|
மார்ச் 2006: வாசகர் கடிதம் |
|
- |மார்ச் 2006| |
|
|
|
பிப்ரவரி இதழ் நன்றாக அமைந்து இருக்கிறது. எல்லா தலைப்புகளும் மிக்க ருசிகரமாக அமைந்து இருப்பதை பாராட்டத்தான் வேண்டும். அதிலும் ரூபா ரங்கநாதன் நேர்காணல், கனுச்சீர் சிறுகதை ஆகியவை மெச்சத் தகுந்தன.
மேலும் சிறப்பான கட்டுரைகள் வரும் என திடமான நம்பிக்கை இருக்கிறது.
அட்லாண்டா ராஜன்.
***
தென்றல் இதழ் இலக்கிய மணம் கமழ, கண்ணியமாகப் பண்பாட்டோடு மிளிர்வதைக் கண்டு பெருமகிழ்வு அடைந்தோம். தங்கள் ஏட்டைப் படிக்கும் போது தமிழகத்தில் இருப்பதைப் போலவே உணர்கின்றேன். தமிழகத்தில் வெளியாகும் இலக்கிய, சமுதாய இதழ்களுக்குச் சற்றும் குறையாத வகையில் தங்கள் தென்றல் இதழ் வெளிவருவது கண்டு பெரிதும் மகிழ்கின்றேன்.
தங்கள் ஏட்டில் வெளியாகும் ஆசிரியர் பக்கம், சிறுகதைகள், சங்க இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் பெரிதும் என் உள்ளத்தைக் கவர்ந்தன.
புலவர். அரு. சுந்தரேசன் அட்லாண்டா.
***
தென்றல் இதழ் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக வந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து படித்து வருகிறேன். அதில் தத்தம் அனுபவங்களையும், பார்த்து ரசித்த இடங்கள் பற்றியும் எழுதுகிறார்கள். அது உபயோகமானதாக இருப்பதுடன் நிறைய விபரங்களும் தெரிந்து கொள்ள முடிகிறது.
தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
லட்சுமி
***
நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் தமிழில் இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். தமிழில் பேசவும், எழுதவும் நான் அதிகமாகப் பங்கு கொள்ள முடியவில்லை என்றாலும் என்னுடைய தமிழ் அதிகச் சேதம் மற்றும் குறைபாடுகள் இல்லாமலும் நடைமுறை அதிர்ச்சிகள் குறைவாக இருக்கும்படியும் சிறுவயதில் பழகி வளர்த்ததனால் ஏற்பட்டது. தமிழ்ப் பேச்சாளர்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகள், விமர்சனங்கள், கதைகள் ஆகியவை நான் சிறுவயதில் அனுபவித்த உற்சாகங்கள்.
எனக்கு இப்போது தமிழில் உறவாடவும், படிக்கவும் அதிக வாய்ப்புக்கள் இல்லை என்றாலும் தமிழ் மறக்கவில்லை. இதை எதற்காக அழுத்திக் கூறுகின்றேன் என்றால் 40 ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டை விட்டு இங்கிலாந்து, வடஅமெரிக்கா நாடுகளில் வசித்ததில் ஆங்கிலமே நான் உபயோகித்த மொழியாக இருந்திருக்கின்றது. ஆனாலும் தமிழை நான் மறக்க முடியாது. சில சமயம் மறுக்க முடியாது. ஒரு பொழுதும் வெறுக்க முடியாது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி மொழியின் வளர்ச்சிக்கு முதல் கட்டமாக இருந்தது. பல ஆண்டுகளாகத் தமிழ்த்தலைவர்கள் மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டது தமிழுக்கு நல்ல எதிர்காலத்தை நிச்சயம் கொடுக்கும்.
நான் இத்துடன் தென்றலுக்கு ஒருவருடச் சந்தா அனுப்பியுள்ளேன். முதல் இதழை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சீனிவாசன் நரசிம்மன் எட்ஜ்வாடர் பார்க், நி.ஜெ.
***
தங்களுடைய சஞ்சிகையின் பிரதிகள் எனக்கு இடைக்கிடை கிடைப்பதுண்டு. சஞ்சிகையின் தரம் உயர்ந்ததாகையால் நான் அவற்றை விரும்பி வாசிப்பேன். லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் ரொறன்ரோ நகரில் இப்படியானதொரு சஞ்சிகை இல்லையே என்று நான் கவலைப்படுவதுண்டு. அமெரிக்காவில் தமிழ் அழியாதிருப்பதற்கும் நீடித்து நிலைத்து நிற்பதற்கும் நீங்கள் ஆற்றிவரும் பணிக்காக உங்களுக்கு நீண்ட ஆயுள் கோரி ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்க தங்கள் தமிழ்ப் பணி.
ஒரு சிறந்த இனமாகிய எமது இனத்தின் விடிவிற்காக தங்களுடைய உதவி கோரி கீழ்க்கண்டவற்றை எழுத விழைகிறேன்.
இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் பூரண பாதுகாப்பையும் சகல செளபாக்கியங்களையும் உரிமைகளையும் கொண்டிருந்து வீம்பிற்காகப் போராடவில்லை என்பதும் 50 வருடங்களுக்கு மேலாகப் படிப்படியாக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இப்போது உயிரோடு வாழும் உரிமையும் பறிக்கப்படும் போது இனியும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டு தங்களுடைய உயிர்களைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள் என்பதும் தாங்கள் அறிந்ததே. இப்போதுள்ள பரம்பரை தோற்குமாயின் இனிமேல் இங்குள்ள தமிழர்கள் அனைவரும் சிறிது காலத்திற்கு அடிமைப் பரம்பரைகளாக வாழ்ந்துவிட்டு பின்னர் நிரந்தரமாகவே அழிக்கப்பட்டுவிடுவார்கள். இலங்கை சிங்களவருக்கு மட்டுமே உரித்தான, சிங்களவர் மட்டுமே வாழும் நாடாக ஆகிவிடும்.
ஆனால் இப்போது தமிழகத்தின் தெற்கு எல்லைக்கு 17 மைல்களுக்கு அப்பால் வாழும் தமிழர்கள் அழிவின் இறுதிக்கட்டத்தில் இருந்துகொண்டு எழுப்பும் அவலக் குரலைக் கேட்டும் தமிழகத்து 5.5 கோடி தமிழ் மக்களின் ஆதரவுக்குரல் இன்னமும் அதிக அளவில் பெரிதாக ஒலிக்கவில்லையே என்பதுதான் இலங்கையிலும் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களாகிய எங்களை வாட்டுகிறது. குழந்தையொன்றைப் பிறர் அடித்தால் அது அழுதுகொண்டு ஆதரவு வேண்டித் தாயைத்தானே முதலில் பார்க்கும். அந்த நிலையில்தான் நாங்கள் இன்று இருக்கிறோம். எங்களைப் பொறுத்த வரையில் சரித்திர காலம் தொட்டு பாரதமே எங்கள் தாயகம். தாய்நாடு என்று நாங்கள் அழைக்கும்போது அது பாரதத்தையே குறிக்கிறது. இலங்கையைச் சேய்நாடு என்றே நாங்கள் சரித்திரகாலம் தொட்டுக் குறிப்பிட்டு வருகிறோம்.
க. கனகசுந்தரம் ரொறன்ரோ, கனடா
*** |
|
வாசகர் கடிதத்தில் அட்லாண்டா ராஜன் அவர்கள் எழுதியதைப் படித்தேன். எழுத்துக்களில் நல்லதா அல்லது தரமானதா என்று பார்க்கலாமே தவிர புதியவர்களா அல்லது பிரபலமானவர்களா என்று பார்ப்பது ஏற்புடையது அல்ல. தரமானவை என்பதால்தான் ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கிறது. புதிய வரவுகளை வேண்டாம் என்பது கருத்துக்களுக்கு மட்டுமல்ல, நம் மொழிக்கும் கூட நாமே தடையாக நிற்பதாக ஆகிவிடும். எளிமையான தமிழ் மட்டுமல்ல ஏற்புடைய எத்தகு தமிழையும் விரும்பும் மக்கள் இருக்கிறார்கள். அதுபோன்ற தமிழ் விரும்பிகளுக்கு திரு. ராஜனின் கருத்து ஏமாற்றத்தையே தரும்.
நித்யவதி ஃப்ரிமான்ட், கலி.
***
கடந்த பல தென்றல் இதழ்களைப் படித்து மகிழ்ந்தேன். தற்போது இந்தியாவில் வெளிவரும் பல தமிழ்ப் பத்திரிகைகள் தரம் குறைந்து காணப்படுகின்றன. ஆனால், தென்றல் ஒரு வைரக்கல்லாகப் பிரகாசிக்கிறது. தென்றலின் தரத்தையும் அதில் காணப்படும் செய்திகளையும் படித்தபின், எனக்கு இந்தியாவிற்கு அனுப்பி வைக்குமாறு என் மகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். உங்கள் பத்திரிகை தமிழ்ப் பற்று உடையவர்களுக்கு மிகவும் இதமளிப்பதாக உள்ளது.
எனது தந்தையார் திரு. சங்கு சுப்ரமணிய ஐயர் அந்நாளில் 'சங்கு' பத்திரிகையை நடத்தியபடி, சுதேச மித்திரனிலும் பங்கு கொண்டார். அதைப் பற்றியும் உங்கள் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. பாரதி, தாலாட்டுப் பாடலே பாடவில்லை என்பதைத் தென்றலின் மூலமே அறிந்தேன். 'அன்புள்ள சினேகிதியே' பகுதி என்னைப் பெரிதும் கவர்ந்தது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் நடத்தும் விழாக்களைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
'மருந்துக்கு வீசுவோம் சாமரம்' இதை மீரா சிவா மிக நல்ல முறையில் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு அறக்கட்டளை ஆற்றும் பணிகளைக் கண்டு வியப்புறுகிறேன். வழிபாடு பகுதியை இரசித்துப் படித்தேன். 'அக்கினிக் குஞ்சு' நாடகம் பற்றிப் படித்ததும் அதைக் காணவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
மொத்தத்தில், ஒரு தரமான பத்திரிகையாக விளங்கி என் தமிழ்ப் பற்று மற்றும் இலக்கிய ஆர்வத்திற்கு ஈடுசெய்யும் விதமாகத் தென்றல் விளங்குகிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சுந்தரி சுப்ரமணியம் கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|