Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அஞ்சலி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர்கடிதம் | முன்னோடி | சிறப்புப்பார்வை | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
சி. பாலசுப்பிரமணியன்
- அரவிந்த்|மே 2023|
Share:
தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் சி. பாலசுப்பிரமணியன். இவர், மே 3, 1935 அன்று, செஞ்சியில் சின்னச்சாமி-மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தார். திருவண்ணாமலை விக்டோரியா தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். கண்டாச்சிபுரம் தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். திருவண்ணாமலை முனிசிபல் பள்ளியில் உயர்கல்வி கற்றார். சென்னை அரசினர் கலைக் கல்லூரியில் இடைநிலை வகுப்பு பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். குறுந்தொகை பற்றி ஆய்வுசெய்து எம்.லிட். பெற்றார். 'சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சி. பாலசுப்பிரமணியன், விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். பின் சென்னை பல்கலையில் விரிவுரையாளர் ஆனார். பேராசிரியராக, தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். இ. சுந்தரமூர்த்தி, வ. ஜெயதேவன், அரங்க. ராமலிங்கம், கு. சுந்தரமூர்த்தி, மு. பொன்னுசாமி நிர்மலா சுரேஷ், தேவகி முத்தையா, செங்கைப் பொதுவன் உள்ளிட்ட பலர் இவரது மாணவர்கள்; இவரது நெறியாள்கையில் ஆய்வு செய்தவர்கள்.



சி. பாலசுப்பிரமணியன், சிறு வயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் உடையவராகத் திகழ்ந்தார். பல போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றார். மாணவர் மன்றத் தேர்வுகளிலும், கவிதை, பேச்சுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றார். கல்லூரிகளில் அ.ச. ஞானசம்பந்தன், டாக்டர் மு. வரதராசன், அ.மு. பரமசிவானந்தம், ரா. சீனிவாசன், தெ.பொ. மீனாட்சி சுந்தரம் போன்றோர் இவருக்கு ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களால் தமிழ் மற்றும் இலக்கிய ஆர்வம் கைவரப் பெற்றார். 1959-ல் எழுதத் தொடங்கினார். இலக்கிய ஆய்வு இதழ்களில் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு, 1966ல், 'வாழையடி வாழை' என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தன. தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள் எழுதினார். நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார். இவரது 'இலக்கிய அணிகள்' என்னும் கட்டுரை நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. 'சேர நாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்' நூலுக்கு ராஜா சர். அண்ணமலை செட்டியார் பரிசு கிடைத்தது. தமிழ் இலக்கியம் பற்றி விரிவாக ஆய்ந்து 'தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அது பல கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டது.



சி. பாலசுப்பிரமணியன் சிறந்த சொற்பொழிவாளர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்குப் பயணித்துச் சொற்பொழிகள் ஆற்றினார். திருப்பாவை, திருவெம்பாவை குறித்து இவர் வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின. பல்வேறு கருத்தரங்குகள், மாநாடுகளில் பாரதிதாசன், டாக்டர் மு. வரதராசன் போன்றோர் பற்றி இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. இவர் எழுதிய சிறுகதைகளும், நாடகங்களும் தொகுக்கப்பட்டு 'அலை தந்த ஆறுதல்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.



சி. பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தமிழக ஆளுநராக இருந்த கே.கே. ஷா அவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். இவர் துணைவேந்தராகப் பணியாற்றியபோது திருமுருக கிருபானந்த வாரியார், மு. அருணாசலம், சி. அருணை வடிவேலு முதலியார், டாக்டர் சிங்வி ஆகியோருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டினார். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பாரதிதாசன் அறக்கட்டளை தொடங்குவதற்கான முயற்சிகளை எடுத்து அதற்கான அரசின் ஆணையைப் பெற்றார். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள் பதிப்பிக்கக் காரணமானார். வெளிநாட்டு மாணவர்கள் தமிழ் பயில வழி வகுத்தார். மாமன்னன் ராஜராஜன் பெயரில் விருது வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.



சி. பாலசுப்பிரமணியன், சென்னை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினர், ஆலோசகர், ஆட்சி மன்ற உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு பாடத்திட்டக் குழு மற்றும் மேல்நிலைக்கல்வி பாடத்திட்டக் குழுத் தலைவராகப் பணியாற்றினார். இவரைப்பற்றி டாக்டர் ஆறு. அழகப்பன், "பிழையறக் கற்ற நல்ல தமிழறிஞர் சி.பா. என்பதனை நான் அவரோடு கூட்டங்களில் கலந்துகொண்ட போதும், பயணித்த போதும் கண்டிருக்கிறேன்" என்று மதிப்பிட்டுள்ளார்.



சி. பாலசுப்பிரமணியனின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி குன்றக்குடி ஆதீனம், 'புலவரேறு' என்ற பட்டத்தை வழங்கினார். தமிழ்நாட்டு நல்வழி நிலையம், 'செஞ்சொற் புலவர்' என்ற பட்டத்தைத் தந்தது. தொண்டை மண்டல ஆதீனகர்த்தர், 'சங்கநூற் செல்வர்' என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தார். 'சங்கத் தமிழ்ச் செல்வர்' என்ற பட்டத்தை தருமபுர ஆதீனகர்த்தர் வழங்கினார்.

சி. பாலசுப்பிரமணியன், செப்டம்பர் 10, 1998 அன்று காலமானார். இவரது நூல்கள் இவரது மறைவிற்குப் பின் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இவரது நூல்களை தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் வாசிக்கலாம்.

அரவிந்த்
சி. பாலசுப்பிரமணியன் நூல்கள்

கட்டுரை/இலக்கியத் திறனாய்வு நூல்கள்
தமிழ் இலக்கிய வரலாறு, அறநெறி, அறவோர் மு.வ., ஆண்டாள், இலக்கிய அணிகள், இலக்கிய ஏந்தல்கள், இலக்கியக் காட்சிகள், உருவும் திருவும், ஒட்டக்கூத்தர், கட்டுரை வளம், காரும் தேரும், சங்க இலக்கியம், சங்க கால மகளிர், சமயந்தோறும் நின்ற தையலாள், சான்றோர் தமிழ், சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள், திருப்பாவை-விளக்கம், திருவெம்பாவை-விளக்கம், தொல்காப்பியக் கட்டுரைகள், நல்லோர் நல்லுரை, நெஞ்சின் நினைவுகள், பாட்டும் தொகையும், பாரதியும், பாரதிதாசனும், பாவைப்பாட்டு, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், பெருந்தகை மு.வ., மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், மலர் காட்டும் வாழ்க்கை, மு.வ.வின் சிந்தனை வளம், முருகன் காட்சி, வாழ்வியல் நெறிகள், வாழையடி வாழை

பதிப்பித்தவை
மனோன்மணீயம், சிறுகதைத் தொகுப்பு, அலைதந்த ஆறுதல்

ஆங்கில நூல்கள்
A Critical Study Of Kuruntokai, A Study Of The Literature Of The Cera Country, Papers In Tamil Literature, The Status Of Women In Tamilnadu During Sangam Age
Share: 




© Copyright 2020 Tamilonline