|
பிப்ரவரி 2015: வாசகர் கடிதம் |
|
- |பிப்ரவரி 2015||(1 Comment) |
|
|
|
|
இளைஞர்களின் எழுஞாயிறு, வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளியின்றி வாழ்ந்த வீரத்துறவி விவேகானந்தரின் சிந்தனைகளை எடுத்துரைத்த தென்றலுக்கு நன்றி. "முடியாது என்பது மூட நம்பிக்கை; முடியுமா என்பது அவநம்பிக்கை; முடியும் என்பதுதான் தன்னம்பிக்கை" என்று எடுத்துரைத்த பாரதப்புனிதர் சுவாமி விவேகானந்தர். பாரிஸ் பயணத்தில் தான் சந்தித்த பிரபல வங்கி அதிபராக இருந்து, வாழ்க்கைப் புயலில் சிக்கி, கோச் வண்டி ஓட்டுபவராகத் தொடர்ந்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்தவரை, "இவர்தான் வேதாந்தி" என்று உலகுக்கு உணர்த்தியவர் அவர். அயல்நாடுகளில் வாழலாம், ஆளவும் செய்யலாம். ஆனால் அந்தந்த நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பதோடு, மன, மொழி, மெய்யால் இந்தியர், இந்தியக் கலாசாரத்தோடு வாழவேண்டும் என்பதை உணர்த்திய காவிச்சித்தர். அவரது சிந்தனைகளைத் தக்கசமயத்தில் வெளியிட்ட தென்றலுக்கு நன்றி.
அரிமளம் தளவாய் நாராயணசாமி, ஹூஸ்டன்
*****
'காசுமாலை' சிறுகதை பாராட்டுக்குரியது. தலைப்பே வாசிக்கத் தூண்டுவதாக இருந்தது. கதை சொல்லும் விதமும் பாத்திரப் படைப்பும் மிகச்சிறப்பு.
கௌஷிக் ரமணி, சென்னை, இந்தியா
*****
தென்றல் புத்தாண்டிதழ் வழக்கம்போல் மிகநன்றாக இருந்தது. குறிப்பாக ஹரி கிருஷ்ணன் நேர்காணல் அருமை. அவரது பங்களிப்பு தென்றலுக்கு ஒரு வரப்பிரசாதம். சங்கப் பாடல்களிலும், இலக்கியத்திலும் தனிமுத்திரை பதித்தவர். இளமையில் இவரின் இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டவர் தனது தாய்தான் என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார். பேரறிஞர் ராஜாஜி அவர்களின் 'சக்கரவர்த்தி திருமகன்', 'வியாசர் விருந்து' ஆகிய நூல்களை இளவயதில் படித்ததை நினைவு வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இரண்டு இதிகாசங்களும் அவரின் இலக்கிய வேகத்தை அதிகப்படுத்தியதில் வியப்பில்லை. சிறுவயதிலேயே கவிதை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நேர்காணலும் சுகமானதாகவே இருக்கிறது.
கே.ராகவன், பெங்களுரு, இந்தியா
***** |
|
பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தென்றல்' நங்கைக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள். சமீபத்தில் தமிழகம் சென்ற போது, உறவினர் வீட்டிலெல்லாம் தென்றல் இதழைக்கொடுத்து "சினிமா செய்திகளை பிரதானமாக வெளியிடாமல் தமிழையும் அதன் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் இந்தப் பத்திரிகையையும் படியுங்கள்" என்று சொல்லிவந்தேன். நாம் மறந்துவிட்ட, மறக்கக்கூடாத தமிழறிஞர்களை அறிமுகம் செய்துவரும் தென்றலின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. டிசம்பர் மாத இதழில் வெளியான சிறுகதைகள் யாவும் வாழ்வின் பிரதிபலிப்புகளாக விளங்கின. பேரா. மாதவன், மரபின் மைந்தன் முத்தையா நேர்காணல்கள் அவர்களது திறமையையும் அனுபவங்களையும் எடுத்துக்காட்டின.
ஜனவரி இதழில் ஹரிகிருஷ்ணன் நேர்காணல் அவரது பன்முகத்திறமையை வெளிப்படுத்துவதாயிருந்தது அவருடைய புலமையும், திறனாய்வும் மனதில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தந்தன. சமூகக் கதைகளையே சிறுகதைகளாகப் படித்து வந்த நமக்கு சரித்திரத்தை நாவலாக அல்லாமல் விறுவிறுப்பான சிறுகதையாகவும் தரமுடியும் என்பதை 'அரங்கனும் ஆர்லோவ் வைரமும்' கதைமூலம் தந்த ஜே. ரகுநாதன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். "கடுகு போகும் வழி தெரியும்; பூசணிக்காய் போகும் வழி தெரியாது" என்பது போல, அப்பாவி ஏழைமக்கள் தங்கள் வயிற்றுப்பசி தீர விறகு சேகரிப்பதை அபகரிக்கும் காவலர்களும் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் லாரி லாரியாக மரங்களை வெட்டிக்கொண்டு போகும்போது கண்ணை மூடிக்கொள்வதை வெளிச்சம் போட்டுக் காட்டியது "கூடு". மொத்தத்தில் தென்றல் பொங்கலுக்குச் சுவையூட்ட வந்த கரும்பாக இனிக்கும் இதழ். தங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்.
சுபத்ரா பெருமாள், கூப்பர்டினோ, கலிஃபோர்னியா
*****
நமது மகாபாரத இதிகாசத்தைப் பலர் பல கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். ராஜாஜி (வியாசர் விருந்து), சோ (மகாபாரதம் பேசுகிறது), பேரா. பூவண்ணன், பேரா. ராசீ, சுவாமி சித்பவானந்தர் எனப் பலரின் எழுத்துக்கள் படித்துள்ளேன். ஏகலைவன், கிருஷ்ணரின் இறுதிகுறித்த பாலகுமாரனின் சிறுகதையைப் பல வருடங்களுக்குமுன் படித்துள்ளேன். ஆனாலும் ஹரிமொழியின் ஆய்வு உண்மையாக உணர்கிறேன். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
சுப்ரமணியன் ராமச்சந்திரன், ஆல்பெரட்டா, ஜார்ஜியா |
|
|
|
|
|
|
|