|
|
|
"அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை", "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே", "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா", "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்", "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே", "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா", "நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்..." போன்ற பல அற்புதமான, கருத்துச் செறிந்த பாடல்களைத் தந்தவர் கவி கா.மு. ஷெரீப். இவர் செப்டம்பர் 11, 1914 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குழந்தை விநாயகர் கோட்டை என்ற சிற்றூரில், காதர்ஷா ராவுத்தர், முகமது இப்ராகிம் பாபாத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டார். தந்தையின் ஏற்பாட்டின்படி வீட்டுக்கே வந்து ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுத்தார். தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சமூகம், வரலாறு என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களை ஆர்வத்தோடு ஆழ்ந்து கற்றார்.
சிறுவயதிலேயே நாடக ஆர்வம் இருந்தது; பாட்டெழுதும் திறனும் இயல்பாகவே இருந்தது. இவரது முதல் கவிதை 1934ல் 'குடியரசு' இதழில் வெளியானது. தொடர்ந்து இலக்கிய, அரசியல் இதழ்களில் கவிதைகள் எழுதினார். பாரத சுதந்திரப் போராட்ட ஈர்ப்பினால் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அதுகுறித்து விழிப்புணர்வுக் கவிதைகளை இதழ்களில் எழுதினார். 'ஆத்திரம் கொள்' என்னும் கவிதை அவற்றில் குறிப்பிடத் தகுந்தது. தனது கவிதைகளைத் தொகுத்து 'ஒளி' என்ற நூலாக வெளியிட்டார். 1946ல் வெளியான அதுதான் இவரது முதல் நூல். தொடர்ந்து 'ஒளி' என்ற தலைப்பில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினார். அதன்மூலம் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. கவிதைகளோடு கூடவே விழிப்புணர்வு நாடகங்களையும், நாடகங்களுக்குப் பாடல்களையும் எழுதி வந்தார். அறிஞர் அண்ணாவின் 'சந்திரமோகன்' நாடகத்திற்காக இவர் எழுதிய 'திருநாடே' என்ற பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'கொலம்பியா' கிராமஃபோன் நிறுவனத்தின் இசைத்தட்டுகளுக்காகப் பல பாடல்களை எழுதினார்.
இக்கால கட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு ஏற்பட்டது. சாவித்திரி அம்மாள் எழுதிய 'மாயாவதி' என்னும் படத்துக்குப் பாடல் எழுத ஷெரீப் ஒப்பந்தமானார் "அல்லியின் வெண்ணிலா வந்ததுபோல்" என்னும் அப்பாடலை ஏ.பி. கோமளா பாடினார். அதுதான் திரைப்படத்திற்காக ஷெரீப் எழுதிய முதல் பாடல். அதுமுதல் நண்பர் அ. மருதகாசியுடன் இணைந்தும் தனியாகவும் பல படங்களுக்குப் பாடல்களை எழுதினார். "வாராய் நீ வாராய்", "உலவும் தென்றல் காற்றினிலே" போன்ற பாடல்களை இவர் மருதகாசியுடன் இணைந்து எழுதியிருக்கிறார். எந்த வரி யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருவரும் இணைந்து பல பாடல்களை எழுதியிருக்கின்றனர். பாடல்களில் தன் பெயர் இடம்பெறா விட்டாலும்கூட நட்புக்கருதி அதனைப் பெரிதுபடுத்தாத பெருந்தன்மை மிக்கவராக ஷெரீப் இருந்தார்.
ஷெரீப் திறமைமிக்க பலரைத் திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். தனக்கு நன்கு அறிமுகமான கலைஞர் மு. கருணாநிதியை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், கருணாநிதி நாடகமாக நடத்திக்கொண்டிருந்த 'மந்திரிகுமாரி' கதையின் உரிமையை விலைகொடுத்து வாங்கியதுடன், தனது நிறுவனத்திலேயே மாத ஊதியத்திற்கு திரைக்கதை, வசன ஆசிரியராக அவரை நியமித்தார். கருணாநிதியின் வாழ்க்கை புதியதளத்தில் துவங்கக் களம் அமைத்துக் கொடுத்தவர் ஷெரீப்தான். இதனைக் கலைஞர் பல மேடைகளில் குறிப்பிட்டு நன்றி பாராட்டியிருக்கிறார்.
எம்.ஏ. வேணுவின் நட்பு ஷெரீப்பின் வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. கவிஞரின் புகழ்பெற்ற பல திரைப் பாடல்கள் வேணுவின் படங்களுக்கு எழுதப்பட்டவையே. அவரது சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் பணியாற்றியபோது புலால் உண்பதைத் தவிர்த்தவர், வாழ்நாளின் இறுதிவரை அதனைப் பின்பற்றினார். குடும்ப விழாக்களின் போதும், சமயச்சடங்குகளின் போதும்கூட அவர் மீண்டும் புலால் உண்ணவில்லை. ஏ.பி. நாகராஜனுடன் இணைந்து நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார். 'திருவிளையாடல்' படத்தில் இடம்பெற்ற 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடல் இவர் எழுதியதுதான் என்பது பலருடைய கருத்து. ஜெயகாந்தனும் தனது, 'ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' என்னும் நூலில் இதுகுறித்து எழுதியிருக்கிறார். 'காசு கொடுத்தால் பாட்டு' என்று சில கவிஞர்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், கொள்கையும் பிடிப்பும் கொண்ட பாடலாசிரியராக ஷெரீப் விளங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு, நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் ஆபாசம், வன்முறைக் கருத்துக்கள், சமூகத்திற்கு எதிரான சிந்தனைப்போக்கு கொண்ட பாடல்களை அவர் எழுதியதே இல்லை.
"கவிஞன் என்பவன் ஒரு தாய்மாதிரிப் பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ளமாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக்கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்" என்பது ஷெரீப்பின் கருத்து. கேட்பவர் யாராக இருந்தாலும் அவர் மனதில் பதியும்படிக் கருத்துக்களைப் புனையும் கவிஞர்களில் கா.மு. ஷெரீப்பிற்குத் தனியிடம் உண்டு. "இலக்கியத்துக்கு நிகராகத் திரைப்படப் பாடல்களும்கூட நிலைத்து நிற்கமுடியும் என்பதற்கு அண்ணன் கா.மு. ஷெரீப் எழுதிய பல பாடல்களை எடுத்துக்காட்டலாம்" என்கிறார் கலைஞர், தனது 'நெஞ்சுக்கு நீதியில்'.
கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த கவிஞர்களுள். கா.மு. ஷெரீப்பும் ஒருவர். "அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. 'ஒளி' என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்" என்று பாராட்டியிருக்கிறார் கண்ணதாசன்.
'பெண் தெய்வம்', 'புது யுகம்' போன்ற படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார் ஷெரீப். குறிப்பிடத்தகுந்த 'தமிழ் முரசு', 'திருமகள்', 'பாரததேவி', 'தினமணி கதிர்' போன்ற இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. அக்காலச் சமூகச் சிக்கல்களையும், காதல், கலப்புமணம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் மையமாக வைத்து அவை எழுதப்பட்டன. சிறந்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.
தமிழின்மீது பெரும்பற்றுக் கொண்டவர் ஷெரீப். தமிழ் தன்னை ஆட்கொண்ட விதம்பற்றி,
"ஆய கலைமகளும் சிவனும் ஆய்ந்தும் முடிந்திடா மூவா மருந்தென்னும் தூயதமிழ் மொழியோ பெண் தோற்றத்தே வந்தென்னை ஆட்கொண்ட(து) அன்றென்னை?!"
என்கிறார் கவிதை ஒன்றில். காமராஜர், பெரியார், திரு.வி.க., ம.பொ. சிவஞானம் உள்ளிட்ட பல தலைவர்கள் மீது இவர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். திரு.வி.க. பற்றி 'நல்லறிவாளர் திரு.வி.க.' என்ற தலைப்பில் இவர் பாடியிருக்கும் கவிதை குறிப்பிடத்குந்தது.
தமிழ்நாட்டின் செல்வம் திரு.வி.க. தொல்லைபடும் பாட்டாளியின் தோழனாக வாழ்ந்தவராம் சிந்தை அள்ளும் நூற்கள்பல செந்தமிழ் நடையில்தந்து தீந்தமிழுக்கே பெருமை தேடிய பெரியவராம்
என்று பாரட்டுகிறார். |
|
|
தமிழையும் தேசிய உணர்வையும் இரு கண்களாகக் கொண்டிருந்த ஷெரீப், ஆரம்பத்தில் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார், பின்னர் காங்கிரஸ் அபிமானியாக இருந்தார். தொடர்ந்து ம.பொ.சி. அவர்களின் தமிழரசுக் கழகத்தில் இணைந்து தமிழ், தமிழர் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். தமிழக எல்லைமீட்புப் போராட்டத்தில் இவரது பங்கு முக்கியமானது. தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டத்திலும், தேவிகுளம் பீர்மேடு போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார். அச்சகம் ஒன்றை வைத்திருந்த ஷெரீப், அதன்மூலம் 'தமிழ் முழக்கம்', 'சாட்டை' போன்ற இதழ்களை வெளியிட்டு வந்தார். பல இளங்கவிஞர்களின் படைப்பை அவற்றில் வெளியிட்டு ஊக்குவித்தார். ம.பொ.சி.யின் 'செங்கோல்' வார இதழில் தொடர்ந்து பல முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
இஸ்லாமியரான இவர் பிற சமூகத்தினரிடம் இணக்கமானவராகவும், அவர்களது சமயத்தை மதிப்பவராகவும் இருந்தார். வள்ளலாரின் நெறியை மிகவும் விரும்பினார். நேர்மையாளராகவும், சிறந்த பண்பாளராகவும் திகழ்ந்த இவரது பெருமையை, "கவிஞர் கா.மு. ஷெரீப் அவர்கள் பல நற்பண்புகளின் உறைவிடமாக இருந்தார். சினிமா உலகத்தில் தொடர்பு இருந்தும் அந்தச் சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக்கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடமே இருந்தது. ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடம் பயின்று கொண்டேன்" என்கிறார் ஜெயகாந்தன்.
சிறுகதை, நாவல், நாடகம், இலக்கியத் திறனாய்வு, கவிதை, கட்டுரை, பயண நூல் என்று 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் ஷெரீப். அவற்றில் சீறாப்புராணத்திற்கு இவர் எழுதியிருக்கும் உரை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஊர் ஊராகச் சென்று சீறாப்புராணச் சொற்பொழிவாற்றியிருக்கிறார். பிறப்பால் இஸ்லாமியர் என்றாலும் இந்து சமய இதிகாசங்களில் ஆழங்காற்பட்டவர். இவர் எழுதிய 'மச்சகந்தி' இவரது மேதா விலாசத்தைப் பறைசாற்றும். 'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?' என்ற இவரது நூல் குறிப்பிடத் தகுந்தது; 'வள்ளல் சீதக்காதி' (வாழ்க்கை வரலாறு), 'ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ்' (இலக்கியம்), 'சீறாப்புராணச் சொற்பொழிவு', 'இறையருள் வேட்டல்' போன்றவை சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்தவை. 'காதல் வேண்டாம்', 'காதலும் கடமையும்', 'கனகாம்பரம்' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். 'இஸ்லாமும் ஜீவகாருண்யமும்', 'மகளே கேள்', 'கண்ணகி', 'விபீஷணன் வெளியேற்றம்', 'அமுதக் கலசம்', 'ஆன்மகீதம்', 'பல்கீஸ் நாச்சியார் காவியம்', 'களப்பாட்டு', 'நீங்களும் பாடலாம் இசைப்பாட்டு' போன்றவை இவரது பிற முக்கியமான நூல்களாகும்.
இறுதிவரை வாடகை வீட்டில், மிகவும் வறுமையில் வாழ்ந்த ஷெரீப், அக்காலகட்டத்தில் நண்பரும் முதல்வருமாக இருந்த கலைஞரிடம் எந்த வேண்டுகோளும் வைத்ததில்லை. "உங்களுக்கிருக்கும் நட்பை வைத்துக் கலைஞரிடம் கேட்டு வீடு ஒன்று வாங்குங்களேன்" என்ற நண்பர்களின் வலியுறுத்தலை அவர் ஏற்கவுமில்லை. "எல்லாம்வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்" என்பதே அவரது பதிலாக இருந்தது. அதுபோல முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பலமுறை இவரைத் தனது இல்லத்திற்கு அழைத்தபோதும், "நான் ராமாவரம் போகா வரம் வாங்கி வந்திருக்கிறேன்" என்று நகைச்சுவையாகச் சொல்லி மறுத்துவிட்டார்.
இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சியிலும் உயர்விலும் ஷெரீப் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். "சேர வாரும் முஸ்லிம்களே!" என்னும் தலைப்பில் இவர் எழுதிய ஒரு கட்டுரை மிகவும் முக்கியமானது. அதில், "நல்ல கொள்கைகள் எதையும் எதிர்ப்பதையே பிறவித்தொழிலாகக் கொண்ட சிலர் தமிழகத்திலும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் தங்கள் அழிவுவேலைக்கு எதையும் செய்யவும், எவருடனும் சேரவும் தயங்குவதில்லை. அத்தகையோரின் பொய்ப் பிரசாரங்களுக்கு இரையான மக்களில் எனது முஸ்லிம் சகோதரர்கள்தான் முதன்மையானவர்கள். இதை நான் ஒரு முஸ்லிம் என்ற முறையில் வருத்தத்துடன்தான் கூறுகிறேன்."
"தேசீயத்திற்கு எதிரான சக்திகளோடு உறவுகொள்ள வேண்டுமென்பதற்காக, வாழும் நாட்டின்பால் - பேசும் மொழியின்பால் - தங்களுக்குள்ள கடமையைக் கைவிடுவதென்பது மாபெரும் குற்றம். இதை இஸ்லாமிய தர்மம்கூட மன்னிக்காது" என்று மனம் வருந்திக் கூறியிருக்கிறார்.
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், பதிப்பாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகங்கள் கொண்ட ஷெரீப்பிற்கு 'கலைமாமணி', தமிழக அரசின் திரு.வி.க. விருது. வி.ஜி. பன்னீர்தாஸ் நிறுவன விருது, தமிழக இயல் இசை நாடக மன்ற விருது உட்படப் பல விருதுகள் தேடிவந்தன.
தான் சொன்ன மாதிரியே வாழ்ந்தும் காட்டிய மகாகவிஞர் ஷெரீப் என்பதற்கு கீழ்கண்ட கவிதை ஓர் உதாரணம்.
ஏழையாய் வாழ விரும்புகின்றேன்; ஆனால் இரந்துண்டு வாழ விரும்ப வில்லை!
கோலச் சிறப்பை விரும்பவில்லை; குடிச்சிறப் பிழக்கவும் விரும்ப வில்லை!
ஞாலம் புகழ்ந்திடும் வாழ்வு வேண்டாம்; நயந்தெவர் முன்பும் நிற்க வேண்டாம்!
சீலமும் அன்பும் சிறுமையு மற்ற தெளிவுள வாழ்வினை வேண்டி னேன்தா!
என்ற கவிதை அவரது உள்ளத்தைத் திறந்துகாட்டுகிறது.
வளர்ப்புக் குழந்தைகளையும் சேர்த்து 12 குழந்தைகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர் ஜூலை 7, 1994 அன்று, எண்பதாம் வயதில் காலமானார். அவரது நூற்றாண்டு அவரது அபிமானிகளாலும், நண்பர்களாலும் இலக்கிய அமைப்புகளாலும் 2014 ஆண்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழக அரசும் இவர் எழுதிய 'இறைவனுக்காக வாழ்வது எப்படி?', 'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?', 'நல்ல மனைவி' (நாவல்), 'தஞ்சை இளவரசி' (நாவல்), 'வள்ளல் சீதக்காதி', 'விதியை வெல்வோம்' (நாவல்) போன்ற சில நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை சேர்த்தது. எளிமை, உண்மை, நேர்மை என்பதையே தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த கவி கா.மு. ஷெரீப், தமிழர்கள் என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய மாமனிதர்.
(தகவல் உதவி: kavikamu.wordpress.com, 'தமிழ் முரசு' இலக்கிய ஏடு மற்றும் பல நூல்கள்)
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|