|
|
சென்ற மாதம் யாரைப் பார்த்தாலும் வயிற்றுப் போக்கு என்று புகார் கூறினார்கள். இது பருவகால மாற்றம் ஏற்படும்போது தாக்கும் வைரஸ் நோய். வைரஸ்களுக்கு இந்தப் பருவ மாற்றச் சமயத்தில் கொண்டாட்டம்தான்.
வயிற்றுப்போக்கு என்பது பேதியைக் குறிக்கிறது. அத்துடன் வாந்தியும் ஏற்படாலாம். ஒரு சிலருக்கு இது கடுமையாக இருக்கும். குறிப்பாகக் குழந்தைகளை இது மிகவும் பாதிக்கும். அதிக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் உள்ள கனிம உப்புகள் (minerals) மற்றும் நீர்மங்கள் (fluids) குறைவதால் சோர்வு ஏற்படலாம். சின்னக் குழந்தைகள் உடலில் நீரின் அளவு அதிவேகமாகக் குறையலாம். மூன்று, நான்கு முறைக்கு மேலாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலே மிகவும் கவனமாக இருத்தல் நல்லது. வாந்தி இல்லாதபோது உடனுக்குடன் உப்பு/சர்க்கரை ஒவ்வொரு சிட்டிகை (ORS) கலந்த நீரை அருந்துவது நல்லது. வாந்தி அதிகமானால், இரத்தக் குழாய் மூலம் திரவம் ஏற்றத் தேவைப்படலாம்.
வயிற்றுப்போக்கின் காரணங்கள்
1. வைரஸ் என்ற நுண்ணுயிர்கள் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதில் குறிப்பாக 'ரோடா வைரஸ்' (Rota Virus) இந்தப் பருவகாலத்தில் அதிகமாகப் பரவுகிறது. காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளையும், பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமியரையும் அதிகமாகத் தாக்குகிறது. நல்ல சுகாதார வழக்கமே இந்த நோய் பரவாமல் தடுக்க வல்லது. இந்த வைரஸ் மூலம் ஏற்படும் வயிற்றுப்போக்கு கடுமையானதாய் இருப்பதால், சிலருக்கு மருத்துவமனையில் சேரவேண்டியது ஏற்படலாம். அதிகக் காய்ச்சலும் இதன் மற்றொரு அறிகுறி. வைரஸ் ஏற்படுத்தும் பேதியில் பொதுவாக இரத்தம் கலந்திராது. இரத்தம் கலந்து பேதி ஏற்படுமேயானால் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். 2. நுண்ணுயிரிகள் (bacteria) மூலம் ஏற்படும் வயிற்றுப்போக்கு, இரத்தம் கலந்து இருக்கலாம். பல வேளைகளில் காய்ச்சலும் ஏற்படலாம். குறிப்பாக இந்தியா அல்லது வேறு நாடுகளுக்குப் பயணம் சென்றபின் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதற்கு பாக்டீரியா மூலகாரணமாய் இருக்கலாம். இதை 'Traveller's diarrhea' என்று சொல்வதுண்டு. இந்தவகை வயிற்றுப்போக்கிற்கு நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளாகிய antibiotics தேவைப்படும். அதனால் மருத்துவரை நாடுவது அவசியம்.
தடுப்பு முறைகள்
வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
* காய்கறிகள், பழங்களைச் சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே உண்ண வேண்டும். அமெரிக்காவில் அழகான கடையில் அடுக்கி வைக்கப்பட்ட பழங்களானாலும் ஒருமுறை சுத்தப்படுத்தி உண்பதே நல்லது. * எதையும் சாப்பிடுவதற்கு முன்னர் கைகளைக் கழுவுவது என்ற அடிப்படை சுகாதாரப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். * உணவை முழுமையாகச் சமைத்து உண்ணவேண்டும். * வெளியிடங்களில் உண்ணும்போதும் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். * குறிப்பாகச் சிறுவர் சிறுமிகளுக்குச் சுத்தம் சுகாதாரம் பற்றி அறிவுறுத்த வேண்டும். * குடும்பத்தில் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மற்றவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாளுவது மிகவும் அவசியம். * காப்பகத்தில் வளரும் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சமீபத்தில் வெளியான அறிவியல் அறிக்கையின்படி இரண்டரை மணி நேரம் காப்பகத்தில் இருந்தாலே பற்றுத் தொற்றுநோய்கள் (Infectious diseases) ஏற்படலாம் என்பது தெளிவாகிறது. ஆகவே, இந்தக் குழந்தைகளைக் கண்காணிக்கும் பெரியவர்களும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
உடனடி நிவாரண முறைகள்
பல சமயங்களில் வயிற்றுபோக்கு தானாகவே சரியாகிவிடும். மருத்துவரைப் பார்க்கும் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் அவசியம் ஏற்படாது. ஆகையால், வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டிய நிவாரண முறைகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
* உடலின் திரவ நிலை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை பேதியானவுடனும் உப்புக் கலந்த நீரைப் பருக வேண்டும். இதற்கு, Gatoride, Gingerale போன்ற குளிர்பானங்களை பருகலாம். அல்லது மருந்துக் கடைகளில் கிடைக்கும் Pedialyte அல்லது electrolyte கலந்த பானங்களைப் பருகலாம். பாட்டி வைத்தியமான உப்பும், வெந்தயமும் கலந்த நீர்மோர் பருகலாம். தயிரில் ஒரு சிட்டிகை வெந்தயப்பொடி கலந்து உண்டால் பேதி நிற்கும் வாய்ப்பு அதிகம்.
