Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
பங்குகள் பட்ட பாடு (பாகம் - 5)
- கதிரவன் எழில்மன்னன்|ஏப்ரல் 2003|
Share:
முன் கதை: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சட்ட வழக்கு நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும், மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான். அவனுக்கு மிகவும் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவ ராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.

கிரண் வேலை புரியும் ஹார்வி வில்கின்ஸன் பங்கு வர்த்தக நிறுவனத்தில் கம்ப்யூட்டர்களை வைத்து நடத்தப்பட்ட பல மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. நிறுவனத்தின் கம்ப்யூட்டர் பாதுகாப்புப் பிரிவினரால் யார் செய்தனர் என்று கண்டுபிடிக்க இயலவில்லை. மோசடி நடத்தியவரைப் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்துக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டு, கெட்ட பெயர் பரவி விடும். அதனால் நிறுவன அதிபர் ஹார்வி கிரணைத் துப்பறிய அழைத்தார். கிரண் நிறுவனத்தின் ஸா·ப்ட்வேர் குழுவில் வேலை புரியும் கண்ணன், சுரேஷ் இருவரிடமும் ப்ரோக்ராம் ஸோர்ஸ் கோட் (source code) கேட்டு அதை ஆராய்ந்து விட்டு, தன்னால் கண்டு பிடிக்க இயலாது, சூர்யாவால் தான் இயலும் என்று கூறினான். ஹார்விக்கு வெளி மனிதரை விசாரிப்பில் நுழைக்க விருப்பமில்லை. மேலும் சூர்யாவின் இளமையும், மிடுக்கான தோற்றமும் அவருடைய தயக்கத்தை இன்னும் அதிகப் படுத்தின. கிரணுக்காக சும்மா சில நிமிடம் பேசிவிட்டு ஒதுக்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனால் ரிக்கைத் தவிர யாருக்கும் தெரியாத அவருடைய 'பார்க்கின்ஸன்ஸ்' நோயைப் பற்றி, சூர்யா சில நொடிகளில் அறையில் பார்த்ததை வைத்தே யூகித்து விடவே ரிக் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்து, சூர்யாதான் தன் சிக்கலை அவிழ்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். கிரண், நிறுவனத்தின் ஸெக் யூரிட்டி பிரிவினர் கண்டுபிடிக்க முடியாதபடி எப்படி ப்ரோக்ராம்கள் மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டது என்று விளக்கினான். மூவரும் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் மைக் ஜான்ஸனுடன் பேசச் சென்றனர். அவரைச் சந்தித்ததும் சூர்யா அவருடைய குடும்ப விவகாரங்களை நொடி நேரத்தில் யூகித்து விடவே, மிகவும் வியப்புற்ற மைக் சூர்யாவின் உதவியை வரவேற்றார். கம்ப்யூட்டர் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களை மைக் உற்சாகத்துடன் விவரித்தார். ஆனால், இந்த பாதுகாப்புத் தொழில் நுட்பங்களால் நடக்கும் மோசடியைக் காட்ட முடிகிறதே தவிர, அதை யார் செய்தது என்பதைக் காட்ட முடியவில்லை என்று வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார்.

போலி ட்ரேன்ஸேக்ஷன்கள் நடக்கும் போது எப்படி எச்சரிக்கை எழுப்பப்படுகிறது என்பதையும், மேலும் யார் செய்தது என்பதைக் கண்டுபிடிக்க என்ன முயற்சிகள் செய்யப்பட்டன என்பதையும் பற்றி விவரங்கள் கூறுமாறு சூர்யா கேட்டுக் கொண்டதும், மைக் அவற்றைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

"சூர்யா, அந்த போலி ட்ரேன்ஸேக்ஷன்கள் நடக்கறச்சேயே பிடிச்சுட்டா குற்றவாளிகளையும் கண்டுபுடிச்சுடலாம்னு எனக்கு ஒரு ஐடியா இருந்தது. அதுனால அதை எப்படி செய்யறதுன்னு எங்க ஸா·ப்ட்வேர் குழுகிட்ட கேட்டேன். அவங்கதான் செஞ்சாங்க. எனக்கு ஓரளவுக்குத்தான் தெரியும். முழுசா விவரம் வேணும்னா அவங்களைத்தான் கேக்கணும்" என்றார்.

கிரண் புகுந்து, "கண்ணன், சுரேஷ்!" என்று கத்தினான்!

மைக் வியப்புடன்,"ஆமாம். உனக்கெப்படித் தெரியும்?" என்றார்.

கிரண், "இதுல என்ன ஆச்சரியம்? இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் எப்பவும் அவங்க தலைதானே முதல்ல உருளும்?" என்றான்.

ரிக் தலையாட்டி ஆமோதித்தார். "அவங்களுக்குத் தான் அந்த ஆழமான விவரமெல்லாம் தெரியும். செய்யவும் முடியும். ரொம்ப நாளா அவங்க தான் அந்த குழுவுக்கே உயிர் நாடி!"

சூர்யா, "அப்ப அவங்களை இங்க உடனே கூப்பிடுங்க, விவரம் தெரிஞ்சுக்கணும்" என்றார்.

தன் ஸெல் ·போனில் எதோ முணுமுணுத்துக் கொண்டிருந்த கிரண், "டன் பாஸ்! நீங்க எள்ளுன்னு நினைக்கறத்துக்கு முன்னாடியே நான் எண்ணை புழிஞ்சாச்சு! அவங்களைக் கூப்பிட்டாச்சு, வந்து கிட்டிருக்காங்க!" என்றான்.

மைக், ரிக், இருவரும் ஒரே சமயத்தில் கிரண் முதுகில் ஜோராக ஒரு ஷொட்டு விட்டு! "வெல்டன் கிரண்!" என்று கோஷ்டிகானம் பாடினர். கிரண் நெளிந்து கொண்டு முதுகைத் தடவி விட்டுக் கொண்டான். "நல்ல வேலை செஞ்சாக்கா இப்படியா போட்டு சாத்தறது? இனிமே கொஞ்ச தூரம் தள்ளி நின்னுக்கிட்டுத்தான் செய்யணும் போலிருக்கு" என்றான்.

அதற்குள் கண்ணனும் சுரேஷ¤ம் விரைந்தோடி வந்தனர். அதைப் பார்க்க குள்ளமான லாரலும் உயரமான ஹார்டியும் ஒரு பழைய கருப்பு வெள்ளைத் திரைப் படத்தில் அவர்களைத் துரத்தும் வில்லனிடமிருந்து ஓடியது போல் இருந்தது.

கிரண் அவர்களைப் பார்த்து தமிழிலேயே, "இன்னாம்மா கண்ணுங்களா, ரெடியா? நீங்க இப்ப வூடு கட்டி அல்வா குடுக்கணும் என்னா?" என்றான். மைக்கும் ரிக்கும் தவிர சூர்யாவுமே ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

கண்ணனும், சுரேஷ¤ம் குலுங்கிக் குலுங்கி சிரித்தனர். சுரேஷ் மற்ற மூவரையும் பார்த்து, "கவலைப்படாதீங்க, ஒண்ணும் ரகசிய பாஷை இல்லை. தமிழ் சினிமா பாத்துட்டு சம்பந்தமே இல்லாம ஏதோ வார்த்தைகளை அள்ளி விடறான் அவ்வளவுதான். ரொம்ப அவசரம்னு சொன்னானே, என்ன விஷயம் சொல்லுங்க" என்றான்.

மைக் விளக்கினார். "இந்தப் போலி ட்ரேன்ஸேக் ஷன் நடக்கறப்ப புடிச்சு இந்தப் பாதுகாப்புத் திரையில வர மாதிரி செஞ்சோமில்லயா, அது எப்படி செஞ்சோம்னு சூர்யா தெரிஞ்சுக்க விரும்பறாரு. எனக்கு அது ஓரளவுக்குத்தான் தெரியும். அது எப்படின்னு விவரமா சொல்லணும். அவ்வளவுதான்."

கண்ணனுக்கும் சுரேஷ¤க்கும் முகத்தில் பெருமிதம் பரவியது. ஒரு சிறந்த ஓவியத்தையோ, சிலையையோ வடித்த கலைஞர்கள் உணரும் பெருமை அது. மென்பொருள் வல்லுனர்கள் (software experts) தாங்கள் கடினமான ப்ரோக்ராம் ஒன்றை மிகச் சிறப்பான, அதே சமயத்தில் நளினமான முறையில் செய்தால் பெரும் உள்திருப்தியால் விளையும் பெருமிதம் அது. மோனாலிஸா வரைந்து முடித்தவுடன் லியனார்டோ கூட அப்படிப்பட்ட திருப்தியை அடைந்திருப்பாரோ என்னவோ!

இருவரும் பிங் பாங் ஆடுவது போல் மாறி மாறி ஒவ்வொரு வாக்கியமாக விவரித்தனர்.

"முதல்ல என்னென்னவோ சிக்கல் சிக்கலா தோணிச்சு"

"ஆனா அப்புறம் யோசிச்சதுல ரொம்ப சுலபமா முடிஞ்சு போச்சு!"

''இந்த போலி ட்ரேன்ஸேக்ஷன் நடக்கறச்சே அதை அந்த புது அக்கவுன்ட்டுக்கு கமிஷன் சேக்கறத்துக்கு ரெகார்டு உருவாக்கணும் இல்லியா?"

"அந்த இடம் ஒரு தனி ·பங்க்ஷன்ல இருக்கு"

"அங்க ப்ரோக்கர் ஐ.டி. காலியான்னு பரிசோதிச்சு கமிஷன் ரெகார்டு பண்றா மாதிரி மாத்தியிருக்காங்க அந்த மோசடிகாரங்க."

"அங்க மாத்தி பாட்டிருக்கற கோட் பக்கத்திலயே நாங்களும் புதுசா எங்க எச்சரிக்கையையும் போட்டுட்டோம்!"

"அங்கேந்து இந்த பாதுகாப்புத் திரைக்கு செய்தி வரத்துக்காக ஒரு லாக் ·பைலில மெஸேஜ் எழுதிட்டோம்."

"அவ்வளவுதான்! ரொம்ப எளிது ஆனாலும் நளினம்!"

ரிக் புகுந்து, "அவ்வளவுதானா? ரொம்ப சிம்பிளா முச்சிட்டீங்க போலிருக்கு?!" என்றார்.

கிரண் சிலாகித்தான். "அவ்வளவுதான் இல்லை ரிக், ஆஹா, பிரமாதம். ஒரு ப்ரோக்ராமர்னால தான் இதையெல்லாம் ரசிக்க முடியும். மத்தவங்களுக்கு சாதாரணமாத்தான் தோணும். அதை எங்க எப்படி சிம்பிளா செய்யணும்னு கண்டுபிடிக்கறதுதான் 95% வேலை. அப்புறம் ஒரு நொடியில செஞ்சுடலாம்" என்றான்.

சூர்யாவும் ஆமோதித்தார். "எனக்கும் அது பத்தி கொஞ்சம் தெரியும். ரொம்ப நல்லா செஞ் சிருக்கீங்க!" என்றார்.

கண்ணன், "நாங்க மட்டும் செய்யலை. எங்க பிரிவில இருக்கற ஒரு பிரமாதமான ஸீனியர் என்ஜினீயர் நடராஜ் இந்த வழியைக் கண்டுபிடிக்க உதவி செஞ்சார். இந்தப் பிரிவுல இருக்காரே ரிச்சர்ட் தாம்ஸன் அவர்தான் இந்தத் திரையில வர மாதிரி செஞ்சு குடுத்தார்" என்றான்.

மைக், "ஓ! ஆமாம், ஸாரி, எனக்கு மறந்தே போச்சு பாருங்க!" என்று ரிச்சர்டைக் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைத்தார். "இவர்தான் ரிச்சர்ட். எங்க குழுவுக்கே மையமானவர்னு சொல்லலாம். பிரமாதமான திறமைசாலி. நான் இங்க வந்து சேரறத்துக்கு முன்னாடி இந்தக் குழுவையே தன் தோள் மேல தாங்கி நடத்தினாருன்னா பாத்துக்கங்களேன்!"

ரிச்சர்ட் நெளிந்தான். "போதும் மைக், ரொம்பப் புகழாதீங்க. வெக்கத்துல என் முகம் தக்காளி மாதிரி சிவந்துடும் போலிருக்கு" என்றான்.

கிரண், "அதுனால என்ன பரவாயில்லை. இன்னும் அழகா இருப்பே, பொண்ணுங்க வந்து உன்னை மொச்சுப்பாங்க!" என்று சீண்டினான்!

ரிச்சர்ட், "ஏய் கிரண்! சும்மா இருக்கிறயா என்ன! உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்!" என்று போலியாக மிரட்டினான்.

சூர்யா மீண்டும் விஷயத்துக்கு வந்தார். "நல்ல வேலைதான் செஞ்சிருக்கீங்க. வெரி குட். ஆனா, இந்த எச்சரிக்கைகள் எப்ப மோசடி நடக்குதுன்னு காட்டுதே ஒழிய, யார் செஞ்சாங்கன்னு காட்டறதில்லை போலிருக்கே? அதுக்கு எதாவது வழி பார்க்க முடியுமா?" என்றார்.

மைக்கும், ரிச்சர்டும் சோகமாகத் தலையசைத்தனர்.

ரிச்சர்ட் "ஸாரி, நாங்க எவ்வளவோ முயற்சி செஞ் சுட்டோம். ஒண்ணும் செய்ய முடியலை. எல்லாமே ஆடோமேடிக்கா நடக்கற மாதிரி செஞ்சிருக்காங்க. கம்ப்யூட்டர்ல ஒரு ரேன்டம் நம்பர் வரவழைச்சு, அதுல ஒரு நம்பர் வந்தா மட்டும் ஒரு போலி ட்ரேன்ஸேக்ஷன் நடக்கறா மாதிரி செஞ்சிருக்காங்க. அதுனால, யாரும் அது நடக்கறப்ப சம்பந்தப்படலை. ஸோர்ஸ் கோட் மாத்தினது யார்னு தெரிஞ்சாத்தான் இனிமே குற்றவாளிங்க யாருன்னு பிடிக்க முடியும். இந்த மாதிரி எச்சரிக்கைகளை வச்சுக் கண்டுபுடிக்க முடியாது" என்றான்.

கிரண், "இந்த மோசடி ஆளுங்க ப்ரில்லியன்ட் டாத்தான் செஞ்சிருக்காங்க. மோசடி செய்யறது கம்ப்யூட்டரேதான். மனுஷங்க இல்லை. வாங்க அந்த கம்ப்யூட்டரைப் புடிச்சு ஜெயில்ல தள்ளிடலாம். கேஸ் க்ளோஸ்ட்!" என்றான். ரிக்கின் முகம் போன போக்கைப் பார்த்து விட்டு வாயை மூடிக் கொண்டான்.

சூர்யா தொடர்ந்தார். "சரி, அப்ப குற்றவாளிங்களைக் கண்டுபிடிக்க என்ன முயற்சி செஞ்சீங்க?"

யார் மாற்றியது என்று பார்க்க எடுத்த முயற்சியை மைக் விளக்கிவிட்டு, "ஸோர்ஸ் கோட் ஸிஸ்டங் களிலேயே, யார் மாத்தினது, என்ன மாத்தியிருக்காங்கன்னு தெரியாம மாத்தினதுனால எங்க முயற்சிகளுக்கு ஒரு பலனுமில்லை" என்றார்.

சூர்யா தலையாட்டிக் கொண்டு ஆமோதித்தார். "ஆமாம். கிரண் கூட முதல்லயே அதைப் பத்தி சொல்லிட்டான். வேற எதாவது செஞ்சிருக்க முடியுமோன்னு பாத்தேன். அவ்வளவுதான், வேற எதுவும் வழியில்லைன்னு தெளிவுபடுத்திட்டீங்க. அப்ப நிச்சயமா இது வரைக்கும் நடந்திருக்கறதை வச்சு அவங்களைப் புடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன், சரியா மைக்?"

மைக் இன்னும் சோகத்துடன், "ஆமாம், எனக்கு அதான் ரொம்ப விரக்தியாயிருக்கு. இனிமே நீங்க எதாவது செஞ்சாத்தான் முடியும் போலிருக்கு!" என்றார்.
சூர்யா ஒரு நிமிடம் யோசித்தார். அவர் முகத்தில் ஒரு ஒளி பிறந்தது. அவர் எதையோ கண்டுபிடித்து விட்டார், அல்லது கண்டு பிடிக்க ஒரு யுக்தி பிறந்து விட்டது, என்று கிரண் புரிந்து கொண்டான். ஆனால் எல்லார் முன்னாலும் உடனே கேட்பதற்கு அவன் ஒன்றும் முட்டாளல்ல. அவரே சொல்லட்டும் என்று விட்டு விட்டான்.

ஆனால் சூர்யா ஒன்றும் விவரிக்கவில்லை. அவரது முகம் உடனேயே மீண்டும் பழையபடி உணர்ச்சி யற்றதாக மாறிவிட்டது. "அப்படியானால், இந்தப் பிரிவில் இன்னும் இதைப் பத்திக் குடாய்ஞ்சு பாக்கறதுல பயனில்லை. ஸா·ப்ட்வேர் பிரிவுக்கே போய் பாக்கலாம் வாங்க." என்றார்.

பிறகு திடீரென்று எதோ தோன்றவே, ரிக்கிடம் திரும்பி, "ரிக், இதெல்லாம் சரி, ஆனா இந்தப் பணம் சேரற அக்கவுன்ட்டிலேந்து எப்படி அது வெளியில அனுப்பப்படுது? அது ஒரு வெளிநாட்டு பேங்குக்கு போகுதுன்னு சொன்னீங்களே? அது எப்படி நடக்குது?" என்றார்.

ரிக் விளக்கினார். "அது இன்டர்நேஷனல் ஒயர் ட்ரேன்ஸ்·பர். எங்க மாதிரி நிதி நிறுவனங்க எல்லாம் SWIFT அப்படிங்கற ஒரு மின்வலைல சேர்ந்திருக்கோம். எங்க நிறுவனத்திலேருந்து இன்னொரு நிறுவனத்துக்குப் பணம் காகிதமா இல்லாம, எலக்ட்ரானிக்கா அனுப்பணும்னா இந்த வலைக்கு ஒரு மின்செய்தி அனுப்பணும். அதுல எந்த நிறுவனத்துக்குப் போய் சேரணும், அந்த நிறுவனத்துல எந்த அக்கவுன்ட்டுல பணத்தைச் சேக்கணும்னு குறிப்பிட்டு அனுப்பிடுவோம். அந்த வலை சேர வேண்டிய நிறுவனத்துக்குச் செய்தியை அனுப்பிடுவாங்க. அவங்க அக்கவுன்டுல க்ரெடிட் செஞ்சிடுவாங்க."

சூர்யாவின் முகத்தில் கேள்விக் குறி படர்ந்தது. "அப்படீன்னா, எந்த அக்கவுன்ட்டுக்கு போகுதுன்னு பாத்து அந்த அக்கவுன்ட் யாருதுன்னு பாத்து கண்டு புடிச்சுட முடியாதா?"

ரிக் மீண்டும் சோகமாகத் தலையாட்டினார். "அது அவ்வளவு சுலபமாயிருந்தா உடனே முடிச்சுட்டிருப் போமே? ஆனா அது சுவிட்ஸர்லாந்துல இருக்கற ஒரு நம்பர் அக்கவுன்ட். அந்த பேங்க்கிட்ட கேட்டுப் பாத்துட்டோம். அவங்க இது வரைக்கும் அந்த அக்கவுன்ட் யாருதுன்னு சொல்ல மறுத்துட்டாங்க. அவங்க நாட்டு விதிப்படி அந்த விஷயங்களை அவ்வளவு எளிதுல சொல்ல மாட்டாங்க. இந்த மாதிரி நம்பர் அக்கவுன்ட்டுங்க அவங்களுடைய பிஸினஸ்ல பெரும்பகுதி. சாதாரணமா இந்த விஷயங்களை அவங்க வெளிவிட்டுட்டாங்கன்னா, தங்க முட்டையிடற வாத்தைக் கொன்னா மாதிரியாயிடுமே?! நம்ம அரசாங்கம் யாரையாவது குற்றம் சாட்டினப்புறம் அந்த சாட்சியங்களைக் காட்டினா, அப்புறம் குற்றத்தை நிரூபிக்கத் தேவையானா மட்டுந்தான் யாருடைய அக்கவுன்ட்டுன்னு விவரம் குடுப்பாங்க. அப்படியே குடுத்தாலும் அது வெளி நாட்டுல இருக்கற வேற எந்தக் கூட்டாளியோட பேராக் கூட இருக்கலாம். அதுனால அதுல பலனில்லாமக் கூட ஆயிடலாம்"

சூர்யா மீண்டும் ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு, "அந்த மாதிரி ஒயர்ல பணம் அனுப்பறது உங்க நிறுவனத்துல யாராவது செய்யணுமா இல்ல தானே கம்ப்யூட்டரால அனுப்பப்படுதா?" என்று கேட்டார்.

ரிக், "மற்ற நிதி நிறுவனங்களில சாதாரணமா யாராவது கைப்படத்தான் செய்யணும். எங்க நிறுவனத்துல, மொத்தமா ஆடோமேடிக்கா நடக்கறா மாதிரி செஞ்சிருக்கோம். அதுனாலதான் இந்த மோசடிக்காரங்களால பணத்த ஒயர்ல வெளியில அனுப்ப முடிஞ்சிருக்கு. இல்லன்னா இதை செஞ்சிருக்கவே முடியாது" என்றார்.

கிரண், "யானை தன் தலைல தானே மண்ணை வாரிப் போட்டுகிட்டா மாதிரி இருக்கே? நாம தானே ஒயர்ல அனுப்பறதை நிறுத்திடணுமோ?" என்றான்.

சூர்யா மறுத்தார். "கிரண், அப்படி சொல்லிட முடியாது. ஒரு கத்தின்னு எடுத்தா அதை பழம் வெட்டவும் பயன் படுத்தலாம், மத்தவங்களைக் குத்தி கொலை செய்யவும் பயன்படுத்தலாம். அதுக்காகக் கத்தியைப் பயன்படுத்தறதை நிறுத்திட முடியுமா? அதே மாதிரிதான் இதுவும். யாரோ தீய வழில பயன்படுத்த முடியுங்கறத்துக்காக, அந்த நல்ல பயனையும் தூக்கிப் போட்டுடக் கூடாது. எல்லா ஆடோமேஷனுக்கும் அப்படியே சொல்லலாமே? மின்வலைல க்ரெடிட் கார்ட் நம்பர் குடுக்கறத்துக்கும் இப்படித்தான் பயப்பட்டாங்க. இப்ப அதைப் பாதுகாக்க நிறைய வழி வந்திருக்கு இல்லையா. அப்படித்தான் இந்த மாதிரி விஷயத்துக்கும் புதுப் பாதுகாப்புகளைப் போட்டு, மோசடி நடக்காத மாதிரி செய்யணும். ஆனாலும் மோசடியே நடக்க முடியாதுன்னும் சொல்லிட முடியாது. எந்த இடத்துலயும் எவ்வளவோ பாதுகாப்பு இருந்தாலும் திருட்டு போகறதில்லயா? அப்படித்தான். ரொம்ப எளிதா நடக்க முடியாம செய்யலாம் அவ்வளவுதான்."

ரிக் சிலாகித்தார். "பிரமாதம் சூர்யா! நான் சொல்ல வந்ததையே நீங்க சொல்லிட்டீங்க. இந்த மோசடி நடந்ததுலேந்து என் நிறுவனத்தோட மேலதிகாரிங்க நிறைய பேர் கிரண் மாதிரிதான் கேட்டுக் கிட்டிருக்காங்க. நானும் நீங்க சொன்னா மாதிரி மறுத்துக்கிட்டிருக்கேன்."

சூர்யா "இந்த விஷயத்துலக் கூட பாருங்க, இன்னும் பாதுகாப்பு செய்ய முடியும் போலிருக்கு?" என்றார்.

மைக் வியப்புடன், "என்ன செய்யலாங்கறீங்க?" என்றார்.

சூர்யா, "பொதுவா உங்க வாடிக்கையாளர் எல்லாரும் பேர் வச்ச அக்கவுன்ட்டுக்குத்தானே பணம் அனுப்புவாங்க?" என்று கேட்டார்.

எதற்குக் கேட்கிறார் என்று விளங்காமல், "ஆமாம், அதுனால என்ன?" என்றார் ரிக்.

சூர்யா விளக்கினார். "அப்படின்னா, நம்பர் அக்கவுன்ட்டுக்கு மட்டும், தானே ஆடோமேடிக்கா வெளியில அனுப்பறா மாதிரி வைக்காம, யாராவது கைப்பட அனுப்பறா மாதிரி மாத்திட்டா இன்னும் பாதுகாப்பா இருக்கும் இல்லயா?!" என்றார்.

மைக் குதித்தார். "எக்ஸெலன்ட்! நான் கூட இதையேதான் ரிக் கிட்ட சொன்னேன். நிச்சயமா அப்படித்தான் செய்யப் போறோம். ரிச்சர்டும் ஒயர் பிரிவு கூட இதப் பத்திப் பேசிக்கிட்டிருக்கான். அவன் தான் எங்க ஒயர் பாதுகாப்பு எக்ஸ்பர்ட்." என்றார்.

சூர்யா சிறிது நேரம் யோசித்து விட்டு, "மைக், இந்த ப்ரோக்ராம்களை யார் மாத்தினதுன்னு தேடிப் பாத்துட்டு கண்டுபிடிக்க முடியலைன்னு சொன்னீங்களே? இந்த ஒயர் ட்ரேன்ஸ்·பரை யார் ஸெட்டப் பண்ணினாங்கன்னு தேடிப் பாத்தீங்களா?" என்றார்.

மைக், "ஓ அதை மட்டும் விட்டுடுவோமா? அதையும் அலசி ஆராய்ஞ்சுட்டோம். பலனில்லை. ரிச்சர்ட் அந்த விஷயமா என்ன செஞ்சோம்னு கொஞ்சம் விவரம் சொல்லு!" என்றார்.

ரிச்சர்ட், "நான் அந்த டிபார்ட்மென்ட்ல அதை செய்யறவங்களோட சேர்ந்து அதோட ஆடிட் லாக் எல்லாம் அலசிப் பாத்துட்டேன். அப்படி தினமும் ட்ரேன்ஸ்·பர் ஆகறா மாதிரி செய்யறத்துக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் அளவு உரிமை வேணும். சாதாரணமா ஒரு ட்ரேன்ஸ்·பர் ஸெட்டப் பண்றது ஒரு நிஜமான பேர்ல இருக்கும். இந்த ட்ரேன்ஸ்·பர் அப்படியில்லாம அட்மினிஸ்ட்ரேட்டர் பேரிலயே உருவாக்கப்பட்டிருக்கு. அதுனால இதை வச்சும் யார் செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்க முடியலை!"என்றான்.

சூர்யா ரிக்கிடம், "நான் அந்த ஆடிட் லாக் பாக்க முடியுமா?" என்று கேட்டார்.

ரிக், "அதுக்கென்ன, தாராளமா பாக்கலாமே, உடனே ஏற்பாடு செய்யறேன்" என்றார்.

சூர்யா சிறிது யோசித்து விட்டு, "இன்னும் ஒண்ணு இருக்கு! அதையும் பாக்கணும்" என்றார். ரிக் ஆவலுடன், "என்ன சொல்லுங்க, என்ன வேணும்னாலும் ஏற்பாடு செய்யச் சொல்றேன்." என்றார்.

சூர்யா, "இந்த போலி அக்கவுன்ட்டை உருவாக்கியிருக்காங்களே, அதுவும் அந்த ஸிஸ்டதோட ஆடிட் லாக்ல இருக்கும் இல்லையா? அதை செக் பண்ணீங்களா?" என்றார்.

மைக், "நிச்சயமா. அந்த ஆடிட் லாக்லயும் அதே மாதிரி அட்மினிஸ்ட்ரேட்டர் பேர்லதான் அந்த அக்கவுன்ட் உருவாக்கப்பட்ட ரெகார்டும் இருக்கு. அதுவும் யாரையும் காட்டிக் குடுக்கலை" என்றார்.

சூர்யா, "சரி, நாம அந்த ஆடிட் லாக் ·பைலையும் பாக்கலாம்" என்றார்.

கிரண், "சரிதான். எந்த வழில போய் பாத்தாலும் டெட்-என்டா இருக்கே! எல்லாம் யோசிச்சு கணக்காத்தான் செஞ்சிருக்காங்க" என்றான்.

சூர்யாவின் முகம் ஒரு கணம் மிளிர்ந்து பிறகு உறுதியுடன் இறுகியது. "இல்லை கிரண், இந்த மாதிரி செஞ்சதுலயே அவங்க தங்க கையைக் காட்டிட்டாங்க! எனக்கு இந்தச் சிக்கலைச் சீக்கிரமே அவிழ்க்க முடியும்னு தோணுது!" என்றார்.

ரிக், கிரண், மைக் மூவரும் வாயைப் பிளந்தனர்.

ரிக் மிகுந்த ஆவலுடன், "என்ன சொல்றீங்க சூர்யா? கேட்கவே ஆனந்தமா இருக்கு!

இன்னும் விளக்கமா சொல்லுங்க!" என்று பரபரத்தார்.

சூர்யாவின் பதிலும், அடுத்த படியான அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், பங்குகள் பட்ட பாட்டை நிவர்த்தித்தன!


(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline