Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார்
- பா.சு. ரமணன்|நவம்பர் 2024|
Share:
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, சொற்பொழிவு எனப் பல பிரிவுகளிலும் மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்தவர், கோடகநல்லூர் ராமஸ்வாமி ஸ்ரீநிவாச ஐயங்கார் என்னும் கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார். இவர் ஏப்ரல் 17, 1908-ல், திருநெல்வேலியில் உள்ள கோடகநல்லூரில், பி. ராமஸ்வாமி ஐயங்கார் – லக்ஷ்மி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்று 1928ல் இளங்கலை பட்டம் பெற்றார். 1932ல் முதுகலை பட்டம் பெற்றார். பத்மாசினி அம்மாளுடன் திருமணம் நடந்தது.

ஸ்ரீநிவாச ஐயங்கார் இலங்கை வல்வெட்டித்துறை சித்தமன்னார் வித்தியாலயத்தில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார். பெல்காமில் உள்ள லிங்கராஜ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இளவயது முதலே ஸ்ரீநிவாச ஐயங்கார் ஸ்ரீ அரவிந்தரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். அவை குறித்துப் பல கட்டுரைகளை, நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். முதன்முதலில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியவர் கே.ஆர். ஸ்ரீநீவாச ஐயங்கார்தான். 1939ல், சென்னை பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ அரவிந்தரின் 'சாவித்ரி' குறித்து மிக விரிவாக ஆய்வு செய்து டி.லிட். பட்டம் பெற்றார்.

ஸ்ரீநிவாச ஐயங்கார் 1944-ல் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வர் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1947-ல் ஆந்திரப் பல்கலையில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார். 1966-ல் ஆந்திரப் பல்கலையின் துணை வேந்தரானார். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள சில கல்லூரிகளின் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.



ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் பக்தராக விளங்கிய ஸ்ரீநிவாஸ ஐயங்கார், தனது வாழ்க்கையை ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னைக்காக அர்ப்பணித்து வாழ்ந்தார். ஸ்ரீ அன்னையின் பூரண அருளும் ஆசியும் பெற்றவராகத் திகழ்ந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம டெல்லி கிளையின் தலைவராக ஸ்ரீ அன்னையால் நியமிக்கப்பட்டார். இலக்கியம், இந்திய நிர்வாகம், அரசியல், பொருளாதாரம், அறிவியல் எனப் பல துறைகளில் ஐயங்கார் மேதைமை பெற்றிருந்தார். அவை குறித்துப் பல கட்டுரைகள், நூல்களை எழுதினார்.

ஐயங்காரின் ஆங்கிலப் புலமையின் பெருமை கடல்கடந்தும் பரவியிருந்தது. உலக அளவில் ஷேக்ஸ்பியரின் 400-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1964ல் இங்கிலாந்தில் நடைபெற்றபோது, அதற்கு ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஆங்கில அறிஞர் கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார்தான். இந்திய அமெரிக்க இலக்கியங்களை ஒப்பிட்டு இவர் எழுதியிருக்கும் ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தவையாக அறியப்படுகின்றன. கே.ஆர். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஆங்கிலம் மற்றும் மேலை மொழிகள் நிறுவனத்தின் உறுப்பினராகவும், ஐக்கிய அமெரிக்க நவீன மொழிக் கூட்டமைப்பின் கௌரவ உறுப்பினராகவும், அகில இந்திய ஆங்கிலப் பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். உலக அளவில் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.

கே.ஆர். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆதிசங்கரர், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், சுந்தரகாண்டம், கிருஷ்ண கீதம் போன்ற இவரது ஆங்கில நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. எழுத்து, மொழிபெயர்ப்பு மட்டுமல்லாமல் பல நூல்களின் பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ஆங்கிலக் கவிதைகள் நூலின் தொகுப்பை வெளியிட்டது.

கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் நூல்கள்
Lytton Strachey (1938), Indo-Anglian Literature (1943), Literature and authorship in India (1943), The Indian contribution to English literature (1945), Sri Aurobindo - Biography (1945), Gerard Manley Hopkins (1948), The Mind and Heart of Britain (1955), The Adventure of Criticism (1963), Francis Mauriac: Novelist and Moralist (1963), Shakespeare: His work and his Art (1964), Education and the new India (1967), Rabindranath Tagore (1965), Mainly academic talks to students and teachers (1968), Guru Nanak - A Homage (1973), On the Mother (1978), Indian Writing in English (1983), Australia helix (1983), Sitayana (1987), English translation of the Tirukkural (1988), Saga of seven mothers (1991), Krishna-geetam (1994), மற்றும் பல


கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், இந்திய ஆங்கில இலக்கிய ஆய்வில் முன்னோடியாகத் திகழ்ந்தார். அவரது பெரும்பாலான இலக்கிய விமர்சனங்கள் பிரிட்டிஷ் எழுத்தாளர்களைப் பற்றியது. ஷேக்ஸ்பியர் முதல் டி.எஸ். எலியட் வரை பலரைப்பற்றி எழுதியிருக்கிறார். ஐரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார். அமெரிக்க, ஆப்பிரிக்க எழுத்தாளர்களைப் பற்றியும் பல கட்டுரைகளை எழுதினார்.

கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், சாகித்ய அகாதமி நிறுவனத்தின் தலைவராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969 முதல் 1978 வரை சுமார் எட்டாண்டு காலத்தில் அகாதமியில் இவர் ஆற்றிய இலக்கியப் பணிகள் குறிப்பிடத் தக்கவையாக அமைந்தன. சிறந்த தமிழ் இலக்கியப் படைப்புகள் பலவறை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தார்.

கே.ஆர். ஸ்ரீநிவாஸ ஐயங்காரின், ஆங்கில நூலான On the Mother: The Chronicle of a Manifestation and Ministry, 1980-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. இவரது 'For the Sake of Honour' நூல் 1983-ல் பபாசி விருது பெற்றது. The Pen நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1990-ல் காளிதாஸ் நாக் மெமோரியல் விருது பெற்றார்.

ஐயங்கார் சிறந்த வாசிப்பாளர். தினந்தோறும் வாசித்துக்கொண்டே இருந்தவர். தன் இல்லத்தில் நூலகம் ஒன்றை வைத்திருந்தார். அதிலிருந்த நூல்கள் அனைத்தையும் அவர் முழுக்கப் படித்திருந்தார். குறிப்பெடுத்து வைத்திருந்தார். வாழ்வின் இறுதிக்கட்டத்தில் சில ஆண்டுகள் பார்வையற்று இருந்தபோதும், புத்தகங்களை நேசிப்பவராக இருந்தார்.



கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், ஏப்ரல் 15, 1999ல், 91ம் வயதில் காலமானார்.

கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்காரின் மகன் பேராசிரியர் எஸ். அம்பிராஜன், உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர். உலக அளவிலான இதழ்களில் பல நூல்களை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மகள் முனைவர் பிரேமா நந்தகுமார் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பேச்சாளர், எழுத்தாளர், திறனாய்வாளர்.

கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் கல்வியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், பேச்சாளர், இலக்கிய விமர்சகர் எனப் பல துறைகளிலும் சாதனை படைத்த முன்னோடி அறிஞர்.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline