|
எஸ்.எல்.வி. மூர்த்தி |
|
- அரவிந்த்|டிசம்பர் 2022| |
|
|
|
|
தமிழில் வெளியாகும் மேலாண்மை குறித்த எழுத்துக்களின் முன்னோடி, எஸ்.எல்.வி. மூர்த்தி. சொந்த ஊர் நாகர்கோவில். இவர் 1945 ஆகஸ்ட் 18-ம் நாளன்று பிறந்தார். மாணவப் பருவத்தில் வாசித்த நூல்கள் எழுத்தார்வத்தைத் தூண்டின. சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். உயர்கல்வியை முடித்த பின் இவர், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து பயின்று அகமதாபாதில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ. பெற்றார்.
பெங்களூருவில் உள்ள இந்தோ-அமெரிக்க நிறுவனமான கிரைண்டுவெல் நார்ட்டன் நிறுவனத்தின் தொழிற்சாலையின் விற்பனை மேலாளராகப் பணியாற்றினார். கடுமையாக உழைத்து விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றை உயர்த்தினார். ஏற்றுமதியில் சாதனை படைத்ததற்காக மத்திய அரசின் பரிசைப் பெற்றார்.
எழுத்தார்வம் உந்த, ஆங்கில இதழ்களுக்கு மேலாண்மை மற்றும் தொழில் உத்திகள் பற்றி எழுத ஆரம்பித்தார். பிரபலமான இந்திய மற்றும் சர்வதேசப் பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் வெளியாகின. இவற்றுக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழிலும் எழுதலானார். 'நாணயம் விகடன்', 'இந்து தமிழ் திசை' இதழ்களில் இவர் எழுதிய நிர்வாகத் தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. பின்னர் அவை நூல்கள் ஆகின. இவர் எழுதிய 'தொழில்முனைவோர் கையேடு' தமிழ் வளர்ச்சித் துறையின் 2008ம் ஆண்டுக்கான சிறந்த மேலாண்மையியல் துறை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி இவருக்குப் பரிசினை வழங்கிக் கௌரவித்தார்.
மூர்த்தி மேலாண்மை, தொழில் வளர்ச்சி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, வரலாறு, ஆன்மீகம் தொடர்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றை நியூ ஹொரைசன் மீடியா, ராமகிருஷ்ண மடம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், மதி நிலையம், விகடன் பிரசுரம், இந்து தமிழ் திசை போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. இவருடைய படைப்புகளில் அரசர்களைப் பற்றிய பேரரசர் அசோகர், ஜூலியஸ் சீஸர், மாவீரன் அலெக்சாண்டர், நெப்போலியன், செங்கிஸ்கான் போன்றவை சுவாரஸ்யமானவை. நான் எம்.பி.ஏ. ஆவேன், மார்க்கெட்டிங் யுத்தங்கள், இண்டர்வியூ டிப்ஸ், வாங்க பழகலாம், தொழில்முனைவோர் கையேடு, லீ க்வான் யூ போன்றவை மிகுந்த வரவேற்புப் பெற்றவை. சிறார்களுக்காக புதுமையான முறையில், உலக நாடுகள் சிலவற்றைத் தேர்தெடுத்து அந்த நாட்டை மையப்படுத்தி குழந்தைக் கதைகளை எழுதியுள்ளார். முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில் மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வர இருக்கின்றன.
எளிமையாகச் சொல்வது, அப்படிச் சொல்வதை சுவையாக, விறுவிறுப்பாகச் சொல்வது இவரது எழுத்துப் பாணி. கட்டுரைகளை உண்மைச் சம்பவங்கள் கலந்து வாசகர்களை ஈர்க்கும் வகையில் தந்துள்ளார். சுய அனுபவங்களுடன், தேவைக்கேற்ப சரியான ஆவணங்களை இணைத்துப் பல மேலாண்மைக் கட்டுரைகளை, நூல்களை எழுதி வருகிறார்.
மூர்த்தி, சென்னையில், மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ் (Moorthy Marketing Associates) என்னும் மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தை முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். வெளிநாட்டு, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவிக் கரம், நிர்வாக ஆலோசனை, பயிற்சிப் பணிகள் எனச் செயல்படுகிறார். நிர்வாகவியல் மற்றும் விற்பனைத்துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இதுவரை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது நூல்கள் பல பதிப்புகள் கண்டுள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். தென்றல் இதழிலும் இவரது சிறுகதைகள் சில வெளியாகியுள்ளன. (அவற்றை வாசிக்க)
பிசினஸ் ஏஷியா, எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. தமிழில் குங்குமம், இந்துதமிழ் திசை, நாணயம் விகடன் போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். |
|
அரவிந்த்
எஸ்.எல்.வி. மூர்த்தியின் சில நூல்கள் நான் எம்.பி.ஏ. ஆவேன் நம்மை நாமே அறியலாமா? ஜப்பான் டியர் மிஸ்டர் பிஸினஸ் மேன் லீ க்வான் யூ தொழில் முன்னோடிகள் பண்டைய நாகரிகங்கள் மாயன் நாகரிகம் சுப்ரமணியன் சந்திரசேகர் மார்க்கெட்டிங் யுத்தங்கள் இண்டர்வியூ டிப்ஸ் வால்மார்ட் விளம்பர உலகம் வாங்க பழகலாம் ஆன்லைன் ராஜா விளம்பர உலகம் பூக்களைப் பறிக்காதீங்க! அமேசான் ஒரு வெற்றிக் கதை ஆண்ட்ரூ க்ரோவ் இரும்புப் பெண்மணி கிளியோபாட்ரா ஐ.ஐ.எம். நிர்வாகவியல் கல்லூரி இரண்டாவது ஆப்பிள் ஜூலியஸ் சீஸர் மாவீரன் அலெக்சாண்டர் தொழில் முனைவோர் கையேடு பொசிஷனிங் உலகக் குழந்தைக் கதைகள் James Watt BPO மற்றும் பல. |
|
|
|
|
|
|
|