Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர்
- பா.சு. ரமணன்|செப்டம்பர் 2024|
Share:
சிறந்த கல்வியாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், இதழாளராகவும் திகழ்ந்தவர் தேசபக்தர் பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர். இவர் திருச்சி அருகேயுள்ள லால்குடியில் மகாதேவ ஐயர் - பிரவர்த்த ஸ்ரீமதி தம்பதியருக்கு 1878ல் பிறந்தார். தந்தை மதுரை நீதி மன்றத்தில் சிரஸ்ததார் ஆகப் பணியாற்றினார். அவரிடமிருந்தும், வீட்டுக்கு வந்து சொல்லித் தந்த ஆசிரியர்களிடமிருந்தும் தொடக்கக் கல்வி கற்றார். எஃப்.ஏ.வரை கல்வி பயின்ற அவர், சோழவந்தான் அரசன் சண்முகனாரிடம் தமிழ் பயின்றார். தமிழ்ப்பண்டிதர் தேர்வில் வென்று மதுரைக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியமர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ம. கோபாலகிருஷ்ண ஐயரின் மனைவி தர்மாம்பாள். இவர்களுக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள். ம. கோபாலகிருஷ்ண ஐயர் ஆன்மீகத்திற்குத் தனது தாய்வழிப் பாட்டனாரை குருவாகக் கொண்டார். இருபத்து மூன்றாம் வயதில் மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அதன் தலைவராகப் பணியாற்றினார். அதன் மூலம் பல தமிழிலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். இச்சங்கத்தின் சார்பில் நச்சினார்க்கினியரின் பெயரில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக அங்கத்தினராக இருந்த ம. கோபாலகிருஷ்ண ஐயர், அக்காலத்தின் புகழ் பெற்றிருந்த நச்சினார்க்கினியன் மற்றும் விவேகோதயம் இதழ்களின் நிறுவன ஆசிரியராகப் பணியாற்றினார். 1909ல் கந்தசாமிக் கவிராயருடன் இணைந்து 'வித்யாபானு' என்னும் இதழை நடத்தினார். 'விவேகோதயம்' இதழின் சந்தாவில் மகளிருக்குத் தனிச்சலுகை அளித்தார். தன் சகோதரி பாலம்மாளைத் துணை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தினார். வ.உ. சிதம்பரம் பிள்ளை, "தங்கள் பத்திரிகை ஒன்றே என்னால் விரும்பப்படும் பத்திரிகை" என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.



கோபாலகிருஷ்ண ஐயர், மதுரை விவேகானந்தர் சங்கத்தின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார். விவேகானந்தர் 1895ல் நியூயார்க்கில் 'Song of the Sanyasin' என்ற தலைப்பில் இயற்றிய 13 பாடல்களைத் தமிழாக்கம் செய்து 1904ல் 'விவேகசிந்தாமணி'யில் வெளியிட்டார். 'சுதேசமித்திரன் ஜி. சுப்பிரமணிய அய்யர்' நினைவு நிதி திரட்ட முடிவு செய்தபோது, அந்த நிதியில் குறைந்தது 50 விழுக்காடு நிதியை ஒரு பெண்கள் பள்ளி நிறுவவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்க வேண்டும் என்று தனது பத்திரிகையில் எழுதினார். 1907ல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்கு மதுரையில் இருந்து சென்றவர்களில் ம.கோபாலகிருஷ்ண ஐயரும் ஒருவர். அம்மாநாடு குறித்து விவேகபாநு இதழில் கட்டுரை எழுதினார்.

ரவீந்திரநாத் தாகூர் மதுரை வந்தபொழுது வாழ்த்துக் கவிதை வாசித்து அவரை வரவேற்றார். பாரதியார் எட்டையபுரத்தை விடுத்து மதுரைக்கு வந்தபோது, அவருக்குப் பல விதங்களில் உதவியாக இருந்தார். பாரதியார் 'சுதேசமித்திரன்' இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்ற உதவியவராக ம. கோபாலகிருஷ்ண ஐயர் அறியப்படுகிறார். பாஸ்கர சேதுபதி மன்னருடன் பாம்பனுக்குச் சென்று சுவாமி விவேகானந்தரை வரவேற்ற குழுவினருள் இவரும் ஒருவர். அரசன் சண்முகனார் 'வள்ளுவர் நேரிசை' என்னும் பெயரில் எழுதிய நூறு வெண்பாக்களுக்கு, அரும்பதவுரையும் விளக்கமும் எழுதி தன் 'விவோகோதயம்' இதழில் வெளியிட்டார். 1919ல் அதை நூலாக்கி வெளியிட்டார்.

பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர் நூல்கள்
சன்யாசி கீதம், அரும்பொருட்டிரட்டு , அரசன் சண்முகனாரின் வள்ளுவர் நேரிசை - உரை , விசுவநாதன் அல்லது கடமை முரண் , மௌனதேசிகர் , புதல்வர் கடமை , ம.கோ. களஞ்சியம் - தொகுப்பாசிரியர் உஷா மகாதேவன்


ம. கோபாலகிருஷ்ண ஐயர் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்த கவிதைகள் 'அரும்பொருட்டிரட்டு' என்னும் தலைப்பில், தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின. பெத்தாச்சி செட்டியார் நிதியுதவி செய்ய, மதுரை தமிழ்ச் சங்கத்தால் இந்நூல் வெளியிடப்பட்டது. ஷேக்ஸ்பியர் முதல் டென்னிசன் வரையிலான நானூறு வருட ஆங்கில இலக்கிய மரபில் இருந்து கவிதைகளைத் தேர்வுசெய்து தமிழாக்கம் செய்திருந்தார் ம. கோபாலகிருஷ்ண ஐயர். அறிவியல், அரசியல், சமூகவியல் மற்றும் இலக்கியம் சார்ந்து எழுதியுள்ள அவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'ம.கோ.களஞ்சியம்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், நாடகம் என நூற்றுக்கணக்கில் படைத்துள்ளார்.

சிதம்பரம் மீனாட்சி கல்லூரி, அண்ணாமலை பல்கலைக் கழகமாக மாற்றும் பணி நடைபெற்றபோது 1927ல் ம. கோபால கிருஷ்ண ஐயருக்குத் தமிழ்த்துறைத் தலைவர் பொறுப்பேற்க அழைப்பு விடுத்தனர். ஆனால், உடல்நிலை மோசமடைந்ததால் அதே ஆண்டு ஏப்ரலில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்குப் பின் பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயரின் வாழ்க்கையை 'பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர்' என்ற தலைப்பில் சாகித்ய அகாடமிக்காக ம. கோபாலகிருஷ்ண ஐயரின் பேத்தி உஷா மகாதேவன் எழுதியுள்ளார். ஐயரின் 'அரும்பொருட்டிரட்டு' நூலை மறுபதிப்பாக வெளியிட்டுள்ளார். ம. கோபாலகிருஷ்ண ஐயரின் படைப்புகளை 'ம.கோ.களஞ்சியம்' என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டார்.

தமிழர்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய முன்னோடித் தமிழறிஞர்களுள் ஒருவர் பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர்.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline