Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | அஞ்சலி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
நாடோடி (எம். வெங்கட்ராமன்)
- அரவிந்த்|டிசம்பர் 2024|
Share:
எஸ்.எம். நடேச சாஸ்திரி, மகாகவி பாரதியார், எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, எஸ்.வி.வி., துமிலன், கல்கி, தேவன் தொடங்கி, தமிழின் நகைச்சுவை எழுத்துக்கு அடித்தளமிட்டவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் 'நாடோடி' என்னும் புனைபெயர் கொண்ட எம். வெங்கட்ராமன். திருச்சியில் ஜனவரி 17, 1912 அன்று பிறந்தார். இவர் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் புலமை பெற்றார்.

1936-ல் ஆனந்த விகடனில் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பல நகைச்சுவைக் கட்டுரை, கதைகளை எழுதினார். விகடனில் ஆசிரியராக இருந்த கல்கியால் ஊக்குவிக்கப்பட்டார். 'நாடோடி' என்ற புனைபெயரில் எழுதினார். கல்கி அவர்கள் ஆனந்தவிகடனிலிருந்து விலகிய பின் நாடோடியும் விலகினார். கல்கி இதழ் தொடங்கப்பட்ட பிறகு, ஏப்ரல் 1943ல், அவ்விதழில் உதவி ஆசிரியராகப் பணி சேர்ந்தார். 'மணமகள் தேவை' என்பது நாடோடி, கல்கி இதழில் எழுதிய முதல் நகைச்சுவைத் தொடராகும். தொடர்ந்து பல நகைச்சுவைக் கட்டுரைகளைக் கல்கியில் எழுதினார். நாடோடி எழுதிய 'எங்கள் குடும்பம் பெரிது', 'இதுவும் ஒரு பிரகிருதி' போன்ற தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. அடுத்த வீட்டு அண்ணாசாமி அய்யர், மனைவி சரசு, மகள் அனுராதா ஆகியோரைப் பாத்திரங்களாக்கி எழுதினார்.

'நாடகமே உலகம்' என்பது நாடோடியின் முதல் நகைச்சுவைக் கட்டுரைத் தொகுப்பு. 1943-ல் வெளியான அந்த நூலுக்குக் கல்கி முன்னுரை எழுதி ஊக்குவித்தார். தொடர்ந்து பல நகைச்சுவைக் கதை, கட்டுரை, நாடக நூல்களை எழுதினார். நாடோடியின் சிறுகதைகளுக்கு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் கிடைத்தன. அவரது படைப்புகளுக்கு ஆனந்த விகடனின் பாரதி தங்கப் பதக்கப் பரிசு கிடைத்தது.

நாடோடியின் நூல்கள்
கதை/கட்டுரைகள்: நாடகமே உலகம், ஒரு நாள் கூத்து, முடியாத யுத்தம், ஹே அனுராதா, அட பரமசிவா, என்னைக் கேளுங்கோன்னா..., பிழைக்கும் வழி, எப்படித் தெரியுமா?, படித்த பெண் வேண்டாம், வாழ்க்கைச் சக்கரம், இதுவும் ஒரு பிரகிருதி, ஸ்திரீகள் ஜாக்கிரதை, புருஷர்களுக்கு மட்டும், உலகம் பலவிதம், சிறுவர்களுக்கான இராமாயணம், ஆயிரம் வருஷங்களுக்கு அப்பால்.., இந்த ரீதியில் போனால்…, பயப்படாதீர்கள், ஆயிரம் நீதிக் கதைகள் – பத்து பாகங்கள், சாகசக் கதைகள், சாதுரியக் கதைகள், தமிழா தூங்காதே, கிழவியும் குமரியும், பேசும் பதுமை, ரஷ்ய நீதிக் கதைகள், நாடோடியின் நகைச்சுவை விருந்து, நான் கதை எழுதின கதை, மாயப் பிரபஞ்சம், வினோபாவின் பொன்மொழிகள்
நாடகம்: பரந்த அனுபவம், குடும்ப ரகசியம்
வாழ்க்கை வரலாறு: மோட்டார் மன்னன் ஹென்றி போர்ட்


நாடோடி சமூக, குடும்ப நிகழ்வுகளை நகைச்சுவை கலந்து எழுதினார். அனைவரும் வாசிக்கும் வகையில் எளிய மொழியில் எழுதினார். பெரும்பாலானவை பொழுதுபோக்கு எழுத்துக்களாகவே அமைந்தன. நாடோடியின் எழுத்துபற்றிக் கல்கி, "தமிழ் நாட்டு வசன இலக்கியத்தில் நாடோடி ஒரு தனி வழியை உண்டுபண்ணிக் கொண்டார். அதிலே மேலும் மேலும் முன்னேறிச் சென்று வருகிறார். நல்ல வசன நடைக்கு இருக்க வேண்டிய எல்லா இலட்சணங்களும் அவருடைய நடையில் நன்கு அமைந்திருக்கின்றன. அதில் எளிமை இருக்கிறது. தெளிவு இருக்கிறது. இலேசான உயர்தர நகைச்சுவை இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

தனது நூல்களை வெளியிடுவதற்காக 'நாடோடி' என்ற பதிப்பகத்தையும், 'காமதேனு பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பக நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினார். 'நாடோடி' என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார். கல்கியிலிருந்து ஓய்வுபெற்ற பின் தினமணி, ராமகிருஷ்ண விஜயம் போன்ற இதழ்களில் சமய, ஆன்மீகக் கட்டுரைகளை எழுதினார்.

நாடோடியின் நூல்களில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நாடோடி தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline