|
|
|
|
தமிழில் சமூக நாவல்களைப் போலவே வரலாற்று நாவல்களுக்கும் மிகமுக்கிய இடமுண்டு. தமிழின் முதல் வரலாற்று நாவலான 'மோகனாங்கி' (தி.த.சரவணமுத்துப் பிள்ளை) தொடங்கி 'பார்த்திபன் கனவு', 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' (கல்கி), 'வீரபாண்டியன் மனைவி' (அரு.ராமநாதன்), 'கடல்புறா' (சாண்டில்யன்) என்று வெகுஜன வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நாவல்கள் பலப்பல. குறிப்பிடத்தக்க பல வரலாற்று நாவல்களை எழுதி வாசகர் மனதில் தனியிடம் பிடித்தவர் ஜெகசிற்பியன். இவர் மயிலாடுதுறையில் பொன்னப்பா-எலிசபெத் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ஜெர்வாஸ். பள்ளிப்பருவம் தஞ்சையில். பின் தொழிற்கல்வி பயின்றார். இலக்கிய தாகத்தினால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் கதையான 'சுந்தரனின் சோபனம்' 1939ல், 'நல்லாயன்' இதழில் 'தஞ்சை ஜெர்வாஸ்' என்ற பெயரின்கீழ் வெளியானது. பின் இவர் மாயவரத்துக்குக் குடிபெயர்ந்த போது 'மாயவரம் ஜெர்வாஸ்' என்ற பெயரில் 'சர்வவியாபி', 'சத்திய தூதன்' போன்ற இதழ்களில் எழுதினார். ஓவியத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அப்போது 'ஜெர்வாஸ்' என்ற பெயரிலும், 'பாலையா' என்ற குடும்பப் பெயரிலும் சில சிறுகதைகளை எழுதினார். உடன் பயின்ற நண்பர் ஓவியர் 'மணியம்' இவரது எழுத்துப் பணிகளுக்குத் தூண்டுகோலாக இருந்தார்.
ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் இவருக்கு தீராக் காதல் இருந்தது. ஒரு நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தவருக்கு கவியோகி சுத்தானந்த பாரதியார், ஷேக்ஸ்பியரை 'செகப்பிரியர்' என்று தூயதமிழில் ஒரு நூலில் எழுதியிருந்தது கண்ணில் பட்டது. அதுவே இவரது புனைபெயருக்கு அடித்தளமிட்டது. 'ஜெர்வாஸ்', 'ஜெகசிற்பியன்' ஆனார். 1942ல் 'நவயுவன்' இதழில் ஜெகசிற்பியன் என்ற புனைபெயரில் ஒரு சிறுகதை எழுதினார். அதுமுதல் தொடர்ந்து அதே பெயரில் எழுத ஆரம்பித்தார். 'ஏழ்மையின் பரிசு', 'சாவின் முத்தம்' போன்ற புதினங்களை எழுதினார். 'காதம்பரி' மாத இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் இவர் எழுதிய 'கொம்புத் தேன்' முதல் பரிசைப் பெற்றது. புதுமைப்பித்தன் அப்படைப்பைப் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்தார். 1955ல் ஜெகசிற்பியன் எழுதிய முதல் வரலாற்றுப் படைப்பான 'மதுராந்தகி' அவருக்கு நல்லதொரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றாலும், 1957இல் 'ஆனந்த விகடன்' வெள்ளிவிழாப் போட்டியில் பரிசு பெற்ற 'நரிக்குறத்தி' (சிறுகதை) மற்றும் 'திருச்சிற்றம்பலம்' (வரலாற்று நாவல்) மூலம்தான் அவர் பரவலாக வாசக கவனத்தை எட்டினார். 'அக்கினி வீணை', 'ஊமைக்குயில்', 'நொண்டிப் பிள்ளையார்', 'நரிக்குறத்தி', 'ஞானக்கன்று', 'இன்ப அரும்பு', 'காகித நட்சத்திரம்' எனப் பல சிறுகதைத் தொகுப்புகளும், 'தேவதரிசனம்', 'மண்ணின் குரல்', 'ஜீவகீதம்', 'காவல் தெய்வம்' போன்ற புதினங்களும் வெளியாகின. எழுத்துலகில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடித்தார். ஆரம்பத்தில் சமூகப் பின்புலம் கொண்ட பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிக் கொண்டிருந்தவர் மெல்ல மெல்ல வரலாற்று நாவல்களின் மீது கவனத்தைத் திருப்பினார்.
'நந்திவர்மன் காதலி', 'நாயகி நற்சோணை', 'பத்தினிக் கோட்டம்', 'ஆலவாய் அழகன்', 'மகரயாழ் மங்கை', 'திருச்சிற்றம்பலம்', 'கோமகள் கோவளை' போன்றவை அவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினங்களாகும். சரித்திரக் கதைகள் குறித்து ஜெகசிற்பியன், "சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டு நவீனம் எழுதப்படுவது ஏன்? வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே நவீனம் எழுதுவதாயின் அரும்பாடு பட்டுப் பல சரித்திர நூல்களைப் பயின்று, சொந்தமாக ஆராய்ச்சி நடத்தி சிரமப்படத் தேவையில்லையே! பின் இவை ஏனென்றால், இறந்த காலத்தை எண்ணிப் பார்க்காதவன் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை உணர்ந்து எதிர்காலத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் தகுதியைப் பெறமாட்டான். தன் பாட்டன் எப்படி வாழ்ந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் போதுதான் தன்னுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது, என்னும் உண்மை புலப்பட்டு, தன் பேரனின் வாழ்வு எவ்விதமாக அமைய வேண்டும் என்பதற்கு ஒரு தெளிவு ஏற்படும். சரித்திரமும், சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்ட இலக்கியங்களும் இயற்றப்படுவதற்கு இதுதான் அடிப்படை நோக்கம்" என்கிறார். |
|
'கிளிஞ்சல் கோபுரம்', 'காணக் கிடைக்காத தங்கம்', 'இனிய நெஞ்சம்', 'சொர்க்கத்தின் நிழல்' போன்றவை இவரது முக்கியமான சமூகப் புதினங்கள். இப்புதினங்களில் அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கையை அவர் உள்ளத்தை உருக்கும் வகையில் காட்சிப்படுத்தி இருப்பார். மெல்லிய ஒரு நகைச்சுவையோடு சமூக அவலங்களை விமர்சிப்பது இவரது பாணி. காந்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை அவரது பல சிறுகதைகளில் காணலாம். தி.ஜ.ர., "ஜெகசிற்பியன் கதைகளில் உள்ளுறையும் ஜீவன் ஒன்று இருக்கிறது. அது நம் உள்ளத்தோடு உறவு கொண்டு விடுகிறது. அதை நாம் எடுத்துரைப்பது சாத்தியம் அல்ல. ஆயினும் பல அம்ச லட்சணங்கள் சேர்ந்த சமுதாய சோபை ஒன்று வெளிப்படப் புலப்படும். அதை நாம் காண முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார். "நாவலில் அவர் அளித்துள்ள பங்களிப்பைப் போலச் சிறுகதையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார். 'சிறுகதை வரலாறும் உணர்ச்சியும்' எழுதியவர்கள் இவரை விடுவித்ததன் மூலம் தமிழுக்கு உண்மையான வரலாற்றைத் தரவில்லை என்பது நிரூபணமாகிறது" என்கிறார் எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள்.
நாவல்கள் தவிர நாடகத்துறைக்கும் சிறப்பான பங்களித்துள்ளார் ஜெகசிற்பியன். இவரது 'நடை ஓவியம்' என்ற ஓரங்க நாடகத் தொகுப்பு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது. 'சதுரங்க சாணக்கியன்' என்ற நாடகம் சுவையான வசனங்களைக் கொண்டது. திரைப்படங்களிலும் இவர் பங்களித்துள்ளார். 'கொஞ்சும் சலங்கை' உட்பட சில திரைப்படங்களில் உரையாடல் ஆசிரியராகப் (வசனகர்த்தா) பணியாற்றியிருக்கிறார். இவரது புதினங்களும் சிறுகதைகளும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டதுடன், மாணவர்கள் பலரால் எம்.பில் மற்றும் பிஹெச்.டி பட்டத்துக்கு ஆராயப்பட்டுள்ளன. பல சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஜெர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. 'ஜீவகீதம்' நாவல் 'நேஷனல் புக் ட்ரஸ்ட்'டால் பதின்மூன்று இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. 'பாரத புத்திரன்' என்ற சிறுகதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. மீ.ப.சோமு, கி.வா.ஜ. போன்றோர் இவரது படைப்புகளைப் பாராட்டியுள்ளனர். முன்னுரை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
ஜெகசிற்பியனின் மனைவி தவசீலி. இவர்களுக்கு அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என மூன்று மகள்கள். "நான் இந்த உலகத்தில் என் உயிரைவிட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிட்டிருக்கும் ஜெகசிற்பியன், 1978, மே 26ல் காலமானார். எழுத்தையே தவமாக, வாழ்க்கையாகக் கொண்டு, குறிப்பிடத்தக்க பல பங்களிப்புகளைத் தந்திருக்கும் ஜெகசிற்பியனுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் இடமுண்டு.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|