|
செப்டம்பர் 2017: வாசகர் கடிதம் |
|
- |செப்டம்பர் 2017| |
|
|
|
'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரன் அவர்களுடனான நேர்காணல், 'தென்றல் பேசுகிறது' பகுதியில் குறிப்பிட்டபடி ஆகஸ்டு இதழின் மகுடமாகத் திகழ்கிறது. "அடியார்கள் நமக்கு ஆண்டவனை அறிமுகப்படுத்துகிறார்கள், ஆண்டவன் நமக்கு அடியார்களை அறிமுகப்படுத்துகிறான்" என்று சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு ராமச்சந்திரன் கூறும் ரத்தினச் சுருக்கமான அறிமுகம் மிக அருமை.
சில வாரங்களுக்கு முன்தான் 'யூட்யூபி'ல் ரவி சுப்பிரமணியம் தொகுத்து வழங்கியுள்ள ஆவணப் படமான 'சைவத் தமிழ் வளர்க்கும் சேக்கிழார் அடிப்பொடி' என்ற காணொளியைக் கண்டு மகிழும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து இந்த ஆகஸ்டு 'தென்றல்' இதழில் அவரது நேர்காணலைப் படிக்கக் கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி. 'தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடித்தேடி அவற்றைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்ததைப் போல, 'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரன் போன்ற இலக்கிய, ஆன்மீகச் செம்மல்களை நாடிச்சென்று அவர்களது ஆன்மீக-இலக்கியப்-புராண-பக்தி இலக்கியச் சேவைகளை நேர்காணலாக தமிழ்கூறும் நல்லுலகிற்கு – குறிப்பாக அமெரிக்காவாழ் தமிழர்களுக்கு அளித்துவரும் தென்றலுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புள்ள சிநேகிதியே பகுதியைப் படித்தபோது, "இரவு உணவுக்கு கஷ்டப்பட்டு கூழுக்கு வழி செய்தாயிற்று, கூழில் போட்டுக்கொள்ள உப்பில்லையே என்று குடிசையில் வாழ்பவன் கவலைப்படுகிறான்! நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, படுக்கப் போகுமுன் குடிக்கச் சூடான பசும்பால் இருக்கிறது, ஆனால் பாலில் போட்டுக்கொள்ளச் சர்க்கரை இல்லையே என்று மாடிவீட்டில்வாழ்பவன் கவலைப்படுகிறான்" என்று அவரவருக்கு உள்ள கவலையின் தன்மையைப் பற்றி நம் கிராமப்புறங்களில் உள்ள உரையாடல்தான் நினைவுக்கு வருகிறது. "வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்ற சித்ரா வைத்தீஸ்வரனின் விளக்கம் நன்று.
ஸ்ரீமத் ராமானுஜர் பற்றிய தொடர், வளர்ந்துவரும் எழுத்தாளர் ஆர். அபிலாஷ் பற்றிய அறிமுகக் கட்டுரை என்று தென்றலின் அனைத்து அம்சங்களும் மிக அம்சமாக இருந்தன. |
|
சென்னிமலை சண்முகம், நியூயார்க். |
|
|
|
|
|
|
|