Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர்கடிதம் | நூல் அறிமுகம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
மேகலா சித்ரவேல்
- அரவிந்த்|ஏப்ரல் 2023|
Share:
தனக்கெனத் தனித்ததொரு பாணியில் எழுத்துலகில் இயங்கி வருபவர் மேகலா சித்ரவேல். இவர் கடலூர் புதுப்பாளையத்தில் ஏப்ரல் 6, 1952ல், இரெ. இளம்வழுதி-மாலதி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை வழக்குரைஞர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அந்தச் சூழலில் மேகலா சித்ரவேல் வளர்ந்தார். தொடக்கக் கல்வியை கடலூர் புதுப்பாளையம் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். புகுமுக வகுப்பை (பி.யூ.சி.) மதுரை பாத்திமா கல்லூரியில் நிறைவு செய்தார். இளவயதிலேயே மேகலாவுக்குத் திருமணமாகி விட்டது. கணவர் டாக்டர் வி. சித்ரவேல்.

மேலே கற்க விரும்பிய மேகலாவைக் கணவர் ஊக்குவித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை வரலாறு, முதுகலை தமிழ் பயின்று பட்டம் பெற்றார். எம்.ஃபில். பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைகழகம் மூலம் பி.எட்., எம்.எட். பட்டங்கள் பெற்றார். தமிழ், ஆங்கிலத்துடன் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளைக் கற்றார்.



மேகலா சித்ரவேல், இளவயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது முதல் சிறுகதை, 'குவிந்த மலர்கள்', இலங்கை வானொலியின் 'கதையும் கானமும்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. அப்போது மேகலாவுக்கு வயது 16. அதன் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பின் 'அம்மாவுக்குக் கல்யாணம்' என்ற சிறுகதையை எழுதினார். திருமணத்திற்குப் பின் கணவர் தந்த ஊக்கத்தால் தொடர்ந்து எழுதினார். மேகலா என்னும் தன் பெயருடன் கணவர் பெயரை இணைத்துக் கொண்டு எழுதினார். கணவரது துணையும் பிள்ளைகளின் ஊக்குவிப்பும் பல நாவல்களை எழுதுவதற்கு அடித்தளமாக அமைந்தது.

'நிழல் தேடும் நிஜங்கள்' என்னும் இவரது சிறுகதை, ராணி வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. 'பாதரச உறவுகள்' என்னும் சிறுகதை 'தமிழரசி' வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது. தமிழரசி வார இதழ் மத நல்லிணக்கச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தியது. அதில் 'மதமென்னும் வானத்தில் மனமென்னும் புறா' என்ற தலைப்பிலான மேகலா சித்ரவேலின் குறுநாவல் சிறந்த பத்து குறுநாவல்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவருடைய 'பெரிய ஸ்கூல்' சிறுகதை, இயக்குநர் பாலு மகேந்திராவின் கதை நேரம் பகுதியில் இடம் பெற்றது.



இவரது படைப்புகளுக்கு பெண் வாசகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. எளிய நடை, பாசாங்கற்ற எழுத்து, உண்மைக் களங்கள், அனுபவத் தெறிப்புகள் வாசகர்களைக் கவர்ந்தன. தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல் யதார்த்தத்தை, உண்மை நிகழ்வுகளை, அனுபவங்களைப் பேசுவதாக இவரது படைப்புகள் அமைந்துள்ளன. புரட்சி நடிகர், மேனாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றி இவர் எழுதியிருக்கும் 'வரலாறு படைத்த வள்ளல் எம்.ஜி.ஆர்.', 'மக்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.' என்ற இரு நூல்களும் முக்கியமானவை. மாறுபட்ட கோணத்தில், மக்களின் பார்வையில் எம்.ஜி.ஆரைக் காட்டுபவை.

மேகலா சித்ரவேல் படைப்புகள்
நாவல்கள்: பாதரச உறவுகள், வாடாமல்லி, ஈரமான ரோஜாவே, ஆற்றோட்டத்துப் பூக்கள், காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, கனாக் கண்டேன் தோழி, எல்லே ... இளங்கிளியே!
கங்கா, செவ்வந்திப் பூவும் வெள்ளி நிலவும், நிலவும் நீல மலர்களும், ரதிதேவி வந்தாள், சொர்ணப் புறா, ஒரு பூ மலர்ந்தபோது, மழைவில், கைத்தலம் பற்ற, சித்ர சலபம்
கண்ணாடி நிலவு, பளிங்கு பூக்களின் ஊர்வலம், ஆனந்தப் பூத்தூறல், ஆனந்த ஆராதனை, காதல் தாமரை, மஞ்சள் மத்தாப்பு, நகுலனின் மாதங்கி, சௌகந்தி, மதுரா
காதலடி நீ எனக்கு, நான் நப்பின்னை பேசுகிறேன், பூவே வெண்பூவே, வாலைக் குமரியடி, போய்வா சினேகிதி, மதுர நிலவே மதுரா, அமுத கீதம், ஒரு பூ மலர்ந்த போது
அவளோடு வானவில், நெஞ்சத்தில் நீ, தென்றல் வரும் நேரம், வா பொன்மயிலே!, பொன்மலர், சந்தன மலர் சிரித்தது, சந்தன மின்னல், பூவே நீயும் பெண்தானே, அப்பா குருவிகள்
விக்ரம துளசி, வசந்தமே வருக, முத்தழகி, ஜெகதா, நதியே பெண் நதியே, மழை மேக மயில்கள், கமலி அண்ணி, ஜரிகை பட்டாம்பூச்சிகள், செவ்வரளிப் பூ

சிறுகதைத் தொகுப்பு: அம்மும்மா சொல்லும் அமுதக் கதைகள்

கட்டுரை நூல்கள்: வரலாறு படைத்த வள்ளல் எம்.ஜி.ஆர், மக்கள் தங்கம் எம்.ஜி.ஆர்., யாதுமாகி நின்றாய் பகவதி


இவர் எழுதியிருக்கும் ஆன்மீக நூலான, 'யாதுமாகி நின்றாள் பகவதி' குறிப்பிடத் தகுந்த ஒன்று. அந்த நூலின் முன்னுரையில் மேகலா சித்ரவேல், "நாத்திக, பகுத்தறிவுச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த நான் அன்னை ஆதிபராசக்தியின் பரமபக்தையானது என் வாழ்வில் யாருமே எதிர்பாராத, நம்பவியலாத ஒரு இனிய நிகழ்வு... யாரை, எப்போது, எங்கே, எப்படித் தனக்கு உரியவர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவள் ஆதிபராசக்தி ஒருவள்தானே? தன் சுட்டு விரலால் அவள் யாரைச் சுட்டுகிறாளோ அவர்கள் கருத்தொன்றி அவள் திருப்பாதங்களில் பரிபூரண சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழியில்லையே... அந்தச் சரணாகதிக்கு நான் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா? தாயின் திருப்பாதங்களில் நானும் விழுந்தேன். பக்தியில் கரைந்து உருகி அன்னை ஆதிபராசக்தியின் கடைசி பக்தையாக மாறினேன்." என்கிறார். தேடித்தேடி தேவியின் ஆலயங்களைத் தரிசித்த அனுபவத்தை அழகு தமிழில் கட்டுரைகளாக இந்த நூலில் தந்துள்ளார் மேகலா சித்ரவேல்.



மேகலா சித்ரவேல் எழுத்தோடு பேச்சிலும் வல்லவர். பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பேசிய அனுபவம் மிக்கவர். பத்திரிகையியலிலும் இவருக்கு அனுபவமுண்டு. 'குமுதம் சிநேகிதி' இதழில் உதவி ஆசிரியர் ஆகப் பணிபுரிந்திருக்கிறார். இவரது படைப்புகளை ஆய்வுசெய்து பல மாணவர்கள் இளமுனைவர், முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 'மேகலா சித்ரவேல் படைப்புகளில் சமுதாய நோக்கம்' என்ற தலைப்பில் முனைவர் கு. சந்திரன் ஆய்வு நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.

தஞ்சை இலக்கியக் குழு வழங்கிய 'வாழ்நாள் சாதனை விருது', உரிமைக்குரல் மாத இதழின் 'வாழ்நாள் சாதனைப் பெண்' விருது உட்படப் பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் பெற்றவர்.



70க்கும் மேற்பட்ட நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், மூன்று சமையற்கலைத் தொகுப்புகள் எனப் பலவாறாக இவரது படைப்பாக்கம் விரிகின்றது. நாட்டுப்புற இலக்கியம், சிறார் இலக்கியம் போன்ற துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார். தற்போது முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கும் மேகலா சித்ரவேல் இன்றும் பெருவிருப்புடன் நூல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். மகன் வெற்றிமாறன் திரைப்பட இயக்குநர். மகள் வந்தனா புற்றுநோய் மருத்துவர்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline