|
|
குடும்ப வன்முறை (Domestic Violence) என்று சொல்லப்படும் இந்தச் சகிக்கமுடியாத வழக்கம் நமது சமுதாயத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. எது வன்முறை என்பது அவரவரின் அளவுகோலைப் பொறுத்தது என்றாலும் அமெரிக்காவில் வாழும் நமக்கு இந்த நாட்டுச் சட்டப்படி இது ஒரு குற்றம் என்பது தெரிய வேண்டும். இதனால் உடலளவிலும் மனத்தளவிலும் பாதிப்புக்கள் பல ஏற்படுகின்றன. நாடு, சாதி, சமயம், படிப்பறிவு, சமூக அந்தஸ்து என்பவற்றை எல்லாம் தாண்டிப் பரவலாகக் காணப்படும் இந்த நோயைப்பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.
சமீபத்தில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் வீட்டுக்குள் நடக்கும் வன்முறைக்கு ஆளாவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது அமெரிக்கப் பெண்களுக்கு மட்டுமின்றி எல்லா நாட்டினருக்கும் நடக்கிறது. குறிப்பாக இந்தியர்களிடையே பல்வேறு அம்சங்களில், பலவித அளவுகளில் நடக்கிறது. வீட்டில் நடக்கும் வன்முறைகள் பல தரப்பட்டன. நெருங்கிய உறவினரால், பெரும்பாலும் மனைவிக்குக் கணவனால், நடத்தப்படும் வன்முறைகளே அதிகமாக நிகழ்கின்றன.
வன்முறையின் வகைகள்
சில குடும்பங்களில் மாமியார் மாமனார் மருமகளையும், பெற்றோர் குழந்தைகளையும் அல்லது வயதுவந்த பிள்ளைகள் தாய் தந்தையரையும் வன்முறைக்கு உள்ளாக்குவ துண்டு. இதையும் தவிர ஓரினச் சேர்க்கையிலும், பதின்ம வயதில் (dating and teenage relationship) ஏற்படும் சினேகங் களிலும் கூட வன்முறை அதிகமாகக் காணப்படுகிறது. ஒருவரை ஒருவர் அடிப் பதின் மூலம் உடலைத் தாக்குவதும், பேச்சு மூலம் மனத்தை தாக்குவதும், பயமுறுத்தல், மிரட்டல், பழி வாங்குதல் மூலம் உணர்வு களைத் தாக்குவதும் இந்த வன்முறையின் பலவித கோணங்கள். இந்த வன்முறையை உடல் ரீதியானது, பேச்சு ரீதியானது, உணர்வு ரீதியானது (physical abuse, verbal abuse, emotional abuse) என்று பிரிக்கலாம். இந்த வன்முறைகளுக்கு ஒருவரை மற்றவர் கட்டுப்படுத்த வேண்டும் (control behavior) என்ற நோக்கமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இன்று இதுதான் சமைக்க வேண்டும் என்பது முதல், வரவு செலவுவரை எந்த ஒரு முடிவுக்கும் அனுமதி வழங்காமல் மனைவியையோ, மருமகளையோ நடத்து வதும் ஒரு விதத்தில் வன்முறையாகக் கருதப்படுகிறது. வார்த்தைகளால் வதைப் பதும், மரியாதை இன்றிப் பேசுவதும், குழந்தை அல்லது குடியுரிமை வைத்து மிரட்டுவதும் இதில் அடங்கும்.
ஒரு சிலர் அடிப்பது மட்டுமே தவறு என்றும், வார்த்தைகளாலும் உணர்வுகளாலும் தாக்குவதை சகஜமாகவும் கொள்வதுண்டு. அமெரிக்கச் சட்டப்படி மேற்கூறிய மூன்றுமே குற்றமாகும்.
விளைவுகள்
இதனால் மருத்துவ ரீதீயில் பலவித விளைவுகள் உள்ளன. உடலில் காயம், எலும்பு முறிவு, தழும்புகள் போன்றவை ஏற்படலாம். மனத்தளவில் பாதிப்புகள் ஏற்பட்டு மனப்புழுக்கம் (Depression), மன உணர்வால் ஏற்படும் உடல் உபாதைகள் (psycho-somatic symptoms) பல ஏற்படலாம். குறிப்பாகத் தலைவலி, முதுகுவலி, மூட்டுவலி, மயக்க உணர்வு, சோர்வு, கை கால் குடைச்சல் போன்றவை ஏற்படலாம். அவ்வப்போது வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவு, வாக்குவாதம் சில வேளைகளில் அடிதடி, இவற்றால் சமூகத்திலிருந்து ஒதுங்கிப் போகும் தனிமை உணர்வும் ஏற்படலாம். ஒரு சிலர் தற்கொலை அல்லது கொலை முடிவுக்கும் போகலாம்.
இத்தகைய குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளையும் இந்தக் குடும்ப வன்முறை மேற்கூறிய உபாதைகளுக்கு உள்ளாக்குகிறது. இந்தச் சூழலில் வளரும் இளைய தலைமுறையினர் பிற்காலத்தில் வன்முறை மேற்கொள்ளவும் சாத்தியம் அதிகமாகிறது. வன்முறையைக் கைக்கொள்ளும் ஆண்கள் பலர் தங்களது இளமைக் காலத்தில் வன்முறையைக் கண்கூடாகக் கண்டோ அல்லது தாங்களே அனுபவித்தோ இருப்பது நடைமுறையில் அதிகமாகக் காணப்படுகிறது. அது மட்டுமின்றி குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஆகியவற்றிற்கும் இது ஒரு தூண்டுகோலாகவும் சில வேளைகளில் அந்தப் பழக்கங்களே குடும்ப வன்முறைக்குக் காரணமாகவும் ஆகிவிடும். மேலும், வன்முறைக்கு ஆளானவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று தப்புக் கணக்கு போடுவது சகஜம். ஆனால் மருத்துவப் பார்வையில் கர்ப்ப காலத்தில் இந்த வன்முறை மேலும் அதிகமாவது தெரிகிறது. |
|
என்ன செய்யவேண்டும்?
இந்தக் கொடுமைக்கு ஆளான பெண்கள் பெரும்பாலும் இதை நண்பர்களிடமோ, உறவினரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூறுவதில்லை. தன் வீட்டில் இப்படி நடப்பதை நெருங்கிய நண்பரிடம் சொல்வது நல்லது. அதன் மூலம் ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படலாம். குறிப்பாகத் தனது முதன்மை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் தகுந்த நேரத்தில் சமூக சேவை செய்யும் செவிலியரிடமோ (social worker) அல்லது உளவியல் நிபுணரிடமோ (Psychiatrisit) பரிந்துரை செய்யமுடியும். குடும்பத்தைப் பிரிப்பது அவர்களின் நோக்கமன்று. மேற்கூறிய பின்விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதே அவர்களின் நோக்கம். இத்தகைய வன்முறையில் ஈடுபடும் ஆண்களும், சில பெண்களும் இது தனக்கு ஏற்பட்ட ஒரு நோய் என்று உணர்ந்து தகுந்த சிகிச்சை பெற்றால் நோய் முற்றாமல் தவிர்க்கலாம். குடிப்பழக்கமும், போதைப் பழக்கமும் கூட ஒருவித நோயே. அதுபோல நெருங்கிய உறவினரை, குறிப்பாக மனைவி மற்றும் மருமகளை, வார்த்தையாலோ செயலாலோ துன்புறுத்தும் பழக்கமும் ஒருவித நோய் என்பதை உணர்ந்தால் இதற்குத் தீர்வு காண முடியும்.
சின்னக் குழந்தைகளையோ அல்லது 60 வயதுக்கு மேற் பட்டோரையோ துன்புறுத்துவதை அறிந்தால் யார் வேண்டுமானாலும் குழந்தை, குடும்ப நலத்துறை (Department of Children and Family Welfare) மற்றும் முதியோர் நலத்துறை (Elderly Protection Services) களில் புகார் செய்யலாம். மேலும் காப்பகம், பள்ளி நிர்வாகம், மருத்துவர்களுக்கு இது ஒரு கட்டாயச் சட்டமாகவும் உள்ளது. அதாவது அந்தத் துறைகளைச் சார்ந்தவர்கள் சந்தேகப்பட்டாலே புகார் செய்யவேண்டியது கட்டாயம். இதைக் குறிப்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளை அடித்தோ மிரட்டியோ வளர்க்கும் பழக்கம் உடையவர்கள் இதை அறிய வேண்டும். புகார் வந்த பின்பு, குடும்ப நலத்துறை விசாரணை நடத்திய பின்னரே தீர்ப்பு வழங்கும். சில நேரங் களில் சந்தேகம் அதிகமானாலோ அல்லது உறுதியானாலோ குழந்தைகளை (Foster) காப்ப கத்தில் சேர்த்துவிடுவர். இது குழந்தைகளின் பாதுகாப்பிற் காக ஏற்படுத்தப்பட்ட சட்டம். ஆகவே குழந்தைகளை அடித்தோ மிரட்டியோ வளர்ப்பதை அறவே விட்டு விடுங்கள்.
இந்த வன்முறைக்கு ஆளாகியவர்களுக்கென்று பல தொண்டு நிறுவனங்கள் செயல் புரிகின்றன. இந்தியப் பெண்களுக்கென்றே 'சினேகா' போன்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அது மட்டுமின்றி அமெரிக்க நாட்டின் தேசிய அளவில் ஒரு Hotline' செயல்பட்டு வருகிறது. 1-800-799-SAFE (7233) என்ற இந்த தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இதில் ஆலோசனைகளும், மன ஆறுதலும், உதவியும் வழங்கப்படும். வன்முறைக்கு ஆளானவர் மட்டுமின்றி, உங்களின் தோழியோ உறவினரோ இந்த நிலையில் சிக்கியிருப்பது அறிந்து, என்ன செய்வது என்று தெரியாதவர்களுக்கும் இந்த hotline மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த வன்முறையில் ஈடுபடும் நபருக்கும் தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். இவை யாவும் இலவசமாக, அடையாளம் தெரியாத முறையில் (anonymously) வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.ndvh.org என்ற வலைத்தளத்தை அணுகவும். மேலும் www.endabuse.org என்ற வலைத்தளமும் உதவியாக இருக்கலாம். இப்போது சட்டத்தில் மற்ற நாட்டுப் பெண்களுக்கும் விசா, குடியுரிமை போன்றவற்றில் உரிமை வழங்க வழி உள்ளது. தகுந்த சட்ட ஆலோசகரையும் இந்த hotline ஊழியர்கள் அடையாளம் காட்டுவர்.
ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் வீட்டுக்குள் நடக்கும் வன்முறையை ஒழிக்கும் மாதமாக மருத்துவ உலகம் அனுசரிக்கிறது. இது சட்டப்படி குற்றம், இது ஒருவித நோய் என்று உணர்ந்து, இவ்வாறு செய்பவரும், இதற்கு பலியானவரும் தகுந்த முறையில் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.
(Dr. Varalaxmi Niranjan is Board Member of Domestic Violence Prevention Program, Hartford Hospital, Hartford, CT)
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|
|