|
|
|
இருபதாம் நூற்றாண்டில் உருவான நவீன இலக்கியத் துறைகள் போல் இலக்கியத் திறனாய்வும் தோன்றி வளர்ந்து வருகிறது. சமகாலத் திறனாய்வு பரந்து விரிந்த பொருள் கொண்டே இயங்குகிறது. சமூகவியல், மானிடவியல், மொழியியல், உளவியல், வரலாறு, அறிவியல், தத்துவம் போன்ற பல துறைகளின் தாக்கத்தை இன்றைய இலக்கியத் திறனாய்விலே காணலாம். பல்துறைச் சங்கமம் திறனாய்வு வளர்ச்சியாக விருத்தி பெற்றுள்ளது. இதற்கு சமாந்தரமாக ரசனை வழித்திறனாய்வும் தமிழில் உள்ளது.
தமிழ்மொழி, தமிழிலக்கியம் போன்ற நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட மரபில் இலக்கிய ரசனை தோன்றி வளர்ச்சி யடைந்ததில் டி.கே. சிதம்பரநாத முதலியார் முக்கியமானவர். இவர் சிறந்த சுவைஞராக இருந்ததுடன் திறனாய்வாளராகவும் கருதப் படுமளவுக்கு ஆளுமை கொண்டவராக இருந்தார். படித்த மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் தமிழ்மொழி தமிழிலக்கியம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கு 'இலக்கிய ரசனை' வழிமுறையைத் தக்கவாறு பயன் படுத்தினார். தனது வழியில் பலர் முன்னேறி வருவதற்கும் காரணமாக இருந்துள்ளார். 'பண்பாட்டு வளர்ச்சி நோக்கிய ரசனை முறைத் திறனாய்வை நடத்தியவர்' டி.கே.சி. என்று முனைவர் சி.கனகசபாபதி குறிப் பிடுவதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். டி.கே.சி. போன்ற மரபு இன்று விருத்தி பெற்றுள்ள இலக்கியப் பயில்வில் வேறுபட்ட தரிசன வீச்சாக மேற்கிளம்ப வேண்டும். ரசனை மரபு அறவேயில்லாத வறட்சியான இலக்கிய மரபு தொடர்ச்சியறாத் தன்மையுடன் கையளிக்கப்பட வேண்டும். ஆகவே நாம் டி.கே.சி.யைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தென்காசிக்கு அருகேயுள்ள களக்காடு என்ற கிராமத்தில் தீர்த்தாரப்ப முதலியார் என்ற ஒரு பண்ணையாரின் மகனாக 1882ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தார். சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வமாக வும் நல்ல உடற்பயிற்சி செய்பவராகவும் இருந்து வந்தார். திருக்குற்றாலத்துக்குப் போய் அங்குள்ள அருவியில் குளிக்காமல் அருவி விழுந்து வரும் பொங்குமாங்கடலிலே அடிக்கடி அந்தரடித்துக் குளிப்பார்கள். இந்த அளவுக்கு இயற்கையுடன் ஒன்றித்து விதவித மான அனுபவங்களை உள்வாங்கியுள்ளார்.
இயற்கை மீதான லயிப்பு சிந்தனையிலும் தேடலிலும் வேறுபட்ட மனக்கட்டமைப்பை உருவாக்கியது. ஆளுமை சார்ந்த திறன் நோக்குமுறையிலும் கூட ஒருவிதத் துணிச் சலை வளர்த்தது. இதுவே பின்னர் ரசிக மணியின் உருவாக்கத்துக்கான பின்புலமாக வும் அமைந்தது. திருநெல்வேலியில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரியில் எப்.ஏ. படிப்பையும், பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ.படிப்பையும் முடித்தார்கள். ஆனால் டி.கே.சிக்கு பள்ளிக் காலம் சுவையற்றதாகவே இருந்தது. இதனால் சுதந்திரமான தேடல், மகிழ்ச்சி கரமான கற்றல் போன்றவற்றில் முழுமூச்சுடன் ஈடுபடலானார். குறிப்பாக உயிரியல் சார்ந்த நூல்களையும் டார்வின், டின்டெல், ஜூலியன் ஹக்ஸ்லி முதலிய விஞ்ஞானி களின் நூல்களையும், ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் எழுதிய தத்துவ நூல்களையும் படித்தார். மேலும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் மேலை தேசத்தவர் கவிதைகளையும் படித்தார். ஆங்கில வசனகர்த்தாக்களில் A.G. கார்டினரின் நூல்களே டி.கே.சி.க்கு விருப்பமானது. உரைநடையென்றால் கார்டினரின் நடைபோலிருக்க வேண்டு மென்று அவர் அடிக்கடி கூறுவார்.
டி.கே.சி.யின் படிப்பு கலை, தத்துவம், உயிரியல் எனப் பலவாறு அமைந்திருந்தது. இவரது சிந்தனையும் தேடலும் இந்த நூல்களால் மேலும் நன்றாகப் பண்பட்டது. எதையும் அறிவியல் அடிப்படையில் அணுகும் திறனும் உணர்ச்சியோடும் உண்மை யோடும் ஒட்டிப் பழகும் பாங்கும் டி.கே.சி. ஆளுமையின் சில அடிப்படைக் கூறுகளாக இருந்தன. எதையும் தெளிவாக மற்றவர்கள் இலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தொடர்பாடல் தன்மையைக் கைக் கொண்டார். இதனால் அனுபவத்துக்கு ஒவ்வாத எதையும் ஒதுக்கித் தள்ளும் துணிச்சல் கொண்டவராகவும் வெளிப்பட்டார்.
சென்னையில் பி.எல். பட்டம் பெற்ற பின்னர் 1915இல் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். சென்னை மேல்சட்டசபை உறுப்பினராகத் தேர்தலில் வெற்றி பெறும்வரை, அதாவது சுமார் 12 ஆண்டுகள், வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்தார். இந்த நிலைமையிலும் தமிழ் படிப்பதை நிறுத்திவில்லை. வள்ளுவரும், கம்பரும் முத்தொள்ளாயிரமும் திருவாசகமும் டி.கே.சி. யின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தன.
வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது இவருக்கு 'மலேரியா' சுரம் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். அத்தருணத்தில் கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து படித்தார். கம்பனின் கவிதை இன்பத்தில் மிதந்து ரசிக மனோபாவத்தை அனுபவத் தேட்டமாகக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்டார்.
திருநெல்வேலி கைலாசபுரத்தில் வழங்கறிஞ ராக இருந்த எம்.எஸ். சப்பையா முதலியார், டி.கே.சி.யைக் கம்பனிடத்திலே ஆற்றுப் படுத்தினார் 'கங்கைப் படலம்' முதலிய முக்கியமான படலங்கைகளை டி.கே.சி.க்கு வாசித்துக் காட்டி கம்பருடைய பெருமையை அடிக்கடி எடுத்துக் கூறி, கம்பராமயாணம் மீது அதிகம் நாட்டம் கொள்ள வைத்த பெருமை சுப்பையா முதலியாரையே சாரும். பலவாறு கம்பனை அனுபவித்துப் படித்துத் தான் கம்பரை அடையாளம் காட்டுகிறார். முப்பது முப்பத்தைந்து வருட அனுபவத்துக்குப் பின்புதான் கம்பராமாயணத்தில் செருகு கவிகள் ஏராளம் உண்டு எனக் கூறினார். அவைபற்றித் தன்னுடைய கருத்துத் தெளிவுகளையும் முன்வைத்தார். டி.கே.சி. தானே பதிப்பித்த கம்பராமாயணப் பதிப்பில் இடைச்செருகலாகக் கருதிய பாடல்களை நீக்கி வெளியிட்டார். இத்தகு துணிச்சல் கொண்டவராகவே டி.கே.சி இருந்தார்.
கம்பர் குகன், கும்பகர்ணன் போன்ற பாத்திரங்களை அற்புதமாகப் படைத்திருப்பான். வான்மீகி அந்தப் பாத்திரங்களை வார்த்த வார்ப்பு வேறு கம்பன் அவற்றை வார்த்த வார்ப்பு வேறு. இதையறியாமல் சிலர் வான்மீகியின் பாடல்களைத் தமிழில் அப்படியே மொழிபெயர்த்து அப்பாடல் களையும் இடைச்செருகலாக வைத்திருப் பார்கள் அந்தப் பாடல்கள் கம்பனுடைய பாத்திரங்களின் தனித்த சிறப்பைக் கெடுத்து விடும். இடைச்செருகல்களைக் களைந்து விட்டுப் பார்த்தால்தான் கம்பனுடைய பாத்திரப் படைப்புகளின் சிறப்பு நமக்குத் தெரியவரும் இதை டி.கே.சி. உணர்ந்து செயற்பட்டார்.
1927 முதல் 1930 வரை டி.கே.சி. சென்னை மேல்சட்டசபை உறுப்பினராக இருந்தார். சட்டசபைக் கூட்டத்துக்குப் போகும்போது கூட டி.கே.சி.யின் கையில் கம்பராமாயணப் புத்தகம் இருக்கும்.
1930 முதல் 1935 வரை இந்துமத பரிபாலன சபையின் ஆணையாளராக டி.கே.சி. வேலை பார்த்தார். இந்த ஐந்து ஆண்டு களில் தமிழ் நாட்டிலுள்ள மடங்கள், கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், சமயச் சடங்குகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித் தார். அவற்றின் உட்பொருளை உவந்து அனுபவித்தார். அவற்றை மற்றவர்களுக்குப் புரிந்து கொள்ளும் விதத்திலேயேயும் எடுத்துரைக்கும் பாங்கு டி.கே.சி.யின் தனிப்பண்பாக இருந்தது. தொடர்ந்து தாம் பெற்ற அனுபவங்களை உணர்ச்சியும் ஆனந்தமும் மிக்க தமிழிலே தமிழர்களுக்கு எடுத்துச் சொன்னார். இதைவிடத் தமிழ் நாட்டின் சிறப்புகளை அனுபவத் தேட்டமாக கண்முன் நிறுத்தும் செயற்பாட்டில் முழுமை யாக ஈடுபட்டார்.
தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தார். தமிழ் இசையும் சிற்பமும் ஓவியமும் பரதநாட்டியமும் சமய ஞானமும் தமிழ்க்கவிதையும்--எல்லாம் கோயிலைச் சுற்றியே வளர்ந்து வந்தவை. தமிழர் வாழ்க்கையும் சமயமும் ஒன்றோ டொன்று விரவிக் கலந்தவை. ஆணவத்தை அகற்றி ஆனந்தத்தை விளைவிப்பவை. இந்த அரிய பண்பாட்டைச் சீதனமாகத் தமிழர்கள் உலகத்துக்கே கொடுக்கலாம் என்று டி.கே.சி. சொல்லுவார். |
|
| ஆங்கிலம் மட்டுமே படித்த ஆளுமைகள் பலர் டி.கே.சி. மூலமும் வட்டத்தொட்டிச் சீடர்கள் மூலமும் தமிழ்க் கவிதையின் சிறப்பையும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பையும் உணர்ந்து தமிழ்க் காதலர்களானார்கள். | |
1935இல் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டி.கே.சி. திருநெல்வேலியின் ஒரு பகுதியான வண்ணார் பேட்டைக்கு வந்தார். இங்கே வட்டத்தொட்டி என்னும் இலக்கிய இயக்கத்தை தனது வீட்டிலேயே தொடங்கினார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூட்டம் நடக்கும். பல அரிய விடயங்களைப் பற்றித் தெளிவோடும் உறுதியோடும் டி.கே.சி. பேசுவார்.
பிற்காலத்திலே தமிழில் சிறந்த எழுத்தாளர் களாகவும் கவிஞர்களாகவும் பெயர் வாங்கப் போகிற பலர் டி.கே.சி.யால் உருவாக்கப் பட்டார்கள், பண்படுத்தப்பட்டார்கள். ராஜாஜி, ஏ.வி. சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீ. ஆசார்யா, கல்கி, பாஸ்கரத் தொண்டை மான், பேரா. சீனிவாசராகவன், ஆ. முத்துசிவன் போன்றோர் வட்டத்தொட்டியின் உறுப்பினர்கள் இந்த இயக்கம் சார்ந்த செயற்பாடுகள் கலை, இலக்கிய ரசனையின் நிலைபேறாக்கத்துக்கான பின்புலங்களை உருவாக்கிக் கொடுத்தது.
டி.கே.சி. இயங்கிய இந்தக் காலம் ஆங்கிலம் வடமொழிச் செல்வாக்கு மிகுந்திருந்த காலம். ஆகவே தமிழ்மொழி சார்ந்த பயில்வும் உரையாடலும் ரசனை மிகுந்த சுவையும் அனுபவமும் தமிழ்மொழி விழிப்புணர்வுச் செயற்பாட்டுக்கான உந்துதல்களைக் கொடுத்தது. இதைவிட ஆங்கிலம் மட்டுமே படித்த ஆளுமைகள் பலர் டி.கே.சி. மூலமும் வட்டத் தொட்டிச் சீடர்கள் மூலமும் தமிழ்க் கவிதையின் சிறப்பையும் தமிழ்ப் பண் பாட்டின் சிறப்பையும் உணர்ந்து தமிழ்க் காதலர்களானார்கள். ஆங்கிலம் படித்த காரணத்தினால் தமிழில் என்ன இருக்கிறது என்ற அறியாமையில் மூழ்கிக் கிடந்த மத்தியதர வர்க்கத்தினரிடையே தமிழிலக்கிய விழிப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கிய வரலாற்றுப் பாத்திரத்தை ரசனைமுறைத் திறனாய்வாளர்கள் மேற்கொண்டனர். இதன் ஊற்றாக டி.கே.சி.யை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வட்டத்தொட்டிக் கூட்டம் மூலம் வெளிப் பட்டவர்கள் பெரும்பாலும் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் முயற்சி களிலே அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் வரலாற்று அடிப்படையில் இனங்கண்டு கொள்வதில் அதிக சிரத்தை காட்டவில்லை. இதனால் நவீன இலக்கியம் முகிழ்த்துப் படிப்படியாக வளர்ச்சி காணத்தக்க பின்புலங்களைப் புரிந்து கொள்வதில் இவர்கள் நாட்டம் கொள்ளவில்லை. சமுதாய ஓட்டத்துடன் முன்னோக்கிச் செல்லும் தடங்களில் பயணிக்க விருப்பமும் திறனும் அற்றவர் களாகவே இருந்தார்கள். இக்குழுவினர் குறித்து பி.எஸ். ராமையா மணிக்கொடி காலம் எனும் நூலில் கூறியிருப்பது இங்கு ஈண்டு நோக்கத்தக்கது.
'அந்த இலக்கிய வட்டத்தில் வந்து கூடியவர்களில் முக்கியமான சிலர் நமது பழைய தமிழ் இலக்கியங்களில் நல்ல தேர்ச்சி உடையவர்கள். அவற்றில் திளைத்துச் சுவைத்தவர்கள். மற்றவர்கள் ஓரளவு தமிழ்வழி பண்டைய இலக்கியச் சுவையும் பெரிய அளவு ஆங்கிலத்தின் வழி இலக்கியச் சுவையும் பெற்றவர்கள். அவர்கள் கூட்டங் கள் யாவும் தமிழ் இலக்கியச் சுவைக் கூட்டங்கள் தாம். ஆனால் அவர்கள் தமிழ் இலக்கியம் என்று கருதியவை ஏற்றுக் கொண்டவை யாவும் அன்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு படைக்கப் பட்டவை. அந்த இலக்கிய வட்டத்தினர் வேதநாயகம் பிள்ளை, ராஜம் அய்யர், மாதவைய்யா நூல்களை ரசித்தார்கள். ஆனால் அவற்றை அவர்கள் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளவில்லை அல்லது கருதவில்லை என்றுதான் தோன்றியது.'
இவ்வாறுதான் ரசனை முறைத் திறனாய் வாளர்கள் இருந்துள்ளார்கள். இந்தப் போக்கு இவ்வாறு வலுப்பெற்று இருப்பதற்கு டி.கே.சி.யின் சிந்தனையும் நோக்குமுறையும் காரணமாக இருந்துள்ளன. உணர்ச்சி வெளிப்பாடே இலக்கியத்தின் குறிக்கோள் என்ற எண்ணம் சமயக் கொள்கை போல நிலைநாட்டப் பட்டது. மேலும் இலக்கிய ரசனை பொழுதுபோக்கு என்ற மட்டத்துக் குள் சுருங்கியது. நவீன இலக்கியப் போக்குகள் புறக்கணிக்கப் படலாயின. கவிதைபற்றிய ஆய்வு முழுமையாகக் கோட்பாட்டாக்கம் சார்ந்த அணுகுமுறையில் விரிவு பெறவில்லை. அவற்றைப் பற்றிக் கதையளப்பதே திறனாய்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. டி.கே.சி. வழிவந்த ரசனை உணர்வு இலக்கியப் பயில்வு தமிழில் இன்றுவரை இழையோடி வருகிறது.
1935 முதல் 1954 வரையில் டி.கே.சி. எழுதிய நூல்களில் 'இதய ஒலி', 'கம்பர் தரும் ராமாயணம்', 'கம்பர் யார்?', 'முத்தொள்ளா யிரம்', 'தமிழ்க் களஞ்சியம்' ஆகியன குறிப்பிடத்தக்கவை. வட்டத்தொட்டியிலே கவிதையைப் பற்றி மாத்திரமல்ல, பரத நாட்டியம், சங்கீதம், ஓவியம், சிற்பம் பற்றியும் டி.கே.சி. விளக்கிப் பேசுவார். கவிதையில் உணர்ச்சியும் உருவமுமே உயிரானவை எனக் கொண்ட டி.கே.சி பரந்த தமிழ்க் கவிதைப் பரப்பிலிருந்து சிற்சில பாடல்களைத் தெரிந்தெடுத்து வைத்துக் கொண்டு பரவசத்துடன் எடுத்துரைப்பார். பாடிக் காட்டி வியாக்கியானம் செய்வார். ரசனை இன்பத்தில் மூழ்கி அழகுணர்ச்சிவயப்பட்டு ஆனந்தப் பெருக்கில் நீந்தி வருவதைச் சிறப்பாக கொண்டு செயற்பட்டுள்ளார்.
1930-50 காலத்தில் டி.கே.சி தமிழ்ப் பண்பாட்டு மரபில், குறிப்பாக படித்த மத்தியதரவர்க்கத்தினரிடையே ஒரு குறிப் பிடத் தக்க ஆளுமையாகவே இருந்துள்ளார். உத்தியோகம் பார்த்துவிட்டு இளைப்பாறும் காலத்தில் தமிழ்ப்பணி செய்யுமுகமாகத் தாம் பெற்ற இலக்கிய இன்பத்தை பிறரும் பெறவேண்டும் என விழைந்தோருக்கு டி.கே.சி. ஒரு கலங்கரை விளக்கு. அத்தகு மனிதர் பிப்ரவரி 16, 1954 அன்று மறைந்தார். ஆனால் ரசனை முறைத் திறனாய்வு தமிழில் வேரூன்றி வளர்ச்சியடைவதற்கு டி.கே.சி தெளிவான பாதையையும் அதற்கான கருத்து நிலைத் தளத்தையும் வழங்கிச் சென்றுள்ளார்.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|