|
|
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் மறுமலர்ச்சி வரலாற்றில் தமிழிசை இயக்கம் ஒரு மறுமலர்ச்சிப் போக்காக உருப்பெற்றது. அதனூடாகவே தமிழிசையின் வேர்கள் பற்றிய சிரத்தையும் சிந்தனையும் ஆய்வும் படிப்படியாக மேற்கிளம்பின. இந்தப் புலமை இசைமரபுத் தொடர்ச்சியில் தமிழிசை ஆய்வாளராக வருபவர்தான் வீ.ப.கா. சுந்தரம்.
வீரணன் பரமசிவம் காமாட்சி சுந்தரம் என்னும் வீ.ப.கா. சுந்தரம் தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள கோம்பை என்னும் சிற்றூரில் பரமசிவம், காமாட்சி இணையர்க்கு 5.9.1915 அன்று மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே தம் பெயரைத் தந்தை தாய் இருவரின் பெயர்களுக்கான தலைப்பு எழுத்துகளுடன் குறித்தவர் வீ.ப.கா. என்பது குறிப்பிடத் தக்கது.
தந்தையார் பரமசிவம் தேவாரப் பாடல் களைப் பாடுவதிலும் பயிற்றுவிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கியவர். இதன் காரணமாகச் சுந்தரனாரும் சிறுவயது முதல் இசையார்வமும் இசையறிவும் இயல்பாகப் பெற்றிருந்தார். தொடர்ந்து பசுமலைக் கணக்காயர், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் தொல்காப்பியம் முதலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தமது ஆசிரியரான சோமசுந்தர பாரதியாரின் அறிவரைப்படி இசை கற்கத் தொடங்கினார்.
அந்நாளில் சிறந்த இசை விற்பன்னர்களில் ஒருவராகவும், இராமநாதபுரம் அரசவைக் கலைஞராகவும் விளங்கிய சங்கரசிவம் என்பவரிடம் சில ஆண்டுகள் முறையாக இசையையும், தாள நுணுக்கங்களையும், மற்றும் குழல், முழவு முதலான இசைக் கருவிகளை இசைப்பதையும் கற்றுத் தேர்ந்தார்.
வீ.ப.கா. இயல், இசை மட்டுமன்றி நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண் டிருந்தார். அப்பொழுது தென்தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகங்களையும் பிற நாடகங்களையும் காண் பதில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார். அக்கால நாடகக் கலைஞர்கள் பலருடனும் நட்புக் கொண்டிருந்தார். இதன் பயனாகவே வீ.ப.கா. இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலும் ஆழந்த அறிவைப் பெற முடிந்தது.
வீ.ப.கா. பசுமலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரி, இறையியல் கல்லூரி, மதுரைப் பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் தமிழ்த்துறைகளில் பணியாற்றினார். இந்த ஈடுபாடு, அனுபவம் யாவும் இணைந்து பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல் என்னும் தலைப்பில் ஆய்வு செய்யத் தூண்டியது. இந்த ஆய்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அப்பொழுது தலைசிறந்த தமிழிசை ஆய்வாளர்களுள் ஒருவரும் தமிழிசை ஆய்வாளர்களுள் ஒருவரும் மூத்த செவ்விசைக் கலைஞருமான மதுரை எஸ். இராமநாதன் அவர்களை நெறியாளராகக் கொண்டு தமது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.
வீ.ப.கா. ஏறத்தாழ 50 ஆண்டுக் காலம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பிய நூல்கள், தேவாரம், பெரிய புராணம், திவ்வியப் பிரபந்தம், பஞ்சமரபு முதலான அனைத்துத் தமிழ் நூல்களையும் நுணுகி ஆய்ந்து இசை நுணுக்கங்களையும் இசையியல் முறைமைகளையும் கற்று வந்தார். தொடர்ந்து ஆய்வு நோக்கில் இசையின் மூலங்கள், தமிழிசையின் வேர்களைத் தேடி வந்தார். தமிழிசையின் இசைமரபு எத்தகைய ஆழமும் அகலமும் மிக்கது என்பதை வரலாற்று ரீதியாக அதன் மூலங்கள் வளங்களில் இருந்து ஆய்வு முறையில் வளர்த்தெடுத்தார். தான் தமிழ் இசையால் ஈர்க்கப்பட்ட பின்புலம் பற்றி கூறும் பொழுது அவர், 'நான் கோம்பையில் பிறந்தவன். கம்பம் பீர்முகமது பாவலர், உத்தமபாளையம் அப்பாவு ராவுத்தர் போன்ற இசை மேதைகளின் இசைப் பொழிவுகளைத் தொடக்க காலத்திலேயே கேட்டு இன்புற்ற பின் திரு மலைப்பிள்ளையிடம் இலக்கணம் கற்றவன். என்னுடைய இசைத்தாகம் மென்மேலும் இதனால் என்னுள் பிரவாகம் எடுத்தது. சங்கரசிவத்திடம் பாடக் கற்றுக் கொண்டேன்' என்கிறார்.
