|
|
|
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தை எல்லா வகையிலும் ஆக்கபூர்வமாக பாதித்தவர் சுப்பிரமணிய பாரதியார். 'விடுதலை அரசியல்', 'சமூக நீதி' போன்றவற்றின் சாளரங்களைத் திறந்து விட்டு புதிய சிந்தனைக்கும் செயலாக்கத் துக்கும் புதுப்பாதை அமைத்தவர் பாரதியார். இதனால் பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் அனைவருக்கும் ஆதர்சமாக இருந்தார். பாரதியார் தடம் பற்றி நடந்த ஒரு பாரதி பரம்பரை தோன்றியது. இத்தகு பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து தமக்கான ஆளுமைகளுடனும் தனித்தன்மைகளுடனும் சாதனை படைத் தனர். 1921ல் பாரதியார் மறைந்தார். இதன்பின் தேசியத்தில் பேரெழுச்சி அலை வீசியது. இக்காலத்தில் இளந்தலைமுறை யினர் அதன் வீச்சில் ஈர்க்கப்பட்டனர். அவ்வாறு ஈர்க்கப்பட்ட இளம் படைப்பாளி களில் ஒருவர்தான் ம.ப. பெரியசாமித்தூரன். இவர் கவிதை, சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இசைப்பாடல், அறிவியல், பாரதி இலக்கியம், பதிப்பு முயற்சி, கலைக்களஞ்சியப் பணி எனப் பன்முகக் களங்களில் ஈடுபட்டு தமிழுக்கு வளம் சேர்த்தவர்.
பெரியார் மாவட்டம் மொடக்குறிச்சி சார்ந்த மஞ்சக்காட்டுவலசு என்ற காவிரிக்கரைச் சிற்றூரில் 1908 செப்டம்பர் 26ஆம் நாளில் தூரன் பிறந்தார். குடும்பத் தொழில் வேளாண்மை. சின்னஞ்சிறு வயதிலேயே தாயாரை இழந்தார்.
தூரனுக்குப் பெரியசாமி என்பது பெற்றோர் கள் வைத்த பெயர். கல்லூரி மாணவராக இருந்தபோது வெள்ளை அரசாங்கத்துக்கு தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகத் தூரன் என்ற புனைபெயரை வைத்துக் கொண்டார். தூரன் என்பது இவருடைய குலக்குறிப் பெயராகும். தூரனும் அவரது தங்கையும் குழந்தைப் பருவத்தில் தாயாரை இழந்தமையால் தாய்வழிப் பாட்டியிடம் செம்மாண்டம்பாளையம் என்ற கிராமத்தில் சிலகாலம் வாழ்ந்தனர். பாட்டி இதிகாசக் கதைகளையும் தஞ்சாவூர்க் கள்ளன், மதுரைக் கள்ளன் முதலிய வேடிக்கைக் கதைகளையும் சொல்வார். பாட்டியின் கதை சொல்லல் பாங்கு அதன் நுட்பம் தூரனின் படைப்புத் திறனை வளர்க்க உதவியது பிற்காலத்தில் குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதற்கும் பாட்டியின் இந்தக் கதைகள் தூண்டுதலாய் அமைந்தன.
சிறுவயதிலேயே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, அறப்பளீசுரர் சதகம் ஆகிய நூல்களை மனப்பாடம் செய்தார். மேலும் வில்லிபாரதம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஆகிய நூல்களிலும் ஈடுபட்டார். இவை தூரனின் மொழி, இலக்கியப் புலமையை செழுமைப்படுத்தின.
1926-27ம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் (இன்டர்மீடியட்) வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங் களை முதன்மையாக எடுத்துப் பயின்றார். 1929ம் ஆண்டில் பி.ஏ. (கணிதம்) பட்ட வகுப்பில் சேர்ந்தார். 1926 முதல் 1931 வரை மாநிலக் கல்லூரியில் பயின்ற காலம் தூரனை ஒரு தேசபக்தராகவும் பத்திரிக்கை ஆசிரியராகவும் இலக்கியப் படைப்பாளியாகவும் உருவாக்கிய மாற்றத்தின் காலம் எனலாம்.
1929ல் தூரனும் நண்பர்களும் தங்கள் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஆழமாகக் கலந்துரை யாடவும் 'வனமலர்ச் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார்கள். எழுத்தாற்றலும் படைப் புத்திறனும் உடையவர்களின் தாகத்தைத் தணிக்கும் வண்ணம் சங்கத்தின் சார்பில் 'பித்தன்' என்னும் இதழையும் தொடங்கினார். முதலில் உருளச்சு செய்யப்பட்ட இவ்விதழ் தேவை காரணமாக அச்சிலும் வெளிவந்தது. திரு.வி.க. அவர்களின் அச்சுக்கூடத்தில் 'பித்தன்' அச்சிடப்பெற்றது. இவ்விதழின் ஆசிரியர் தூரன். இவரது எழுத்துக்குப் பயிற்சிக்கூடமாக அமைந்தது பித்தன்.
இந்தக் காலத்தில் தூரன் திரு.வி.க.வை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அப்போது மகாகவி பாரதியாரின் எழுத்துக்கள் பல சுதேசமித்திரன் இதழில் சிதறிக் கிடப்பதை யும் அவற்றைத் திரட்டி எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் திரு.வி.க. இவரிடம் வலியுறுத்திச் சொன்னார். ஏற்கெனவே பாரதியார் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த தூரன் சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பல நாட்கள் அரிதின் முயன்று பாரதி எழுத்துகளைத் தொகுத்தார். மாணவப் பருவத்தில் நிகழ்ந்த ஒப்பற்ற பணி என இதனைக் குறிப்பிடலாம். பிற்காலத்தில் பாரதித் தமிழுக்கு அரும்பெரும் பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் இதனால் பெருகியது. வாழ்நாளெல்லாம் பாரதியோடு இரண்டறக் கலந்து போனார் தூரன். பாரதியும் பாட்டும் (1979), பாரதியும் பாப்பாவும் (1979), பாரதியும் பாரததேசமும் (1979), பாரதியும் பெண்மை யும் (1979), பாரதியும் தமிழகமும் (1979) பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும் (1980), பாரதியும் உலகமும் (1981), பாரதியும் கடவுளும் (1981), பாரதியும் சமூகமும் (1982), பாரதி நூல்கள் ஒரு திறனாய்வு (1982) என்பன தூரனால் வெளியிடப்பட்ட நூல்கள் ஆகும்.
பாரதியாரின் பல்வேறு கோணங்களை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளில் இறுதிவரை ஈடுபட்டார். பாரதியியல் ஆய்வுப் பரப்பில் தூரனின் வருகை குறிப்பிடத்தக்கது. கம்பனுக்கு விருத்தம்போல் பாரதிக்குச் சிந்து என்று தெளிவாக இனங்கண்டு சொல்கிறார். அதுபோல் பாஞ்சாலி சபதத்தை அமரகாவியம் என்று தூரன் பாராட்டி மகிழ்கிறார்.
1931ல் பட்டவகுப்புத் தேர்வு எழுதாமல் விட்டுவிட்ட நிலையில் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து கலை, இலக்கியம், தமிழ்ப்பணி என இவரது பணிகள் விரிவு கண்டன. சிறுவயது முதல் கவிதையோடு ஈர்ப்புக் கொண்டவராக இருந்தார். கால, கலை அனுபவம் முதிர முதிரச் செறிவும் செழுமையும் மிக்க கவிதைப் படைப்புகள் உருக்கொண்டன. தூரனின் முதல் கவிதைத் தொகுப்பான 'இளந்தமிழா' 1949ல் வெளிவந்தது. 'மின்னல் பூ' (1957), நிலாப்பிஞ்சு (1959), பட்டிப் பறவைகள் (1956), தூரன் கவிதைகள் (1962) போன்ற நூல்கள் வெளிவந்தன. தூரன் கவிதைகளில் இயற்கை, குழந்தைப்பருவம், தேசியம், காதல், சமுதாய உணர்வு எனப் பல்வகைப் பாடுபொருள்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தூரன் கிராமியச் சூழலில் வளர்ந்த காரணத்தாலும் காவிரியாற்றங்கரையில் இளமைப் பருவத்தைக் கழித்த காரணத்தாலும் இவருடைய உள்ளத்தில் இயற்கை அழகும் பொழிலும் தனியிடம் பெற்றன. நகரவாழ்க்கையின் சந்தடியும் ஆரவாரமும் மறந்து கிராமத்துக்குப் போகிற போதெல்லாம் காவிரியிடம் அடைக்கலம் புகுவது தூரனுக்கு வழக்கமாக இருந்தது.
இயற்கை சார்ந்த லயிப்பு கவிதையின் உயிர்ப்புத் தளமாக அமைவு கொண் டுள்ளது. இதனால் அன்பு இயற்கையின் உயர்ந்த தத்துவமாக இயங்குவதைச் சுட்டிக்காட்டு கின்றார். இயற்கையின் பல்வேறு பரிமாணங் களுக்கு ஏற்ப தூரனின் உளப்பாங்கு நெகிழ்ச்சி பெற்று வளர்ந்து செல்வதை அன்பின் உறைவிடமாக மனிதாயம் முகிழ்த்து வருவதை இவரது கவிதையின் அடிநாதமாகக் காணலாம். மணிக்கொடி காலத்துக்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைக்கு வளம் சேர்த்தவர்களுள் தூரனும் ஒருவர். இவரது சிறுதைகள் ஐந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பிள்ளை வரம் (1945), உரிமைப் பெண் (1952), காளியங்கராயன் கொடை (1956), தங்கச் சங்கிலி (1956), மாவிளக்கு (1958) போன்ற தொகுதிகளைத் தந்துள்ளார். இவர் ஆங்கிலச் சிறுகதை மரபின் வளத்தை உள்வாங்கியவர். இதனால் தனது எழுத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் இயங்கும் தன்மை கொண்டவ ராக விளங்கினார். கதை மட்டும் சிறுகதை யாகாது என்ற புரிதல் கொண்டிருந்தார். 'உள்ளத்தில் எத்தனையோ கிளர்ச்சிகள் குமுறுகின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலே ஒரு குறிப்பிட்ட மின்னல் போன்ற பகுதியை விளக்கினால் அதுவும் சிறுகதைதான்' என்பார் தூரன்.
தூரனின் சிறுகதைகளில் கொங்கு நாட்டுக் கிராமியச் சூழல் மிக நுட்பமாக வெளிப் பட்டுள்ளது. குறிப்பாக இவர்களின் வாழ் வியல் கோலங்கள் உளவியல் பாங்குகள் யாவற்றையும் எடுத்துரைக்கும் 'வட்டாரப் பாங்கு' தனித்து வெளிப்படுகின்றது. எதார்த்தவாதக் கதை சொல்லல் முறைமையில் சில புதிய நுட்பங்களைக் கையாண்டார். உளவியல் முரண் வெகு இயல்பாக பாத்திரங்களினூடாக வெளிப்பட்டுள்ளது. மனிதாயப் பண்பு இலக்கியத்தின் அடிப் படைச் செய்தியாகக் கடத்தப்படுகிறது. தூரன் கவிதை சிறுகதை போன்ற படைப்புகளுடன் நிற்காமல் நாடகங்களும் கீர்த்தனைகளும் கூட எழுதியுள்ளார். ஒரு படைப்பாளியின் படைப்பாக்க ஆளுமை யைப் புரிந்து கொள்வதற்கான அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டு இயங்கியுள்ளார். ஏழு நாடகத் தொகுதிகள் தூரனின் படைப்புகளாக வெளிவந்துள்ளன. அவை அழகு மயக்கம் (1955), சூழ்ச்சி (1955), பொன்னியின் தியாகம் (1955), ஆதி-அத்தி (1956), காதலும் கடமையும் (1957), மனக்குகை (1960), இளந்துறவி (1961) ஆகியவையாகும். இவற்றுள் ஆதி-அத்தி, மனமாற்றம், சூழ்ச்சி, காதலும் கடமையும், மனக்குகை ஆகிய நாடகங்கள் தவிர, பெரும்பாலும் மற்றவை எல்லாம் ஒரங்க நாடகங்களே.
தூரன் நாடகத்துக்கும் சிறுகதைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர். சிறுகதை படிப்ப தால் ஆசிரியனோடு உறவாட முடியும் என்றும், நாடகமோ நடிப்பு, காட்சியமைப்பு முதலிய பிற கூறுகளால்தான் முழுமை அடைய முடியும் என்னும் நுட்பத்தைத் தூரன் புலப்படுத்தியுள்ளார். (பொன்னியின் தியாகம்-முன்னுரை). அதாவது நாடகம் ஒரு நிகழ்த்துகலை வடிவம் என்பது பற்றிய புரிதல் மிகத்தெளிவாக இவருக்கு இருந்தது. நாடகத்தைப் படிப்பதும் ஓர் அனுபவமே என்றாலும் அதற்கு வாசகனின் கற்பனை பெருமளவு தேவை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். தூரனின் நாடகங்களில் நாட்டுப்பற்று, தூயகாதல், உளமுரண்பாடு களின் மோதல், அடிமனம் நிகழ்த்தும் விளையாட்டு, கலை விளைவிக்கும் தடு மாற்றம், பெண்களின் தியாகம், மனிதாபி மானம் போன்றவைகள் மிகுதியாகத் துலங்குகின்றன. எதார்த்தவாதமும் ஓரளவு கற்பனையும் பிரதிகளின் மையமாக உள்ளன. இசைத் தமிழுக்கும் அளப்பரிய பணியை தூரன் செய்துள்ளார். தமிழிசை மரபு பற்றிய தேடல் நிரம்பப் பெற்றவராக இருந்தார். தமிழிசை வளர்ச்சி பெற கீர்த்தனைகள் தமிழில் ஏராளமாகப் படைக்கப்பட வேண்டு மென்பதை உணர்ந்து படைத்தார். அண்ணா மலைப் பல்கலைக்கழக வெளியீடுகளாக 'தமிழிசைப் பாடல்கள்' என இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இதைவிட 'இசை மணி மாலை' என்னும் தொகுதியை அல்லையன்ஸ் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து சென்னை தமிழ் இசைச்சங்கம் 'கீர்த்தனை மஞ்சரி' என்ற நூலைத் தொகுத்துத் தந்தது (1951).
மேற்குறிப்பிட்ட நான்கு தொகுதிகளுக்குப் பின்னர் இசை நாடக மன்றமும் தமிழ் இசைச் சங்கமும் அளித்த நிதியுதவியைப் பயன்படுத்தி இசைமணி மஞ்சரி' (1970), முருகன் அருள்மணி மாலை (1972), கீர்த்தனை அமுதம் (1974) ஆகிய நூல் களைத் தூரன் வெளியிட்டு இசைக்கலைஞர் களுக்கு இலவசமாக வழங்கினார். இவை அனைத்தும் சுர, தாள இசைக் குறிப்பு களோடு வெளிவந்துள்ளன. 1980ல் 'நவமணி இசைமாலை' என்ற தொகுப்பை தமிழ்நாடு இயலிசை நாடகமன்றம் வெளியிட்டது.
அன்னிய ஆட்சிக்காலத்தின் போது தொன்மத் தமிழிசையே கர்நாடக இசை என அழைக்கப்பட்டது. 'வடநாட்டினர் தமக்கு அருகில் உள்ள கர்னாடக நாட்டைப் பார்த்து அங்கும் அதற்கு தெற்கிலும் உள்ள இசைக்குக் கர்னாடக இசை என்ற பெயரிட்டு அழைத்தனர்' எனத் தூரன் ஒரு சொற்பொழிவில் விளக்கம் அளித்தார். தமிழிசையின் வேர்களைத் தேடி முன்னோர் களின் வழியே தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். தமிழ்க் கீர்த்தனைகள் மூலம் தமிழிசையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தார். |
|
தூரனின் இசைப்பாடல்களுக்கு பரவலான வரவேற்பு இருந்தது. இசைக்கலைஞர்கள் இசைப் பேரறிஞர்கள் ஒருமனதாக இவரைப் பாராட்டி வந்தார்கள். தமிழ் இசைச்சங்கம் இசைக்கலைக்குத் தூரன் ஆற்றிய பங்களிப்புக் காக 1972ல் 'இசைப் பேரறிஞர்' பட்டம் வழங்கி கௌரவித்தது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1970ல் 'கலைமாமணி' பட்டம் வழங்கியது. தூரனின் இசைப்பணி பலராலும் இன்றுவரை பாராட்டப்படுகிறது. தூரன் கட்டுரை இலக்கியத்திலும் மிகுந்த அக்கறை செலுத்தினார். பூவின் சிரிப்பு (1951), காற்றில் வந்த கவிதை (1958), காட்டு வழிதனிலே (1952), தேன்சிட்டு (1963) போன்ற கட்டுரை நூல்களைத் தந்துள்ளார். தூரன் எந்த ஒரு பொருளைக் குறித்தும் எண்ணங்களை வெளியிட வாய்ப்பான ஒரு கலைவடிவமாகக் கட்டுரைகளைக் கருதினார். மேலும் கட்டுரைகள் இலக்கியம் என்ற தகுதியைப் பெற வேண்டுமானால் எடுத்தாளும் பொருள்களைவிட எழுதுகிற மனிதனின் மனப்பான்மையையும் உணர்ச்சி களையும் அது தாங்கி நிற்கவேண்டும். அடுத்து இலக்கியச் சுவையும் கலைப்பண்பும் சிறப்பிடம் பெறவேண்டும் என்றும் தூரன் கருதினார். ஆக கட்டுரை என்ற இலக்கிய வகைமைக்கான சிறப்புகளையும் நுட்பங் களையும் கொண்டெழுதும் ஆற்றல் மிக்கவ ராகத் தூரன் இருந்தார்.
சிறுவர் இலக்கியம் பற்றிய பிரக்ஞையும் படைப்பாக்க உந்துதலும் நிரம்பல் பெற்றவ ராகவும் தூரன் விளங்கினார். குழந்தை மனதின் வளமான கற்பனைகளுக்கு உரமூட்டுவது தூரனின் கதைகளில் காணப்படும் முக்கியப் பண்பு. கதைகளின் வாயிலாக அறிவியலைச் சொல்லுகிற முயற்சியையும் மேற்கொண்டார். சிறுவர்களின் அனுபவெளிகளை விரித்து அறிவும் தேடலும் மிக்க பண்புகளை உணர்த்தினார். கதை வெறும் சுவையாக மட்டும் பதியாமல் ஆக்க மலர்ச்சிக்குரிய பண்புகளை நோகாமல் பதிய வைத்தார். சமூகம் சார்ந்து சிந்திக்கவும் மொழிப்பற்று தேசப்பற்று போன்ற விழுமியங் களைக் கற்றுக் கொடுக்கவும் தவறவில்லை. இதைவிட சிறுவர்களுக்குரிய மொழிநடை யைக் கையாளும் பக்குவத்தையும் கொண்டி ருந்தார். இயற்கை மனிதன் சார்ந்த அன்பையும் நேசிப்பையும் உயர்ந்த நோக்கமாக வெளிப்படுத்தினார். தூரனின் ஆளுமை அறிவியல் சார்ந்த நூல்களைத் தமிழுக்கு கொண்டுவருவதிலும் வெளிப்பட்டது. இவரிடம் அறிவியல் மனப்பாங்கு ஒரு பலமான பகுதியாகவும் இருந்தது. பாரம்பரியம் (1956), அடிமனம் (1957), பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954), குமரப்பருவம் (1952), மனமும் அதன் விளக்கமும் (1968), கருவில் வளரும் குழந்தை, குழந்தை மனமும் அதன் மலர்ச்சி யும் (1953) போன்ற நூல்கள் தூரனின் சிந்தனைத்தேடல் எத்தகையது என்பதை தெளிவுபடுத்துகின்றன.
மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் இவர் ஈடுபட்டார். 'இரவீந்திரர் குழந்தை இலக்கியம்' (1963), பறவைகளைப் பார் (1970), கடல்கடந்த நட்பு (1963), கானகத்தின் குரல் (1958) போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழுக்கு வளம் சேர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டார். சில நூல்களைப் பதிப்பித்தார். தாகூரின் ஐந்து கட்டுரைகள் (1962), கவிகாளமேகத்தின் சித்திரமடல், அவிநாசி நாவலனின் திங்களூர் நொண்டி நாடகம், வடிவேல் பிள்ளை, மோகினி விலாசம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
தூரனின் சிறப்புப் பரிமாணமாக வெளிப் பட்ட கலைக்களஞ்சியப் பணியையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தூரன் ஆற்றிய பணிகளிலெல்லாம் சிறந்ததும் கடினமானதும் பல்லாண்டு வேலை வாங்கி யதும் தமிழில் வெளிவந்த பத்து பாகங்கள் கொண்ட கலைக்களஞ்சியம் ஆகும். 'தொகுப்பாசிரியராகத் திரு. தூரன் அவர் களைத் தேர்ந்தெடுத்தது நல்வாய்ப்பாக அமைந்தது. கலைக்களஞ்சியம் உருவாக்கும் பணி பகீரத முயற்சியாகும். எவ்வளவு பேரறிஞரானாலும் ஒருவரோ, ஒரு சிலரோ கலைக்களஞ்சியத்தைக் தொகுத்து வெளி யிட்டுவிட முடியாது. பல்வேறு துறைகளில் வல்லுநர்களுடைய ஒத்துழைப்புத் தேவை. அவ்வொத்துழைப்பைப் பெற ஊக்கப்படுத்தும் திறமையும் பிழைபொறுக்கும் பொறுமையும் வேண்டும். பெரியசாமித் தூரனிடம் இரண்டு தன்மைகளும் சேர்ந்திருந்தன.' (ம.ப.பெ. தூரன் நினைவுமலர், 1987) என்று நெ.து. சுந்தரவடிவேலு கூறுகின்றார்.
தூரன் முதன்மை ஆசிரியராக இருந்து ஒவ்வொன்றும் எழுநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட பத்துத் தொகுதிகளாகக் கலைக் களஞ்சியத்தை உருவாக்கித் தந்தார். 1200 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் 15,000க்கு மேற்பட்ட பொருள்களைக் குறித்த செய்திகள் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன. கலைக்களங்சியம் அறிவுக் கருவூலமாக உருவாக்கப் பெற்றது. தமிழுக்கு ஒரு புது மரபு தோற்றம்பெறக் காரணமாயிற்று. இத்தகைய பெரும் பணியை சாத்தியப்படுத்தியதில் தூரனுக்குப் பெரும்பங்கு உண்டு. இன்றுவரை தூரனின் சிறப்பை வெளிப்படுத்துகிற அறிவுப் பயணம் இது. மேற்குறித்த பணிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே சிறப்பாக ஆராயப்பட வேண்டியவை. அப்பொழுதுதான் தூரனின் ஆளுமை, அறிவு, படைப்பாக்கம் ஆகிய பரிமாணங்கள் எத்தகையன என்பது புலப்படும். தூரன் வாழ்ந்த காலத்திலேயே மதிக்கப்பட்ட கௌரவிக்கப்பட்ட ஒருவராக வும் விளங்கினார். 1968ம் ஆண்டில் கலைக் களஞ்சியப் பணி நிறைவுற்ற வேளையில் இந்திய அரசு 'பத்மபூஷண்' விருது வழங்கி கௌரவித்தது. பல்வேறு அமைப்புகள் பாராட்டும் பட்டங்களும் வழங்கின.
தமிழ் இலக்கியத்துக்கும் இசைக்கும் நாடகத்துக்கும் அறிவியில் தமிழுக்கும வளமான பங்களிப்பைத் தந்த பெரியசாமித் தூரன் 1987 ஜனவரி 20ல் காலமானார். ஆனால் தூரன் விட்டுச் சென்றுள்ள தடங்கள் கனதியானவை.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|
|