Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | பயணம் | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | சிறுகதை | பொது | ஹரிமொழி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ய. மஹாலிங்க சாஸ்திரி
- அரவிந்த்|ஜனவரி 2023|
Share:
எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர் யக்ஞசுவாமி மஹாலிங்க சாஸ்திரி என்னும் ய. மஹாலிங்க சாஸ்திரி. இவர், ஜூலை 31, 1897ம் நாளன்று யக்ஞசுவாமி சாஸ்திரிகள் - சம்பூர்ணம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். புகழ்பெற்ற நீலகண்ட தீக்ஷிதர், அப்பய்ய தீக்ஷிதரின் பரம்பரையைச் சேர்ந்த குடும்பம். கொள்ளுத்தாத்தா மன்னார்குடி ராஜு சாஸ்திரிகள், பிரிட்டிஷார் உள்பட சமஸ்தான மன்னர்கள் பலரால் மதித்துப் போற்றப்பட்டவர். பிரிட்டிஷாரிடமிருந்து முதன்முதலில் 'மஹாமஹோபாத்யாயா' பட்டம் பெற்றவர். தந்தை யக்ஞசுவாமி சம்ஸ்கிருத அறிஞர். பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். இசையில் தேர்ந்தவர். அவ்வழியில் இயல்பிலேயே இசை ஆர்வமும் பன்மொழித் திறமையும் கொண்டவராக இருந்தார் மஹாலிங்க சாஸ்திரி.

இவர் தந்தை நடத்திவந்த பாடசாலையில் பயின்றார். 1933ல் சென்னை மாநிலக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து சட்டம் பயின்று பி.எல். பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் என மும்மொழித் தேர்ச்சி உடையவரானார். மனைவி, மரகதவல்லி. இவர்களுக்கு மூன்று மகன்கள். நான்கு மகள்கள்.

மஹாலிங்க சாஸ்திரி மாணவப் பருவத்தில்



மஹாலிங்க சாஸ்திரி, படிப்பை முடித்ததும் சில காலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின் மதுரா காலேஜ் மற்றும் அண்ணாமலை பல்கலையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். அதன்பின் தருமபுரம் ஆதினத்தைச் சேர்ந்த ஓரியண்டல் கல்லூரியின் முதல்வரானார். அங்கு தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் ஆகம சாஸ்திரத்தை மாணவர்களுக்குப் போதித்தார்.

அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர், மஹாலிங்க சாஸ்திரியின் நண்பர். அவர் 'விவேக போதினி' இதழை நடத்தி வந்தார். அந்த இதழில்தான் மஹாலிங்க சாஸ்திரியின் எழுத்துப் பயணம் தொடங்கியது. அவ்விதழில் ஜோதிடம், இசை பற்றிச் சில கட்டுரைகளை எழுதினார். அக்காலத்தின் புகழ்பெற்ற ஆங்கில இதழான 'திரிவேணி' ஆசிரியர் குழுவினருடன் ஏற்பட்ட நட்பால் அவ்விதழிலும் சில கட்டுரைகளை எழுதினார். 1942 ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் 'மண்ணாங்கட்டி' என்ற மஹாலிங்க சாஸ்திரியின் முதல் நகைச்சுவைப் படைப்பு வெளியானது. 'ராஜூ என் நண்பன்' என்ற சிறுகதை சுதேசமித்திரனில் 1945ல் வெளியான இவரது முதல் படைப்பு. கி.வா.ஜகந்நாதன், எழுத்தாளர் கி. சந்திரசேகரன் ஆகியோரின் ஊக்குவிப்பால் தொடர்ந்து கலைமகள், பாரதமணி, குமரிமலர் போன்ற இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதினார். சில்பஸ்ரீ இதழில் பல மொழிபெயர்ப்புகள் வெளியாகின. ஹிந்து இதழிலும் சில மதிப்புரைகளை எழுதினார். 'மதுரை புஷ்பவனம்', 'பல்லவி சோமு பாகவதர்' போன்ற அக்காலத்து இசை மேதைகள் பற்றி பாரதமணி. சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்.



இசையில் தேர்ந்தவர். புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்தவர். ஜோதிடம் நன்கு அறிந்தவர். பி.வி. ராமனின் ஜோதிட இதழில் ஜோதிடம் குறித்து நிறையக் கட்டுரைகளை எழுதியுள்ளார். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர். இவரது நகைச்சுவைக் கதைகள் தொகுக்கப்பட்டு 'மாப்பிள்ளை ஆல்பம்' என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. பல சம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்ததுடன் ஔவையின் 'வாக்குண்டாம்', 'நல்வழி' போன்றவற்றைச் சம்ஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த், செஸ்டர்ஃபீல்ட், மற்றும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளார். சம்ஸ்கிருதம் பயிலும் மாணவர்களுக்காகப் பல பாட நூல்களை எழுதியுள்ளார். கா.சி. வேங்கடரமணியின் 'A day with Sambhu' ஆங்கில நூலை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சம்ஸ்கிருதப் படைப்புகளை, கவிதைகளை ஏ.பி. கெய்த் (A.B. Keith), ஈ.ஜே. ராப்ஸன் (E.J. Rapson), எல்.டி. பார்னெட் (L.D.Barnet), எஃப் எட்ஜெர்ட்டன் (F.Edgerton) உள்ளிட்ட பல வெளிநாட்டுப் படைப்பாளிகள் பாராட்டியுள்ளனர்.

சிறுவர்களுக்காகவும் கதைகள் எழுதியுள்ளார். தருமபுரம் ஆதீனம் சார்பாக வெளிவந்த 'ஞானசம்பந்தம்' இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 'ஆர்ய தர்மம்' இதழில் இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. 'ஓரியன்ட் ரிசர்ச் ஜர்னல்', 'தமிழுலகு', 'த்ரிவேணி', 'நவயுவன்', 'தினமணி', 'ரஸிகன்', 'உமா', 'அமுதசுரபி' என இவர் எழுதியுள்ள இதழ்களின் பட்டியல் நீளமானது. வானொலியிலும் உரையாற்றியுள்ளார். கவிதை, காவியம், நாடகம், தத்துவ நூல்கள், மொழிபெயர்ப்பு என சம்ஸ்கிருதத்தில் சுமார் 60 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.



இசைஞானம் மிக்க இவர் பல கிருதிகளை, துதிகளை எழுதியுள்ளார். திருவாலங்காட்டில் ஆச்ரமம் ஒன்றை நிறுவி அதன் மூலம் சம்ஸ்கிருத இலக்கியங்களை அச்சிட்டு வந்தார். இவரது சேவையைப் பாராட்டி 'கவி சார்வபௌமா' என்ற பட்டத்தை காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் வழங்கியுள்ளார். சுவாமி சிவானந்தர் இவருக்கு 'ஞான பாஸ்கரா' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்துள்ளார். சம்ஸ்கிருத அகாடமி 'கவி சேகரா' என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.

தி. ஜானகிராமன், ஹிந்து என். ரகுநாத ஐயர் (ரஸிகன்) கா.சி. வேங்கடரமணி, சர். சி.பி. ராமசாமி ஐயர் உள்ளிட்ட பலராலும் மதிக்கப்பட்ட நண்பர். நகைச்சுவைப் படைப்புகள் பலவற்றைத் தந்த முன்னோடிப் படைப்பாளியான ய. மஹாலிங்க சாஸ்திரி, ஏப்ரல் 14,1967ல் காலமானார்.
ய. மஹாலிங்க சாஸ்திரியின் படைப்புகள்

சிறார் படைப்புகள்
மண்டூக நாயகி
வீண் அபவாதம்
சாயம் வெளுத்தது
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது
மற்றும் பல

★★★★★


கவிதை நூல்கள்
வனலதா
கிங்கிணிமாலை
ப்ரமர சந்தேசம்
தேசிகேந்த்ரஸ்தவாஞ்சலி
மற்றும் பல

★★★★★


சிறுகதைகள்
மண்ணாங்கட்டி
ராஜு என் நண்பன்
காபி வேண்டாம்
இது ஒப்பந்தக் கல்யாணம் அல்ல
நாகுவின் நாட்டுப்பெண்
தலை தீபாவளி
யார் பைத்தியக்காரன்?
முத்துவையரின் பங்களா
பானை பிடித்தவள்
ராஜத்தின் கவுன்
க்ளாஸ்மேட் செல்லப்பா
கேப்டன் காசிநாதன்
சீதாவின் சுயம்வரம்
உன் முகத்தில் விழித்தேன்
ஜோஸ்யம்
மற்றும் பல

★★★★★


கட்டுரைகள்
பல்லவி சோமு பாகவதர்
மதுரை புஷ்பவனம் ஐயர்
மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர்
வேதாந்த தீபாவளி
வேதாந்த சங்கீதம்
விநாயகரும் நகைச்சுவையும்
சிரஞ்சீவிக் கவிராயர்
விடாதே, பிடி காக்கையை
சந்திராஷ்டமம்
மகாமகம்
ஆகாயத்தில் அத்புதம்
தை பிறந்தது
ஆர்ய நவரத்ன மாலிகா
அவள் நாடகம்
பக்தியின் பெருமை
தியாகய்யரின் ஸம்ஸ்கிருத கீர்த்தனைகள்
மற்றும் பல

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்
கடோத்கசன் தூது (மூலம்: பாஸ மகாகவியின் தூத கடோத்கசம்)
அவந்திவர்மன் அரசியல் (மூலம்: கல்ஹண மகாகவியின் ராஜதரங்கணி)

வடமொழி நாடகங்கள்
ஆதிகாவ்யோதயம்
உத்காத்ருதசானனம்
ப்ரதிராஜசூயம்
ச்ருங்கார நாரதீயம்
கலிப்ராதுர்பாவம்
கௌண்டின்ய பிரஹஸனம்

★★★★★


நூல்கள்
ராஜு சாஸ்திரிகளின் மகிமை (வாழ்க்கை வரலாறு)
மாப்பிள்ளைத் தோழன் (நாவல்)
நாமொன்று நினைக்க (நாவல்)
மாப்பிள்ளை ஆல்பம் (சிறுகதைத் தொகுப்பு)


அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline