Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ஆரணி குப்புசாமி முதலியார்
- அரவிந்த்|டிசம்பர் 2018||(1 Comment)
Share:
இலக்கியம் என்பது பண்டிதர்களுக்கானது என்ற நிலை நிலவிய காலகட்டம் அது. தமிழின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' (1876), வி.எஸ். குருசாமி சர்மாவின் 'பிரேம கலாவதீயம்' (1893), நடேச சாஸ்திரியின் 'தானவன்' (1894), பி.ஆர். ராஜம் ஐயரின் 'கமலாம்பாள் சரித்திரம்' (1896), அ. மாதவையாவின் 'பத்மாவதி சரித்திரம்' (1898) போன்றவை வெளியாகிவிட்டிருந்த 1900த்தின் முற்பகுதி. 1890-1900 வரை நாவலும் கதைகளும், உரைநடைகளுமாக மொத்தம் 39 நூல்கள் மட்டுமே தமிழில் வெளியாகியிருந்தன. அதனை அடுத்து ஒரு தேக்கநிலை நிலவியது. இலக்கியத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட சமயத்தில் எழுத வந்தவர் ஆரணி குப்புசாமி முதலியார். இவர் டிசம்பர் 8, 1866ல், வட ஆற்காட்டில் உள்ள ஆரணியில் பிறந்தார். மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தபின் வேலூரில் சில காலம் ஆசிரியப்பணி ஆற்றினார். பின்னர் உப்பள இலாகாவில் துணை ஆய்வாளர் வேலை கிடைத்தது. சென்னைக்குக் குடி பெயர்ந்தார். தமிழில் நல்ல புலமை பெற்றிருந்த முதலியார், ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். சைவம் சார்ந்த கருத்துக்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். சமயக்கல்வியும் கற்றிருந்தார். ஓய்வுநேரத்தில் எழுதத் துவங்கினார். முதலில் இவர் எழுதிய நூல் 'இந்துமத உண்மை' என்பது. அது இவரது 26ம் வயதில் வெளியானது. பின்னர் ஆங்கில நூல்களின் பக்கம் இவரது கவனம் சென்றது. குறிப்பாக ரெயினால்ட்ஸின் நாவல்கள் இவரைக் கவர்ந்தன. ஆகவே அதனைத் தமிழ்ப்படுத்தி எழுத ஆரம்பித்தார். முதல் நாவல் 'லீலா' வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அது ரெயினால்ட்ஸ் நாவலின் தழுவல்தான். அதைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புக் கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் எழுதும் கதைகளை 'நோபில் அச்சகம்' போன்றவை வாங்கி நேரடியாகப் பதிப்பித்தன.

மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தனவாக இவரது நாவல்கள் இருந்தன. வாசககர்களைக் கதையோடு கட்டிப்போடும் வல்லமையும் இவரது எழுத்துக்கு இருந்தது. ஆர்தர் கானன் டாயில் நூல்கள் இவருக்கு மிகவும் பிடித்தமானவை. அதில் வரும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தைத் தமிழில் 'ஆனந்தஸிங்' என்ற கதாபாத்திரமாக உருவாக்கி உலவ விட்டார். பிற்காலத்திய சங்கர்லால் (தமிழ்வாணன்), சிங் (புஷ்பா தங்கதுரை), கணேஷ் (சுஜாதா), ராஜா (ராஜேந்திரகுமார்) விவேக் (ராஜேஷ்குமார்), பரத் (பட்டுக்கோட்டை பிரபாகர்), நரேந்திரன் (சுபா), பிரசன்னா (தேவிபாலா) என்றெல்லாம் வரும் துப்பறியும் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி ஆரணி குப்புசாமி முதலியாரின் 'ஆனந்த்ஸிங்' தான். நாவல் தலைப்புகளிலும், அத்தியாயத் தலைப்புகளிலும் வாசகர்களை ஈர்க்கப் பல்வேறு உத்திகளை அவர் கையாண்டார். கற்பக சுந்தரி அல்லது மூன்று துறைகளின் மர்மம், கற்பகச் சோலையில் அற்புதக் கொலை, சந்திரபாய் அல்லது சங்கரதாஸின் வெற்றி, இந்திராபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன், கிருஷ்ணவேணி அல்லது அதிசயமர்மச் சுரங்கம், குணசுந்தரன் அல்லது மித்ருத் துரோகம், இந்திராபாய் அல்லது சங்கரதாஸின் வெற்றி, சுவர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம், கமலசேகரன் அல்லது ஓர் சுத்தவீரனின் அதிசய சரித்திரம், கமலநாதன் அல்லது களவு போன ரத்னமாலை, தினகரசுந்தரி அல்லது செல்வச் சீமாட்டியின் அற்புத சரித்திரம், மஞ்சள் அறையின் மர்மம், மதன காந்தி போன்ற தலைப்புகள் வாசகர்களை ஈர்த்தன. உடனடியாக வாங்கத் தூண்டின. தமிழில் வெகுஜன இலக்கியத்துக்கு வித்திட்டவர் ஆரணி குப்புசாமி முதலியாரே! சாதாரண மக்களையும் வாசிப்பின் பக்கம் ஈர்த்தன அவரது எழுத்துக்கள்.

அக்காலத்தில் மத்தியதர வர்க்கத்திடையே வாசிப்பார்வம் பெருக இவரது எழுத்துக்கள் மிக முக்கியக் காரணமாய் அமைந்தன என்று சொல்லலாம். அதுபற்றித் திரு. கி.வா. ஜகந்நாதன், "பொழுது போக்குவதற்காகவே அமைந்த நாவல்கள் பல இங்கிலீஷில் புற்றீசல்கள் போலத் தோன்றின. அவை இங்கே ஏராளமாக இறக்குமதியாகின. மர்மக் கதைகள், அரசகுடும்பத்தின் காதல் விளையாடல்களும் திருடர்களின் தந்திரச் செயல்களும் துப்பறியும் சாமர்த்தியங்களும் அடங்கிய கதைகள் போன்றவை படிப்பவர்களின் உள்ளத்தில் கதை முடிகிற வரைக்கும் வேகத்தையும் பரபரப்பையும் தூண்டிவிட்டு வெறியையும் கிளர்ச்சியையும் எழுப்பின. இத்தகைய பரபரப்பை ஊட்டும் நாவல்கள் இந்த நாட்டு இளைஞர்களின் உள்ளத்தைக் கவ்வின. பெரியவர்களும் வாசித்தார்கள். இந்தத் துறையில் முன்னணியில் நின்றவர் ஆரணி குப்புசாமி முதலியார். அவருடைய மொழிபெயர்ப்பு தெளிவாக இருந்தது. படித்தால் கதையோட்டத்தோடு மனம் செல்லும்படி அமைந்திருந்தது. அதனால் அவற்றைத் தமிழ் மக்கள் வாங்கி படித்தனர். மாணவர்கள் மிகுதியாகப் படித்து இன்புற்றனர்" என்கிறார். மேலும் அவர், "அவருடைய நாவல்களால் விளைந்த நன்மைகளையும் சொல்லவேண்டும். அவருடைய மொழிபெயர்ப்பு இயல்பான தமிழ்நடையில் அமைந்திருந்தது. அது ஒரு சிறப்பு. மற்றொன்று அவருடைய மொழிபெயர்ப்பைப் படித்தவர்கள் மேலும் மேலும் நாவல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற்றார்கள்" என்று மதிப்பிடுகிறார்.

Click Here Enlarge"'நாவல் ஒன்று கட்டாயம் வேண்டும் என்று பதிப்பகத்தார்கள் ஆரணியாரை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டி விடுவார்களாம், ஜமக்காளமும் ஒரு தலையணையும் கொடுத்து. சாப்பாடு கீப்பாடு எல்லாம் இரண்டு நாளைக்கு ஜன்னல் வழியாகத்தான். மூன்றாவது நாள் முதலியார் ரிலீஸாகி வெளியே வருவாராம். ஒரு தலையணையுடன் போனவர் இரண்டு தலையணைகளுடன் வெளிவருவாராம். 'அந்த இரண்டாவது தலையணை அவர் எழுதி முடித்த நாவல்!' என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள். எவ்வளவு பருமனாக இருந்தால் என்ன? மகா விறுவிறுப்பாக இருக்கும். படிக்க படிக்கத் திகட்டாதவை" என்று தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அமரர் ஜ.ரா. சுந்தரேசன். அந்த அளவுக்கு விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாதவையாக அவரது நாவல்கள் இருந்தன. அடுப்பூதும் பெண்களையும் ஆர்வத்துடன் முதன்முதலில் கதைகளை வாசிக்க வைத்தவர் என்ற பெருமையும் ஆரணி குப்புசாமி முதலியாருக்கு உண்டு. ஆங்கிலக் கதைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்களையும் ஊர்ப் பெயர்களையும் அப்படியே தமிழ்ப்படுத்தி விடுவது முதலியாரின் பாணி. "ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா, எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களை மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுக்குத் தரவிரும்பிய குப்புசாமி முதலியார் தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும் கதை மாந்தர்களின் பெயர்களையும் நடை, உடை, பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார். அத்துடன், கதைகளுக்கு இடையிடையே, நீதிபோதனைகளையும், வேதாந்த தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இதை இவர் கதைச்சுவை சிறிதும் குன்றாதவாறு திறமையாகச் சொல்லியிருக்கிறார். நூல்நிலையங்களில் குவிந்திருக்கும் ஆரணி குப்புசாமி முதலியாருடைய நாவல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இவ்வளவையும் இவர் எப்படி எழுதினார் என்று எண்ணிப் பிரமிக்க வைக்கும்" என்கிறார் எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன்

துப்பறியும் நாவலாசிரியராக வெற்றிகரமாக இயங்கி வந்த குப்புசாமி முதலியாருக்கு, பத்திரிகை ஆசிரியராகும் வாய்ப்பு வந்தது. ஸ்ரீகரப்பாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகளின் சீடரான நாகவேடு முனிசாமி முதலியார் ஜூன், 1915ல் சுவாமிகளின் ஆசியோடு 'ஆனந்தபோதினி' மாத இதழை ஆரம்பித்தார். ஆரணி குப்புசாமி முதலியாரை அதற்கு ஆசிரியராக இருக்குமாறு வேண்டிக்கொண்டார். முதலியாரும் இசைந்தார். அது தமிழ் இதழியல் வளர்ச்சிக்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. முதலியாரின் பல்துறைத் திறமை, ஆர்வம், கடின உழைப்பு போன்றவை அந்த இதழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவின. சில ஆண்டுகளிலேயே பத்திரிகையின் சந்தாதாரர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அக்காலத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ரங்கூன் என தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகளிலும் ஆனந்தபோதினிக்குப் பெரும் வாசகர் கூட்டம் இருந்தது.

'ஆனந்தபோதினி' அக்கால இதழ்கள் பலவற்றிற்கும் முன்மாதிரியாக இருந்தது என்றால் மிகையில்லை. இந்தத் தலைப்பினால் ஈர்க்கப்பட்டு பிற்காலத்தில் 'ஆனந்தகுண போதினி', 'ஆனந்த விகடன்' உட்படப் பல இதழ்கள் தோன்ற ஆரம்பித்தன. மாதர் பகுதி, சிறுவர் பகுதி, வேதாந்த விளக்கம், சமயக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், பொதுவான குறிப்புகள் என பல்வேறு விஷயங்களைத் தாங்கி வந்த அந்த இதழின் மிக முக்கியச் சிறப்பு ஆரணி குப்புசாமி முதலியாரின் துப்பறியும் தொடர்கதைகள்தாம். 'ஆனந்தபோதினி' இதழின் 'பத்திராதிபர்' முனிசாமி முதலியாரும் சரி, 'பத்திரிகாசிரியர்' குப்புசாமி முதலியாரும் சரி சைவத்தின்மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். திருவண்ணாமலை ஈசானிய மடத்தின் தலைவரான மகாதேவ சுவாமிகளிடம் உபதேசம் பெற்றவர் குப்புசாமி முதலியார். ஹிந்து மதத்தின் ஆதரவாளர். அதே சமயம் சமய, மத நல்லிணக்கமும் கொண்டவர். அவை அவரது கட்டுரைகளில் வெளிப்பட்டன. அதே சமயம் மதமாற்றம் செய்பவர்களால் ஹிந்து மதத்திற்குப் பிரச்சனைகள் ஏற்பட்டபோது அதைக் கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை. மதமாற்ற முயற்சிகளை ஆரணி குப்புசாமி முதலியார் தனது கட்டுரைகள் மூலம் மிகத் தீவிரமாகக் கண்டித்தார். அதனால் பல்வேறு கிறித்துவ இதழ்கள் மற்றும் பாதிரியார்களின் எதிர்ப்பையும் சந்தித்தார்.
ஆனந்தபோதினியில் தொடர்கதை மட்டுமல்லாது புனைபெயர்களில் பல கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 'சீடன்' என்ற புனைபெயரில் 'ஸ்ரீபகவத் கீதை வசனம்', 'கைவல்ய நவநீத வசனம்' போன்ற தலைப்புகளில் தொடர்கள் எழுதியிருக்கிறார். பின்னர் அவை நூலாக வெளியாகியுள்ளன. இவர் தலையங்கம் போன்று பற்பல தலைப்புகளில் எழுதியிருக்கும் ஆசிரியர் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள் மற்றும் குறிப்புகள் குறித்து 'பத்திரிகாசிரியர்' என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் தெளிவாக உரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தான் எழுதியதோடு, பிரபல எழுத்தாளர்களையும், கட்டுரையாளர்களையும் தமது இதழில் எழுதச் செய்திருக்கிறார். அவர்களில் நீலாம்பிகை அம்மையார், கி.ஆ.பெ. விஸ்வநதம், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார் உள்ளிட்டோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். முதலியாரின் ஆசிரியத்துவத்தில் நாளுக்கு நாள் அதன் சந்தாதாரர்கள் பெருகினர். இதழ் ஆரம்பித்த பதினைந்தே ஆண்டுகளில் 'ஆனந்தபோதினி'யின் சந்தாதாரர் எண்ணிக்கை இருபதாயிரத்தையும் தாண்டிவிட்டது. 'ஆனந்தபோதினி' பஞ்சாங்கம் அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த மாத இதழுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து முனிசாமி முதலியார் 'ஆனந்தபோதினி' வார இதழையும் ஆரம்பித்தார். தனது 'ஆனந்தபோதினி' பதிப்பகம் மூலம் குப்புசாமி முதலியாரின் நூல்களை மட்டுமல்லாமல் மேலும் பலரது நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார்.

பிற்காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் வெற்றிக்கொடி நாட்டிய பலருக்கும் எழுத, செயல்பட உந்துசக்தியாக இருந்தது குப்புசாமி முதலியாரின் எழுத்துக்கள்தாம். அந்த அளவுக்குப் பல நூல்களை அவர் எழுதிக் குவித்துள்ளார். 'ரத்தினபுரி ரகசியம்' ஒன்பது பாகங்கள் கொண்டது. 'ஞான செல்வம்மாள்' ஐந்து பாகங்கள் கொண்டது. ஒரு நாளைக்குப் பல மணி நேரம் அயராது எழுதும் வழக்கம் இவரிடம் இருந்தது. மதன பூஷணம் அல்லது இறந்தவன் பிழைத்தது, இராஜாமணி, தேவசுந்தரி, கருணாகரன், கடற்கொள்ளைக்காரன், கற்கோட்டை, தீனதயாளன் அல்லது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம், விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக்கொலை, மின்சார மாயவன், அம்பாலிகை அல்லது அதிசய மரணம், அந்தரக் களவு அல்லது தபால் கொள்ளைக்காரர்கள் போன்ற இவரது நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. அக்காலத்தில் பல பதிப்புகள் கண்டவை. சுமார் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவர் 'லீலா' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த ரெயினால்ட்ஸின் நாவலைத்தான் பிற்காலத்தில் மறைமலையடிகளும் 'குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி' என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தனது நாவல்களுக்கு மிக விரிவான முன்னுரை எழுதுவது குப்புசாமி முதலியாரின் வழக்கம். தனது 'இந்திராபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்' என்ற நூலின் முன்னுரையில் அந்த நாவல் பற்றி, "ஆழ்ந்த நோக்கத்தோடு அறிவையூன்றி வாசிப்போர்க்கு அனேகம் மேலான படிப்பினைகளும், இலௌகீக ஞானமும், மனப்பயிற்சியும் சித்திக்கும் என்பது உண்மை. மேல்போக்காய்க் கதையை மட்டும் வாசிப்போர்க்கு வெறுங்கதையாகத்தான் தோன்றும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனந்தபோதினியின் ஆசிரியராக டிசம்பர், 1924வரை பணியாற்றிய குப்புசாமி முதலியார், திடீர் உடல்நலக்குறைவால் ஜனவரி 24, 1925 அன்று காலமானார். இவரது மறைவு குறித்து இரங்கல் கட்டுரை எழுதிய லோகோபகாரி ஆசிரியர் பரலி. சு. நெல்லையப்பர், "ஆரணி குப்புசாமி முதலியார் எழுதியுள்ள நாவல் புத்தகங்களை அடுக்கி வைத்தே இவருடைய புனித உடம்பைத் தகனம் செய்துவிடலாம். விறகும், வரட்டியும் வேண்டியதில்லை" என்று அவலச் சுவையுடன் குறிப்பிட்டிருந்தார். இவரது மறைவிற்குப் பின்னரும் கூட இவர் எழுதிய தொடர்கள் ஆனந்தபோதினியில் வெளியாகின. உதாரணமாக, கிருஷ்ணாசிங் அல்லது துப்பறியும் சீடன் தொடர், முதலியார் மறைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஆனந்தபோதினி இதழில் ஜூன் 1927ல் ஆரம்பித்தது. அதுபோல செப்டம்பர் 1926ல் இவர் எழுதி வந்த பகவத்கீதை வசனம் நிறைவு பெற்றது. காரணம், முதலியார் பல கட்டுரைகளையும் நாவல்களையும் முன்னதாகவே எழுதி வைத்திருந்ததுதான். இவரது மறைவிற்குப் பின்னரும் இவரது நூல்கள் அச்சாகிப் பல பதிப்புகள் கண்டன. இவரது நூல்கள் சிலவற்றை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.

சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளைச் சார்ந்த மக்களும் வாசிப்பை நோக்கி முன் நகர்வதற்கான சூழலை முன்னெடுத்தவர் ஆரணி குப்புசாமி முதலியார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு துப்பறியும் நாவல்கள் படைக்க வந்தவர்கள்தாம் வடுவூர் துரைசாமி ஐயங்காரும், ஜே.ஆர். ரங்கராஜுவும். தமிழ் இலக்கியப் பரப்பில் மர்ம நாவல்களின், வெகுஜன இலக்கியத்தின் முன்னோடியாக மதிக்கப்பட வேண்டியவர் ஆரணி குப்புசாமி முதலியார்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline