|
பிப்ரவரி 2006: வாசகர் கடிதம் |
|
- |பிப்ரவரி 2006| |
|
|
|
சென்ற ஐந்து ஆறு இதழ்கள் படிக்க சுவராசியமாக இல்லை. புதுப்புது ஆசிரியர்கள், புதுப்புதுப் பெயர்கள், அவர்கள் எழுதும் பாணி, கருத்துக்கள் தான் எடுபடாததற்குக் காரணம். சிறந்த கருத்துக்கள், உயர்ந்த தமிழிலே எழுதினாலும் வாசகர்களுக்குப் புரிவதில்லை. மக்கள் படிக்கக் கூடிய தமிழிலே கருத்துக்களையோ விஷயங்களையே தெரிந்த எழுத்தாளர்களைக் கொண்டு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். தென்றல் முன்னேற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை வைத்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.
அட்லாண்டா ராஜன்
(நெடுநாள் வாசகர் அட்லாண்டா ராஜன் அவர்களின் மேற்கண்ட கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு எழுதுங்களேன் - ஆசிரியர்)
*****
தென்றல் குழுவினரில் ஆற்றல், அவர்களது ஆர்வம், அவர்களது அடிமனதில் பொங்கியெழும் தமிழ் உணர்வு, எழுதுவதற்கு எழுத்தில்லை.
கவியரசு கண்ணதாசன் 'தென்றல்' என்ற வார இதழைத் தொடங்கி தமிழ் அன்னைக்கு பாமாலை சூடிப் பரவசமடைந்தார். அதைப் போலத் தாங்களும் தங்கள் குழுவினரும், தமிழுக்கும் தமிழ்த் தாய்க்கும் தமிழர்களுக்கும் திங்கள்தோறும் தென்றலெனும் தேன்சொல் தமிழ்மாலை அணிவித்து அனைவரையும் மகிழ வைக்கிறீர்கள்.
உங்கள் தொண்டு தெய்வத்தொண்டர் அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஆண்டாள் உட்பட்ட பன்னிரெண்டு ஆழ்வார்கள், வீரமாமுனிவர், ஜி.யூ. போப் போன்றவர்கள் செய்த அருந்தொண்டிலும் அருந்தொண்டு தான் அந்நிய நாட்டில் செய்யும் அற்புதத் தொண்டு.
கணேசன் சிம்ப்ஸன்வில், தென் கரோலினா
*****
தென்றல் ஆசிரியர் குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கைகள் பெண்களை உரித்துப் பார்க்கும் பேரழிவுப் போட்டியில் இருக்கும் போது அமெரிக்காவிலிருந்து 'கற்புக்கரசி கண்ணகி' போல் இனிய தென்றல் வீசும் தனித் தமிழ்ப் பத்திரிக்கையாக இருப்பது தமிழர்களைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்கிறது.
ராஜன் பிள்ளை, அல்புகர்க்கி, நியூ மெக்ஸிகோ
***** |
|
வானொலிவாணர் அப்துல் ஹமிதீன் பரந்த மனப்பாங்குடன் கூடிய கட்டுரை இதயத்தைத் தொட்டது. நவம்பர் இதழில் கார்த்திகையை ஒட்டி அண்ணாமலையார் தரிசனம் கிட்டியது. பெரியண்ணன் அவர்களின் சங்க இலக்கியம் மற்றும் அகநானூற்றுப் பாடல்களின் உட்புக முடிந்தது. இந்த மாதம் மானஸரோவர் யாத்திரையும், வெங்கட்ராகவன் அவர்களுடனான பேட்டியையும் ரசித்தோம்.
சாவித்திரி கிருஷ்ணன் மில்பிடாஸ், கலி.
*****
கலி·போர்னியப் பாடங்களில் இந்து மதம் பற்றிய சர்ச்சையை, இரண்டு பக்கச் செய்திகளையும் நேர்மையான முறையில் தொகுத்து வழங்கியதற்கு என் நன்றிகள். கலி·போர்னியப் பாடநூல்களில் இந்து மதத்தின் பல்வேறு நம்பிக்கைகளைக் குறிப்பிடும் மாற்றங்களைக் கொண்டுவர இந்துக் குழுக்களும், எந்த அமைப்பிலும் சேராத இந்துப் பெற்றோர்களும் விரும்பினாலும், கல்வித்துறையின் விதிமுறைகள் அவர்கள் கைகளைக் கட்டி விட்டன. இதனால் வாக்கியங்களைத் திருத்துவதோடு நிற்க வேண்டியதாகிவிட்டது. இந்து மதம் ஒரே கடவுளை வணங்கும் மதம் (monotheism) என்று இந்துக்கள் சித்தரிக்க முயற்சி செய்தனர் என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை.
கலவை வெங்கட், சன்னிவேல், கலி.
(வேதிய அறக்கட்டளை சமர்ப்பித்த திருத்தங் களில் முக்கியமானது "இந்து மதம் ஒரு முழுமுதற் கடவுளை வணங்கும் மதம்" என்பது. இதை வேதிய அறக்கட்டளையும் மறுக்கவில்லை - ஆசிரியர்). |
|
|
|
|
|
|
|