|
ஏப்ரல் 2003: வாசகர் கடிதம் |
|
- |ஏப்ரல் 2003| |
|
|
|
நான் சென்னையிலிருந்து என் மகனைப் பார்ப்பதற்காக அமெரிக்கா வந்திருக்கிறேன். வந்த இடத்தில் 'தென்றல்' மாத இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான தகவல்கள் மற்றும் கட்டுரைகளோடு அழகாக வடிவமைக்கப்பட்டு இங்குள்ள தமிழர்களுக்கு, தமிழ் மொழியோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த இதழ் அமைந்திருப்பதற்குப் பாராட்டுகள்.
கடந்த மார்ச் இதழில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை 'கொடுமுடிகோகிலம்' கே.பி.சுந்தராம்பாள் அவர்களைப் பற்றியதுதான். இந்தக் கட்டுரையை நான் இரண்டு முறை படித்தேன். அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.
லதா விஸ்வநாதன் *****
சென்ற இதழில் பல வாசகர்கள் Dr. சுவாமிநாதன் அவர்கள் எழுதிய கதையை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார்கள். கதையைப் படித்து விட்டுத் தான் எழுதினார்களா இல்லை தலைப்பை மட்டும் பார்த்து எழுதினார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த மார்ச் இதழில் தலையும் காலும் இல்லாமல் பிரசுரமாகியிருந்த 'ரேடியோ' அல்லது என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாமலே பல வெள்ளைப் பக்கங்களைக் கருப்பாக்கிய 'பச்சைக் குழந்தையடி' மாதிரியான கதைகளைத்தான் வாசகர்கள் விரும்புகிறார்களோ?!
வாசகர் பிரச்சனைகளுக்குச் சித்ரா வைதீஸ்வரன் பதில் சொல்லும் பகுதியில் இந்த மாதம் கேட்கப் பட்டிருப்பது கணவரை இழந்து நாட்டை விட்டு வந்து கலாச்சார அதிர்ச்சியில் இருப்பவரின் மனப் பிரச்சனை. அதற்குத் தீர்வு Practical வழிகளில் நிச்சயம் இல்லை.
மனதளவில் வரவேண்டும். கணவரை இழந்தால் என்ன செய்வது என்று நம்மில் பலர் யோசிப்பதில்லை. அதனால் அது நடக்கும் போது திகைத்துப் போகிறோம். இனிமையான இல்லறத்தில் வாழ்ந்தவர்கள் தனிமையாக வாழப் பழக பல ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சி சொல்கிறது. அதனால் Depression தோன்றுவதும், அதனால் தான் தனிமைப்பட்டு விட்டதாகத் தோன்றுவதும் இயற்கை. இந்தக் கருத்தை நிபுணர் தெரிவிக்காதது வருந்தத்தக்கது.
எழுத்தாளர் லட்சுமியின் பல அருமையான கதைகள் இருக்க இந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கக்காரணம் என்ன? பெண்களின் வருத்தங்களையும், தியாகங் களையும் அழகாகச் சித்தரிப்பது அவர் சிறப்பம்சம் என்பதை மறந்து விட்டீர்களா?
கீதா பென்னட் பக்கம் அருமை. தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அழகாக விளக்கி தன் வருத்தத்தைத் தெளிவாகக் காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது.
மீரா சிவா *****
நமஸ்காரம். அண்மையில் நான் கலிபோர்னியாவில் SanJoseக்கு வந்தபோது ஒரு இந்தியக்கடையில் உங்கள் தென்றல் (இலவசம்) பார்த்தும், படித்தும் பரவசமானேன். இந்த இதழ் இங்கு கிடைத்தது ஆச்சரியம். நான் இங்கு ஏப்ரல் வரை இருப்பேன். பிறகு சென்னை. அதுவரை தென்றல் கிடைக்க வழிசெய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.
டி.கே. ஸ்ரீநிவாசன் ***** |
|
தென்றல் இதழ்களை நான் மிகவும் ரசித்தேன். பழம்பெரும் எழுத்தாளர்களுடைய படைப்புகளின் மதிப்பீடும், பிரபலமான தொழிலதிபர்களின் பேட்டியும், தமிழக அரசியலும், புழக்கடைப் பக்கமும் மிகவும் பாரட்டுக்குரியவை. அத்துடன் அட்லாண்டாவிலும் மற்ற நகரங்களிலும் நடக்கும் கலை விழாக்களின் விபரங்களைப் படிக்கும்போது, நான் உண்மையிலேயே இந்த ஊரில் இல்லையே என்ற ஏக்கமே வந்துவிட்டது.
பாரதியார் போட்டி என்ன, பொங்கல் விழா என்ன... படு அமர்களம்! மூலைக்கு மூலை வாழும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய காரியம். மன்றம் என்றும், சங்கம் என்றும் ஆரம்பித்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டி அசத்தும் அமெரிக்க தமிழ் மக்களுக்கு என் அன்பு கலந்த பாராட்டுதல்கள்.
சுந்தரி ஜெயராமன் *****
கடந்த 27 மாதங்களாக, தென்றலின் 'ஸ்பரிச'த்தில் மகிழ்ந்து வருகிறேன். சென்ற மார்ச் மாதம் மகளிரைக் கெளரவிக்கும் வகையில் தென்றல் மிகவும் அருமையாக அமைந்திருந்தது. விண்வெளி வீரர், மறைந்த திருமதி கல்பனா சாவ்லாவைப் பற்றி தொலைக்காட்சியில் நிறைய தெரிந்து கொண்டாலும், அவரைப் பற்றி உங்கள் கட்டுரையில் படித்த பொழுது கண்ணிலிருந்து நீர் துளித்தது என்னவோ உண்மை. எழுத்தாளர் லக்ஷ்மி மற்றும் திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பற்றிய கட்டுரைகள் நன்றாக இருந்தன.
'ரேடியோ' மற்றும் 'பச்சைக் குழந்தையடி' இரண்டு சிறுகதைகளும் மனதை மிகவும் நெகிழச் செய்தன. அமெரிக்கா முழுவதும் 'தென்றல்' தவழ்ந்து வீசிட, எங்களுடைய ஆசைகள், வாழ்த்துகள்.
சோமநாதன் சாந்தி *****
சில எழுத்தாளர்கள் தங்களுக்கு உள்ள தமிழ் திறமையைக் காட்ட இராமன். லக்குமணன், இலங்கை, இராவணன் என்கிற வார்த்தைகளை வாசர்கர்களுக்குக் காட்டுகிறார்கள்.
நடைமுறையில் இருக்கும் வார்த்தைகளை உபயோகித்தால் நலமாயிருக்கும். உதாரணமாக தொன்மை என்கிற வார்த்தையை சிறிய குறிப்பிலே 4, 5 தடவைகள் உபயோகித்திருக்கிறார். வாசகர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. அதனால் ரசிப்பதில்லை. ஆகையால் மக்களுக்குச் சுலபமாகப் புரியக்கூடிய சொற்களை உபயோகிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அட்லாண்டா ராஜன் *****
வளவனூரில் தம் சகோதரியின் திருமணத்தின் போது ஒரே தமிழ்ப்படத்தை அடுத்தடுத்து மூன்று முறை பார்த்ததை ஒரு பக்கத்திற்கு விவரித்து எழுதியதின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்ன அரிய கருத்தை கீதா பென்னெட் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்று புரியவில்லை!
ஒன்றுக்கும் உதவாத இம்மாதிரியான சுயபுராணக் கதைகளை வெளியிட்டு, எண்ணற்ற வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பி. சண்முகம், நியூயார்க் |
|
|
|
|
|
|
|