|
|
தமிழ் நவீன இலக்கிய வரலாறு ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்ற மேதமைகள் உருவாக்கிய செழுமை மிகுந்த தீராத ஓட்டம் கொண்டது. வித்தியாசமான படைப்பு அனுபவத்துடன் தமிழுக்கு வளம் சேர்ப்பவர்களுள் நீல. பத்மநாபன் தனித்து நோக்கக் கூடியவர். கேரளத்தில் வாழ்ந்து கொண்டு தமிழ் நவீன இலக்கிய முகம், புதுப்பொலிவுடன் சிறப்புற காரணமாக இருந்து வருபவர்.
நீல. பத்மநாபன் 26.4.1938 இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பின் திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரியில் பி.எஸ்சி படித்து பட்டம் பெற்றார். தொடர்ந்து அரசாங்க என்ஜினி யரிங் கல்லூரியில் மின்பொறியியல் பயின்றார். கேரள மாநில மின்வாரியத்தில் நிறைவேற்றுப் பொறியாளராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
பள்ளிப் பருவத்திலிருந்தே எழுத்தோடு தீராத காதல். இலக்கியத்தின் ஆழம் வீச்சுக்கள் பற்றிய எந்தவித கரிசனையுமின்றி கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற இலக்கிய வகைமைகளின் நுண்ணிய தன்மைகள், வேறுபாடுகள் இவை பற்றிய அறிதலும் புரிதலும் இல்லாது இலக்கியம் மீதான ஈடுபாடு வலுப்பெறத் தொடங்கிற்று.
நாற்பதுகளில் இவரது இலக்கியப் பிரவே சம் தொடங்கியது. 13 வயதில் சிறுநாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். இத்தன்மை இவருக்குள் உரு வாகி வளர்ந்த படைப்பாளியை படிப்படியாக பகிரங்கப்படுத்தியது. 1958ல் 'உதயதாரகை' எனும் முழுநீள நாவல் எழுதுவதற்கான மனோவலிமையைக் கொடுத்தது. அன்று தொடங்கிய எழுத்து முயற்சி படைப்பாக்கம் பல்வேறு அனுபவத்திரட்சிக்கும் செய் நேர்த்திக்கும் உள்ளாகி காத்திரமான படைப்பிலக்கியவாதியாக பரிணமிக்கச் செய்தது.
'பணம், பதவி, பரவலான புகழ் முதலிய போதைகள் நம்மைச் சுற்றிவிரித்திருக்கும் ஜனரஞ்சக மாயக்கவர்ச்சியில் நழுவி விழுந்து விடாமல், நம் மனசாட்சியை அடகு வைக்காமல், செய்வதை செவ்வனே, ஆத்மார்த்தமாய், தனித்தன்மை கெடாமல் நம் வழியிலேயே திருந்தச் செய்ய வேண்டும் என்ற போதத்துடன் செயல்பட்டுக் கொண்டி ருக்கும்' ஓர் தனித்த படைப்பாளுமையுடன் இயங்கிக் கொண்டிருப்பவர் நீல. பத்ம நாபன்.
'கதைக் கருவைத் தேடி நான் ஒரு போதும் அலைந்ததில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத் தெரியாத தன்மையில் சிலிர்த்துப் போய் நேரில் காணும், சொல்லிக் கேட்கும் சில கருக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துச் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத் தில் இறுகப் பற்றிக் கொள்ளும் இந்தக் கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்ப்பந்திக்கிறது.'
இவ்வாறு நீல.பத்மநாபன் தனக்கான படைப்பாக்க உந்துதலுக்கான பின்புலத்தை வெளிப்படுத்துகின்றார். எவ்வித பாவனை பாசாங் குக்கும் உள்ளாகாமல், தனக்குத் தெரிந்த சாதாரண மொழியில் எழுத்து மூலமாய் வாழ்வின் முழுமையை கண்டறியும், கலைப் பிரக்ஞை யோடு ஆத்ம பயணத்தில் முழு ஈடுபாட்டுடன் மூழ்கி வருகின்றார்.
மேலும் 'எழுதும்' "நான் என்ற உணர்வைத் துறந்து கூடிய மட்டும் ஏதாவது ஒரு கதா பாத்திரத்தின் உயிரில், உணர்வில் கலந்து அந்தப் பாத்திரத்தின் பார்வையாய் கதையை விவரிப்பதுதான் என் வழக்கம்" எனவும் தெளி வாக குறிப்பிடுகின்றார்.
இவைதான் கதைப் பொருளாக்கப்பட வேண்டு மென்ற சட்டகம், முன்னிபந்தனைகள் எவையும் இவர் கொண்டிருப்பவரல்ல. சாதாரண மனிதர் களின் வாழ்வியலை, அவர்களது துன்ப துயரங் களை, இழப்புகளை, சோகங்களை, ஆத்ம நெருக்கடிகளை, வெற்றி தோல்விகளை, துரோகத் தனங்களை, கோழைத்தனங்களை எல்லாம் இவரது கதைகள் வெளிப்படுத்தும்.
''இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான். என்னைப் போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்சனை கள், உணர்ச்சிகளை, வியப்புகளை, வெறுப்பு களை பரிமாறிக் கொள்ளவே நான் எழுது கிறேன்'' என்ற நம்பிக்கையுடன் இன்று வரை உள்ளார். அவரது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாம் அவரது கூற்றை மெய்பிக்கின்றன.
நீல. பத்மநாபனின் உரைநடை புதிய தள மாற்றத்துக்கும் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமான கிரியா ஊக்கியாகவே உள்ளன. சொல் தேர்வு, சொல்லும் திறன் - உத்தி, சொல், அணிகள், வாக்கியங்களின் அளவு முறைமை ஆகிய இவரது நடையில் சிறப்புக் குரியவை.
இதனால்தான் அசோகமித்திரன், வல்லிக் கண்ணன் போன்றோர் இவரது நடையை சிலாகித்து பேசுகிறார்கள். 'தலைமுறைகள்', 'பள்ளிகொண்டபுரம்' போன்ற படைப்புகள் நீல.பத்மநாபனின் ஆளுமை விகசிப்பை நன்கு வெளிப்படுத்தும்.
தமிழ்ப்பண்பாட்டைப் பின்னணியாகக் கொண்ட செட்டிமார்களையும், பிள்ளை மார்களையும், ஐயர்களையும் கதையில் வெகு சிறப்பாகவே புகுத்தியுள்ளார். வட்டார வழக்காறுகளையும், வட்டார மொழி வழக்கு களையும் நுட்பமாகவும் அழகாகவும் படைப்பில் கொண்டு வந்துள்ளார். கேரளத்து கலப்புப் பண்பாடு நாயர்கள், கிறித்தவர்கள், ஈழவர்கள் ஆகியோருடனான உரையாடல் களும் அவர்கள் பற்றிய பதிவுகள்கூட தாராளமாகவே உள்ளன.
நீல. பத்மநாபனின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளும், கெளரவங்களும்கூட இவருக்கு கிடைத்துள்ளன. மலையாளத் திலிருந்து தமிழுக்கு பல்வேறு படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆர்ப்பாட்ட மில்லாமல் தனது எழுத்து-படைப்பு முயற்சி களில் ஈடுபடும் கலைஞராகவே இன்றுவரை உள்ளார். நிதானமான பேச்சும், கருத்தை வெளிப்படுத்தும் போது உள்ளோடும் தர்க்கமும் அழகியலும் இவருக்குள்ள தனிச்சிறப்பு. |
|
படைப்புகள்
நாவல்கள்
தலைமுறைகள் - 1968 பள்ளிகொண்டபுரம் - 1970 பைல்கள் - 1973 உறவுகள் - 1975 மின் உலகம் - 1976 நேற்று வந்தவன் - 1978 உதய தாரகை - 1980 பகவதி கோயில் தெரு - 1981 போதையில் கரைந்தவர்கள் - 1985 தேரோடும் வீதி - 1987
சிறுகதைகள்
மோகம் முப்பது ஆண்டு - 1969 சண்டையும் சமாதானமும் - 1972 மூன்றாவது நாள் - 1974 இரண்டாவது முகம் - 1978 நாகம்மா - 1978 சிறகடிகள் - 1978 சத்தியத்தின் சந்நிதியில் - 1985 வான வீதியில் - 1988
கவிதைகள்
நீலபத்மநாபன் கவிதைகள் - 1975 நா காக்க - 1984
மதுசூதனன் தெ. |
|
|
|
|
|
|
|