Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
அருண் மகிழ்நன் முத்து நெடுமாறன்
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
- மணி மு.மணிவண்ணன்|ஜூலை 2002|
Share:
Click Here Enlarge“பசி, பஞ்சம், பட்டினி. பாருங்கள், இது தான்ஈந்தியா!” என்று இந்தியாவைக் கிண்டல் செய்யும் பாடலைப் பலர் கேட்டிருப்பார்கள். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்றுஈரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடிய சங்க காலத்திலும், அமுதசுரபி கொண்டு பசிப்பிணி தீர்த்த மணிமேகலை காலத்திலும் கூடப் பஞ்சம் நிலவியிருக்கிறது. 1943இல் ஆங்கிலேயர் ஆண்டபோது வங்காளப் பெரும் பஞ்சத்தால் 33 கோடி இந்தியர்களில் 40 லட்சம் பேர் இறந்தனர். 25 ஆண்டுகளுக்குப் பின், மக்கள்தொகை 50 கோடியாகக் கூடியபின்னர், சுதந்திர இந்தியாவை மீண்டும் ஒரு பஞ்சம் தாக்கியது. அப்போதுதான் பஞ்சக் கொடு மையை என்றும் அகற்றும் புரட்சி, பசுமைப் புரட்சி துவங்கியது. இன்றைய இந்தியாவோ, 100 கோடி மக்களுடன் என்றென்றும் பசுமை என்று தன்னிறைவு கொண்டது மட்டுமல்லாமல், உணவை ஏற்றுமதி செய்யுமளவுக்குச் செழித் திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், தென்கிழக்காசியாவின் வரலாற்றையே மாற்றி அமைத்த இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியவர் பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன். அண்மையில் ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்ற சான் ·பிரான்சிஸ்க ோ பகுதிக்கு அவர் வந்திருந்தபோது தென்றல் சார்பில் அவரை பர்க்கெலியில் சந்தித்தோம்.

கேம்பிரிட்ஜில் பி. எச்டி. படித்து, விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் வேலை கிடைத்தும், தாய்நாட்டுக்குத் திரும்பினீர்கள். நாடும், உலகமும் பயன் பெற்றது. ஏன் திரும்ப வேண்டும் என்று எண்ணினீர்கள்?

நான் வெளிநாட்டுக்குச் சென்றதே படித்து விட்டுத் திரும்பிப் போகவேண்டும் என்ற எண்ணத்துடன்தான்.

சுதந்திரப் போராட்டம், மகாத்மா காந்தியின் லட்சியங்கள் இவற்றால் உந்தப் பட்டு நானும், என் சமகால மாணவர்களும் நாட்டுக்குத் தொண்டு புரிவதில் ஆர்வம் கொண்டிருந்தோம். 1943இன் வங்காளப் பெரும் பஞ்சம், பாரதியாரின் “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பாடல் (வெறும் பாட்டை மட்டும் பாடிக் கொண்டிருந்தால் போதுமா என்று சொல்லிச் சிரிக்கிறார்) - அவை போன்ற உந்துதல்கள் இருந்தன. எனவே 194ஈல் கோவை வேளாண்மைக் கல்லூரிக்குப் படிக்கப் போனேன். வெளிநாட்டுக்குப் போய்ப் படித்து விட்டுத் திரும்பி வந்து நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், வெளிநாட்டில் வேலை கொடுத்தாலும் நான் எடுத்துக் கொள்வதாய் இல்லை. அதனால் திரும்பி வந்துவிட்டேன்.

மகாத்மா காந்தியின் தாக்கம் பற்றிக் குறிப்பிட்டீர்கள். எந்த அளவுக்கு அவரது கருத்துகள் உங்களைப் பாதித்தன?

என் குடும்பத்தில் எல்லோரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். எனக்குச் சின்ன வயதில் என் தகப்பனார் அழைப்பில் மகாத்மா காந்தி இரண்டு முறை எங்கள் வீட்டில் வந்து தங்கியிருந்தது நினைவிருக்கிறது. மகாத்மாவின் சுதேசிக் கொள்கையில் ஈடுபட்டு எங்கள் வீட்டில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் இராட்டை சுற்றித் துணி நெய்த தெல்லாம் உண்டு. அந்தக்காலத்தில் மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகளைக் கேட்டவர் களுக்கு, அவர் சொன்னவை எல்லாம் இயல்பாகவே எல்லோருக்குமே தெரிந்தது தானே என்று தோன்றியது.

அந்நியத் துணிகளை இறக்குமதி செய்யத் தேவையில்லை;

கிராம சுயராஜ்ஜியம் வேண்டும், கிராமத்தில் தன் நிறைவு வேண்டும்;

நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டும் ஆனால் சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, பொருளாதாரச் சுதந்திரமும் முக்கியம்;

நமது அடிப்படைத் தேவைகளை, உணவோ, தண்ணீரோ, எது இருந்தாலும், நாமே நிறைவு செய்து கொள்ள வேண்டும். என்பவை போன்ற மகாத்மாவின் சுதேசிக் கொள்கைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டன. அந்தக் கொள்கைகளோடே வளர்ந்தேன். அவை என் வாழ்வு முழுவதும் நிறைந்திருக்கின்றன என்பேன்.

அண்மைக் காலத்திலும் வெளி நாட்டில் படித்தவர்கள், வேலை செய்து சம்பாதித்தவர்கள் உங்கள் தலைமுறையைப் போலவே தாய் நாடு திரும்பித் தொண்டு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், இந்தியாவின் லஞ்சம், ஊழல், செயலாற்றலுக்குத் தடங் கல்கள் குறித்துத் தயங்குகிறார்கள். அப்படி முயன்று திரும்பிச் சென்றவர் களிலும் பலர் தாக்குப் பிடிக்க முடியாமல் திரும்பிவிடுகிறார்கள். அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

இந்தியாவுக்குத் திரும்பி வருகிறோம் என்று உறுதி எடுத்துக் கொண்டவர்கள், திரும்பும் முன் ஆயத்தமாக வேண்டும். எங்கே போகலாம், என்ன செய்யலாம், எங்கு சென்றால் நாம் செய்ய நினைப்பதைச் செய்ய முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். திடீரென்று இந்தியாவுக் குத் திரும்புகிறேன் என்று சென்றால் ஏமாற்றங்கள் வரலாம். அது மட்டும் அல்லாமல், இந்தியாவில் இந்த நாட்டுடன் ஒப்பிடும்போது வசதிகள் மிகக் குறைவு. மக்கள் தொகை கூடியதால் தண்ணீர், மின்சாரம், தொலைத் தொடர்பு என்ற அடிப்படைத் தேவைகளிலும் நெருக்கடி நிலவுவதை எதிர்கொள்ள வேண்டும். திரும்பி வரும் முன், எங்கே மக்களுக்கு நம் தொண்டு தேவை, எந்த மாடக்குழியை நம்மால் நிரப்ப முடியும் (what niche can we fill) என்பதைப் பற்றிச் சிந்தித்துத் திரும்ப வேண்டும்.

ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நான் துவக்கியபோது, நானும் திட்டமிட்டுத்தான் துவங்கினேன். பல ஆராய்ச்சி நிலையங்கள் ஏற்கனவே இருப்பதால் எதற்கு இன்னொரு புது ஆராய்ச்சி நிலையம் என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தன. அப்போது மீனவர்கள், மற்றும் கடலோரப் பகுதி வாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளின் தேவையை உணர்ந்தேன். கடலோர நிலத்துக்கு முக்கியமான கடல் தாழை அல்லது கண்டல் (mangrove) தோப்புகளைப் பேணுதல், மீன் வளத்துக்குத் தேவையான ஆய்வு போன்றவற்றை மையமாகக் கொண்டு என் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கினேன். எனவே, திரும்பி வருவது என்று உறுதியாக இருப்பவர்கள், நமக்குத் தெரிந்தது எதை எங்கு பயன்படும் என்பதைப் பற்றி ஆராய்ந்து, அங்கே போய்ப் பார்த்து, என்ன செய்யப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டுச் செயல்படவேண்டும். இது போன்ற ஆராய்ச்சி செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கூடத் தேவைப் படலாம். இவ்வாறு முழு ஆயத்தம் செய்து திரும்பி வந்தவர்கள் மன நிறைவோடு இருக்கிறார்கள். இல்லாவிட்டால், மிகக் கடினம்தான்.

அப்படித்தான், 1925 ல் என் தகப்பனார் சாம்பசிவன், கொசு ஒழிச்ச சாம்பசிவன் என்று சொல்வார்கள் அவரை, அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்த போது அவரது பேராசிரியர் அவரைக் கும்பகோணத் துக்குப் போகச் சொன்னார். ஏனென்றால், அப்போது கும்பகோணத்தில் கொசுக்கள் நிறைய இருந்தன. எனவே வியாதிகள் நிறைய இருக்கும், அதனால் மருத்துவர்களுக்கும் நிறைய நோயாளிகள் கிடைப்பார்கள்! (உடனிருந்தவர்கள் சிரிப்பு) அங்கே போங்கள் என்றார். அது போல, எங்கே போனாலும், நம்முடைய அறிவும், ஆற்றலும், பணமும், தொழில் நுட்பமும் எங்கே பயன்படும், எங்கே தேவை என்று தெரிந்து போக வேண்டும்.

நல்ல பயனுள்ள அறிவுரைகள். அரசு சார்பற்ற, தன்முனைப்பு இயக்கங்களின் நன்மை என்ன? அரசுகளையே நம்பிப் பழகிய இந்தியா போன்ற நாடுகளில், அரசு சார்பற்ற இயக்கங்களால் ஒரு புரட்சியை உருவாக்க முடியுமா?

அரசின் சேவையில் ஒரு சிக்கல் என்ன வென்றால், ஒரு ரூபாய் நன்மை செய்ய மேலும் ஆறு ரூபாய் செலவழிக்க வேண்டும். அதனால், அரசால் ஒவ்வொரு தனி மனிதனின் தேவை களையும் நிறைவேற்றுவது கடினம். அரசுத் திட்டங்களின் பலன்கள் ஏழைகளைச் சென்றடைவதில் தன்னலமற்ற அரசு சார்பற்ற இயக்கங்களின் தொண்டு பாராட்டத்தக்கது. பெரும்பாலான ஏழைகள் எழுத்தறிவற்றவர்கள். அவர்களுக்கு அரசுத் திட்டங்களின் பலன்களை எடுத்துச் சொல்லி, விண்ணப்பங்களை எழுதி அனுப்பி, திட்டங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுப்பது போன்றவற்றில் அரசு சார்பற்ற இயக்கங்கள் உதவியுள்ளன. மக்களை ஒன்று கூட்டிச் செயல்படுத்துவதிலும் அவை உதவமுடியும். மழைத்தண்ணீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது போன்ற செயல்களை மக்கள் எல்லோரும் சேர்ந்துதான் செய்ய முடியும், அரசால் செய்ய முடியாது.

“பஞ்சாயத்து ராஜ்” எனப்படும் ஊராட்சி அமைப்புகள் நன்கு செயல்படும் இடங்களில் அரசு சார்பற்ற இயக்கங்கள்கூடத் தேவை யில்லை. ஏனென்றால், சிற்றூர்களில் மக்கள் தொடர்பு இருப்பதால் நேரடி மக்களாட்சி இருக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல், உலகிலேயே வேறெங்குமில்லாத தனிச்சிறப் பாக, இந்தியாவில் ஊராட்சி மன்ற உறுப் பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு என இட ஒதுக்கீடு செய்திருப்பதால், பெரிய மாற்றங்களை உருவாக்கப் பெண்களால் முடியும். மேற்கு வங்கத்தில் ஊராட்சிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அது போன்ற மக்கள் ஆளும் ஊராட்சிகள் செயல் படும் இடங்களில் அரசு சார்பற்ற இயக்கங் கள்கூட அவ்வளவு தேவையில்லை. ஆனால், ஏதாவது ஒரு மக்களுக்குத் தொண்டு புரியும் அமைப்பு தேவை.

இது காந்தி கண்ட கிராம ராஜ் யத்தின் பெருமையைக் காட்டுவது போல் உள்ளது. ஆனால், இந்தியா போன்ற பழம்பெரும் நாடுகளில் உள்ள தொல்லை என்னவென்றால், சாதி போன்ற பிரிவினைகள் சிற்றூர்களிலும் புரையோடிப் போயிருக்கும். ஒடுக்கப் பட்டவர்கள் ஒதுக்கப்படுவார்கள். இந்தப் பிளவுக இன்றும் தொடர்கின்றன அல்லவா?

அரசியல் காரணங்களுக்காக, வாக்கு வங்கிக் காக, தமிழ்நாட்டில் ஒவ்வொரு சாதியினரும் கட்சி தொடங்கிவிட்டனர். இது வேற்றுமை களை வளர்க்கும் துரதிர்ஷ்டமான அரசியல். சைனா மட்டும் ஏன் வேகமாக வளர்கிறது, இந்தியா வேகமாக வளரவில்லையே என்பவர் கள் சைனாவைப் பார்க்க வேண்டும். சைனாவில் சிற்றூரில் எல்லோரும் சீனர்கள் தான், வேறெதுவும் இல்லை. ஆனால் நம் ஊர்களில் நீங்கள் என்ன சாதி என்று கேட்டு வேற்றுமை பாராட்டுகிறார்கள். இந்தச் சாதி வேற்றுமை இந்தியாவின் முன்னேற்றத்துக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டை. இந்தச் சாதி அரசியல் இந்தியா வின் ஒற்றுமைக்கும் வருங்காலத்துக்கும் எதிரான தனிப்பெரும் அபாயம்.

இதை எப்படி உடைக்க முடியும்?

தற்போது ஒரு சில பஞ்சாயத்துக் களில் நல்ல தலைமை இருக்கிறது. அந்தப் பஞ்சாயத்துகள் சாதி, சுற்றம் பார்க்காமல் மக்களின் நன்மை கருதி தொண்டு செய்கின்றன. அந்த மனப்பான்மை சற்று வளரத் துவங்கியுள்ளது. இந்தச் சிற்றூர்ப் பஞ்சாயத் துகள் சாதி வேறுபாடுகளை அவ்வளவு தீவிரமாகப் பார்ப்பதில்லை. ஊர் மக்கள்தொகை ஐந்நூறு பேராக இருந்தால், அவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். இன்னுமொரு பத்தாண்டுகளில், மாநில அரசுகள் பஞ்சாயத்து ஆட்சியை ஊக்குவித்தால், நல்ல மாற்றங்கள் காணலாம். எனவே பஞ்சாயத்து போன்ற அடிவேர் அரசியல் அமைப்புகளை வலிமை பெறச் செய்வது மட்டுமே இந்தச் சாதிச் சிக்கல்களைச் சமாளிக்க ஒரே வழி. இந்த முயற்சிகள் வெற்றி பெற நாளா கலாம். ஆனால் படிப்படியாக முன்னேற்றம் காண முடியும். எடுத்துக் காட்டாக, பஞ்சாயத் தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு என்ற இட ஒதுக்கீடு செய்த போது, சிலர் இதனால் பெண்களுக்கு வலிமை இருக்காது, அவர்கள் தத்தம் கணவர்கள் சொல்வதைச் செய்வார்கள் என்றார்கள். ஆனால் பெண்கள் பல மாற்றங் களைப் புரிந்திருக்கிறார்கள் என்கிறார் காந்தி கிராமம் ஆராய்ச்சியாளர் முனைவர் பழனிதுரை. காந்தி கிராம ராஜ்யம் பற்றிப் பேசிய போது நாம் க
ேட்கவில்லை. எழுபது ஆண்டுகள் கழித்து ராஜீவ் காந்தி வந்தபோது தானே பஞ்சாயத்து ராஜ் என்ற அமைப்பை அரசியல் சாசனத் திருத்தமாகக் கொண்டுவந்தோம்? விடுதலை பெற்றபின் ஐம்பது ஆண்டுகளை வீணாக்கியபின் தானே பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மேல் அக்கறை காட்டினோம்? இது போல படிப் படியாகத்தான் முன்னேற்றம் அடைய வேண்டும். ஒரு பில்லியன் மக்கள் கொண்ட இந்தியாவின் பெரிய சிக்கல்களைச் சின்னச் சின்னச் சிக்கல்களாகப் பிரித்துத்தான் தீர்வு காண முடியும்.

டைம் இதழின் நேர்காணலில் பசுமைப் புரட்சி வரலாற்றையே மாற்றியது என்றீர்கள். அதைப் பற்றி?

சுதந்திரம் வாங்கு முன்பே வங்காளப் பெரும் பஞ்சத்தால் மக்கள் வாடினார்கள். ஆகஸ்ட் 1947 செய்தித்தாள்களில் எல்லா இடங்களிலும் உணவுப்பற்றாக்குறை, பஞ்சம் பற்றிய செய்திகள் நிறைந்திருக்கும். 194இல் விவசாயத்தைத் தவிர மற்றவையெல்லாம் காத்திருக்கலாம் என்று ஜவஹர்லால் நேரு கூடச் சொன்னார். இருந்தாலும் நம் முன்னேற்றம் குறைவாகத்தான் இருந்தது. அப்போது, ஐம்பதுகளின் இறுதியில், ஒரு தொழில்நுட்பத் திருப்புமுனை நேர்ந்தது. அமெரிக்காவில் ஒட்டு ரகம், குட்ட ரகம் என்ற இரண்டு ரகப் பயிர்கள் கண்டறியப்பட்டன. கோதுமையையும் சோளத்தையும் இணைத்த ஒட்டு ரகமும், கோதுமை, அரிசி, சோளம் இவற்றில் குட்ட ரகமும் என்று ஒரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சி உருவானது. இந்த விதைகளை சிறு பண்ணைகளில் ஏழை விவசாயிகளுக்குக் காட்ட வேண்டும் என்று 196இல் அரசிடம் அனுமதி கேட்டேன். தேசிய அளவில் 50 இடங்களில் செய்து காட்டப் பணம் கொடுத்தார்கள். ஒரு பண்ணையில் ஒரு டன் உற்பத்தி செய்து கொண்டிருந்த விவசாயி களால் ஐந்து டன் உற்பத்தி செய்ய முடிந்த செய்தி மின்னல் வேகத்தில் பரவியது. செய்தி நிறுவனங்கள் இதைப் பெரிய அளவில் பரப்பியன. இந்தப் புதிய ரக விதைகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி. அப்போது, 32 மில
்லியன் ஏக்கர் நிலங்களில் இந்த ஒட்டு வீரிய ரக விதைகளைப் பயிரிட அரசு விதைகளைத் தந்தது. 1968 இல் கோதுமை விளைச்சலில் ஒரு புரட்சி. 1968 ஜூலையில் பிரதமர் இந்திரா கோதுமைப் புரட்சியைக் குறிக்க ஓர் அஞ்சல்தலை (ஸ்டாம்ப்) வெளியிட்டார்.

அப்போதுதான் U. S. A. I. D. இன் இயக்குநர் வில்லியம் கௌட் இந்தப் புரட்சிக்குப் பசுமைப் புரட்சி என்று பெயரிட்டார். நாமெல்லாமே பச்சைப் பயிர்களை ஒண்டி வாழ்பவர்களல்லவா? ஒளி, நீர், பச்சையம், உரம் இவற்றின் கூடுதலான சேர்க்கையால் வளம் பெருகியது. இதைக் கோதுமை மட்டுமல்லாமல், அரிசி, சோளம் என்று மற்ற பயிர்களிலும் புரட்சி காணலாம். எனவே இதைக் கோதுமைப் புரட்சி என்று சொல்லுவதற்குப் பசுமைப் புரட்சி எனச் சொல்ல வேண்டும் என்றார் கௌட். அந்த ஆண்டு ஜனவரியிலேயே “வளங்குன்றா வெள்ளாண்மை” (Evergreen Revolution) என்று அறிவியல் காங்கிரஸ் கருத்தரங்கில் நான் பேசியிருந்தேன். இந்தப் புரட்சி ஒரு ஆண்டு மட்டுமல்லாமல் தொடர்ந்து வரவேண்டு மல்லவா? நம்மிடம் மேலும் மேலும் பயிரிட புதிய நிலங்கள் இல்லை. எஞ்சி இருக்கும் காடு களையும் அழிக்க வேண்டியிருக்கும். எனவே நமது உற்பத்தி வளங்குன்றாத வகையில் கூட வேண்டும். அண்மையில்கூட, புலிட்சர் பரிசு பெற்ற ஹார்வர்டு பேராசிரியர் இ. ஓ. வில்சன் “உயிர்களின் எதிர்காலம்” (“Future of Life” - E. O. Wilson) என்ற நூலில் சுவாமிநாதனின் வழிதான் மனிதர்கள் தழைக்க ஒரே வழி என்று குறிப்பிட்டிருந்தார். அவரைப் போன்ற அறிஞர்கள் எனது அன்றையகருத்துகளை ஏற்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அரசுப் பணிகளுக்குப் பின்னர் ஆராய்ச்சி மையங்களிலும், தங்கள் அரசு சார்பற்ற தனியார் அறக் கட்டளையிலும் உங்கள் பணிகள் குறித்து...

1947இலிருந்து 1982 வரை டெல்லி இந்திய விவசாய ஆராய்ச்சிக் கல்லூரி, இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வந்தேன். 1982 இல் பெரிய அரிசி ஆராய்ச்சி நிலையமான பிலிப்பைன்ஸில் உள்ள உலக அரிசி ஆராய்ச்சிக் கல்லூரியின் பொது இயக்குநராகத் தலைமை வகித்தேன். திரும்பி வந்த பின் நெடுநாள் ஆசைப்படி எனது பெயரிலேயே வளங்குன்றா வேளாண்மை ஆராய்ச்சி மையம் (Center for Sustainable Agriculture and Rural Development) என்ற ஆய்வு நிலையத்தை 1990 இல் துவக்கினேன். கிராம முன்னேற்றம், கிராமவாசிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு, அதிக வருமானம், வேலைத் திறமை வளர்ச்சி என்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்த மையத்தைத் துவக்கி னேன். வேலைத் திறமையை வளர்க்கத் தொழில்நுட்பப் பிளவைக் கடக்க வேண்டும். உயிரியல் (biotechnology), தகவல் (information technology), புதுப்பிக்கப்படும் சக்தி (renewable energy), விண்வெளி (space technology) என்ற நான்கு விதத் தொழில்நுட்பப் பிளவுகளைக் கடக்க முடிவு செய்தோம். உயிரியல் கிராமம் ( bio-villages), செய்தி கிராமம் (Information village) என்ற முயற்சிகளோடு, சூரியச் சக்தி, உயிரிச் சக்தி (bio-energy), புவித்தகவல், வானிலைக்கோள்கள் (GIS, weather satellites), தண்ணீர், நிலப் புழக்கத் திட்டமிடல் (land use, water planning) என்ற பல முனைகளில் முயற்சி செய்யத் துவங்கினோம். தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஏழைகளுக்குத் தங்களைத் தாமே பேணிக்கொள்ளும் வலிமை கிடைக்கிறது. இதைப் பற்றித்தான் 2001 ஐ.நா. வளர்ச்சித் திட்ட மனித மேம்பாட்டு அறிக்கையில் (UNDP 2001 Development Human Development report) கட்டச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருக் கிறேன். இந்த முயற்சிகள் அடிவேரிலிருந்து தொடங்க வேண்டும்.
அந்த முயற்சிகளில் Digital Divide - எண்ணியப் பிளவின் மேல் பாலம் அமைக்கும் பணியில் உங்கள் அறக்கட்டளையின் அனுப வங்கள் என்ன?

செய்தி கிராமம் (Information villages) என்ற திட்டத்தில் பாண்டிச்சேரியில் பதினைந்து கிராமங்களை எடுத்துக் கொண்டோம். இவற்றில் பெரும்பாலானவை ஒடுக்கப் பட்ட குடும்பங்கள் (Dalit families) வாழ்கின்றனர். இந்த கிராமங்களில் கணினி மையங்கள் அமைத்தோம். கணினிகளைப் பயன்படுத்தவும், மையங்களை நடத்தவும் பெண்களுக்குப் பயிற்சி அளித்தோம். அங்கே தலித் மற்றும் ஏனைய சாதிப் பெண்களும் சாதி வேறுபாடு பாராட்டா மல் வருகிறார்கள். சாதிப் பிளவு இங்கே உடைந்து விட்டது எனலாம். அவர்களே அவர்களுக்குத் தேவையான செய்திகளைத் திரட்டுகிறார்கள். பெரும்பாலும் அரசு அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளைப் பற்றிய செய்திகள், மகப்பேறு சுகாதாரச் செய்திகள், பெண் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்களோடு மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு என்பவை போன்ற தேவைக்கேற்றபடி அந்த மையங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த மையங்கள் அவர்களுக்கு உரிமையா னவை. கணினிகள், மென்பொருட்களை மைட்டும் ஜப்பானிலிருந்து கீதா மேத்தாவின் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய நண்பர்கள் (Friends of MSSR) என்ற அமைப்பு வாங்கிக் கொடுக்கிறது. குடிசைகள் உள்ள ஊரிலும் கூட அவர்களே ஐம்பதாயிரம் ரூபாய் வரை நிதி திரட்டி இந்த மையங்களைக் கட்டுகிறார்கள். மையத்துக்கு மின்சாரம் கட்டுவது, மையத்தில் வேலை செய்யத் தொண்டர்களை அனுப்புவது என்பவை போல் இந்த மையத்தின் சேவை களுக்குப் பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த மையத்தின் தேவை அவர்களுக்குப் புரிகிறது.

இந்த முயற்சியில் பெரிய நன்மைகள் விளை கின்றன. எண்ணியப் பிளவைக் கடக்கும்போதே ஆண்-பெண் பிளவையும் (gender divide) கடக்க முடிகிறது. என்னவோ ஒரு காரணத்தால் கணினியைப் பெண்கள் எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்று கிராமத்தார்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் கற்றுக் கொள் வதைப் பார்த்துச் சிலர் ஆண்களும் போட்டி போடுகிறார்கள். பெண்களுக்குத் தொழில்நுட்ப அறிவு இருப்பதால் அவர்களிடம் ஆண்கள் கற்றுக் கொள்கிறார்கள். இது பெண்களின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

தலைமை அமைச்சர் வாஜ்பாய் போக்ரான் அணுகுண்டுச் சோதனையின் நினைவாக மே 11ஐ அறிவியல் நாளாக, ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்பது போல ஜெய் விஞ்ஞான் என்று சொல்லி, அறிவியல் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். தமிழ் நாட்டில் இந்த அறிவியல் தொழில்நுட்ப நாள் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் பொன்னையன் அவர்கள் முன்னர் இந்த தகவல் கிராமத்தின் 12 பெண்களும் சில ஆண்களும் தகவல் தொழில் நுட்பம் பற்றிப் பேசினார்கள். குறைவான கல்வியறிவிருந்தாலும், இவர்கள் தகவல் தொழில் நுட்ப அறிவு அமைச்சரை வியப்பில் ஆழ்த்தியது. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை என்பது போல், தகவல் தொழில் நுட்பத்தை இந்தப் பெண்கள் எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள்!

வரலாற்றில் முதன்முறையாக பெரும் அளவுக்கு இந்தியாவின் அறிவாளிகள் புலம் பெயர்ந் துள்ளனர். அவர்களுக்கு அளவிட முடியாத செல்வமும், அறிவுவளமும் கூடியுள்ளன. ஒரு வேளை இது இந்தியாவின் வரலாற் றையே மாற்றக்கூடிய ஓர் அரிய வாய்ப் பாக இருக்கலாம். சிலிக்கன் பள்ளத் தாக்கிலும், வட அமெரிக்கா விலும் கணித்துறையில் பணிபுரியும் இந்தியர் கள், தமிழர்கள் தாய்நாட்டுக்கு என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

பலரும் பல்வேறு முறைகளில் உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள். பேரிழப்புகள் நேரும்போது உதவி அளிக்கிறார்கள். ஆனால், நிரந்தரமான உதவி தேவை. ஏழ்மையை அதன் அடிவேரிலிருந்து களைய வேண்டும். ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்று உடமைகள் ஏதும் இல்லை. அவர்களுக்கு உழுவதற்கு நிலமில்லை, கால்நடைகள் இல்லை, பெரும்பாலும் படிப்பறிவும் இல்லை. நிலமற்றவர்களால் மிகக் குறைந்த கூலிதான் ஈட்ட முடியும். கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். இதை உணர்ந்துதான் மகாத்மா காந்தி ஏழ்மையைக் களையும் வழியை அன்றே சுட்டிக் காட்டினார். உழைப்பும் அறிவும் ஒன்று கூடினால் ஒழிய ஏழ்மையைக் களைய முடியாது. புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் அறிவை, தொழில்நுட்ப மேலாண்மையை, சில சமயங்களில் தங்கள் முதலீட்டைக் கொண்டு வந்து, மக்களில் உடலுழைப்போடு ஒருங் கிணைக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்களின் பொறுப்புணர்வு, நேரத்தில் சாதிக்கும் திறமை, வேலைத்திறன், மேலாண்மைத் திறன், போன்ற நல்ல பழக்கங்களோடு உடலுழைப்பும், விடா முயற்சியும் சேர்ந்தால் பெரிய மாற்றங்களை விளைக்க முடியும்.

நிகழ்த்தியவர்/தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்

******


மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் இந்திய உணவுத்துறை அமைச்சகத்தின் செயலர், இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர், அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர், உலக உணவு, விவசாய அமைப்பின் தலைவர், உலக இயற்கைப் பாதுகாப்புக் கூட்டுறவின் தலைவர் எனப் பல பதவிகள் வகித்தவர். ஆங்கிலேய, அமெரிக்க, ரஷ்ய, இத்தாலிய, சீன அறிவியல் கழகங்களில் போற்றப் பட்ட உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கு வழங்கப் பட்ட விருதுகளில் உலக உணவுப் பரிசு, ஐ.நா. சசகாவா விருது, டைலர், ஹாண்டா விருதுகள், ரமோன் மேக்சேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகியன குறிப்பிடத் தக்கவை. 77 வயதான டாக்டர் சுவாமிநாதன் தற்போது சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக் கட்டளையின் தலைவராகவும், யுனெஸ்கோ கூஸ்டோ சூழல்நுட்பப் பேராசிரியாராகவும் விளங்கித் தன் தொண்டைத் தொடர்கிறார்.

On the occasion of his receiving the World Food Prize at the Smithsonian Institution, Washington, in October, 1987, Mr. Javier Perez de Cuellar, Secretary General of the United Nations wrote, “Dr. Swaminathan is a living legend. His contributions to agricultural science have made an indelible mark on food production in India and elsewhere in the developing world. By any standards, he will go into the annals of history as a world scientist of rare distinction.”

******


The new technology, what we call in our foundation, eco-technologies, (economically sustainable technologies) are knowledge-intense and not capital-intense. That will require using communication technology more intelligently and as I said linking each knowledge-centre to small, local radio stations. In fact what we do in Veerapatinam, a coastal village in Pondicherry, is that every morning the woman who opens the centre, gets information on sea conditions not of the Indian Ocean or Bay of Bengal, but of Veerapatinam sea. 100 metres from there, what will the tide be? 1000 metres from there, what will the tide be? Very accurate data, available every morning, broadcast by the women through loudspeakers, before their husbands go on their catamarans out to sea. We are information-rich, but action-poor in our country. Instead, we should use this knowledge for the purpose of empowerment of the people.

******


Synergies between technology and public policy on the one hand, and public and private partnership on the other, will lead to rapid progress in creating new on-farm and non-farm livelihoods. But it is important to realize that if the market is the sole determinant of research investment decisions, “orphans will remain orphans” and economic and technological divides will grow.

How can we ensure that an ever-green revolution movement based on genetic and digital technologies is characterised by social and gender inclusiveness? The answer to this question was given by Mahatma Gandhi over 70 years ago, when he said, “Recall the face of the poorest and the weakest person you have seen, and ask yourself, if the steps you contemplate are going to be of any use to him.” An antyodaya approach that is, development based on attention to the poorest people – to bridging the digital, genetic and gender divides adopted in our biovillages in India has proven very effective in including the excluded in technological and skill empowerment.

******
More

அருண் மகிழ்நன் முத்து நெடுமாறன்
Share: 




© Copyright 2020 Tamilonline