துணுக்கு எழுத்தாளராகத் தொடங்கி, கவிதைகள் எழுதி, ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என என எழுத்துலகில் சிறகை விரித்தவர் படுதலம் சுகுமாரன். இயற்பெயர் சுகுமாரன். இவர் மே 5, 1965 அன்று திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்துள்ள படுதலம் என்ற குக்கிராமத்தில், வினாயகம்-வள்ளியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். மெக்கானிகல் இஞ்சினீயரிங் படித்து இடைநின்றார். இளங்கலை மனோதத்துவம் பயின்று பட்டம் பெற்றார்.
படுதலம் சுகுமாரன் இளவயது முதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார். நண்பர்களுடன் இணைந்து 'இலக்கியச் சந்திப்பு' என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். இவரது நகைச்சுவைத் துணுக்குகள், செய்தித் துணுக்குகள், கவிதைகள் போன்றவை ஆனந்த விகடனில் வெளியாகின. 1987-ல், படுதலம் சுகுமாரன் எழுதிய நகைச்சுவைத் துணுக்கை வெளியிட்டதன் காரணமாக, விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் சிறைக்குச் சென்றார். அதன் மூலம் படுதலம் சுகுமாரன், இதழியல் உலகில் பரவலான கவனம் பெற்றார். விகடன், குமுதம், சாவி தொடங்கி தேவி வரை முன்னணி இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள் வெளியாகின. மாலைமதி, ராணிமுத்து, குங்குமச்சிமிழ், கண்மணி, தேவதையின் கொலுசு, நாவல் லீடர், ஜூப்ளி போன்ற இதழ்களில் நாவல்கள் பலவற்றை எழுதினார். 'ப்ரீதா' என்ற புனைபெயரிலும் எழுதினார். சிறுகதைகள் பலவற்றை உண்மை நிகழ்வுகளையும், சுய வாழ்வு அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதினார். குடும்பம், காதல், சமூகம், க்ரைம், நகைச்சுவை என்று பல வகைமைகளில் பல நாவல்களை எழுதினார்.
ஆனந்தவிகடனில் இதழியல் பயிற்சி பெற்றார். அதன் ஆசிரியர் குழுவில் சில காலம் பணியாற்றினார். தொடர்ந்து சூப்பர் நியூஸ், ஜூப்ளி இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ரத்தப் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். குடும்பத்தினர் துணையோடு மீண்டு வந்தார். தொடர்ந்து எழுத்துலகில் இறங்கினார். படுதலம் சுகுமாரனின் சிறுகதைகளில் சில தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவரது சிறுகதை ஒன்று கேரள அரசின் தமிழ்ப் பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது.
சுகுமாரன், முன்னணி இதழ்கள் நடத்திய சிறுகதை, நாவல் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகள் பெற்றார். இலக்கியச் சிந்தனை பரிசினை மூன்று முறை பெற்றவர். பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு, அன்னை ராஜலட்சுமி இலக்கிய விருது, பொற்றாமரை அமைப்பு அளித்த சிறந்த படைப்பாளிக்கான பரிசு, அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் அளித்த பரிசு எனப் பல்வேறு பரிசுகள் பெற்றார்.
படுதலம் சுகுமாரன், மனைவி சரஸ்வதி, மகன் ராஜ் சுகுமாரனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
படுதலம் சுகுமாரனின் படைப்புகள் சிறுகதைத் தொகுப்புகள்: கொக்கு, ஒரு பட்டாம்பூச்சியும் சிறைக்கதவும் நாவல்கள்: வாடகைக் குற்றவாளி, அவள் பெயர் மோகனா, பார்கவியின் மரணம், மர்மங்கள் தொடரும், குற்ற வளையம், ரத்த சங்கிலி, அவளும் சொல்வாள் தீர்ப்பு, நட்புக்காக கொலை செய், கடமைக்காக ஒரு கத்தி, பூக்களின் போர்க்களம், நீயா, நானா?, கண்ணாமூச்சி விளையாட்டு, ஒரு கண்ணீர்த்துளி; ஒரு கையசைப்பு, சிறகடிக்கும் பூக்கள், துணையாக அவன் வருவான், அதே காதல், என் உயிர்த் தோழி, கத்தி - பணம் - கல்யாணம், பெண்ணை சொல்லி குற்றமில்லை, பூவெல்லாம் பொன்னாகும் குறு நாவல்கள்: சோளிங்கர் ரோடு, விபரீதத்தின் வேர் |