Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
முன்னோடி
பல்லடம் சஞ்சீவராவ்
- பா.சு. ரமணன்|நவம்பர் 2017|
Share:
ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருவர் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு தேசம், சுதந்திரம், போராட்டம், மிதவாதம், தீவிரவாதம் என்றெல்லாம் சென்று கடைசியில் இசையில் வந்து முடிந்தது. முதலாமவர், "நீங்கள் என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள் எங்களுடைய ஹிந்துஸ்தானி சங்கீதம்தான் உயர்ந்தது. அதற்கு நிகர் கிடையாது" என்றார். இரண்டாமவர், "இல்லை இல்லை. நீங்கள் கர்நாடக சங்கீதம் அதிகம் கேட்டிருக்க மாட்டீர்கள். அதனால்தான் இப்படிச் சொல்கிறீர்கள். ஒருமுறை கேட்டால் இப்படிச் சொல்ல மாட்டீர்கள்" என்றார். முதலாமவர் ஒப்புக்கொள்ளவில்லை. "நீங்கள் என்ன சொன்னாலும் சரி, எங்களுடைய வங்காள, ஹிந்துஸ்தானி சங்கீதத்திற்கு இணை ஏதும் இருக்கவே முடியாது" என்றார். வாதம், விவாதமாகி மாறி சண்டையாகி விடுமோ என்ற சூழல்.

அப்போது இரண்டாமவரின் கவனம் எதிரே இருந்த துணிக்கடையை நோக்கிச் சென்றது. அதில் அவருக்குத் தெரிந்த இசைக்கலைஞர் ஒருவர் புடவை வாங்கிக் கொண்டிருந்தார். மகளின் திருமணத்திற்காக புடவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார் அவர். அவற்றை வீட்டில் போய்க் காட்டி ஒப்புதல் வாங்கி வருவதற்காக கடைப்பையனை உடனடியாகக் கட்டித்தரச் சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டாமவர் தனது வேலையாளை கடைக்கு அனுப்பி அவரை அழைத்து வரச்சொன்னார். அழைப்பது யார் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியுடன் வந்தார் இசைக்கலைஞர். வந்தவரை வரவேற்று, எதிரே அமர்ந்திருந்த முதலாமவரைச் சுட்டிக்காட்டி, "இவர் சிறந்த தேசபக்தர். வடநாட்டில் இருந்து இங்கே வந்திருக்கிறார். இவருக்கு நம்முடைய கர்நாடக சங்கீதத்தின் அருமை தெரியவில்லை. நான் என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை. நீங்கள்தான் அவருக்கு அதன் பெருமையை உணர்த்த வேண்டும்" என்று பணிந்து கேட்டுக்கொண்டார்.

"ஆஹா... தாராளமாக" என்று ஒப்புக்கொண்டார் வந்த இசைக்கலைஞர். வேலையாளை அனுப்பி அருகே இருந்த இசைப்பள்ளியிலிருந்து புல்லாங்குழலை வாங்கிவரச் செய்தார்.

Click Here Enlargeவாசிக்க ஆரம்பித்தார் இசைக்கலைஞர். வாசிக்க வாசிக்கத் தன்னை மறந்தார் முதலாமவர். சிறிது நேரத்தில் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. தேவகாந்தாரி ராகத்தில் அமைந்த "க்ஷீரசாகர சயனா" என்ற கீர்த்தனையை வாசிக்க ஆரம்பித்ததும் அப்படியே உருகிப் போய்விட்டார் ஹிந்துஸ்தானி பிரியர். "ஆஹா ஆஹா. உண்மை, உண்மை. கர்நாடக சங்கீதத்திற்கு ஈடு இணையே இல்லை என மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்" என்று சொல்லி இரண்டாமவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் உகுத்தார்.

இப்படி இசைகேட்டு உருகிப்போன முதலாமவர் சித்தரஞ்சன் தாஸ் என்னும் தேசபந்து சி.ஆர். தாஸ். அவரிடம் கர்நாடக சங்கீதத்தின் பெருமையைப் பேசியவர் கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார். தனது இன்னிசையால் இருவரையும் உருகவைத்தவர் பல்லடம் சஞ்சீவ ராவ். இவர், கோயமுத்தூர் அருகே பல்லடத்தில், அக்டோபர் 18, 1882ல் பிறந்தார். தந்தை வெங்கோபாச்சாரியார் ஆஞ்சநேய உபாசகர். சம்ஸ்கிருத பண்டிதரும்கூட. ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், பல்லடத்தில் மந்த்ராலயம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் வழிபட்டு வந்தார். தொடர் பூஜா பலன்களால் தெய்வீக சக்திகளும் அவருக்கு வாய்த்திருந்தன. அதன் மூலம் பலரது நோய்களை நீக்கி நற்பணிகள் செய்துவந்தார். இதை அறிந்தார் சேலத்தைச் சேர்ந்த நரசிம்மய்யா என்ற இசைக்கலைஞர். ஜமீந்தாரான அவர் ஷட்கால நரசிம்மம் என்று போற்றப்பட்டவர். அவருக்கு வெகுநாட்களாக உடல்நலப் பிரச்சனைகள் இருந்துவந்தன. பல மருத்துவர்களைக் கண்டும் குணமாகவில்லை. ஆகவே தெய்வீக ஆற்றலால் தன் நோய் குணமாகும் என்று வெங்கோபாச்சாரியாரை நாடி வந்தார்.

வெங்கோபாச்சாரியார் அவரது நிலை கண்டு மனமிரங்கினார். இறைவனிடம் பிரார்த்தித்து மருந்துகள் கொடுத்ததுடன் தனது மந்திர சக்தியைப் பிரயோகித்தும் தொடர் சிகிச்சை அளித்து வந்தார். சில வாரங்களிலேயே நரசிம்மத்தின் நோய் முற்றிலும் மறைந்து போனது. பழைய நிலைக்கு மீண்டார். வெங்கோபாச்சாரியாரின் உதவிக்கு நன்றி பாராட்டும் வகையில், ஆச்சாரியாரின் இரண்டாவது மகனான பிராணநாதாச்சாரியாரை தனது சீடராக்கிக் கொண்டார். அவருக்கு வயலின் வாசிப்பதில் சிறந்த பயிற்சி அளித்தார். நாளடைவில் முழுவதுமாக வயலின் வாசிப்பதில் தேர்ந்தவரானார் பிராணநாதாச்சாரியார். அவரையே தனது முதல் குருவாகக் கொண்டு அவரிடம் வயலின் வாசிக்கக் கற்றார் சிறுவனான சஞ்சீவராவ். சில ஆண்டுகளில் தந்தை காலமானார். மூத்த சகோதரர் பீமாச்சாரியார் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஒரு சமயம் பீமாச்சாரியார் சத்தியமங்கலத்துக்குச் செல்ல நேர்ந்தது. சிறுவன் சஞ்சீவராவும் உடன் சென்றார். அங்கு ஓரிடத்தில் வேணுகான சிம்மமாக விளங்கிய சரப சாஸ்திரிகளின் இசைக்கச்சேரி நடைபெற இருந்தது. சரப சாஸ்திரிகள் பார்வையற்றவர். மிகச் சிறந்த இசைஞர். அதுவரை பக்கவாத்தியமாக இருந்த புல்லாங்குழலுக்குத் தனிக்கச்சேரி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். பாம்புகள் படமெடுத்து ஆடுமளவிற்குப் புல்லாங்குழல் வாசிப்பதில் தேர்ந்தவர் என்று அக்காலத்தில் பெயர் பெற்றிருந்தார். சகோதரர்கள் இருவரும் அவரது கச்சேரியைக் கேட்க முடிவுசெய்து அங்கேயே தங்கினர். மாலையில் கச்சேரி ஆரம்பித்தது. இருவரும் கேட்டு மெய்மறந்தனர். இசை கேட்டு மிகவும் மனம் நெகிழ்ந்திருந்த பீமாச்சாரியார், சரப சாஸ்திரிகளை அணுகி, சஞ்சீவராவைப் பற்றிச் சொல்லி, "இவன் நன்றாகப் பிடில் வாசிப்பான். குழல் வாசிக்க நீங்கள்தான் குருவாக இருந்து பயிற்சி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

வெங்கோபாச்சாரியாரைப் பற்றி முன்னரே அறிந்திருந்த சரப சாஸ்திரிகள், அடக்கமே உருவாக இருந்த சஞ்சீவராவுக்கு இசை பயிற்ற இசைந்தார். கும்பகோணத்தில் தன் இல்லத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். கும்பகோணம் சென்று ஒரு நன்னாளில் சரப சாஸ்திரிகளிடம் சீடராகச் சேர்ந்து வேணுகானம் பயிலத் துவங்கினார் சஞ்சீவராவ்.

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் அவரிடம் குருகுலவாசமாக இசை கற்றார். தானறிந்த அத்தனை இசை நுணுக்கங்களையும் முழுமையாகச் சீடனுக்குப் போதித்தார் சரப சாஸ்திரிகள். குழலின் நுணுக்கங்கள், நாதம், பாவம், வெளிப்பாடு என எல்லாவற்றையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார் சீடர். திடீரென ஒருநாள் சரப சாஸ்திரிகள் காலமானார். காலமாகும் சமயத்தில் தனது புல்லாங்குழலை சஞ்சீவராவின் கையில் கொடுத்து தலையில் கைவைத்து ஆசிர்வதித்து விடைபெற்றார்.

Click Here Enlargeகுருவின் மறைவுக்குப்பின் தனியாகக் கச்சேரி செய்ய ஆரம்பித்தார் சஞ்சீவராவ். சரப சாஸ்திரிகளைப் போலவே இவரும் சக கலைஞர்களால் மதிக்கப்பட்டார். குருவின் பாணியைப் பின்பற்றியும் தானாக பல புதுமைகளைச் செய்தும் புல்லாங்குழல் கச்சேரிக்கு ஒரு தனித்த கௌரவத்தை ஏற்படுத்தினார். பாமர மக்களும் ரசிக்கும்படியாகப் புல்லாங்குழல் இசையைக் கொண்டு சேர்த்தார். துளைகளில் விரல்களை வைத்து இசை எழுப்புவதில் சில புதுமைகளைக் கையாண்டார். இவரது புகழ் நாடெங்கும் பரவியது. பல இசைக்கலைஞர்களும் இவருடன் வாசிப்பதில் ஆர்வம் காட்டினர். இவரும் பல முன்னணி இசைக்கலைஞர்களுடன் இணைந்து வாசித்தார். திருக்கோடிகாவல் கிருஷ்ணய்யர், கோவிந்தசாமிப் பிள்ளை, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், பாலக்காடு மணி ஐயர் போன்றோருடன் பல கச்சேரிகள் செய்துள்ளார். பல இசைக்கலைஞர்கள் இவருக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சஞ்சீவராவ் இல்லத்தின் கிரகப்பிரவேசத்திற்கு அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்தான் கச்சேரி செய்தார். பக்கம் வாசித்தவர் பாலக்காடு மணி ஐயர். திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவிலும் சஞ்சீவராவ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் பாடிப் பிரபலமான "சேதுலரா" என்ற கீர்த்தனை இவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இன்றளவும் தியாகராஜ ஆராதனை விழாவில் புல்லாங்குழல் கலைஞர்களால் வாசிக்கப்படுகிறது என்பதிலிருந்தே இவரது பெருமையைத் தெரிந்து கொள்ளலாம்.

இவரது இசைத்திறன் பற்றி, "வசீகர சக்தி பொருந்திய இவரது வாசிப்பில் தனியான ஓர் ஜிலிஜிலுப்பும், ஒப்பற்ற பூரிப்பும் நிறைந்து கிடக்கின்றன. ராகங்களை எண்ணியவாறெல்லாம் விஸ்தாரமாகவோ அல்லது சாயை மட்டும் காட்டிச் சுருக்கமாகவோ ரஞ்சகமாக வாசிக்கும் சக்தி அவரது வாசிப்பின் முக்கியாம்சங்களில் ஒன்று. கர்நாடக சங்கீத சுத்தம், ச்ருதிலீயம், சூஸ்வரம், பாணி முதலிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமைந்த வாசிப்பு. 4 மணி ஆகட்டும்; 5 மணி ஆகட்டும். தொடர்ச்சியாக அவர் கச்சேரியைக் கேட்க முடியும். அலுப்போ, சலிப்போ சற்றும் ஏற்படாது. கேட்கக் கேட்கத் தெவிட்டாத இனிமை அவரது வாத்தியத்தில் பொருந்தி நிற்கிறது" என்று புகழ்ந்துரைக்கிறார் சஞ்சீவராவின் சீடரும், புகழ்பெற்ற இசைக்கலைஞருமான வேணுகானம் நாகராஜராவ். "சஞ்சீவராவ் அடக்கமே உருவானவர். ஸ்ரீ தியாக பிரும்ம கீர்த்தனங்கள் அனேகம் இவருக்கு சுத்தமாகப் பாடாந்தரம் உண்டு. இவருக்கு ஏற்பட்டிருக்கிற யோக்யதைக்கும், கியாதிக்கும் கிரமமாய் ஏற்படக்கூடிய கர்வம் சிறிதுமில்லாமல் பரிசுத்தமான மனதை உடையவராய் வாழ்கிறார். எல்லோருடனும் வெகுசுலபமாகப் பழகக் கூடியவர். அனேக ராகங்களை இவர் கையாண்டு வந்தாலும் முக்கியமாய் தோடி ராகத்தை வாசிக்கும்பொழுது சுத்த ரிஷப சுத்த காந்தாரங்களை இவர் சுத்தமாய்ச் சேர்த்து உயர்ந்த பாணியுடன் வாசிப்பது ஒருவரிடத்திலும் அமையவில்லை என்று சொல்லலாம்" என்று மனம் திறந்து பாராட்டுகிறார் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர்.

சஞ்சீவராவின் இசைக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. அதனால் அக்காலத்தின் பிரபல கொலம்பியா ரெகார்ட்ஸ் நிறுவனம் இவரது கிராமஃபோன் தட்டுக்களைத் தொடர்ந்து வெளியிட்டது. புரந்தரதாஸரின் மீது சஞ்சீவராவுக்கு பக்தி அதிகம். அதனால் தாஸரின் உற்சவத்தை ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடத்தி வந்தார். சங்கீத நாடக அகாதமி விருதுபெற்ற முதல் இரு இசைக்கலைஞர்களுள் சஞ்சீவராவும் ஒருவர். (மற்றவர் மைசூர் வாசுதேவாச்சார்). சென்னை மியூசிக் அகாதமி வழங்கிய சங்கீதகலாநிதி விருது, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி வழங்கிய சங்கீத கலாசிகாமணி விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். "வேணுகான சிகாமணி" என்று போற்றப்பட்ட இவர், அக்காலத்தின் பல்வேறு சபாக்களாலும், இசை அமைப்புகளாலும் பாராட்டப்பட்டிருக்கிறார்.

மாலி என அழைக்கப்படும் டி.ஆர். மகாலிங்கம் பிரபலமாவதற்கு முன்னால் புல்லாங்குழல் சக்கரவர்த்தியாக விளங்கியவர் சஞ்சீவ ராவ்தான். அவரது சில பாடல்களை இங்கே கேட்கலாம் :









குழலின் இசை பரப்பிய சஞ்சீவராவ் ஜூலை 12, 1962ல் காலமானார். பல்லடம் நாகராஜராவ், திருச்சி ராமச்சந்திர சாஸ்திரி போன்றோர் இவரது மாணவர்கள். புகழ்பெற்ற பாடகர் பிரசன்னா இவரது கொள்ளுப்பேரன். கர்நாடக இசையுலகின் மணிமகுடங்களில் ஒருவர் சஞ்சீவராவ்.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline