|
|
|
தமிழில் யதார்த்தக் கதைகளை அதிகம் எழுதியவராக அறியப்படுபவர் கிருஷ்ணமணி. தீவிர இலக்கியத்திற்கும் வெகுஜன இலக்கியத்திற்கும் இடைநிலையாகப் பல படைப்புகளைத் தந்தவர். ஆகஸ்ட் 09, 1935 அன்று தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள சோளிங்கபுரத்தில், கிருஷ்ணசாமி சாஸ்திரி – சம்பூர்ணம் இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் மணி. தந்தை வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
பள்ளிக்கல்வியையும் உயர்கல்வியையும் முடித்த கிருஷ்ணமணி, கல்கியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். 1952 முதல் எழுதத் தொடங்கினார். 'மணி சாஸ்திரி' என்ற பெயரில் எழுதினார். பின் தந்தையின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு 'கிருஷ்ணமணி' என்ற பெயரில் எழுத் தொடங்கினார்.
கட்டுரைகள் மற்றும் வரலாற்றுச் சிறுகதைகள் கொண்ட அவரது படைப்புகள் தொடக்கத்தில் ஸ்ரீ ராமகோபாலன் பதிப்பித்த 'தியாக பூமி' இதழில் வெளியாகின. கி.வா. ஜகந்நாதனும், கல்கி ராஜேந்திரனும் கிருஷ்ணமணியை ஊக்குவித்தனர். கலைமகளிலும், கல்கியிலும் பல சிறுகதைகளை எழுதினார்.
நாடகத் துறையில் ஆர்வம் இருந்ததால், 1958 முதல் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். உலக நாடகங்களால் ஈர்க்கப்பட்டு, 'உலக நாடக இலக்கியம்' என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். 1962-ல், கிருஷ்ணமணி எழுதிய 'சமர்ப்பணம்' என்னும் நாடகம் அரங்கேறியது. அதற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பல நாடகங்களைத் தயாரித்து, கதை-வசனம் எழுதி இயக்கினார். கிருஷ்ணமணி எழுதி, சேவா ஸ்டேஜ் சஹஸ்ரநாமத்தால் மேடையேற்றப்பட்ட 'சத்ய தரிசனம்' நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
நாடகங்களோடு கூடவே இதழ்களில் சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். அமுதசுரபி, இதயம்பேசுகிறது, கணையாழி போன்ற இதழ்களில் கிருஷ்ணமணியின் சிறுகதைகள் வெளியாகின. கிருஷ்ணமணியின் முதல் நாவல், 'பாரிஜாதங்கள் மலர்கின்றன'. இது 1978-ல் அமுதசுரபியில் வெளியாகிச் சிறந்த நாவலுக்கான விருது பெற்றது. ஆனந்த விகடனின் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது கிருஷ்ணமணி எழுதிய 'வேர்கள்' நாவல், சிறந்த சமூக நாவலுக்கான விருது பெற்றது.
கிருஷ்ணமணியின் படைப்புகள் பெரும்பாலும் மத்திய தர மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. அவர்களது பிரச்சனைகள், துயரங்கள், ஏமாற்றங்கள், வாழ்க்கைச் சவால்களைப் பேசின. தேவையற்ற வர்ணனைகளத் தவிர்த்து, கதைக்கு எது தேவையோ அவற்றை யதார்த்த மொழியில் கூறுபனவாக கிருஷ்ணமணியின் படைப்புகள் அமைந்தன.
கிருஷ்ணமணி நூல்கள் வேர்கள் பிணைப்பு ஒரு காதல் ஒரு வைராக்கியம் பாரிஜாதங்கள் மலர்கின்றன உலக நாடக இலக்கியம் கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – முழுமை கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – காத்திருத்தல் கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – கர்னல் வீடு கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – ஒரு சந்திப்பு கிருஷ்ணமணியின் சிறுகதைகள் - பிஞ்ஜ்ராபோல் கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – பிள்ளைவரம் கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – இறக்கைகள் கிருஷ்ணமணியின் சிறுகதைத் தொகுப்பு – பாகம் 1
தன்னை எழுத ஆதரித்து ஊக்குவித்த பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார் கிருஷ்ணமணி. அது குறித்துத் தன் நூல் ஒன்றில், "சிறுகதைகள் எழுத என்னை ஊக்குவித்த என் குரு திரு கி.வா.ஜ.வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாவி, கே. கஸ்தூரிரங்கன், எஸ்.வி. ரமணி, அமுதசுரபி விக்ரமன், கல்கி ராஜேந்திரன், சிறுகதை மணியன், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். எனது படைப்புச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க அனுமதித்த இந்த மனிதர்கள்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு" என்று குறிப்பிட்டார்
கிருஷ்ணமணி பல இலக்கிய நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்தார். கிருஷ்ணமணியின் 'எழுத்து' என்ற நாடகம், 1989ம் ஆண்டு, அகில இந்திய வானொலியின், சிறந்த நாடகத்திற்கான விருதைப் பெற்றது. கிருஷ்ணமணி எழுதிய கடைசி நாடகமான 'நந்தா விளக்கு' ஸேவா ஸ்டேஜ் அமைப்பால் மேடையேற்றப்பட்டது. கிருஷ்ணமணியின் கடைசி நாவல், 'மனித பந்தங்கள்' 1995-ல் வெளியானது. இரண்டாம் உலகப் போரை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவலுக்குப் பிறகு நாவல்கள் ஏதும் எழுதவில்லை கிருஷ்ணமணி.
ஆகஸ்ட் 07, 2010 அன்று கிருஷ்ணமணி காலமானார்.
(தகவல் உதவி: கிருஷ்ணமணி நூல்கள்: அமேசான் தளம்) |
|
அரவிந்த் |
|
|
|
|
|
|
|