|
|
|
|
கர்நாடக இசை, தமிழிசை, திரையிசை என மூன்று களங்களிலும் முத்திரை பதித்தவர் 'சோமு' என அழைக்கப்படும் மதுரை எஸ். சோமசுந்தரம். இவர் பிப்ரவரி 09, 1919 அன்று சுவாமிமலையில் சிதானந்தம்-கமலாம்பாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பரம்பரையாக இசைக் குடும்பம். தந்தை நாதஸ்வரக் கலைஞர். பத்தாம் வகுப்புவரை கல்வி பயின்ற சோமு, இசையார்வத்தால் பட்டணம் சுப்ரமணியப் பிள்ளையின் சீடரான அருட்பா சீனிவாசம் பிள்ளையிடம் இசை பயின்றார். பின்னர் சேஷ பாகவதர், அபிராம சாஸ்திரி, சுந்தரேச பட்டர் போன்றோரிடம் இசை கற்றார். நாதஸ்வரம் வாசிப்பதைவிட வாய்ப்பாட்டையே அதிகம் விரும்பிய சோமு, காஞ்சிபுரம் நயினாப்பிள்ளையின் சீடரும், அக்காலத்தின் புகழ்பெற்ற இசை மேதையுமான சித்தூர் சுப்ரமணியப் பிள்ளையிடம் சேர்ந்து பதினான்கு வருடங்கள் குருகுல வாசமாக இசை பயின்றார். பின்னர், குருநாதர் சித்தூர் சுப்ரமணியப் பிள்ளை, எம்.எம். தண்டபாணி தேசிகர் ஆகியோருக்குப் பின்பாட்டுப் பாடி இசைவாணராகப் பரிணமித்தார். சோமுவின் முதல் கச்சேரி, 1934ல் திருச்செந்தூர் ஆலயத்தில் அரங்கேறியது. அது, மக்களின் பாராட்டுதல்களையும், சக இசைக் கலைஞர்களின் வரவேற்பையும் ஒருங்கே பெற்றது. கச்சேரி வாய்ப்புகள் வரத் துவங்கின. மதுரை மணி ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எம்.டி. ராமநாதன் என ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி, வெற்றி கண்டார் சோமு.
திருக்கருகாவூரைச் சேர்ந்த சரோஜாவுடன் ஜூன் 10, 1948ல் சோமுவுக்குத் திருமணம் நிகழ்ந்தது. மூன்று மகன்களும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. இரண்டு, மூன்று மணி நேரம் பிற கலைஞர்கள் கச்சேரி செய்து கொண்டிருந்த காலத்தில் பலமணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்வார் சோமு. பல ஆலயங்களில் விடிய விடியப் பாடியிருக்கிறார். தன்னை மறந்து உடலும் உயிரும் ஒன்றி அவர் பாடிய கச்சேரிகளை மக்கள் மட்டுமல்லாது சக கலைஞர்களும் விரும்பி ரசித்தனர். சோமுவின் கச்சேரி அக்காலத்தில் 'ஃபுல் பெஞ்ச்' கச்சேரி என அழைக்கப்பட்டது. மிருதங்கம், வயலின், கஞ்சிரா, மோர்சிங், தம்புரா, கொன்னக்கோல் என அனைத்துக்கும் அவர் கச்சேரியில் இடமுண்டு. பக்கவாத்தியக்காரர்கள்தானே என்று நினைக்காமல் அவர்களுக்கும் சம மதிப்புத் தந்து ஊக்குவிப்பார். சி.எஸ். முருகபூபதி, லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணண், பாலக்காடு ரகு, பழனி சுப்ரமணியப்பிள்ளை, குன்னக்குடி வைத்தியநாதன், விநாயக்ராம், குருவாயூர் துரை, உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன் போன்ற சிறந்த கலைஞர்கள் இவருக்குப் பக்கம் வாசித்துள்ளனர்
கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண்டார் சோமு. தெலுங்குக் கீர்த்தனைகளே முக்கிய இடம் பெற்றிருந்த காலத்தில் தமிழ்ப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பாடினார். வள்ளலாரின் அருட்பா, சீர்காழி மூவரின் பாடல்கள், ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்கள், பாரதியார் பாடல்கள், திருப்புகழ் போன்றவை தவறாது அவர் கச்சேரிகளில் இடம்பெற்றன. அதேசமயம் தனது கச்சேரிகளில் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் எனப் பன்மொழிப் பாடல்களையும் பாடினார். தேஷ், திலங், அமீர்கல்யாணி போன்ற ஹிந்துஸ்தானி ராகப் பாடல்களையும் மிகச் சிறப்பாகப் பாடுவார். பாடுவதோடு, பாடலின் நயம், சிறப்பு பற்றி பாடுமுன் விளக்கவும் செய்வார். இது அந்தப் பாடலை முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பை சபையினருக்குத் தந்தது. கச்சேரியின் இறுதியில் துக்கடாக்களைப் பாடும்போது தனது பிரபலமான சினிமாப் பாடலைப் பாடுவார் அதற்காகக் கூட்டம் காத்திருக்கும். சோமுவுக்கு மிகவும் பிடித்த பாடகர் பாலமுரளி கிருஷ்ணா. படேகுலாம் அலிகான், பிஸ்மில்லா கான், சைகால் போன்றோரின் கச்சேரிகளையும் விரும்பிக் கேட்பார். காம்போதி, சங்கராபரணம், மலையமாருதம் போன்ற ராகங்களை விஸ்தாரமாகப் பாடும் ஆற்றல் சோமுவுக்கு இருந்தது. |
|
|
சாஹித்யத்தை விட ராகத்திற்கும் அதன் விஸ்தீரணத்திற்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் சோமு. நாகஸ்வரப் பாணியை வாய்ப்பாட்டில் கொண்டு வந்து அதில் மகத்தான வெற்றி பெற்ற சோமு, இசைஞானம் இல்லாத ஒருவனைக்கூடத் தன் பாடலால் ஈர்த்துவிடும் மேதைமை மிக்கவராக இருந்தார். பலரும் வாசிக்காத அரிய ராகங்களை வாசித்துப் புகழ்பெற்றார். ஆபேரி, தோடி, காம்போதி, கானடாவைப் போலவே சாயாதரங்கிணி, குவலயாபரணம், குகமனோகரி, ஊர்மிகா, மதுலிகா, ரிஷிப்ரியா போன்ற அரிதான ராகங்களை வாசித்தவர். அஷ்டோத்திரத்தை ராகமாலிகையாகப் பாடும் ஆற்றல் கொண்டவர் சுவாமிமலை ஆலயத்தில் பணியாற்றிய அம்மாஞ்சிக் குருக்கள். இவர் சோமுவின் மிக நெருங்கிய நண்பர். அவரை அஷ்டோத்திரம் பாடச்சொல்லிக் கேட்பதில் சோமுவுக்கு அலாதி இன்பம். சோமு பாடிப் பிரபலமான ”என்ன கவி பாடினாலும்”, ”தலை வாரிப் பூச்சூடி உன்னை”, ”மதுரை அரசாளும் மீனாட்சி”, ”ஏது செய்ய மறந்தாலும்” “ராம நாமமு”, “மாடு மேய்க்கும் கண்ணா ” போன்ற பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. கர்நாடக இசை மட்டுமல்லாமல் திரையிசையிலும் முத்திரை பதித்திருக்கிறார். சோமுவை சினிமாவில் பாட வைத்தவர், அவருக்கு பல மேடைகளில் பக்கம் வாசித்த குன்னக்குடி வைத்தியநாதன். கண்ணதாசன், தேவர், குன்னக்குடி மூவரும் வலியுறுத்திச் சோமுவைப் பாட வைத்தனர். பல பாடல்கள் பாடி அடைய வேண்டிய புகழை அந்த ஒரே பாடல் மூலம் அடைந்தார் சோமு. அந்தப் பாடல் “மருதமலை மாமணியே முருகையா..”
ராகத்தோடு ஒன்றிப் பாடக் கூடியவர் சோமு. சமயத்தில் பாடிக் கொண்டிருக்கும் போதே முன்னோடிப் பாடகர்களை நினைத்து கண்கலங்குவார். குரல் தழுதழுப்பார். அழுதும் விடுவார். அவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார். 'என்னகவி பாடினாலும்' போன்ற பாடல்களைப் பாடும்போது தன்னையறியாமல் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிடுவது அவர் வழக்கம். குறிப்பாக முருகன் பாடல்களைப் பாடும்போது பக்திக் கண்ணீர் விடுவார். சபையோரையும் பக்தி மேலிட்டு அழச்செய்து விடுவார். இசையுலகில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேல் ஜாம்பவானாகக் கோலோச்சிய சோமு, புகழின் உச்சியில் இருந்தபோதும் கூட தலைக்கனம் ஏதுமில்லாமல் சாதாரண ரசிகர்களை மதித்து அவர்களுடன் தோழமையோடு பழகியவர். அவர்களது ரசனைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுபவர். “மாரியம்மன் கோயில் திருவிழாவிலே போய்ப் பாடுறோம். அங்கே முன்வரிசை முழுவதும் பெரிசா குங்குமம் இட்டுட்டுப் பெண்கள் உட்கார்ந்திருக்காங்க. அங்கே போய் நமது மேதா விலாசத்தைக் காட்டப் பெரிய பெரிய கீர்த்தனைகளை மூணு மணி நேரமும் பாடிக்கிட்டிருந்தா அவங்க ரசிப்பாங்களா?” என்கிறார் பேட்டி ஒன்றில்.
சோமுவின் இசைத் திறனைப் பாராட்டி 1971ல் 'இசைப்பேரறிஞர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ (1976) ஆகியவற்றைப் பெற்றார். அதற்காக சுவாமிமலையில் அவரை யானைமீது உட்காரவைத்து ஊர்வலம் கொணர்ந்து விழா எடுத்தனர். இந்திய நுண்கலைக்கழகத்தின் 'சங்கீத கலாசிகாமணி', சங்கீத நாடக அகாதமி விருது ஆகியவற்றையும் அவர் பெற்றிருக்கிறார். திருவிசைநல்லூரில் நடந்த ஸ்ரீதர அய்யாவாள் உற்சவத்தில் பாடிய சோமுவிற்கு அவ்வூர்ச் சபையினர் 'சங்கீத சிம்மம்' என்ற பட்டம் அளித்தனர். அண்ணாமலை பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியதுடன் இசைத்துறைப் பேராசிரியராக நியமித்தது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் சோமு இருந்திருக்கிறார். காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வானாக அணிசேர்த்த சோமு, 'இசையரசு' என்றும் பட்டம் சூட்டப்பட்டு பீடத்தால் சிறப்பிக்கப்பட்டார். திருவாவடுதுறை மடத்தின் ஆஸ்தான வித்வானாகவும் இருந்திருக்கிறார். கழுகுமலை கந்தசாமி இவரது முக்கியமான சீடர்களுள் ஒருவர். இன்னும் ஏராளமான சீடர்களைப் போஷித்து வந்தார் சோமு. திடீர் உடல்நலக் குறைவால் நோய்வாய்ப்பட்ட அவர், டிசம்பர் 9, 1989ல் தமது எழுபதாம் வயதில் காலமானார். கர்நாடக இசையைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்த்த இசைக் கலைஞர்களுள் மதுரை சோமு முக்கியமானவர் மட்டுமல்ல, முதன்மையானவரும் கூட.
பா.சு.ரமணன் |
|
|
|
|
|
|
|
|