வீ.ப.கா. சிறுவயதினராக இருந்த போதே இவரது குடும்பம் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியது. இதன் காரணமாக கிறிஸ்துவரான வீ.ப.கா அக்காலத்தில் வெளிவந்த விவிலியம் (பைபிள்) தமிழ் மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்தியதுடன் கிறிஸ்துவ தேவாலயங்களின் வழிபாட்டுத் தமிழையும் வளப்படுத்தினார். மேலும் அங்கு பாடு வதற்காக அருந்தமிழ்ப் பாடல்கள் பல இயற்றி இசையமைத்துப் பயிற்றுவித்தார். அப் பாடல்கள் இன்றளவும் பல தேவாலயங்களில் பாடப்பட்டு வருகின்றன. வீ.ப.கா. கிறிஸ்து வத்தைத் தழுவியவராயினும் கரைக் காலம்மையார், ஞானசம்பந்தர், அப்பர் ஆகியோரிடம் ஆழந்த பக்தி கொண்டிருந்தார்.
இதனால் தம் வீட்டுக்கு 'ஞானசம்பந்தர் குடில்' என்று பெயரிட்டிருந்தார். கிறிஸ்துவ, சைவ மரபுகளை ஆழ்ந்து உணர்ந்து கற்கக் கூடிய மனப்பக்குவத்தை அவரிடம் இயல் பாகக் காணமுடிந்தது. தமிழிசை மட்டுமன்றி உலகின் பழமையான பிற இசை முறைமை களைப் பற்றியும் அறிவும் ஆய்வுக் கண்ணோட்டமும் மிக்கவராக விளங்கினார். இசையியல் பற்றிய ஒப்பீட்டுக் கல்வியின் அடிப்படைகளையும் விளங்கிச் செயற்பட்டார்.
கிரேக்க இசையுடன் நமது இசைக்கு இருந்த தொடர்பு பற்றிக் கூறிப்பிடும் பொழுது, 'கிரேக்க நாட்டிலும் தமிழக நிலப்பிரிவு போல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்துக்குப் பெயரிட்டு இருந்தார்கள். ஒவ்வொரு நிலத்துக்கும் தனித்தனியாக இராகங்கள் வகுத்திருந்தார்கள்' என்பார். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும் ஆய்வுக் கண்ணோட்டம் மிக்கவராகவும் விளங்கி வந்தார்.
தமது ஆழ்ந்த தமிழ்ப்புலமையாலும் ஆளுமையாலும் இசைத்திறனாலும் உலகின் ஆதிமுதல் பண் (ராகம்) தமிழ்மரபு வழிவந்த முல்லைப் பண்ணே என்று பேசிவந்தார். இக்கருத்தைப் பல அயல் நாடுகளிலும் எடுத்துக்கூறினார். பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் தமிழிசை பற்றிய நுண்ணிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் இவர் காரணமாக இருந்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியொரு வராக உழைத்துத் தமிழிசைக் கலைக் களஞ்சியம் நான்கு தொகுதிகளையும் எழுதி வெளிக்கொணர்ந்தார். தமது வாழ்நாளில் பெரும் பகுதியை இயற்றமிழ், இசைத்தமிழ் ஆய்வுப் பணியிலேயே கழித்தார்.
'தமிழ் இசைவளம்', 'தமிழ் இசையியல்', 'பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்' போன்ற சிறந்த ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கு மேல் இசை ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இதைவிட 'பைந்தமிழ் பயிற்றுமுறை' 'சிறுவரின்பம்' (பாடல்கள்), 'அகத்திணைத்தெளிவு' (மலரின் பெயரா நிலங்கட்கு), 'அருட்குறள்' (கிறிஸ்துவ குறட்பாக்கள்), 'தெய்வீக அன்பு', 'ஆமோசு' (கிறித்துவ திருச்சபைக்கான நாடகங்கள்) எனப் பல நூல்களையும் இயற்றியுள்ளார். இவை தவிர, 'தமிழும் இசையும்' போன்ற கட்டுரைகளின் தொகுப்பாக சில வேறு நூல்களும் வெளிவந்துள்ளன.
வீ.ப.கா. ஆய்வாளராக மட்டுமன்றிக் கல்வி யியலிலும் இசை கற்பிக்கும் முறைகளிலும் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டவர். மேலும் சிறந்த ஒவியர், சொற்பொழிவாளர், பாடுவதிலும் கருவிகளை இசைப்பதிலும் தேர்ந்தவர், தேர்ந்த இசைச் சுவைஞர் போன்ற பன்முகத் திறன் கொண்டவர்.
வீ.ப.கா. தமது 88வது வயதில் (09.03.2003) காலமானார். தாம் மறைவதற்கு ஒரு மணிநேரம் முன்பு வரைகூட சிலப்பதிகாரத்து இசைபற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றினை எழுதிக் கொண்டிருந்தார் என்பது நினைவுகூரத் தக்கது. எவ்வாறாயினும் வீ.ப.கா.வினது ஆய்வு நூல்கள் சிந்தனைகள் யாவும் தமிழிசை ஆய்வுகளுக்கு ஒரு புதிய தடத்தை, மடைமாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. புலமை ரீதியாக வீ.ப.கா.வின் சிந்தனைகளை ஆய்வு நுட்பத்திறனை நாம் விரிவாகப் புரிந்துகொள்ளும் பொழுது தான் தமிழ்ப் பண்பாட்டின் மீது சமஸ்கிருத மேலாதிக்கம் விளைவித்த கேடுகளைப் பற்றி ஆழமாக உணர்ந்து கொள்ள முடியும்.
நாம் தமிழ்நாட்டு வரலாற்றைக் கூர்ந்து பார்த்தால் கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது. தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறிமாறிப் பிற மொழி மன்னர்களால்தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இடைக்காலச் சோழர் ஆட்சியும் இடைக்காலப் பாண்டியர் ஆட்சியும் சிறு இடைவெளிகள் தாம்.
இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாகத் தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது. பல்லவர்கள் வடமொழிக் கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித் தனர். நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம். பிறகு மராட்டியரின் காலகட்டம். இந்தக் காலகட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு சரிவும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன.
இலக்கியத்தில் தளர்ச்சியும் வீழ்ச்சியும் நிரம்பிய காலகட்டங்கள் பல உண்டு. ஆனால் இலக்கியம் எழுதி வைக்கப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அது தொடர்ச்சி பெற முடியும். நுண்கலைகள் அப்படி அல்ல. இசை போன்ற நிகழ்த்து கலைகளுக்கு இடைவிடாத தொடர்ச்சி தேவை.
பிற மொழியினர் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதினார்கள். வடமொழி இந்தியா முழுக்கத் தொடர்பு ஏற்படுத்தித்தரும் மொழியாகவும் இருந்தது. தெலுங்கு ஆட்சி மொழியாக இருந்தது. இன்று நமக்கு ஆங்கிலம் கவர்ச்சியான மொழியாக இருப்பது போல் அன்று தெலுங்கு இருந்தது. ஆக சமஸ்கிருதமும் தெலுங்கும் உயர்குடி மொழி யாகவும் மேல்நிலையாக்கம் பெற்ற மொழியாகவும் கருதப்பட்டன. ஆட்சி யாளர்களை அனுசரித்துப் பொருளாதார நன்மை பெறவும் இந்த மொழிகள் பயன் பட்டன. முற்காலத்தில் அரச சபைகளையே பெரிதும் இசை நம்பியிருந்து. அச்சபை தெலுங்குக்கும் சமஸ்கிருதத்துக்கும் முக்கியத் துவம் கொடுத்து வந்தது. இதனால் பாடகர்களும் பாடலாசிரியர்களும் வேறு வழியின்றித் தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவ்வாறுதான் தமிழிசை மரபு தொடர்ச்சி அறுந்து போயிற்று.
நூற்றைம்பது வருடங்களாகத் தெலுங்கில் பாடிப்பாடி மெருகேற்றப்பட்டது தான் இப்போதைய மரபிசை. இந்த மரபுதான் நமக்குரிய இசைமரபாகக் கையளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுதான் நமது தொடர்ச்சியான இசை மரபாகக் கருதப்படுகிறது. |
|
பொதுவாக நுண்கலைகளாக சிற்பம், சித்திரம், கட்டிடம், நடனம், இசை போன்றவற்றைக் குறிப்பிடுவர். இவற்றில் முதல் மூன்று கலைகளும் பருவடிவில் காலத்தில் நீடித்து நிற்கும். எவரும் எப்போதும் இவற்றைப் பார்க்கலாம். ஆனால் மற்ற இரு கலைகளும் அவை நிகழும்போதுதான் அனுபவிக்க முடியும். இவற்றை எழுதியோ சொல்லியோ காட்ட முடியாது. ஆனால் இப்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இவற்றையும் பதிவுசெய்து வைக்கக் கூடிய அளவுக்கு ஒலி, ஒளி ஊடகங்கள் உள்ளன. ஆனால் இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு இக்கலைகளுக்கான தொடர்ச்சியான ஓட்டம் இல்லை என்றால் இக்கலைக்கள் நீடித்து இருக்க முடியாது. ஒரு தலைமுறைக்கால இடைவெளி தோன்றினால் கூட சில கலைகள் முற்றிலும் அழிந்துவிடக் கூடும்.
நமக்கான இசையியல் நூல்கள் பல பிற்காலத்தில் எழுதப்பட்டவை. அவற்றுள் முற்கால மரபின் தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது. இன்று நாம் இந்த இசையியல் நூல்களைப் பார்க்கும் போது இயல் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. எப்படி பாடப்பட்டது என்று தெரியவில்லை. பிற்கால வளர்ச்சியும் அறுபட்டிருக்கிறது.
இந்தத் தொடர்ச்சி அறுபடும் நிலைமையை மேலும் தெளிவாக ஆய்வு செய்து பார்க்கும் பொழுதுதான் நமக்கான கலாசார வரலாறு முறைப்படி தொகுக்கப்படவில்லை என்ற உண்மையும் புலப்படுகிறது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பெரிய புராணம், தேவாரம் முதலிய பண்டைய இலக்கியப் படைப்புகள் வழி ஆய்வு செய்யும் பொழுது இசை பற்றிய செய்திகளும் சிந்தனைகளும் விரவிக் கிடப்பதை உணர்ந்து கொள்ள முடியும். பண், சுரம் முதலியவற்றின் இயல்புகள் குறித்த தகவல்கள் உதிரியாக உள்ளன. தேவாரப் பண்களை ஓரளவு பாடலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறது. பிற்கால இசையியலுடனும் சமகால இசை நிகழ்வுகளுடனும் இணைத்துப் பார்க்க முடிகிறது. இவற்றின் மூலம் நமது இசைமரபு அல்லது நமக்கான இசைமரபு குறித்த ஒரு சித்திரத்தை நாம் இப்போது உருவாக்கிக் கொள்ள முடிகிறது.
இவ்வாறு எமது இசையியல் ஆய்வு வளர்ச்சியடைய வீ.ப.கா சுந்தரம் பெரும் முயற்சி எடுத்துள்ளார். குறிப்பாக, தமிழிசையே இப்போது தென்னிந்திய இசை என்றும் கர்நாடக சங்கீதம் என்றும் வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார்.
இன்று தமிழிசை ஆராய்ச்சி வரன்முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த மரபுத் தொடர்ச்சிக்கு தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய 'கர்ணாமிர்த சாகரம்' எனும் நூலை முன்னோடியாகக் கொள்ள முடியும். தொடர்ந்து சுவாமி விபுலானந்தர். எழுதிய 'யாழ் நூல்', எஸ். இராமநாதனின் 'சிலப்பதிகார இசை நுணுக்க விளக்கம்', சாம்பமூர்த்தியின் 'தென்னிந்திய இசை', போன்ற நூல்களைக் குறிப்பிட முடியும். இந்தத் தொடர்ச்சியில் வீ.ப.கா.வின் நூல்களும் உள்ளன. இந்த ஆய்வுச் செய்நெறி இன்றும் தொடர்கின்றது.
வீ.ப.கா. எழுதிய நூல்கள் சிலவற்றின் சிறப்புகளை இங்கு அடுத்து நோக்குவது பொருத்தமாக இருக்கும். இவரது முனைவர் பட்ட ஆய்வே 'பழந்தமிழிலக்கியத்தில் இசையியல்' எனும் நூலாக வெளிவந்தது. இந்நூல் தொல்காப்பியம் தொடங்கி தேவார காலம்வரை உள்ள நூல்களில் காணப்படும் இசைக் குறிப்புகள் குறித்த செய்திகளை உள்ளடக்கியது. ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், எஸ். இராமநாதன் ஆகிய மூவரும் எழுதிய நூல்களில் பல வேற்றுமைகளும் முரண்பாடுகளும் உள்ளன. இவற்றுள் எது, எங்கு, ஏன் ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்று காட்டுவதே என் ஆய்வு நூல் என்று தம் நூலைப் பற்றி வீ.ப.கா. குறிப்பிடுகின்றார்.
'தமிழிசை வளம்' எனும் நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியீடாக வந்தது. தமிழ் இசைத்துறை வளர வழிகள், தொல்காப்பியம் சுட்டும் இசைஇயல், இசையின் கால அளவுகள், மிடற்றொலி இயல், பண்ணுப் பகுப்பியல், முல்லைப் பண் மற்றும் ஆபிரகாம் பண்டிதர், பாசுகரதாஸ், மதுரை மாரியப்ப சுவாமிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோரின் தமிழிசைப் பணி உட்பட 23 தலைப்புகளில் அமைந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
மேற்குறித்த நூலில் 'இசையியல்' குறித்த வரைவிலக்கணம் இங்கு நோக்கத்தக்கது. 'இசையியலில் பாடுதுறை (பிராக்டிக்கல்) தவிர இசை பற்றிய செய்தி அனைத்தும் அடங்கும். கோவைஇயல் (சுரயியல்), பண்ணியல், தாளவியல், கொட்டு முழக்காகிய இசைக் காலக் கணக்கியல், இசைக்கருவிகளின் தோற்றம், தொன்மை வளர்ச்சி, இசைப் பெரியார்களின் வரலாறு அனைத்தும் அடங்கியதே இசையியல்' என்பார்.
இத்தகைய விரிந்த பொருள் கோடல் சார்ந்து இசையியல் பற்றிய தேடலிலும் ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட்ட ஒரு முன்னோடி வீ.ப.கா. சுந்தரம். இவர் தமிழ்மொழியில் தமிழிசை துளிர்க்க வேண்டும் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமே முன்வைக்காமல் செயல்வாதம் மிக்க சிந்தைனையாகவும் முன்வைத்துச் செயற் பட்டவர். அவரது வார்த்தையில் கூறுவதா னால், 'தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, சேந்தன் திவாகரம், பிங்கலம் ஆகிய நூல்கள் தொன்மைக் காலத் தமிழிசை நிலையைக் கூறுவன. வளர்ந்தோங்கிய இசைநிலையைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலும் அதன் அரும்பத உரையிலும், அடியார்க்கு நல்லார் உரையிலும் காணலாம். சிலப்பதி காரத்தில் இசையியல் குவிந்து மலை மலையாய் உள்ளது. அதற்கடுத்து தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், மணி மேகலை, சீவகசிந்தாமணி, யாப்பருங்கல விருத்தியுரை, கல்லாடம், பெரிய புராணம் முதல் திருவிளையாடற் புராணம் வரை உள்ள தமிழ் இலக்கியக் கருவூலங்களில் இசைக் கருத்துக்கள் ஆங்காங்கு மழை நீர், குமிழிகளில் நிறைந்து நிற்பது போல் நிறைந்து நிற்கின்றன. அவற்றைத் தொகுத்தும் வகுத்தும் புது இசைவரலாற்று நூல்களும் எழுதுதல் வேண்டும். இவற்றைத் தெலுங்குக் கீர்த்தனை பாடும் இசை மேதைகளால் எழுத முடியாது. தமிழ் இலக்கிய அறிவு மட்டும் உடைய புலவர்களால் எழுத முடியாது. தமிழ் இலக்கிய அறிவும் இசையறிவும் படைத்த தமிழ்ப் பெரும் புலமையோரால் மட்டுமே எழுத முடியும்.
வீ.ப.கா.வின் இந்தச் சிந்தனை மூலம் தமிழிசையின் வேர்கள் கண்டறியப்பட்ட வேண்டும். அதன் தொடர்ச்சி பேணப்பட வேண்டும். பன்மைத்துவ சமூகப் பின்புலத்தில் வாழ்வதற்கான இசைப் பண்புகள் நமக்கான இருப்பின் அடையாளமாகவும் அடையாளத் தின் இருப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வழியில் இசையியல் பற்றிய தேடல் ஆய்வு இனித் தொடர வேண்டும். அப்பொழுது வீ.ப.கா. சுந்தரம் வெளிச்சம் பாய்ச்சுவார்.
தெ. மதுசூதனான் |
|
|
|
|
|
|
|
|