Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ரஸவாதி
- அரவிந்த்|செப்டம்பர் 2024|
Share:
ஆர். ஸ்ரீநிவாசன் என்னும் இயற்பெயரை உடையவர் ரஸவாதி. அக்டோபர் 5, 1928-ல், திருச்சியை அடுத்துள்ள துறையூரில் பிறந்தார். பள்ளிக்கல்வியைத் துறையூரில் முடித்த ரஸவாதி, பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தபால் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றினார். 1949-ல், ராஜம் அம்மையாரை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள், நான்கு மகன்கள். (மகள்களில் ஒருவரான ரேவதி பாலு எழுத்தாளர்) ரஸவாதி இளவயது முதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார். குறிப்பாக, கல்லூரிக் காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்டார்.

நண்பர்கள் ஸ்ரீவேணுகோபாலன், டி.ஆர். சுப்ரமணியம் ஆகியோரின் துணையுடன் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். தி. ஜானகிராமனையும், லா.ச. ராமாமிர்தத்தையும் ஆதர்சமாகக் கொண்டார். எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கக்கூடியவர் என்ற பொருளில் 'ரஸவாதி' என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு எழுதத் தொடங்கினார். கல்கி, கலைமகள், அமுதசுரபி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். ஆனந்த விகடனில் பல முத்திரைக் கதைகளை எழுதினார். 'விடிந்தது' என்பது ரஸவாதியின் முதல் சிறுகதைத் தொகுதி. அது பரவலான வாசக கவனம் பெற்றது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவற்றுள் 'வித்வானும் ரசிகையும்', 'சங்கராபரணம்', 'அரங்கேற்றம்', 'ஆராதனை' போன்ற சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தவையாக அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்றன.

ரஸவாதி, சிறுகதைகளோடு குறுநாவல்கள், நாவல்களையும் எழுதினார். இதழ்கள் நடத்திய பல்வேறு நாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்டார். கலைமகள் இதழில் ரஸவாதி எழுதிய 'ஆதார ஸ்ருதி' தொடர், மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் பேத்தி ரமாதேவி ராமானுஜத்தால் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் ஆசிரியராக இருந்த 'ஜீவனா' இதழில் தொடராக வெளியானது. அது கன்னடத்திலும் ரஸவாதிக்குச் சிறந்த அறிமுகத்தை ஏற்படுத்தியது.

ரஸவாதி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், மீ.ப. சோமு, பி.எஸ். ராமையா, வல்லிக்கண்ணன், டி.என். சுகி சுப்பிரமணியன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பைப் பெற்றவர். 1957-ல் கல்கத்தாவில் நடந்த தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அதே வருடத்தில் சக எழுத்தாளர்களுடன் இலங்கை சென்று சிறப்புரையாற்றினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் பின் மீண்டு வந்து 'சேதுபந்தனம்' என்ற நாவலை எழுதினார்.

ரஸவாதியின் படைப்புகள்
சிறுகதைத் தொகுப்பு: சங்கராபரணம், கடலூருக்கு ஒரு டிக்கெட், ரஸவாதி சிறுகதைகள் (தொகுப்பு) மற்றும் பல.
நாவல்கள்: ஆதார ஸ்ருதி, அழகின் யாத்திரை, சேதுபந்தனம் மற்றும் பல.



ரஸவாதி, நாடகத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். 'தி மெட்ராஸ் நாட்ய சங்' என்ற நாடகப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, என்.வி. ராஜாமணி, எஸ்.வி. சகஸ்ரநாமம், பி.எஸ். ராமையா, ஏ.கே. வீராச்சாமி, 'கலாசாகரம்' ராஜகோபால் ஆகியோரிடம் நேரடியாக நாடகப் பயிற்சி பெற்றார். 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', 'பாஞ்சாலி சபதம்' போன்ற நாடகங்களில் நடித்தார். தானே பல நாடகங்களை எழுதி நடித்தார். ரஸவாதி, தான் எழுதிப் பரிசுப் பெற்ற 'அழகின் யாத்திரை' நாவலை நாடகமாக்கி அரங்கேற்றி நடித்தார். மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பிற்காக ரஸவாதி எழுதிய 'தி பெட்' நாடகம் பரவலான வரவேற்பைப் பெற்றது. வி.எஸ். ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்காக 'வழி நடுவில்' என்ற நாடகத்தை எழுதினார். இந்நாடகம் இயல், இசை, நாடக மன்றப் பரிசு பெற்றது. 'வழி நடுவில்' நாடகம் கன்னடத்தில் நடிகர் வாதிராஜால் திரைப்படமாகி வெற்றிபெற்றது. சென்னை வானொலி நிலையத்திலும் ரஸவாதியின் பல நாடகங்கள் ஒலிபரப்பாகின. 'ஆயுள் தண்டனை' என்னும் நாடகம் ரஸவாதி இறுதியாக மேடையேற்றிய நாடகமாகும்.

ரஸவாதி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'அழகின் யாத்திரை' நாவலுக்கு அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. ஆதாரஸ்ருதி நாவலுக்கு, கலைமகள் நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டியில் பரிசு கிடைத்தது. ரஸவாதி எளிமையான மொழியில் எழுதினார். குடும்பப் பின்னணியைக் கொண்ட கதைகள், நகைச்சுவைக் கதைகள் மட்டுமல்லாமல் உள்ளத்தை உருக்கும் படைப்புகளையும் எழுதியிருக்கிறார். இசை குறித்தும், ராகங்களைப் பின்னணியாகக் கொண்டும் எழுதியிருக்கிறார். ரஸவாதியின் படைப்புகள் குறித்து வாலி, “ஆற்றொழுக்கான நடை; அப்பழுக்கற்ற பாத்திரப்படைப்புகள்; தன் தமிழ் ஆளுமையைக் காட்டவேண்டி, சொற்சாலங்களை நிகழ்த்தாமை, 'அடுத்து என்ன நேரும்' என வாசகனை நாற்காலி நுனிக்கு வரவழைக்கும் அற்புதம் என்றெல்லாம் திரு. ரஸவாதி அவர்களின் படைப்புகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்” என்று மதிப்பிட்டுள்ளார்.

ரஸவாதி, திரைப்படத்துறைக்கும் பங்களித்தார். ரஸவாதியின் ஒரு சிறுகதை 'உயிர்' என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவந்தது. 'எங்கள் குல தெய்வம்' என்ற திரைப்படத்திற்காக பி.ஆர். சோமுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ரஸவாதி புகைப்படக் கலையில் ஆர்வம்கொண்டு அதனை நன்றாகக் கற்றறிந்தார். இதழியல் ஆர்வத்தால் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' இதழில் சில காலம் நிருபராகப் பணியாற்றினார். இசை ஆர்வத்தால் இசைமேதை மாலியிடம் புல்லாங்குழல் கற்றார். ஜோதிடத்தின் மீது ஆர்வம் கொண்டு அதனை நன்கு கற்றறிந்தார்.

பல்வேறு திறமைகளுடன், இலக்கிய உலகில் பல களங்களில் பரிமளித்த ரஸவாதி, 1994-ல், 66-ம் வயதில் காலமானார்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline