வயலின் வித்வான் லால்குடி ஜி.ஜெயராமன் அவர்களின் கச்சேரி தமிழ் விழா 2003 தமிழ் நாடு அறக்கட்டளை
|
|
கண்மணியே... பார்வை ஒன்றே போதுமே |
|
- பா. இரா.|ஏப்ரல் 2003| |
|
|
|
கொடைக்குணமும், உதவும் எண்ணமும், இரக்க சுபாவமும் குறைந்து வரும் அவசர யுகத்திலும், பிறரது இன்னலைத் துடைக்க இயன்ற வகையில் உதவிகளைச் செய்யும் நிறுவனங்களும், அவைகளுக்குத் தோள் கொடுக்கும் இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவான நற்காரியத்துக்கு உதவும் எண்ணம் பலருக்கு ஆழ்மனதில் எப்போதும் இருக்கும். தனி நபர் முனைப்பால் உருவாகி, பின்னர் மெதுவாகக் கிளை விட்டு, நற்காரியங்களில் ஈடுபட்டு, பீடுநடை போடும் பல அமைப்புகள் இன்று உண்டு.
இத்தகைய அமைப்புகளுள் ஒன்றுதான் Sankara Eye Foundation (சங்கரா கண் நல மையம்). உள்ளத்தையும் உலகத்தையும் கணநேரத்தில் இணைக்கும் அற்புதமான உறுப்பு கண். கண்களைப் பேணுவது குறித்த விழிப்புணர்வைப் பாமர மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதோடு, ஏழ்மை காரணமாக கண் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பார்வையையே இழப்பவர்களுக்கு, தரமான சிகிச்சையை இலவசமாக அளிக்கும் பணியை இவர்கள் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகச் செய்துவருகிறார்கள். 1998-ம் ஆண்டு முதல், அமெரிக்கவாழ் இந்தியர்களின் உதவியும் கிடைத்ததால், உலகத்தரமான சிகிச்சைகளை இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கு அளிக்கிறார்கள்.
வளைகுடாப் பகுதியில் மட்டுமன்றி, அமெரிக்காவின் ஏனைய பகுதிகளிலும் கிளை பரப்பி வரும் சங்கரா கண் நல மையம், நிதி திரட்டும் முகமாக பலமுறை கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். வளைகுடாப் பகுதியில் பிரபலமான தில்லானா இசைக் குழுவோடு இணைந்து இந்த ஏப்ரல் மாதம் மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 27 அன்று Hayward, Chabot கல்லூரிக் கலையரங்கில் நடைபெறப்போகிறது.
சங்கரா கண்நல மையம்
1977-ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்களின் நல்லாசியுடன் Dr. இரமணி அவர்களால் இந்த மையம் துவங்கப்பட்டது. கோவையில் உலகத்தரத்திற்கு ஈடாக ''சங்கரா கண் மருத்துவமனை'' செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் சுமார் 150 கண் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்த மருத்துவமனையில், வசதியற்ற ஏழை மக்களுக்கு இலவசமாக அனைத்துச் சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் சிகிச்சை களில் 90% ஏழைகளுக்கான இலவச சிகிச்சைகள் தாம். கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பகுதியும் இதனுடன் இயங்கி வருகின்றது.
இந்திய ஜனாதிபதி Dr. அப்துல் கலாம் அவர்கள், "தரமான சேவை செய்யும் மருத்துவமனைகளைப் பார்த்திருக்கிறேன். பக்தி சிரத்தையை கோவில்களிலும், பிற கடவுள்களின் சன்னதிகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கேயோ, சிரத்தையுடன் கூடிய சேவையைப் பார்க்கின்றேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
"கிராமங்களைச் சென்றடையும் திட்டத்தின்" (Rural Outreach Programme) மூலம் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் கர்னாடகாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில், மையம் தொடங்கிய நாளிலிருந்தே தவறாமல் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1987-ல் கண் வங்கி துவங்கப்பட்டது. "உதாரணமாகத் திகழும் கண் வங்கி" என்று இந்திய அரால் இது பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வமைப்பு வந்தேமாதரம், Bharath Vision போன்ற திட்டங்கள் மூலம் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தியாகிகளுக்கான கண் குறை நீக்கும் பணியையும் செய்துவருகிறது.
கோவையிலுள்ள மருத்துவமனைய¨ப் போலவே ஆந்திராவிலுள்ள குண்டூரில் சகல வசதிகளும் கொண்ட மருத்துவமனையை இந்த மையம் கட்டி வருகிறது. |
|
தில்லானா - கால(டி)ச் சுவடுகள்
சங்கரா கண் நல மையத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு, "கண்மணியே..." என்ற மெல்லிசை நிகழ்ச்சியைத் தில்லானா குழுவினர் தயாரித் துள்ளனர். அலெக்ஸ் அருளாந்து மற்றும் முகுந்தன் இருவரின் தூண்டுதலால் இசை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்துக்காக தில்லானாவின் முதல் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். அன்று ஆரம்பித்த தில்லானாவின் பயணம், சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டி உதவும் பொருட்டு மேடை நிகழ்ச்சிகள் வழியாகத் தொடர்ந்து வருகிறது. மூன்று வயதுக் குழந்தை முதல், சென்ற வாரம் இந்தியாவிலிருந்து வந்திறங்கிய பெற்றோர்கள் வரை அத்தனை பேரையும் குஷிப்படுத்திவிடும் தில்லானா இசைநிகழ்ச்சி.
"என் கண்மணிக்கு" என்ற ஒரு புதிய அம்சம் இந்த கண்மணியே... நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது. ரசிகர்கள் நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றை தம் அன்புக்குரிய ஒருவருக்கு அர்ப்பணம் செய்ய வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. ரசிகர்கள் தமக்கு விருப்பமான பிரிவுகளில் (பாரம்பரிய இசை, புதிய பாடல், பழைய பாடல், ரம்மியமான இசை, டப்பாங்குத்து) இருந்து ஒரு பாடலை அர்ப்பணம் செய்யலாம். இதற்கான அன்பளிப்பாக $50, $250 என்று இரண்டு விதமான முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. $50 அன்பளிப்புக்கு, சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் நிகழ்ச்சியின் போது மேடையில் திரையிடப்படும். $250 பிரிவினில், சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மிகவும் வித்தியாசமான முறைகளில் மேடையில் அறிவிக்கப்படுவார்கள்.
அலெக்ஸ் அருளாந்து, முகுந்தன், இராகவன் மணியன், ரேவதி, கிஷ்மு, அனிதா, கவிதா, மீரா, பஞ்ச்... என்று 40க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு மேடையேறுகிறது இந்த தில்லானா இசைக்குழு. இவர்களுடன் நாடகம் மற்றும் நடனக் கலைஞர்களும் (ஜனனி,சம்பத் குழுவினர்), அத்தோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலும், மேடை அமைப்புகளைத் திறம்படச் செய்வதிலும் பெயர் பெற்ற சியாமளா போன்ற பல கலைஞர்களும் இம்முயற்சியில் கருமமே "கண்"ணாக கடந்த இரண்டு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஒரு மாலைப் பொழுதிற்காக நாம் செலவிடும் சிறிய அளவிலான பணம், பல ஏழை மக்களின் வாழ்வில் தடையின்றி பார்வை தந்து ஒளியேற்றும் என்பது மட்டும் உறுதி.
இந்த நிகழ்ச்சியைப் பற்றியும், நுழைவுச்சீட்டு கிடைக்குமிடங்களைப் பற்றியும், சங்கரா கண் நல மையம் மற்றும் தில்லானாவின் செயல்பாடுகள் குறித்தும் விபரங்களைக் காண விரும்புவோர், அடியிற்கண்ட வலைத்தளங்களில் எலிவீசிப் (அதாங்க... mouse!) பார்க்கலாம்.
தில்லானா - www.thillana.net SEF - www.giftofvision.org மற்றும் www.sankara.org
பா. இரா. |
|
|
More
வயலின் வித்வான் லால்குடி ஜி.ஜெயராமன் அவர்களின் கச்சேரி தமிழ் விழா 2003 தமிழ் நாடு அறக்கட்டளை
|
|
|
|
|
|
|