Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | அனுபவம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
பகவான் யோகி ராம்சுரத்குமார்
- பா.சு. ரமணன்|டிசம்பர் 2021|
Share:
ஒருவர் ஞானியாகவே பிறந்தாலும் அப்போதே அவர்களது ஞான இயல்பு வெளிப்பட்டு விடுவதில்லை. சாதாரண மானுடர் போலவே வளர்ந்து, வாழ்ந்து, குறிப்பிட்ட காலம் வந்த பின்னர்தான் அவர்களது ஞானத் தன்மையைப் பிறர் அறிய முடிகிறது. அத்தகைய ஞானம் பெற்றவர்கள் தாங்கள் பெற்றது போதும் என்று எண்ணாமல் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், தம் நிலையில் இருந்து இறங்கி வருகின்றனர். தந்தையாய், குருவாய். நண்பனாய், நல்லாசிரியனாய், ஒவ்வொரு சமயத்தில் தாய் போன்றும் சேய் போன்றும் விளங்கி, நாடி வந்தோர் வாழ்வில் ஆன்ம மலர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். அத்தகைய மகாஞானிகளுள் ஒருவர் யோகி ராம்சுரத்குமார்.

தோற்றம்
கங்கைக் கரையை ஒட்டியுள்ள நர்தரா எனும் கிராமத்தில், ராம்தத் குன்வர் - குசுமா தேவி தம்பதியினருக்கு டிசம்பர் 1, 1918 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஸ்ரீ ராமபிரான்மீது கொண்ட அளவற்ற பக்தி காரணமாகப் பெற்றோர் இவருக்கு ராம்சுரத்குன்வர் என்ற பெயரைச் சூட்டினர். சிறுவயதிலேயே அளவற்ற நினைவாற்றலும், மிகுந்த புத்தி கூர்மையும் உடையவராக இவர் இருந்தார். விடியற்காலையில் எழுவதும், கங்கை நதிக்கரையில் அமர்ந்து சூரியன் உதிப்பதையும், பறவைகள் வரிசை வரிசையாக இரைதேடச் செல்வதையும் வேடிக்கை பார்ப்பது இவரது தினசரி வழக்கம். மாலையில் பள்ளி விட்டு வந்ததும், கங்கைக் கரைக்குச் சென்று நதியின் அழகையும், அதில் துள்ளி விளையாடும் மீன்களின் அழகையும் ரசிப்பதும் அவர் வாடிக்கையாக இருந்தது.



ஞான வேட்கை
கங்கைக் கரைக்கு சாதுக்கள் பலர் வருவார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் அவர்களது ஆன்மிக அனுபவங்களைக் கேட்பதும் ராம்சுரத்குன்வருக்கு மிகவும் விருப்பமானது. பசித்த சாதுக்களை வீட்டிற்குக் கூட்டிச் செல்வார். அன்னையிடம் அவர்களுக்கு உணவு சமைத்துப் போடுமாறு வேண்டிக் கொள்வார். வீட்டில் ஏதும் இல்லையென்றால் தன் பங்கு உணவை அவர்களுக்கு அளித்து விடுமாறு கேட்டுக்கொள்வார். இயல்பிலேயே இரக்க குணமும் அன்பும் உடையவராக அவர் இருந்தார். இரவு நேரத்தில் 'பரிக்ரமா' என்னும் சடங்கைச் செய்யும் சாதுக்கள், கங்கையை வலம் வந்து, அதன் கரையிலேயே தங்கி இறைநாமத்தை பஜனை செய்வார்கள். ராம்சுரத்குன்வரும் மிகுந்த உற்சாகத்துடன் நேரம் போவதே தெரியாமல் அவர்களுடன் அமர்ந்து பஜனையில் ஆழ்வார். அவர்கள் கூறும் இறை தத்துவங்களும், கங்கை, காசி, கயா, இமயமலை போன்றவற்றின் புனித வரலாறுகளும் அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. அந்தச் சிறுவயதிலேயே ஞான வேட்கையை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தன.

குருவியின் மரணம்
ஒருநாள், தாய்க்கு உதவும் நோக்கத்தில் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார் ராம்சுரத்குன்வர். அப்போது அழகான ஒரு குருவியை கிணற்றின் மேடையில் கண்டார். தத்தித் தத்தி நடந்த அதன்மீது விளையாட்டாய்க் கயிற்றின் ஒருமுனையை வீச, அது அடிபட்டுக் கீழே விழுந்தது. பதறிப்போன ராம், ஓடிச்சென்று அதைத் தூக்கினார். பலனில்லை. அது இறந்து விட்டிருந்தது.

அறியாமல் செய்த தவற்றுக்காக மிகவும் மனம் வருந்தினார் ராம்சுரத்குன்வர். கண்ணீர் விட்டு அழுதார். ஓர் அப்பாவிப் பறவையைக் கொன்று விட்டோமே, வீணாக உயிரைப் பறித்து விட்டோமே என்று எண்ணிக் கலங்கினார். கங்கைக் கரைக்குச் சென்றார். இறந்த குருவியின் வாயில் கங்கை நீரைச் சொட்டுச் சொட்டாக ஊற்றினார். குருவி உயிர் பிழைக்குமோ என்று காத்திருந்தார். பலனில்லை. குருவி இறந்தது இறந்ததுதான். தன் செயலுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டிய ராம், கண்ணீருடன் அந்தப் பறவையை கங்கை நதியில் சேர்ப்பித்துவிட்டு அதன்கரையில் மௌனமாய் அமர்ந்திருந்தார். அவர் மனதுள் ஆயிரம் சிந்தனைகள். 'ஏன் இந்தப் பறவை இறந்தது? நான் ஏன் இந்தத் தவற்றைச் செய்தேன்? சற்றுமுன் உயிருடன் இருந்த இந்தப் பறவை இப்போது இல்லை. அப்படியானால் உயிர் என்பது என்ன? அது எங்கே போகும்? அது ஏன் போகிறது? இதையெல்லாம் செய்பவர் யார்? ஏன் செய்கிறார்?' என்ற கேள்விகள் அவர் உள்ளத்துள் எழுந்தன.

இளைஞனான சித்தார்த்தன் ஒரு முதியவரின் மரணத்தைக் கண்டபின் மனம் மாறி, புத்தன் ஆனான். சிறுவன் வேங்கடரமணன், தனது மரணம்பற்றிய ஆன்ம அனுபவத்தால் தன்னுள்ளே தன்னைப்பற்றி ஆய்ந்து ஆன்மஞானி ரமணராக மலர்ந்தார். அதுபோல ஒரு சிறு பறவையின் மரணம் ராம்சுரத்குன்வரின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை உண்டாக்கியது. வாழ்க்கையின் நிலையாமையை அவருக்கு உணர்த்தியது.



ஆன்மீகத் தேடல்
ராம்சுரத்குன்வரின் ஆன்மீக நாட்டம் அதிகரித்தது. தினந்தோறும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதும், தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்பதும் வாடிக்கையானது. ஏற்கெனவே பெற்றோரிடமிருந்து ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டிருந்த அவர், அவற்றை இன்னமும் விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். துளஸிதாஸர் ராமாயணத்தை வாங்கிப் படித்தார். நண்பர்மூலம் கிடைத்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு அவரைப் புரட்டிப் போட்டது. தானும் ராமகிருஷ்ணரைப் போன்ற தெய்வீகப் பரவச நிலையை எப்படி அடைவோம் என்று தவித்தார்.

நர்தராவுக்கு அருகே உள்ள ஒரு ஊரில் 'கபாடியா பாபா' என்ற துறவி ஒருவர் வசித்து வந்தார். பூர்வீகத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அவர், வழக்கு ஒன்றில், தானே தன் மருமகனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டி வந்தது. தர்மம் காக்க அதை நிறைவேற்றியவர், வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவறம் பூண்டார். அவரை அடிக்கடி சந்திப்பதும் விவாதிப்பதும் ராம்சுரத்குன்வரின் வழக்கம்.

அவர், ராம்சுரத்குன்வரை காசி போன்ற புண்ணியத் தலங்களை தரிசித்துவிட்டு வருமாறு அறிவுறுத்தினார். அதன்படி ராம்சுரத்குன்வர் ஒருநாள் காசிக்குப் புறப்பட்டுச் சென்றார். காசி விஸ்வநாதர் சன்னதியில் அவருக்கு பரவச அனுபவம் வாய்த்தது. மணிகர்ணிகா காட், ஹரிச்சந்திரா காட் போன்ற இடங்கள் அவருக்கு வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தின. ஆன்ம மாற்றத்துடன் நர்தரா திரும்பினார்.



குரு தரிசனம்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே ராம்ரஞ்சனிதேவியுடன் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. சில மாதங்களில் ஆசிரியர் பணியும் கிடைத்தது. நல் மகவுகளும் வாய்த்தன. ஆனால் மனம்மட்டும் ஆண்டவனைத் தேடிக்கொண்டே இருந்தது. கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேசம் போன்ற தலங்களுக்குச் சென்று வந்தார். பல சாதுக்களை தரிசித்தார். பல நூல்களை வாசித்தார். பலரது சொற்பொழிவுகளைச் செவிமடுத்தார். ஆனாலும் மனம் அமைதியுறவில்லை. கபாடியா பாபா, ராம்சுரத்குன்வரை தென்னிந்தியவுக்குச் சென்று, அங்கே பாண்டிச்சேரியில் இருக்கும் அரவிந்த கோஷையும், அருகே திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியையும் தரிசித்து வருமாறு பணித்தார். அடுத்து வந்த கோடை விடுமுறையில் தென்னிந்தியாவுக்குப் புறப்பட்ட ராம்சுரத்குன்வர், புதுச்சேரியை அடைந்தார்.

அரவிந்தர் அப்போது தனித்திருந்து யோக சாதனைகளை நிகழ்த்தி வந்த நேரம் என்பதால் அவரது தரிசனம் கிடைக்கவில்லை. அரவிந்தரின் 'பூரண யோகம்', 'எனது சிறைவாசம்', 'ஸ்ரீ அன்னை', 'சாவித்ரி' உள்ளிட்ட நூல்களை வாங்கினார். அருகே இருந்த கடற்கரைக்குச் சென்று ஏகாந்தமாக அவற்றைப் படித்தார். அவரது மனம் தெளிவுற்றது. பின் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாமலையை அடைந்தார். ரமணாச்ரமத்திற்குத்தான் முதலில் சென்றார். அங்கே நிலவிய அமைதியும் இயற்கை எழில்மிக்க சூழலும் அவரைக் கவர்ந்தன.

பகவான் ரமணர் அப்போது பழைய ஹாலில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு சோபாவில் அமர்ந்து எங்கோ நோக்கிக் கொண்டிருக்க, சில பக்தர்கள் கண்மூடி அவர்முன் அமர்ந்திருந்தனர். ராம்சுரத்குன்வர் தானும் அவ்வாறே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். மெள்ள மெள்ள ஓர் அமைதி அலை அவரைத் தழுவியது. தன்னை மறந்தார். வெகுநேரம் கழித்தே அதிலிருந்து மீண்டார். கண் திறந்து பார்த்தபோது பகவான் ரமணர் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். பரவசம் கொண்டார். பகவானின் கருணைப் பார்வையே தன்னுள் விளைந்த ஆன்ம அமைதிக்குக் காரணம் என்பதைக் கண்டுகொண்டார். அவருக்கு ஆச்ரமத்திலேயே தங்க இடம் கிடைத்தது. அதுமுதல் தினந்தோறும் பகவானை தரிசிப்பதும் அவர்முன் அமர்ந்து தியானிப்பதும் வழக்கமானது. ஓய்வு நேரத்தில் மலைமேல் ஏறிச்சென்று குகை நமச்சிவாயர் ஆலயம், விரூபாக்ஷி குகை, ஸ்கந்தாச்ரமம் போன்ற இடங்களில் தனித்தமர்ந்து தியானித்தார். அண்ணாமலையார் ஆலயம் சென்று அருணாசல அண்ணலையும் தரிசித்து வந்தார்.

ரமணாச்ரம பக்தர் ஒருவர் மூலம் காஞ்சன்காட்டில் இருந்த சுவாமி ராமதாஸர் பற்றிக் கேள்வியுற்றார் ராம்சுரத்குன்வர். பகவானிடம் விடைபெற்று, ராமதாஸரைக் காண கேரளத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அந்த முதல் சந்திப்பு ராமசுரத்குன்வருக்கு பெரிதாக எதிர்பார்த்த எதையும் ஏற்படுத்தி விடவில்லை. மீண்டும் நர்தரா திரும்பியவர், வழக்கம்போல் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

சில வருடங்கள் கழித்து மீண்டும் ஆன்ம தாகம் பெருகவே, பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டார். மகாயோகி அரவிந்தரின் தரிசனம் பெற்றார். ஸ்ரீஅன்னையின் அருளும் ஆசியும் அவருக்குக் கிடைத்தன. பின்னர் அண்ணாமலை சென்று பகவான் ரமணரை தரிசித்தார். பின்னர் காஞ்சன்காடு சென்றார். சுவாமி ராமதாஸரின் தரிசனம் பெற்றார். அங்கு சில நாட்களைக் கழித்துவிட்டு, பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பினார்.



குரு உபதேசம்
நாளுக்கு நாள் ராம்சுரத்குன்வரின் ஆன்மீக தாகம் அதிகரித்தது. இல்வாழ்வின்மீது இருந்த பற்று மெள்ள மெள்ள நீங்கியது. இந்நிலையில் பகவான் ரமணர், ஸ்ரீஅரவிந்தர் ஆகியோரின் மறைவுச் செய்தி அவரை எட்டியது. மிகவும் மனம் கலங்கினார். தந்தையை இழந்த தனயன் போல் தவித்தார். யாரை இனி குருவாக அடைவது என்று ஏங்கினார். அப்போது அவர் மனதுள் சுவாமி ராமதாஸரின் உருவம் தோன்றியது. ஞானவேட்கை மிகுதியால் அவரையே குருவாக அடைவது என்ற உறுதியுடன் மீண்டும் அனந்தாஸ்ரமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்று சில நாட்கள் தங்கினார். நாம பஜனையில் கலந்துகொண்டார். இறுதியில் சுவாமி ராமதாஸரே தனது குரு என்பதை உணர்ந்தவர், அவர் செல்லுமிடமெல்லாம் கூடவே சென்றார். இவரது ஞானக் கனலின் தகிப்பை உணர்ந்துகொண்ட ராமதாஸர் ஒருநாள், ராம்சுரத்குன்வரின் காதில் 'ஓம் ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்ற மந்திரத்தை மும்முறை ஓதி, "இதையே குரு உபதேசமாக எண்ணி 24 மணி நேரமும் ஜெபித்து வா!" என்று கூறி ஆசிர்வதித்தார்.

குரு வாக்கைத் திருவாக்காக ஏற்று நாம ஜபத்தைத் தொடங்கினார் ராம்சுரத்குன்வர். லட்சக்கணக்காக ஜபம் செய்து அதன்மூலம் ஆத்மானுபூதி பெற்றார். பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர், தன் குரு தோத்தாபுரியிடமிருந்து மூன்றே நாட்களில் மந்திரசித்தி பெற்று விட்டார். அதே சித்தியை அடைய தோத்தாபுரி தன் வாழ்வில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளைச் செலவழித்திருந்தார். ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்ம பக்குவமோ அவரை மூன்றே நாட்களில் அதை அடைய வைத்தது. அதுபோல ஞானப்பக்குவம் வாய்க்கப் பெற்றிருந்த ராம்சுரத்குமார், பல்லாண்டு காலம் தவம்செய்து அடையக் கூடிய ஆன்ம ஞானத்தை ஒரே வாரத்தில் அடைந்து ஞானசித்தி பெற்றுவிட்டார்.

காஞ்சன்காட்டில் தன் குருவுடனேயே தங்கி வாழ்வது என்ற விருப்பதுடன் அவரது அனுமதி கோரினார் சீடர் ராம்சுரத்குன்வர். ஆனால் குரு மறுத்துவிட்டார். "நான் எங்கே போவேன், என்ன செய்வேன், தங்களை விட்டால் எனக்கு கதி யார்?" என்று ராம்சுரத்குன்வர் இறைஞ்ச, குரு ராமதாஸரோ, "போ. எங்காவது போய் பிச்சையெடு." என்று உரத்த குரலில் ஆணையிட்டார். குருவின் வாக்கை ஏற்று ஆச்ரமம் விட்டு வெளியேறினார் ராம்சுரத்குன்வர்.

"நீ எங்கே போகப்போகிறாய்?" என்ற குருவின் கேள்விக்கு தன்னையும் அறியாமல் சீடர் ராம்சுரத்குமார் "திருவண்ணாமலை" என்று பதிலளித்தார். சீடரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்த குரு ராமதாஸர், சால்வை ஒன்றை அவருக்குப் பரிசளித்து வழியனுப்பினார்.

ஒரு மரத்தில் இரண்டு யானைகளைக் கட்ட முடியாது. அதுபோல ஓர் ஆலமரத்தின் நிழலில் மற்றொரு ஆலமரம் வளர முடியாது. ராம்சுரத்குன்வரின் தெய்வீக நிலையை முன்னரே உணர்ந்திருந்த குரு ராமதாஸ், அவரது சேவை மானுட குலத்துக்குத் தேவை என்பதாலேயே அங்கு தங்க அனுமதிக்கவில்லை. தனக்குச் சீடராக அங்கேயே இருந்து பணியாற்றுவதை விட அவரும் ஒரு குருவாக இருந்து மானுட சமூகத்தை வழிநடத்த வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்ததாலேயே அவரை அங்கிருந்து வெளியேற்றினார்.

யோகியாரின் உபதேச மொழிகள்
எத்தனைக்கு எத்தனை ஆசைகளைக் குறைத்துக் கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
புத்தகம் படிப்பதாலோ, தவம் செய்வதாலோ ஞானம் வந்துவிடாது. அது குருவிடம் இருந்து சீடனுக்கு வரவேண்டும்.
குருவின்மேல் யாருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதோ அவர்களை விதியின் விளையாட்டு பாதிக்காது.
நாம் எந்த ஒரு செயலையும் இறைவனின் நினைவோடு, இறைவனுக்கே அர்ப்பணித்துச் செய்யவேண்டும். நாம் விடும் மூச்சு முதற்கொண்டு எல்லாமே இறைவனுக்காக என்று ஆகும்போது அதுவே 'சரணாகதி' ஆகிறது.
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை 'யோகி ராம்சுரத்குமார்' என்ற நாமம். இந்தப் பெயரை எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தந்தை உதவி செய்வார்.


தெய்வீகப் பிச்சைக்காரர்
ஆச்ரமம் விட்டு வெளியேறிய ராம்சுரத்குன்வர் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கும் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. சில வருடங்களில் குடும்பத்தை முற்றிலுமாகத் துறந்துவிட்டு இந்தியா முழுவதும் சுற்றி, பின் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அன்று முதல் அண்ணாமலையையே இருப்பிடமாகக் கொண்டு, அருணாசலரையே தந்தையாகக் கொண்டு தூய தவவாழ்வு வாழ ஆரம்பித்தார். யோகியாக மலர்ந்து யோகி ராம்சுரத்குமார் ஆக உயர்ந்தார். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் எனப் பலரும் அவரை நாடி வந்து ஆன்ம உயர்வு பெற்றுச் சென்றனர். ஆன்மீகத்தின் மிக உயரிய நிலையை அடைந்திருந்தாலும், "இந்தப் பிச்சைக்காரன்" என்றுதான் தன்னைச் சொல்லிக்கொள்வார். பிறருக்காக, பிறர் நலத்திற்காக, ஆன்ம உயர்வுக்காகத் தன் தந்தையாகிய இறைவனிடம் தினந்தோறும் யாசித்து வந்த தெய்வீகப் பிச்சைக்காரராக அவர் விளங்கினார்.



விசிறி சாமியார்
ஒருமுறை வடநாட்டிலிருந்து சாது ஒருவர் வந்தார். அவருக்கு அண்ணாமலையைச் சுற்றிக் காட்டினார் யோகியார். அந்தச் சாது இவரிடம் விசிறி ஒன்றைத் தர, இவர் அதை வாங்கி வைத்துக் கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு தபோவனம் சென்றபோது ஞானானந்த கிரி சுவாமிகளும் ஒரு விசிறியைக் கொடுத்தார். அதுமுதல் அவற்றைச் சேர்த்துக் கட்டி எப்போதும் தன் கையில் இரு விசிறிகளை வைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

ஒரு கையில் கொட்டாங்குச்சி. மறு கையில் விசிறி. ஒரு சிறு கம்பு. பச்சை நிறத் தலைப்பாகை. குருநாதர் தனக்களித்திருந்த பெரிய சால்வை. இத்தோற்றத்துடன் அவர் அண்ணாமலையை வலம் வந்ததால் இவரை 'விசிறி சாமியார்' என்று யாவரும் அழைக்க ஆரம்பித்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களை கிரிவலம் செய்யச் சொன்ன பெருமைக்குரியவர் ராம்சுரத்குமார். தம்மை நாடி வந்தோரின் வாழ்க்கை உயர்விற்கும், ஆன்ம நலத்திற்கும் அவர்கள் அறியாமலேயே செயல்பட்டு வந்தார். அவர்களது குறைகளைத் தீர்த்து வைத்து அவர்களே அறியாமலேயே அவர்களுக்குள் பல நுண்ணிய மாற்றங்களைச் செய்து வந்தார். என்றாலும் தான்தான் அதைச் செய்கிறோம் என்பதை ஒருக்காலும் அவர் வெளிப்படையாகச் சொன்னதில்லை. "எல்லாம் தந்தையின் பணி; தந்தையின் அருள்" என்றே எப்போதும் செல்வார். தான், தனது என்பனவற்றை நீக்கிய முழுமையான ஞானியாக அவர் இருந்தார்.

திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே உள்ள புன்னை மரத்தடி, சன்னிதித் தெரு இல்லம், சுதாமா இல்லம் என பல காலகட்டங்களில் பல இடங்களில் தங்கி பக்தர்களுக்கு அருள் புரிந்து வந்தார். சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்த மனிதர்கள் முதல் சாதாரண மானுடர்வரை பலரும் அவரை நாடிப் பயன் பெற்றனர்.

மகா சமாதி
இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து, தம்மை நாடி வந்த பக்தர்களை அவர்கள் அறியாமலேயே மேல் நிலைக்கு உயர்த்திய யோகி ராம்சுரத்குமார், புற்று நோய் கண்டு ஃபிப்ரவரி 20, 2001 அன்று மகாசமாதி அடைந்தார். அவரது உடல் அவரது ஆச்ரமத்தில் சமாதி வைக்கப்பட்டு, அங்கே அபிஷேக, ஆராதனைகள் நடந்து வருகின்றன. ஆச்ரமம், காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆச்ரம முகவரி:
யோகி ராம்சுரத்குமார் ட்ரஸ்ட்,
அக்ரஹாரக் கொல்லை,
1833/1, செங்கம் ரோடு,
திருவண்ணாமலை - 606003

நாமத்தைச் சொல்லுதலே சரணாகதி;
நாமத்தைச் சொல்லுதலே சமாதி;
நாமத்தைச் சொல்லுதலே தியானம்
யோகி ராம்சுரத்குமார யோகி ராம்சுரத் குமார யோகி ராம்சுரத்குமார ஜெயகுரு ராயா!
பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline