Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
முன்னோடி
சி. வை. தாமோதரம்பிள்ளை
- மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2004|
Share:
Click Here Enlargeபத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர். சிலப்பதிகாரம் என்ற தொடர் நிலைச் செய்யுளை சிறப்பதிகாரம் எனக் குறிப்பிட்டவர்களும், பத்துப்பாட்டு எவை எனத் தெரியாத பண்டிதர்களும் மலிந்திருந்தது அக்காலம். சங்கம் மருவிய நூல்களென வழங்கப்பட்டனவும், நீதி ஆசாரங்கள் பற்றி நீண்ட காலமாக நம்மவர்க்கு எடுத்துரைத்து வந்திருப்பனவு மான பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள்கூட இன்னதென்பது தெரியாமல் 19ஆம் நுற்றாண்டின் பின்பகுதி முதல் மூதறிஞர் களுடையே பெரும்வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

ஆக, இன்று நாம் அறிந்து, பயின்று வைத்துள்ள நூல்கள் பற்றிய தகவல்கள், நூல்கள் பின்னர்தான் நமக்குக் கிடைக்கின்றன. பல நூற்றாண்டுகளாக ஏட்டுச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த தமிழ் நூல்கள் பல 19ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில்தான் மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்டு அச்சு வாகனமேறி நடமாடத் தொடங்கின.

தமிழில் முன்னர் ஏடுகளாகக் கிடந்த பழைய தமிழ் இலக்கியங்கள் 1835க்குப் பின்னரே அச்சிடப்பட்டன. அந்த ஆண்டில்தான் சுதேசிகள் அச்சு யந்திரசாலைகளை வைக்கும் சுதந்திரம் பெற்றனர். ஆகவே, தமிழிலக்கியப் பாரம்பரியத்தின் மீளுற் பத்தியில் 1835 ஒரு பிரிநிலைக் கோடாக அமைந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும் அதி முக்கியத்துவமுடையனவாக முகிழ்க்கத் தொடங்கிய சமூகக் காரணிகள் தமிழரிடையே புதிய விழிப்பு நிலைமையை ஏற்படுத்தின.

தமிழ் இலக்கியப் பாரம்பரியத் தொடர்ச்சியும், மரபுணர்ச்சியும் இற்றுப் போகின்ற நிலையை மாற்றிப் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சிகள் பரவலாக்கப்பட்டன. இந்த முயற்சியில் பிரக்ஞைப் பூர்வமாகச் செயல்பட்டவர்களுள் ஆறுமுகநாவலர், சி.வை.தா, உ.வே.சா. ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

''ஏடு எடுக்கும் போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முரிகிறது. ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை மறுத்து உழுது கிடக்கின்றது.''

இப்படிப் கூறுபவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. பழைய நூல்கள் இத்தகைய ஒரு நிலையை அடைவதற்கு ஏதோ காரணமிருக்க வேண்டுமென்று எம்மைச் சிந்திக்க வைக்கிறார். தாமே பழைய ஏடுகளை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார். பதிப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திப் பல நூல்களை வெளிக்கொண்டு வந்தார்.

ஈழத்தில் பிறந்து கல்வி கற்று வளர்ந்து வந்தாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து கல்வி கற்றுத் தொழில் புரிந்து தமிழ்ச் சிந்தனை மரபின் செழுமைகளை அடையாளம் காண அவர் மேற்கொண்ட உழைப்பு 'சி.வை.தா' வின் ஆளுமை விகசிப்பின் துலங்கலாகவே மாற்றமுற்றது. ஏட்டுப் பிரதிகளைத் தேடிச் சேர்ப்பதாகிய அரிய முயற்சியைத் தொடர்ந்து ஆய்வுக் கண்ணோட்டத்தையும் அறிவியல் பூர்வமான மனப்பான்மை சார்ந்து வளர்த்துக் கொண்டார்.

தமிழ் நூல்களின் பதிப்பு வரலாற்றிலே சி.வை. தாமோதரம்பிள்ளை(1832-1901)யின் பணிகள் குறிப்பிடத்தக்கவை. சி.வை. தாவுக்கு மரபுவழிக் கல்வியில் இருந்து ஆழம், நவின ஆங்கில வழிக் கல்வி வழிவந்த ஆராய்ச்சி மனப்பான்மை இவற்றின் இணைவினால் பெற்ற புதிய வகைச் சிந்தனையின் தளத்தில் தொழிற்பட்டார். சி.வை.தா. பதிப்பித்த நூல்களும், அந்நூல்களுக்கு அவர் எழுதிய பதிப்புரை களும் பல புதிய நோக்குகளை, செய்திகளை நமக்குத் தருகின்றன. பதிப்புத்துறை வளர்ச்சியில் அவற்றுக்குத் தனியான இடமுண்டு.

சி.வை.தா.வின் பதிப்புகள் வெளிவந்த காலத்தில் பாரதியார் அவரது பதிப்பு களைப் படித்துள்ளார். பாரதியார் தனது சுயசரிதையையே 'சின்னசங்கரன் கதை' என்று புனைகதையாகப் படைத்தவர். அக்கதையில் ஓரிடத்தில் பாத்திரவாயிலாக இவ்வாறு கூறுவார்.

''சென்னைப் பட்டணத்தில் சி.வை.தா. என்று மகாவித்துவான் இருந்ததாரே, கேள்விப்பட்டதுண்டா? அவர் 'சூடாமணி' என்னும் காவியத்தை அச்சிட்டபோது அதற்கெழுதிய முடிவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியேனும் கேட்டதுண்டா?'' இதன் மூலம் பாரதியார் சி.வை.தா.வின் பதிப்புகளைப் படித்தது மட்டுமல்லாமல் அவற்றின் மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.
சி.வை.தா. பதிப்பித்த நூல்களைக் கொண்டும், அவற்றுக்கு எழுதியுள்ள அரிய பதிப்புரைகளைக் கொண்டும் அவர் தம் பதிப்பு முறையை அறியலாம். அவர் எழுதிய பதிப்புரைகள் அனைத்தையும் தொகுக்கப்பட்டு 'தாமோதரம்' எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை சி.வை.தாவின் பதிப்புரைகள் அவ்வக் காலத்துத் தமிழ்ச் சரித்திரமாய் உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையதனவாய் அமையும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது பதிப்புரைகளின் முக்கியத்துவத்தை நன்கு தெளிவுபடுத்துகின்றன.

''பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை. கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதஐயர்'' என்று பழந்தமிழ் வெளியீடுகள் பற்றித் திரு.வி.க குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத் தக்கது.

சி.வை.தா. ஆறுமுகநாவலர் பரிசோதித்துக் கொடுத்த தொல்காப்பியம் சொல்லதி காரத்தை சேனாவரையரின் உரையுடன் 1868இல் பதிப்பித்து வெளியிட்டார். 11ம் நூற்றாண்டிலே புத்திமித்திரர் என்பவரால் ஆக்கப்பட்டதும் இடைக்கால இலக்கியங் களுக்கு இலக்கணமாக அமைந்ததுமான வீரசோழியத்தை 1881இல் பதிப்பித்து வெளியிட்டார். சங்ககாலத்துக்குரியதும் பழந்தமிழ் உரைநடையை எடுத்துக் காட்டுவதுமான இறையனார் களவியலுரையை 1883ஆம் ஆண்டில் வெளியிட்டார். தொல்காப்பியம் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியரின் உரையுடன் 1885ம் ஆண்டிலும் பதிப்பித்து வெளியிட்டார். தொடர்ந்து வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டதுமான இலக்கண விளக்கத்தை 1889இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்கினியர் உரையுடன் 1891 ஆம் ஆண்டிலும், தொல்காப்பியம் சொல்லதிகாரத்தை நச்சினார்க்கினியார் உரையுடன் 1892 ஆம் ஆண்டிலும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மை வாய்ந்த இலக்கண நூலாம் தொல் காப்பியத்தின் மூன்று அதிகாரங்களையும் பதிப்பித்து வெளியிட்ட பெருமை, தனிச்சிறப்பு தாமோதரம்பிள்ளைக்கு உரியதாகும்.

தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்படும் பொதுமரபில் முதல் நிலையைக் கடந்த, அடுத்த நிலையைத் தொடங்கியவர் சி.வை.தா. எனலாம். முதல் இலக்கண நூலான தொல்காப்பிய மூலத்தை மட்டும் ஒருவர் பதிப்பித்தார். மற்றொருவர் எழுத்த திகாரத்தை மட்டும் உரையுடன் பதிப்பித்தார்.

தாமோதரமோ தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பகுதிகளையும் நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். சேனாவரையர், பேராசிரியர் ஆகியோர் உரைகளையும் பதிப்பித்திருக்கிறார்.

ஒரு நூலுக்குத் தொடர்பான, வளர்ச்சியாக உள்ள நூல்களைத் தேடிப் பதிப்பிக்கும் எண்ணத்தை பதிப்பாசிரியரிடம் அவரே தோற்றுவித்தார். "தொல்காப்பியத்துக்கு பின்வந்த இலக்கண வளர்ச்சியைக் காட்டும் இறையனாரகப்பொருள், வீரசோழியம், இலக்கண விளக்கம் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். எல்லா இலக்கண நூல்களையும் பதிப்பித்தார்'' என்று எஸ்.டி. காசிராசன் கூறுவது ஆய்வு நோக்கில் நமது கவனத்துக்குரியது. மேலும் கலித்தொகை யையும் அவரே முதல் முதலில் பதிப்பித்து சங்க நூற்பதிப்புக்கு வழிகாட்டினார்.

1887 ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன் முதலாகப் பதிப்பித்த சி.வை.தா. பதிப்புரையிலே கூறியவை நினைக்கத் தக்கவை.

''எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்திரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா, ஆச்சரியம்! அயலான் அழியக் காண்கினும் மனந்தளும்புகின்றதே! தமிழ் மாது நுந்தாயல்லவா? இவள் அறிய நமக்கென்று வாளா இருக்கின்றீர்களா? தேசாபிமானம், மதாபிமானம், பாஷாபிமானமென்று இவையில்லாதார் பெருமையும் பெருமையா? இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக''

சி.வை.தா. காலத்தாலும் முயற்சியாலும் உ.வே.சாவுக்கு முற்பட்டவர். இவரது இந்தக் கூற்றில் பல செய்திகள் பொதிந் திருக்கின்றன. இத்தகையோரின் முன் முயற்சியினாலேயே நாளடைவில் தொல் காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார், களவியலுரை முதலியன திருத்தமுறப் பரிசோதிக்கப் பெற்று அச்சிடப்பட்ட வடிவில் நமக்கு நூல்களாகக் கிடைத்தன. தமிழ்நூல் பதிப்புப் பணியில் சி.வை.தா. நுண்ணிய தான அணுகுமுறைகளை அறிவியல் நோக்கில் வெளிப்படுத்தியுள்ளார். பதிப்புத்துறை வளர்ச்சிக்கு சில அடிப்படைகளை வழங்கிச் செல்கின்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நாவலர் விட்டுச் சென்ற பதிப்புப் பணியை சி.வை.தா. தொடர்ந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி நாவலர் பதிப்பு பணியின் காலம் என்றால், அந்த நூற்றாண்டின் பிற்பகுதி சி.வை.தா. வின் காலம் எனலாம். உ.வே.சா.வின் பதிப்புப் பணி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் தொடங்குகிறது.

இவ்வகையில் தமிழ் இலக்கியப் பதிப்புப்பணி வரலாற்றில் சி.வை.தா.வின் பங்களிப்பு மகத்தானது.

தெ. மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline