"யாரும் பின்பற்ற முடியாத வேகமும் எழிலும் வருணனைத் திறனும் கலந்த நடை இவருக்கே சொந்தம். இது உண்மை. வெறும் புகழ்ச்சியன்று" - இப்படி மனமாரப் பாராட்டியவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. "செந்தமிழ்த் தாய்க்குக் கோவி. மணிசேகரன் செல்லப்பிள்ளை போலிருக்கிறது. இல்லாவிட்டால் எப்படி வரும் இத்தகையதொரு தீந்தமிழ் நடை" இப்படி விதந்தோதியவர் சௌந்தரா கைலாசம். இவ்வாறு மூத்த எழுத்தாளர்களாலும் கவிஞர்களாலும் பாராட்டப்பட்டவர் 'இலக்கிய சாம்ராட்', 'புதினச்செம்மல்' கோவி.மணிசேகரன். பள்ளி சென்று பயிலாமலேயே தன் ஆர்வத்தாலும் முயற்சியாலும் எழுத்துலகின் உச்சத்தை எட்டிய இவர், மே 2, 1927 அன்று, கோவிந்தராசன் - பட்டம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். தந்தை கொத்தனார் மேஸ்திரியாக இருந்தார். மிகவும் வறுமையான குடும்பம். அதனால் முறையான பள்ளிக்கல்வி கோவி. மணிசேகரனுக்கு வாய்க்கவில்லை. தந்தை இவரை ஏதேனும் தொழில் பயிலுமாறு வலியுறுத்தவே அச்சகத்தில் சில காலம் பணியாற்றி அச்சுத்தொழிலைக் கற்றுக் கொண்டார். பின்னர் தச்சுத் தொழிலையும் கற்றார்.
புதுவையில் வசித்த இவரது அக்காள் கணவர் இவரைப் புதுவைக்கு அழைத்துச் சென்றார். அங்கே இவர் பல்வேறு வேலைகளைச் செய்தார். எஞ்சிய நேரத்தில் சுயமாகப் பள்ளிப் பாடநூல்களை வாசித்தார். தமிழாசிரியர் ஒருவரின் உதவியுடன் அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொண்டவர், தனித்தேர்வராக எழுதி 'மெட்ரிக்' தேர்ச்சி பெற்றார். மறைமலை அடிகளின் மாணவரான வேலூர் காரழகனாரிடம் தமிழ் பயின்றார். இலக்கண, இலக்கியங்களை வேலூர் அண்ணல் தங்கோவிடம் கற்றார். தெலுங்கு, ஃப்ரெஞ்ச் மொழிகளும் கற்றார். இவரது தணியாத ஆர்வமும் குன்றாத முயற்சிகளுமே இவையெல்லாவற்றிற்கும் காரணமாய் அமைந்தன. தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலையில் இசை பயின்று 'சங்கீத பூஷணம்' பட்டம் பெற்றார். இதில் முதல் மாணவராகத் தேறித் தங்கப் பதக்கம் வென்றதுடன் நிறுவனர் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாயும் இவருக்குக் கிடைத்தது. மேற்கொண்டு சித்தூர் சுப்பிரமணியத்திடம் இசை பயின்றார். உடன் பயின்றவர் மதுரை சோமு. சம்ஸ்கிருதமும் பயின்று தேர்ந்தார்.
கவிதை ஆர்வத்தால் இதழ்களுக்குக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். 'தமிழ் நிலம்' என்ற மாத இதழில் 1945ல், இவரது முதல் கவிதை வெளியானது. அது பகுத்தறிவுக் கொள்கைகள் தமிழ்நாட்டில் மேலோங்க ஆரம்பித்திருந்த காலம். அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து தமது கொள்கைகளைப் பரப்பி வந்தனர். அந்தச் சொற்பொழிவுகள் மணிசேகரனை ஈர்த்தன. குறிப்பாக, அண்ணாவின் மேடைப்பேச்சும், எழுத்துக்களும், நாடகங்களும் இவரைக் கவர்ந்தன. அந்த பாதிப்பால் இவருக்கும் நாடகங்கள்மீது ஆர்வம் ஏற்பட்டது. 1947ல், 'எங்கள் நாடு' என்ற நாளிதழ் மலரில் 'புரட்சிப் புலவர் அம்பிகாபதி' என்ற நாடகத்தை எழுதினார். தொடர்ந்து 'கல்லறை', 'பேசும் தெய்வம்' என்ற இரு நாடகங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்தார். நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் 'சேகரன்' அந்த நாடகம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரவே, தந்தையின் பெயரான கோவி. என்பதை இணைத்துக் கொண்டு 'கோவி. மணிசேகரன் ஆனார்.
நாளடைவில் நடிப்பு இவருக்கு அலுத்தது. எழுத்தின்மீது ஆர்வம் குவிந்தது. கல்கியும், டாக்டர் மு.வ.வும் அதற்கு அடிப்படைக் காரணமாயினர். குறிப்பாக 'பொன்னியின் செல்வன்' இவருள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்கியைப் போல சிறந்ததொரு வரலாற்று நாவலை எழுத வேண்டும் என்றும், மு.வ.வைப் போல் சிறந்த சமூக நாவல்களைப் படைக்க வேண்டும் என்றும் ஆர்வம் கொண்டார். நடிப்பிலிருந்து முற்றிலும் விலகி எழுத்துத் துறையில் தீவிரமாக ஈடுபட்டார். 1954ல் 'கலைமன்றம்' என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில்தான் இவரது முதல் வரலாற்று நாவலான 'அக்கினிக் கோபம்' வெளியானது. அடுத்து 'கலை அரங்கம்' மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். கவிதை ஆர்வத்தால் தனது கவிதைகளைத் தொகுத்து 'கற்பனாஞ்சலி' என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார். அதுதான் அச்சில் வெளிவந்த இவரது முதல் நூல். தொடர்ந்து இதழ்களுக்கு கதை, கவிதை, கட்டுரை, தொடர்கதை, நாவல்கள் என்று நிறைய எழுதினார். இவரது எழுத்திற்குக் கிடைத்த வரவேற்பால் எழுத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டார்.
கவிதை ஆற்றலால் திரைப்படப் பாடல் எழுதும் வாய்ப்புகள் வந்தன. 1958ல் வெளியான 'பூலோகரம்பை' படத்தில் பாடல் எழுதினார். அந்தத் தொடர்பு திரையுலகில் இவருக்குப் பல நண்பர்களைப் பெற்றுத்தந்தது. 1954ம் ஆண்டு வெளியான 'நல்லகாலம்' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். 1955ம் ஆண்டு சரஸ்வதி அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் வாய்த்தனர். ஆண் மக்களுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்றும், பெண் மக்களுக்கு பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்றும் பெயர் சூட்டினார்.
கோவி. மணிசேகரன் படைப்புகள்
கவிதை கற்பனாஞ்சலி, கோவி. ராமாயணம் மற்றும் பல.
நாடகங்கள் புரட்சிப் புலவன் அம்பிகாபதி, ஜூலியஸ் ஸீஸர், ஹாம்லெட், பிறவிப் பெருங்கடல், சுமித்திரை, ஜாதிமல்லி, நான்கு திசைகள், ராட்சஸன் மற்றும் பல.
சிறுகதைத் தொகுப்புகள் தாயும் சேயும், வாழ்வின் விளக்குகள், பூந்தாது, தாகத் தேர், காலம் சொல்லும் கதை, உயிரும் ஒளியும், காளையார் கோயில் ரதம், மஞ்சள் குங்குமம் கதைகள், இதயங்கள், நீலாம்பரி, கல்லுளிமங்கன், தொட்டில் பழக்கம், இரவின் இளநகை, சரித்திரக் கதைக் களஞ்சியம், மேவார் ராணி, வெறும் வயிறு, சிறுகதைச் செல்வம், கொடுத்துச் சிவந்த கைகள், கோவியின் கதைகள், அரண்மனை ராகங்கள், பொன் விளக்கு எரிகிறது, மதுரை மன்னர்கள், செந்தமிழ்ச் செல்வர்கள், மகுடங்கள், கழுவேறி மேடு, செங்கோலின் சங்கீதங்கள், தம்பூர், மாலிக்காபூர் மற்றும் பல
சமூக நாவல்கள் பனிரோஜா, தேன் நிலவு, கங்கையம்மன் திருவிழா, நீலமல்லிகை, தென்னங்கீற்று, ஒரு கொடியில் இருமலர்கள், பூங்குயில், வலம்புரிமுத்து, வாழ்விக்க வந்த தெய்வம், தவமோ! தத்துவமோ, நேற்றுப் பெய்த மழையில், ஜயஜய சங்கரி, காக்கைச் சிறகு, மனோரஞ்சிதம், வாழ்க்கை ஒரு விளையாட்டு, ஆயிரம் வாசல் இதயம், நிலாச்சோறு, அகிலா, ஆத்மா, முள், ஒரு தீபம் ஐந்து திரிகள், காவிய மனைவி, யாகசாலை, சூரியன் மேற்கே உதிக்கிறான், திரிசூலி, இதழ்கள், வேரில் மலரும் பூக்கள், மூங்கில் இலை மேல், சொல்லித் தெரிவதில்லை மற்றும் பல.
வரலாற்று நாவல்கள் அக்கினிக் கோபம், செம்பியன் செல்வி, முகிலில் மறைந்த முகம், பத்தாயிரம் பொன் பரிசு, பொற்காலப் பூம்பாவை, ராஜ மோகினி, தேவ தேவி, பொன் வேய்ந்த பெருமாள், பேய்மகள் இளவெயினி, கானல் கானம், இந்திர விகாரை, செஞ்சி அபரஞ்சி, தட்சிண பயங்கரன், சாம்ராட் அசோகன், சோழதீபம், சந்திரோதயம், மயிலிறகு, தென்றற் காற்று, ராணி வேலுநாச்சி, மறவர் குல மாணிக்கம், அச்சுத ரங்கம்மா, காந்தருவதத்தை, சேரன் குலக்கொடி மணிமண்டபம், சீவக சிந்தாமணி, குறவன் குழலி, மேகலை, ராஜ சிம்மன் காதலி, நாயகன் நாயகி, நந்திவர்மன், குடவாயில் கோட்டம், ராஜ கர்ஜனை, ஹைதர் அலி, தூது நீ சொல்லி வாராய், ஆதித்த கரிகாலன் கொலை, நிலாக்கனவு, ரத்த ஞாயிறு, வேங்கைவனம்,. காஞ்சிக் கதிரவன், ராஜ ராகம், ராஜாளிப் பறவை, அஜாதசத்ரு, திருமேனித் திருநாள், செஞ்சிச் செல்வன், பத்தினிக்கோயில் வீணாவதி, நாயக்கன் மாதேவிகள், பூங்குழலி, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் பல
கட்டுரைகள் காலம் சொல்லும் கதை, சொல்லேருழவர், நந்திக்கொடி நாயகர்கள், தமிழும் இன்றைய இலக்கியங்களும், கயற்கொடிக் காவலர்கள், விற்கொடி வேந்தர்கள், மதுரை மன்னர்கள், ஆராய்ச்சி மணி மற்றும் பல
ஆரம்ப காலத்தில் நாத்திகராக இருந்தவர் கோவி.மணிசேகரன். பின்னர் சமயபுரம் அம்மனின் அதிதீவிர பக்தராகிப் போனார். அதற்குக் காரணம் அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம். அது பற்றி, "62-63 வாக்கில், என் இரண்டு கண்களும் பழுதுபட்டன. பல டாக்டர்கள் முயன்றும் பார்வை வரவில்லை, ஒரு வெள்ளிக்கிழமை, சோறு கேட்டு வாசலில் வந்த ஒரு கிழவி சொன்னாள், 'கண் கொடுப்பாள் சமயபுரத்தாள், கவலைப்படாதே' என்று. மறுநாள் காலையில் அந்த அற்புதம்! நிஜமாகவே கண் விழித்தேன். பார்வை தெளிந்தது. அடுத்த நாளே சமயபுரம் போய் அவளுடைய சந்நிதியில் அடைக்கலப்பட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதன் விளைவாகவே, அம்மனுக்கு நன்றி பாராட்டும் விதத்தில், ஒரு மகளுக்கு 'சமயபுரி' என்று பெயரிட்டார். மற்ற மகவுகளின் பெயர்களெல்லாம் வரலாற்றுத் தொடர்புடைய பெயர்கள் தாம்.
'பொன்வேய்ந்த பெருமாள்', 'காஞ்சிக் கதிரவன்', 'வேங்கை வனம்', 'மங்கை நாச்சியார்', 'கொல்லிப் பாவை', 'குற்றாலக் குறவஞ்சி' போன்ற பல வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் புகழைச் சேர்த்தன. வரலாற்று நாவல்கள் மட்டுமல்லாமல், சமூக நாவல்களிலும் முத்திரை பதித்தார். வயது வந்தும் பருவம் அடையாத பெண்ணைப் பற்றியும் அதனால் அவளது குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியும் சொல்கிறது இவரது குறிப்பிடத்தகுந்த நாவலான 'தென்னங்கீற்று'. இது பின்னர் இவரது இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளியானது. 'ஒரு தீபம் ஐந்து திரிகள்' என்பது இவரது நூறாவது நாவலாகும். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் 'ராஜநாகம்' என்ற பெயரில் எழுதினார். இவரது 'காளையார்கோவில் ரதம்' என்ற சிறுகதை பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும். குமுதம், விகடன், கல்கி, கலைமகள், குங்குமம், இதயம் பேசுகிறது என்று இவர் எழுதாத இதழ்களே இல்லை என்னுமளவிற்கு தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். பல நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் என்று எழுதிக் குவித்துள்ளார் கோவி. மணிசேகரன்.
திரைத்துறை மீதான காதலால் இயக்குநர் கே. பாலசந்தரிடம் மணிசேகரன் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 'அரங்கேற்றம்' இவரது முதல் படம். அப்படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். தொடர்ந்து தனது, 'தென்னங்கீற்று' என்ற நாவலுக்குத் திரைக்கதை, வசனம் எழுதி அதே பெயரிலேயே படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கினார். அது கன்னடத்தில் வெற்றி பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது. ஆனால், தமிழில் தோல்வி அடைந்தது. அடுத்த முயற்சியாக தனது 'மனோரஞ்சிதம்' என்ற கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். படம் பாதியிலேயே நின்று போனது. இவருடைய கதை 'அகிலா' என்பது 'மீண்டும் பல்லவி' என்ற பெயரில், மற்றொருவர் இயக்கத்தில் திரைப்படமானது.
அடுத்த முயற்சியாக 'யாகசாலை' என்பதைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனை அறிந்த எம்.ஜி.ஆர். "இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள்" என்று அறிவுறுத்தினார். ஆனால், தனது கதையின் மீதுள்ள நம்பிக்கையால் எம்.ஜி.ஆரின் ஆலோசனையை மீறிப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். படம் வெளியானது. ஆனால், நான்கு வாரங்களுக்கு மேல் ஓடவில்லை. பலத்த நஷ்டம். அது முதல் திரைப்பட முயற்சியில் ஈடுபடுவதில்லை என்று முடிவு செய்து மீண்டும் இலக்கியத்தின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சின்னத்திரை இவரை அரவணைத்தது. சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து இவர் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்" என்ற தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 'திரிசூலி', 'அக்னிப் பரீட்சை' போன்ற தொடர்கள் வெளியாகி இவருக்குப் புகழ் சேர்த்தன.
இவரது கலை, இலக்கிய முயற்சிகளுக்குப் பல்வேறு விருதுகளும் இவரைத் தேடிவந்தன. தமிழக அரசால் 'ராஜராஜன் விருது', 'திரு.வி.க. விருது' அளிக்கப்பட்டது. தினத்தந்தி நிறுவனத்தின் 'சி. பா. ஆதித்தனார் விருது' தேடி வந்தது. வேலூர் தமிழிசைச் சங்கத்தின் 'இசைச்செல்வம்', ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் விருது, லில்லி தேவசிகாமணி விருது, தமிழ் வளர்ச்சித்துறை விருது, கலைஞர் விருது, எம்.ஜி.ஆர். விருது, வி.ஜி.பி. விருது, புதுவை வ.உ.சி. விருது, காஞ்சி காமகோடி பீட விருது, முகம் மாமணி விருது, குழந்தை எழுத்தாளர் சங்க விருது, இலக்கிய சாம்ராட் விருது, ஞான சூரியன் விருது, சாகித்திய சக்கரவர்த்தி விருது, இலக்கிய ராட்சசன் விருது, இலக்கிய ராசராசன் விருது, புதினச் செம்மல், புதினப் பேராசான் என இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது வரலாற்றுப் புதினமான 'குற்றாலக் குறவஞ்சி' நாவல், 1992ம் ஆண்டில், சாகித்திய அகாதமி விருது பெற்றது.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் படைப்புலகில் இயங்கியவர் கோவி. மணிசேகரன். மூப்புக் காரணமாக நவம்பர் 18 அன்று காலமானார். இந்தக் கட்டுரையே அவருக்கான அஞ்சலியாகிறது. |