|
|
|
தனிப்பட்ட தனது சூதாட்டப் பிரச்சனையால், குட்டன்பயோர்குக்கு பங்கம் விளைவிப்பதாக சூர்யா பழிசாற்றுவதாக உணர்ந்த ஜேகப் ரோஸன்பர்க், பொங்கிவந்த சினத்தோடு நம் துப்பறியும் மூவரை மட்டுமன்றி அகஸ்டாவையும்கூட வெளியேறுமாறு ஆணையிட்டு நாற்காலியில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு விடவே, அதிர்ச்சியிலிருந்து முற்றும் மீளாத கனத்த மனத்துடன் வெளியேறிய அகஸ்டா, சூர்யாவிடம் மன்னிப்பு வேண்டினாள்.
"சூர்யா, ஜேகபுக்கு இந்த மாதிரி ரெண்டு பிரச்சனைகள் மேல மேல இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. இருந்தாலும், அவர் குட்டன்பயோர்க் நுட்பத்துக்குப் பங்கம் விளைவிச்சிருப்பார்னு நம்பமுடியலை. அவருக்குத் தொழில்நுட்பமே தெரியாதே? எப்படி செஞ்சிருக்க முடியும். சரி அது போகட்டும். ஆனாலும் அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாதுதான். மன்னிச்சுக்குங்க!"
சூர்யா மறுத்துத் தலையசைத்தார். "சே சே, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இந்தமாதிரி விசாரிக்கறப்போ தங்கள் தனிப்பிரச்சனை வெளியில் வந்துட்டா இப்படிக் கொந்தளிக்கறதும் தாறுமாறா ஏசறதும் சர்வசகஜம். அதை நான் பொருட்படுத்தறதே இல்லை. உங்க பிரச்சனை தீரணும்னா, இந்தமாதிரி விஷயங்களை சந்திச்சு சகிச்சாதான் முடியும். சரி அடுத்தது யாரைச் சந்திக்கணும்?"
அகஸ்டா சுதாரிக்கொண்டு, "அடுத்தது நீல் ராபர்ட்ஸன். அவர் ஆராய்ச்சியறைதான் பக்கத்துலயே இருக்கு வாங்க" என்று அழைத்துச்சென்று அந்த அறைக்கதவைத் தட்டினாள். "கம் இன்" என்று குரல் கேட்டவுடன் திறந்து கொண்டு மூவருடன் நுழைந்தாள்.
நீல் ராபர்ட்ஸன் தொழில்நுட்ப விற்பன்னர் என்றாலும், அவரது ஆராய்ச்சி அறையில் அலெக்ஸ் மார்ட்டன் அறைபோன்று விஞ்ஞானக் கருவிகள் அடைத்து வைக்கப்படவில்லை. ஓரிரு மின்னடுப்புகள் (electric oven) மட்டுமே ஒரு மூலையில் இருந்தன. அவற்றின் பக்கத்தில் ஒரு மேஜையில் சில விஞ்ஞானக் கருவிகள் இருந்தன. மற்றபடி பெரும்பாலும் ஓர் அலுவலக அறையாகவே காட்சியளித்தது.
அதைப்பற்றி ஷாலினி விசாரிக்கவே, அகஸ்டா முறுவலித்தாள். "சரியான கேள்வி ஷாலினி. நீல் ஒரு ப்ளாஸ்டிக்ஸ் நிபுணர் அல்லவா? அதனால் அவருக்குப் பெரிய மின்னடுப்புகள் தேவை. அதனால் அவருடைய முதன்மை விஞ்ஞானக்கூடம் இன்னோர் இடத்தில் இருக்கு. இங்க இருக்கறது ரொம்பச்சிறிய அளவில் நுண்மையா பரிசோதிக்கத் தேவையான சிறிய சாதனங்கள்தான்."
அவர்கள் உள்ளே நுழைந்தபோது மூலையில் இருந்த ஒரு குழாயில் கைகழுவிக் கொண்டிருந்த நீல் கையைத் துடைத்துக்கொண்டு அவர்களருகே வந்தார். அகஸ்டா மூவரையும் அறிமுகம் செய்து வந்த நோக்கத்தையும் விளக்கினாள். நீல் ராபர்ட்ஸன் அடக்க நினைத்தாலும் அவநம்பிக்கை அவர் முகத்தில் மிளிர்ந்தது.
அதற்குள் சூர்யா அறை முழுவதையும் கூர்ந்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். அதைக் கண்ட அகஸ்டா, அவர் நீலின் வாழ்க்கை அல்லது குணாதிசயம் பற்றி என்ன அதிர்வேட்டு வீசப்போகிறாரோ என்று ஆவலுடன் கவனிக்கலானாள். சூர்யா ஏமாற்றவில்லை.
நீலுடன் கை குலுக்கிக்கொண்டே சூர்யா பாராட்டினார். "நீல், உங்களை மாதிரி ஒரு விஞ்ஞானி ஓவியம் வரைவதில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பதை நான் பார்த்ததில்லை. அதுவும் நாங்கள் அறைக்குள் நுழையும்வரை எதோ வரைந்து கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறது? இன்னும் முடிக்கவில்லையோ? முடித்தபின் சொல்லுங்கள், ஓவியத்தைப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறது!"
அளவில்லாத ஆச்சரியத்தால் நீல் ராபர்ட்ஸனின் முகம் அஷ்ட கோணலாகப் போனதைக் கண்டு அகஸ்டா கூவினாள். "என்ன ஓவியம் வரைகிறீர்களா? சொல்லவேயில்லையே நீல். சூர்யா படால்னு யூகிச்சிட்டாரே. அதுவும் இப்பதான் பாதி வரஞ்சுகிட்டிருந்தீங்கன்னு வேற சொல்றார், எப்படி சூர்யா?"
சற்றே சுதாரித்துக் கொண்ட நீல் ஆச்சரியத்துக்குப் பதிலாகச் சீறினார். "அகஸ்டா, சும்மா விளையாடாதீங்க! எதோ நம் நுட்பத்துக்குப் பங்கம் வந்திருக்குங்கறதுக்காக என் அறையில் வீடியோ கேமராக்களை வச்சு வேவு பாத்திருக்கீங்க. இல்லன்னா இந்த சூர்யா நிச்சயமா அவ்வளவு கனகச்சிதமா சொல்லியிருக்க முடியாது. இவர் அப்படிச் சொல்லி உடைச்சிருக்காட்டா அந்தக் கேமரா பத்தி எனக்கும் தெரிஞ்சிருக்காது. எங்க அந்தக் கேமரா?"
அகஸ்டாவுக்கோ சிரிப்பு அதிகமாயிற்று! ரொம்பக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, "நீல், நீல்! ஸ்டாப் இட். என்னப்பத்தி அவ்வளவு கேவலமா நெனச்சிட்டீங்களே? நிச்சயமா கேமரா எதுவும் இல்லை. சூர்யா இங்க எதையோ நொடிப்பொழுதுல கவனிச்சுட்டு யூகிச்சிருக்கணும். விளக்குங்க சூர்யா?" என்றாள்.
நீல் அவநம்பிக்கையுடன் சூர்யாவைப் பார்க்க, சூர்யா விளக்கினார். "முதலாவதா அந்த மூலையில் திருப்பிவச்சு மூடப்பட்டிருக்கற முக்காலி ஈஸல் பாருங்க. அதுல ஒவியம் வரையும் கேன்வாஸ் அதன் தற்காலிக ஃப்ரேமிலிருந்து நீட்டிக்கிட்டிருக்கு. மேலும் இந்தப் பக்கம் நீலின் குடும்பப் புகைப்படம் இருக்கு. அதையே அந்தப் பக்கம் ஒவியமா வரைஞ்சு மாட்டியிருக்கு. அதனடியில் ஸ்டைலாக மூலையில் ரொம்ப மென்மையா NR என்ற ஒவியரின் இனிஷியல் இருக்கு. அதே இனிஷியல்கள் அறையில் இருக்கும் இன்னும் சில ஓவியங்களிலும் இருக்கு. மற்ற ஓவியங்கள் எல்லாமே மிகப்பெரிய ஓவியர்களின் ப்ரிண்ட்கள்தான். அதனால் NR என்பது நீல் ராபர்ட்ஸனாகத்தான் இருக்கும் என்று கணித்தேன்."
நீல் முறுவலித்தார். "வாவ், இந்த யூகங்கள் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஓவியம் இப்பதான் வரைஞ்சுகிட்டிருந்தேன், இன்னும் முடிக்கலைங்கறதெல்லாம்?" |
|
சூர்யா புன்னகைத்தார். "அதுவும் யூகந்தான். தவறாக்கூடப் போயிருக்கலாம். முதலாவது நாங்க உள்ள வரப்போ கை கழுவிக்கிட்டிருந்தீங்க. மேலும் அந்த ஈஸல் பக்க குறுமேஜை மேல் வர்ணத்தட்டில் இன்னும் வர்ணங்கள் ஈரமா இருக்கு. கை குலுக்கும்போது உங்க மேல்சட்டை நுனியிலும் கொஞ்சம் ஈரமான வர்ணம் சிந்தியிருக்கறதைக் கவனிச்சேன். தூரிகைகளும் இன்னும் சுத்தமாக்கும் திரவத்தில் அமிழ்த்தப்பட்டிருக்கு, எடுத்து வைக்கலை. அதுனால நாங்க வெளியேறியதும் தொடரும் எண்ணத்தில இருக்கீங்கன்னு யூகிச்சேன்."
நீல் தலையைப் பின்சாய்த்து "ஹா, ஹா, ஹா!" என அட்டகாசமாகச் சிரித்துவிட்டு, "பிரமாதம் சூர்யா, பிரமாதம். ஸாரி அகஸ்டா, அவசரப்பட்டு கேமரா அது, இதுன்னு என்னவோ சொல்லிட்டேன். முதல்ல இந்தமாதிரி யாரோ எப்படி நம்ப பிரச்சனை காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும்னு நினைச்சேன். ஆனா இவர் நிச்சயமா உதவுவார்னு இப்ப நம்பறேன்."
ஷாலினி அவரைப் பாராட்டினாள். "நீல் வேறு துறை நிபுணத்துவத்தை இந்தமாதிரி உயிரியல் துறைக்கு நுணுக்கமா பயன்படுத்தி நாளமிடல் மாதிரி பெருந்தடங்கல்களைத் தாண்ட உதவியிருக்கீங்க. அதுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்!"
நீல் பவ்யமாகக் குனிந்து ஏற்றுக்கொண்டார். "ரொம்ப தேங்க்ஸ் ஷாலினி. ஆனா அவ்வளவு பாராட்டு அவசியமேயில்லை. இது ஒரு குழுமுயற்சிதான். சரி, சொல்லுங்க சூர்யா உங்க விசாரணைக்கு நான் எந்தவிதத்துல உதவமுடியும்?"
அவர் பேசி முடித்து ஒரு நொடிகூட ஆகியிருக்காது. சூர்யா மீண்டும் யூகவேட்டு இடி ஒன்றை இறக்கி நீல் ராபர்ட்ஸனைத் தள்ளாட வைத்தார்! "உங்க நம்பிக்கைக்கு மிக்க நன்றி நீல். எங்களுக்கு உங்க உதவி நிச்சயம் தேவைதான். ஆனா, உங்க நிதி நிலைமைக்கு கிரண் ஏதாவது உதவ முடியுமான்னு நான் அவனைக் கேக்கணும். என்ன கிரண்? க்ரூடு எண்ணை விலை ரொம்ப சரிஞ்சு போயிருக்கில்லே? நீல் பாவம் ரொம்ப அதுல மாட்டிகிட்டு நஷ்டமடைஞ்சிருக்கார் போலிருக்கு. அவர் எப்படி சமாளிப்பார் – நீ எப்படியாவது ஹெல்ப் பண்ண முடியுமா?"
அதைக்கேட்டு நீல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். வாயைத் திறந்து, மூடி பேசமுடியாமல் திணறினார். "ஆ... என்ன... எப்படி...?" பொங்கிவந்த கோபம் எல்லை மீறவே, எரிமலைபோல் வெடித்தார். "அகஸ்டா, நீங்க பொய் சொல்லியிருக்கீங்க! முதல்ல சொன்னது வேணா யூகமா இருக்கலாம். இது நிச்சயமா அப்படியிருக்கவே முடியாது. இந்த கிரண் தன் நிதித்துறைத் தொடர்புகள் மூலம் என் அக்கவுண்ட்டுகளைக் குடைஞ்சிருக்கணும். அதுக்கு நீங்கதான் உடந்தை. என் சோஷல் செக்யூரிட்டி நம்பர் எல்லாம் குடுத்து தூண்டிவிட்டிருக்கீங்க. சே! திஸ் இஸ் ஜஸ்ட் டூ மச்! அது என் தனி வாழ்க்கைப் பிரச்சனை. அதை இப்ப எடுப்பானேன்? நான் என் வேலையை உடனே ராஜினாமா செய்யறேன். உங்க குட்டன்பயோர்க் பிரச்சனையாச்சு நீங்களாச்சு, நான் பட்டது போதும். மேலும் உங்க எல்லார் மேலயும் ஒரு கேஸ் போடறேன். எனக்கு ஒரு லாயர் நண்பன் இருக்கான், பிச்சிடுவான்!"
கிரண் அவசரமாகச் சீறி மறுதலித்தான். "ஹேய், டூட்! ஸ்லோ டவுன். எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை ஓகே? நீல்னு ஒரு ஆசாமி இருக்கார்னு இப்ப கொஞ்சநேரம் முன்னாலதான் எனக்கு தெரியும். மேலும், ப்ரைவஸி சட்டதிட்டங்கள் இருக்கறதுனால நான் என்ன செஞ்சாலும் உங்க நிதி ரெகார்ட்ஸ் எனக்கு கிடைக்காது. ஆனா கேஸ் கீஸ்னு ஆரம்பிச்சீங்க, அப்புறம் கிழிஞ்சிடும் ஜாக்கிரதை. எனக்கும் லாயர் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க அக்காங்!"
அகஸ்டா இரு கைகளையும் தூக்கிச் சமாதானக் கொடிகாட்டிக் கெஞ்சினாள். "நிச்சயமா அது உண்மை நீல். உங்களைப்பத்தி இப்ப சில நிமிஷங்கள் முன்னால்தான் சூர்யாவுக்கும் கிரணுக்கும் தெரியும். இதுவும் யூகமாத்தான் இருக்கணும். ப்ளீஸ் சூர்யா உடனே விளக்கிடுங்க. இந்த நிதி நஷ்ட விவரம் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?"
சூர்யா தலையாட்டி ஆமோதித்தார். "கரெக்ட், நீங்க சொன்னபடி யூகந்தான் அகஸ்டா. நீல் ஒரு சின்ன விஷயத்துல சறுக்கிட்டார் அவ்வளவுதான். அந்த ஓவியத்துல எதோ செய்யணும்னு போகும் ஆர்வத்துல, உங்க மடிக்கணினி திரையை மூடாம போயிட்டிருக்கீங்க. அதுல உங்க புரோக்கரேஜ் அக்கவுண்ட் விவரம் இணையத் தளத்தில் திறந்திருக்கு. அதுவும் நஷ்டக் கணக்கு சிகப்பா தெரியுது. நஷ்டமடைஞ்ச பங்குகளும் கூட்டுநிதிகளும் (mutual funds) எல்லாமே எண்ணெய் அல்லது சக்தி சம்பந்தப் பட்டவைதான்."
நீல் சற்றே சாந்தமடைந்தாலும், கோபத்துடன் உறுமினார். "சரி அது என் தப்புதான். விடறேன். ஆனாலும் அதுக்கும் குட்டன்பயோர்க் பிரச்சனைக்கும் முடிச்சுப் போட்டிருக்க வேண்டியதில்லை. என் நிதிப் பிரச்சனையால நான் எதாவது பங்கம் விளைவிச்சேன் அது இதுன்னு ஆரம்பிச்சீங்க, அப்புறம் நான் மனுஷனாயிருக்க மாட்டேன், அடிச்சு நொறுக்கிடுவேன். கெட் அவுட்! இல்லன்னா நான் எதாவது ஏடாகூடமா செஞ்சிடுவேன் ஆமாம்!" என்று சூர்யாவை நோக்கி முஷ்டியைக் காட்டினார்.
அகஸ்டா அவசரமா இடையில் புகுந்து "ஸ்டாப் இட் நீல்! நான் சூர்யாவுக்கு நீங்க அந்தமாதிரி எதுவும் செஞ்சிருக்க முடியாதுன்னு உத்தரவாதம் தரேன்." ஆனால் நீல் சினம் தணியாமல் "ஹூம்..." என்று உறுமியபடி கதவுக்குக் கைகாட்டவே அனைவரும் அவர் அறையிலிருந்து வெளியேறினர்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|