Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நலம்வாழ
சிறுநீர் கட்டுப்பாடின்மை
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeநாம் வயது ஆக ஆகக் குழந்தைகள்போல் மாறிவிடுகிறோம். காலைக் கடன்கள் கூட நமது கட்டுக்குள் இல்லாமல் மீறிச் செயல்படும் அபாயம் உள்ளது. இதில் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்கும் அபாயம் பெண்களை அதிகமாகத் தாக்க வல்லது. மகப்பேறுக்குப் பின்னர் தசைகள் வலுவிழந்து விடுவதால் 30 முதல் 40 வயது மகளிருக்கு இந்த அபாயம் அதிகமாகிறது. இது பிற்காலம் வரை தொடர வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு 50 அல்லது 60 வயதுக்குப் பிறகு prostate என்ற நாளமில்லாச் சுரப்பி வீங்குவதால் சிறுநீர் கட்டுப்பாடின்மை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

சிறுநீர்க் கட்டுப்பாடின்மையின் வகைகள்

1. அவசரமான கட்டுப்பாடின்மை (Urge Incontinence)

இது அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்று தோன்றவைக்கும். சிறுநீர்ப்பை சிறிது நிரம்பியவுடனே அவசரமாகப் போகவேண்டும் என்ற உணர்வு வரும். கழிப்பறைக்கு ஓடவேண்டிய நிலைமை ஏற்படும். சில நொடி தாமதமானாலும் அசம்பாவிதம் ஏற்படலாம்.

2. அழுத்தத்தால் கட்டுப்பாடின்மை (Stress Incontinence)

இந்த வகையில், வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகமாகும் போது சிறுநீர் துளித்துளியாகக் கசியும். பலமாகச் சிரிக்கும்போது, குதிக்கும்போது அல்லது இருமும் போது போன்ற தினசரி நடவடிக்கைகளில் வயிற்றுப் பகுதி அழுந்தலாம். அப்போது தன்னை அறியாமலேயே சிறுநீர் கசியலாம்.

3. கலவைக் கட்டுப்பாடின்மை (Mixed Incontinence)

மேற்கூறிய இரண்டும் கலந்தது இந்த வகை. சில சமயம் ஒரு வகையும் வேறு சில சமயம் மற்றொரு வகையும் பாதிக்கலாம்.

4. சிறுநீர்ப்பை அவசரம் (Overactive Bladder)

அடிக்கடி சிறுநீர் போகும் எண்ணம் ஏற்படும். சிறிது சிறிதாக ஆனால் பலமுறை சிறுநீர் கழிக்க நேரலாம். இவர்களுக்கு குறிப்பாக கட்டுப்பாடின்மை அதிகம் இருக்காது. ஆனால் அவசர அவசரமாகக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த உபாதை அதிகமாகக் காணப்படுகிறது. எடையைக் குறைப்பதின் மூலம் இந்த உபாதையின் தீவிரம் குறையும் வாய்ப்பு அதிகமாகிறது
காரணங்கள்

தற்காலிகக் கட்டுப்பாடின்மைக்கு

1. சிறுநீர்ப் பாதையில் (சிறுநீர்ப்புழை) வைரஸ் தாக்குதல்

2. அதிகமாகச் சிறுநீர் உண்டாக்கும் மருந்துகள்

ஆகியவை காரணங்களாகலாம்.

நிரந்தரக் கட்டுப்பாடின்மை

இது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படும்:
1. மகப்பேறு காலத்தில் தசைகள் வலுவிழத்தல்
2. மாதவிடாய் நின்றுபோகும் காலத்தில், சில ஹார்மோன்கள் இல்லாத காரணத்தால் தசைகள் செயல்பாடு குறைதல்.
3. வயதின் காரணமாகத் தசைநார்கள் வலுவிழத்தல்.
4. ஆண்களுக்கு மூத்திரக்காய்ச் (prostate) சுரப்பி வீங்குவது
5. இருதய நோய் அல்லது இரத்த அழுத்த நோய்
6. பக்கவாதம் அல்லது நரம்பு நோயினால்..
7. உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த உபாதை அதிகமாகக் காணப்படுகிறது. எடையைக் குறைப்பதின் மூலம் இந்த உபாதையின் தீவிரம் குறையும் வாய்ப்பு அதிகமாகிறது.
சிறுநீர் கழிக்கும் முறை

நமது உடலில் ஏற்படும் கழிவுப் பொருட்களைச் சிறுநீரகம் சிறுநீராக மாற்றிச் சிறுநீர்ப்பையில் சேகரிக்கிறது. சேகரிக்கும் தருணங்களில் சிறுநீர்ப்பையின் வாய் மூடி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் சிறுநீர்ப்பை சுருங்கத் தொடங்குகிறது. அப்படிச் சுருங்குவதன் மூலம் அந்தப் பையின் வாயில் இருக்கும் Sphincter எனப்படும் சுருக்குதசை திறந்து சிறுநீர் கழிக்கப்படுகிறது.

இந்த செயல்பாட்டில் வெவ்வேறு தருணங்களில் பிரச்சனை ஏற்படலாம். வயிற்றுப் பகுதியின் அழுத்தம் அதிகமாகும் தருணங்களில் சிறுநீர்ப் பையில் இருந்து கசிவு ஏற்படலாம். சிறுநீர்ப்பை தானாகவே தேவைக்கதிகமாகச் சுருங்குவதால் கசியலாம். தசைகள் வலுவிழந்து விடுவதால் sphincter தசை மூடும் சக்தி இழந்து கசியலாம். அல்லது இவை யாவும் கலந்து உபாதை ஏற்படலாம்.

என்ன செய்வது?

முதலில் முதன்மை மருத்துவரை நாட வேண்டும். சிறுநீரில் நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால் அதற்கான மருந்துகள் எடுப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். அவரவர் சிறுநீர் கழிக்கும் முறையை ஒரு நாளேட்டில் குறித்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் எதனால் எப்போது உபாதை அதிகரிக்கிறது என்பதை அறிய முடியும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்கள் மாலையில் அதிக திரவ உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு சில மருந்துகள் அதிகமாகச் சிறுநீர் கழிக்க வைக்கும். அவற்றைத் தவிர்க்க முடிந்தால் நல்லது. இல்லையெனில் காலைப்பொழுதில் அவற்றை உட்கொள்வது நல்லது. முதன்மை மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்களை காணச் சொல்லலாம். மகப்பேறு சிறுநீரகச் சிறப்பு மருத்துவம்(urogynecology) என்ற பிரிவு உள்ளது. இவர்கள் இந்த உபாதைக்குத் தீர்வு காண வழி வகுப்பார்கள்.

சிறுநீர் கழிக்கும்போது அதை நிறுத்த முயற்சிக்க வேண்டும். 10 முதல் 30 வினாடிகள் சிறுநீர்ப் போக்கைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது தசைகளைச் சுருக்கும் விதம் அறிந்து கொள்ளலாம்.
பரிசோதனை முறைகள்

1. சிறுநீர் பரிசோதனை
2. Ultrasound
3. Cystoscopy என்று சொல்லப்படும் சிறுநீர் கழிக்கும் பாதை பரிசோதனை
4. Urodynamics study என்று சொல்லப்படும் சிறுநீர் இயக்க முறைப் பரிசோதனை

இந்தப் பரிசோதனைகளுக்கு பிறகு சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

சிகிச்சைகள்

பழக்கம் மாற்றும் சிகிச்சை:
தகுந்த இடைவெளியில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டுவருதல். இது மிகவும் முக்கியமான முறை. சின்னக் குழந்தைகளைப் பழக்குவதுபோல சிறுநீர்ப் பையைப் பழக்குவது நல்ல விளைவைத் தரும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பது நல்லது. முடியும்போதெல்லாம் பையில் இருக்கும் சிறுநீரைக் கழித்து விடுவதன் மூலம் மேற்கூறிய அபாயம் தவிர்க்கப்படுகிறது.

மருந்துகள்:
சிறுநீர்ப்பை அதிகமாகச் சுருங்கி விரியும் தன்மை உடையவர்களுக்கு Detrol என்ற மாத்திரை உதவலாம்.

கெகல் பயிற்சி (Kegel exercise):
Stress incontinence உடையவர்களுக்கு இந்தப் பயிற்சி முறை உதவுகிறது. இதை மகப்பேறு காலத்தில் இருந்தே தினமும் பலமுறை செய்வதின் மூலம் இந்த உபாதை ஏற்படாமல் தவிர்க்கலாம். உபாதை ஏற்பட்ட பின்னரும் தினமும் பலமுறை செய்வதின் மூலம் தசைகளுக்கு வலுவூட்டலாம். இந்தப் பயிற்சி செய்யும் முறையை அறிந்த பின்னர், மற்றவர்கள் அறியாத வண்னம் எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். சாலையில் வாகனத்தில் ஒவ்வொரு சிகப்பு விளக்கில் நிற்கும் போதும் செய்வது என்று வைத்துக் கொண்டால் இதை நிறையச் செய்யமுடியும். முதலில் இந்தப் பயிற்சி செய்யும் விதத்தை அறிந்துகொள்ள வேண்டும். சிறுநீர் கழிக்கும்போது அதை நிறுத்த முயற்சிக்க வேண்டும். 10 முதல் 30 வினாடிகள் சிறுநீர்ப் போக்கைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது தசைகளைச் சுருக்கும் விதம் அறிந்து கொள்ளலாம். இதே பாணியில் பின்னர் அந்தத் தசைகளை அழுத்தும் போது இந்த பயிற்சி முழுமையாகிவிடுகிறது.

அறுவை சிகிச்சை:
இவற்றில் எதுவும் பலனளிக்காத போது அறுவை சிகிச்சை உதவும். தசைகளை வலுப்படுத்தி, சிறுநீர்ப்பையைத் தூக்கி நிறுத்தும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அதிகமாகப் பெண்களுக்கு வரும் இந்த உபாதையைத் தீர்க்கப் பல வழிகள் இருந்தாலும், இது தீராத நோயாகிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் பெண்களே! வருமுன் காப்போம் என்று கெகல் பயிற்சியை அடிக்கடி செய்யுங்கள்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline