" 1946-ல் வெளிவந்தது. தொடர்ந்து "இக்கரையும் அக்கரையும்", "நீலாம்பரி" முதலிய சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்தன.
த. நா. குமாரஸ்வாமி என்ற தண்டலம் நாராயண சாஸ்திரி குமாரஸ்வாமி சிறுகதைகள் மூலம் தமிழில் அறிமுகமாகி மொழிபெயர்ப்பு எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1940-ல் தானே முயன்று வங்கமொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். வங்கத்து நவீனப் படைப்புக்களை தமிழில் கொண்டுவர முயற்சி செய்தார். பங்கிம் சந்திரர், தாகூர், தாராசங்கர் உள்ளிட்ட வங்க நவீன இலக்கியம் தமிழ்ப் படைப்புக்களாக வெளிவந்தது. "தாகூர் மொழிப்பெயர்ப்பாளர்" என்ற அடைமொழி குமாரஸ்வாமியுடன் ஒட்டிக்கொண்டது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என வங்க இலக்கிய மரபின் செழுமை தமிழில் புதுவளம் சேர்த்தது. தமிழின் படைப்பு மனோபாவத்தின் உணர்திறன் சிந்தனைப் பிரவாகம், படைப்பு அனுபவம் கற்பனையாவற்றிலும் புதிய பொருள்கோடல் மரபு சிறக்க வழி காட்டப்பட்டது. இதற்கு குமாரஸ்வாமியின் மொழிபெயர்ப்புக் கலையும் சிந்தனையும் புதுத்தடம் அமைத்தது. |
|
சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு என்று குமாரஸ்வாமியின் ஆளுமை விரிவு பெற்றது. அதன்பின் எல்லை, குறுக்குச் சுவர், ஒட்டுச் செடி என்ற அவரது நாவல் முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. இதில் 'ஒட்டுச் செடி' பலராலும் வெகுவாக பாரட்டப்பெறும் நாவல். பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது தனது வீட்டை இழந்து கிராமத்தைக் கைவிட்டுவிட்டு வெளியே வரும் ஏழை விவசாயிகளின் அளவறியா சோகத்தை பிரச்சாரமின்றி மிகவும் செட்டான சம்பவங்களாலும் சொற்களாலும் நாவலாகப் படைத்துள்ளார். சொல்லப்பட்டதற்கும் மேலே சொல்லப்படாத வாழ்க்கையும் சோகமுமே நாவலின் அடித்தளமாக உள்ளது என்று எழுத்தாளர் சா. கந்தசாமி கணிப்பிட்டுக் கூறுவது ஒன்றும் மிகையான கூற்றல்ல.
குமாரஸ்வாமி தொடர்ந்து படித்து வந்தார். எழுதி வந்தார். பலவற்றை மொழிபெயர்த்து தமிழ்ப் படைப்புக்களாக வெளிக்கொணர்ந்தார். ஆனந்த குமாரஸ்வாமி, ஐ.பி. ஹானர் சேர்ந்து எழுதிய 'கோதமபுத்தர்' என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆக அவரது தேடல் பன்முகப்பட்டது. அதனைச் சார்ந்துதான் இயங்கியுள்ளார். வெறும் மொழிபெயர்ப்பாளர் என்ற அறிமுகம் மட்டும் அவருக்குப் போதாது. தமிழ்ப் படைப்பாளி என்ற தகுதிக்கும் பொருத்தமாகவே வாழ்ந்து சென்றுள்ளார்.
1982 ஆம் ஆண்டில் தனது 72வது வயதில் காலமானார். ஆனால் அவரது படைப்பு அனுபவம், விட்டுச் சென்ற நூல்கள் (மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட) யாவும் த.நா. குமாரஸ்வாமியின் ஆளுமை விகசிப்பை எடுத்துக்காட்டும் தடயங்களாகவே உள்ளன.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|