இதைத் தவிர திட உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படுத்தும் ரொட்டி, ஒரு சில வகை வாழைப்பழம் போன்றவற்றை உண்ணலாம். கூடுமானவரை நார்ப்பொருள் அதிகமான பச்சைக் காய்கறிகள், கீரை, பழங்கள் போன்றவற்றைச் சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். பழச்சாறுகளையும் கூடத்தான். அவை நீர்ம அளவை அதிகரித்தாலும், பேதியையும் அதிகரிக்கும்.
* வாந்தி அதிகமாக இருந்தால் சிறிது சிறிதாக திரவத்தை உறிஞ்சுதல் நல்லது. அதிக அளவு பருகும்போது வயிறு விரிவடைவதால் மேலும் வாந்தி ஏற்படலாம். சர்க்கரைத் தண்ணீர் அல்லது பதப்படுத்தப்பட்ட பழங்களின் சாறு வாந்தியைக் குறைக்க வல்லது. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றை விரும்பி அருந்துவார்கள். இதையும் கொஞ்சம் கொஞ்சமாகவே அருந்த வேண்டும். இங்கே கேனில் அடைத்து விற்கும் பழச்சாறு இதற்கு நல்லது.
இதையும் மீறி வாந்தி, பேதி தொடர்ந்தால் மருத்துவரை நாட வேண்டும். |
|
திரவ நிலை குறைவதின் அறிகுறிகள்:
* தாகம் அதிகமாதல் * சிறுநீர் குறைவாகப் போதல் * கண்ணீணர் குறைதல் * அதிகச் சோர்வு * தோல் சுருங்குதல் * நாக்கு வறட்சி * குழந்தைகளுக்கு 'Capillary refill time' என்னும் பரிசோதனையை எளிதாகச் செய்யலாம். விரல்களின் நுனியை அழுத்தி எடுத்தால் இரண்டு நொடிகளில் நிறம் மாற வேண்டும். தோல் வெளிர் ரோஜா நிறத்திற்கு வருவதற்கு 3 நொடிகளுக்கு மேல் ஆனால் திரவநிலை குறைந்திருப்பதற்கான அறிகுறி. * உடலின் எடை 5-10% குறைந்தால் அது நோயின் தீவிரம் அதிகமாவதைக் குறிக்கும். மருத்துவரை எப்போது நாட வேண்டும்?
* வயிற்றுப்போக்கு 5-7 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால். * இரத்தம் கலந்து வாந்தியோ அல்லது பேதியோ ஏற்பட்டால். * வயிற்று வலி அதிகமாக இருந்தால். * மேற்கூறிய வீட்டு நிவாரண முறைகள் தோற்றால். * மேற்கூறிய திரவநிலை குறையும் அறிகுறிகள் ஏற்பட்டால். * காய்ச்சல் அதிகமாக இருந்தால். * இவற்றைத் தவிர கைக்குழந்தைகள், மிகவும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரைச் சீக்கிரமாகவே நாடுவது நல்லது. இவர்களுக்கு மிகக் குறைந்த கால அவகாசத்தில் திரவநிலை குறையும் அபாயம் உள்ளது.
மருந்து முறைகள்
வாந்தி நிற்பதற்கு 'Reglan', Compazine, Phenergan அல்லது Zofran போன்ற மருந்துகளை மருத்துவர் தரலாம். பொதுவாக, பேதி நிற்பதற்கு மருந்துகள் தரப்படுவதில்லை. நுண்ணுயிர்க் கிருமிகளால் ஏற்படும் பேதியை வெளியே கொண்டு வருவதே நல்லது. ஆனால் பேதி தொடர்ந்து பல நாட்களுக்கு இருக்குமானால் 'Imodium' என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம். இதையும் தவிர மருத்துவர்கள் ஒரு சில சமயங்களில் antibiotics வழங்கலாம். திரவநிலை குறைந்தால் இரத்தக் குழாய் வழியே திரவம் செலுத்தப்படலாம். அவசர மருத்துவ அறைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவமனையில் சில நாட்கள் தங்க நேரிடலாம். கவனமாக இருந்து, சுத்தம் சுகாதாரத்தைக் கையாண்டு நோய் வராமல் தடுப்பதே சாலச் சிறந்தது.
மரு.வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|