|
|
|
|
தமிழ் இலக்கண, இலக்கியங்களுக்கு உரை கண்டவர் பலர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் தொடங்கி ஆறுமுக நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கவிராஜ பண்டிதர், மறைமலையடிகள், பண்டிதமணி, உ.வே.சா. ஆகியோர் உரையாசிரியர் வரிசையில் குறிப்பிடத் தக்கவர். அவர்களுள் ‘உரைவேந்தர்’ என்று போற்றப்பட்ட பெருமைக்குரியவர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை.
செப்டம்பர் 5, 1902ஆம் நாளன்று திண்டிவனத்தை அடுத்த ஔவையார் குப்பம் என்ற ஊரில், சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மாளின் மகவாகத் தோன்றினார் துரைசாமி. தொடக்கக் கல்வி ஔவையார் குப்பத்திலேயே கழிந்தது. தந்தை சுந்தரம் பிள்ளை தமிழ்மீது மிகுந்த பற்றுடையவர். மயிலம் முருகன் மீது பல செய்யுள்கள் புனைந்தவர். சைவத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். தந்தை வழியில் தமிழ்ப் பற்றும் சைவப்பற்றும் இளமையிலேயே வாய்க்கப் பெற்றார் ஔவை. உயர்நிலைக் கல்வி திண்டிவனத்திலும் தொடர்ந்து இன்டர்மீடியட் கல்வி வேலூரிலும் பயின்றார். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைத் துறந்து பணிக்குச் செல்ல நேரிட்டது. உடல்நலத் துப்புரவுக் கண்காணிப்பாளர் பணியில் சேர்ந்தார். ஆறு மாதம் மட்டுமே அவரால் அப்பணியில் நீடிக்க முடிந்தது, காரணம் தமிழ்ப் பற்று.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
பள்ளியில் படிக்கும்போதே தமிழாசிரியரிடம் இருந்து சூளாமணி, ஐங்குறுநூறு ஆகியவற்றின் கையெழுத்துப் படிகளை வாங்கிப் பயின்றார் ஔவை. தமிழை மேலும் கற்கவும், தமிழ்ப்பணி புரியவும் ஆர்வம் மேலிட்டது. அக்காலத்தில் புகழ்பெற்ற கரந்தைப் புலவர் கல்லூரியை அணுகினார். ஔவையின் நுண்மாண் நுழைபுலத்தைக் கண்டறிந்த அதன் தலைவர் ‘தமிழவேள்’ உமா மகேசுவரனார், ஔவையை அக்கல்லூரியில் தமிழாசிரியராக நியமனம் செய்தார். அத்தோடு நூலக மேற்பார்வைப் பணியும் அவருக்குத் தரப்பட்டது. ஆசிரியப் பணியுடன் தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரையைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஔவை ஈடுபட்டார்.
| பொருளீட்டுவதோ, புகழ்பெறுவதோ ஔவை அவர்களின் குறிக்கோளாக இருக்கவில்லை. தமிழ்த்தொண்டு ஒன்றே அவர்தம் குறிக்கோளாக இருந்தது. | |
சிறந்த தமிழறிஞர்களான கரந்தைக் கவியரசர் வேங்கடாசலம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோர் புலவர் கல்லூரியில்தான் பேராசிரியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் பழகிக் கற்றுத் தமது தமிழறிவை மேலும் பெருக்கிக் கொண்டார் ஔவை. ஆசிரியப் பணி, நூலகப் பணி, ஏடு பார்த்து எழுதும் பணி இவற்றைச் செவ்வனே செய்து, கல்லூரித் தலைவரின் நன்மதிப்பைப் பெற்றார். பிற்காலத்தில் ஔவை தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியவும், பல்வேறு நூல்களுக்கு உரை எழுதவும் அடிப்படைக் காரணமாக அமைந்தது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடர்புகள்தாம் எனின் அது மிகையல்ல. 1928வரை அங்குப் பணியில் இருந்தார் ஔவை. 1929முதல் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கம், போளூர், செய்யாறு, திருவத்திபுரம் போன்ற ஊர்களில் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1930ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்வான் தேர்வெழுதி வெற்றி பெற்றார். இந்நிலையில் உலோகாம்பாள் என்பவருடன் பிள்ளைக்குத் திருமணம் நடந்தது. நன்மக்கட் பேறும் வாய்த்தது.
தமிழின்மீது கொண்டிருந்த அளவற்ற பற்றுக் காரணமாகவும், இந்தி எதிர்ப்புக் கொள்கை காரணமாகவும், ஔவை மாவட்டத்தின் பல இடங்களுக்குப் பணி மாறுதல் செய்யப் பெற்றார். மனம் சலிக்காது அவற்றை ஏற்றுக்கொண்ட அவர், மேலும் ஊக்கத்துடன் உழைத்து புதிய இடங்களில் மாணவர்கள், சக ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார். திருவத்திபுரத்தில் பணியாற்றியபோது இவர் உருவாக்கிய ஔவை தமிழ்க் கழகத்தில் சேர்ந்து பயின்று வித்வான் பட்டம் பெற்றோர் பலர்.
தமது ஓய்வுநேரத்தில் பண்டைய இலக்கண, இலக்கிய நூல்களை ஆராய்ந்து செறிவான பல கட்டுரைகளைப் படைத்தார். குறிப்பாக, ’தமிழ்ப்பொழில்’ இதழில் இவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. அதுபோக இலக்கிய மன்றங்களுக்கும், சமய நிகழ்ச்சிகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றுவதையும் தமது முக்கியக் கடமையாகக் கொண்டிருந்தார். ஔவையினது திறமையையும் அறிவையும் கண்ட மாவட்டக் கல்வியதிகாரி ச. சச்சிதானந்தம் பிள்ளை, அவரைப் பற்றி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எடுத்துரைத்தார். உடன் ஔவையைத் தொடர்பு கொண்ட பிள்ளை, கழகத்திற்குத் தமிழாய்வு நூல்கள் எழுதித் தருமாறு வேண்டினார். முதன்முதல் சீவக சிந்தாமணிச் சுருக்க நூல் வெளியானது. தொடர்ந்து ஔவை எழுதி நூல்கள் கழக வெளியீடாக வரத் துவங்கின. இவற்றோடு செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களிலும் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.
பொருளீட்டுவதோ, புகழ்பெறுவதோ ஔவை அவர்களின் குறிக்கோளாக இருக்கவில்லை. தமிழ்த்தொண்டு ஒன்றே அவர்தம் குறிக்கோள். அதுபற்றித் தம் நூல் ஒன்றின் முன்னுரையில் “சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன் யான் தமிழறிவு ஓரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்ற காலை, சில நூல்கள் குறைவுற்றிருந்தமை கண்டு, எங்ஙனமேனும் முயன்று நிறைவு செய்வது, தமிழன்னைக்குச் செய்யத்தக்க பணியென்ற கருத்தை உட்கொண்டதோடு அதனையே என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டேன்!” என்கிறார்.
1941வரை ஆசிரியப் பணியில் இருந்தார் ஔவை. இந்நிலையில் அவருக்கு விருப்பமான ஆராய்ச்சியாளர் பணியாற்றும் வாய்ப்பு திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி மூலம் வந்தது. 1942ல் அங்கு ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். உடன் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்களின் தொடர்பால், அம்மொழி இலக்கியங்கள், வரலாறுகள் அறிமுகம் ஆகி, அவரது சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. |
|
அப்போது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக ந.மு. வேங்கடசாமி நாட்டார் மணிமேகலை காப்பியத்திற்கு உரையெழுதும் பணியை மேற்கொண்டிருந்தார். திடீரென உடல்நலக் குறைவால் அவர் காலமாகிவிடவே, எஞ்சிய பகுதிகளுக்கு உரையெழுதித் தருமாறு கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை ஔவையிடம் வேண்டிக் கொண்டார். அப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார் ஔவை. அவரது புகழ் கற்றறிந்த சான்றோரிடையே பரவியது. அப்போது புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஔவையின் ஆராய்ச்சிப் புலமையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியது. 1943ம் ஆண்டு ஆராய்ச்சித் துறை விரிவுரையாளராக அங்கு பணியில் சேர்ந்தார் ஔவை. அவரது ஆராய்ச்சி மனப்பான்மைக்கு அப்பல்கலைக்கழகம் மேலும் உரமிட்டது. சைவசமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்களுக்கு அவர் உரையெழுத, பல்கலைக்கழகம் வெளியிட்டது.
கல்வெட்டறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், இலக்கண வரலாற்று ஆய்வாளர் க. வெள்ளைவாரணனார் உள்ளிட்ட சான்றோர்கள் ஔவையின் நெருங்கிய நண்பர்கள். எட்டு ஆண்டுகள்வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஔவை, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரி நிறுவனர், கரு. முத்து. தியாகராச செட்டியாரின் வேண்டுகோளை ஏற்று அக்கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். இவ்விரண்டு இடங்களிலும் பணியாற்றிய காலம் ஔவையினது வாழ்வில் பொற்காலமாக அமைந்தது.
கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தினார். தமக்கிருந்த கல்வெட்டுப் புலமை காரணமாக, தாம் வரைந்த பல உரைகளுக்குச் சான்றாக அக் கல்வெட்டு ஆதாரங்களையே எடுத்துக்காட்டி உண்மையை நிறுவினார். அத்தோடு சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, ஐங்குறு நூறு உட்பட முப்பத்து நான்கு உரை நூல்களைப் படைத்துள்ளார் ஔவை. ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியத்திற்கு முதலில் உரை எழுதியது ஔவையே! சைவ சமயத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த ஔவை சைவ இலக்கிய வரலாறு, திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை, திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை போன்ற உரைநூல்களை எழுதியிருக்கிறார். சிவஞானபோதச் செம்பொருள், சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும் போன்ற உரை நூல்கள் முக்கியமானவை. திருவருட்பாவிற்கு உரைவேந்தர் வழங்கியிருக்கும் உரை மிகமிகச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் இலக்கிய வரலாறு, பண்டைக் காலத் தமிழ் மன்னர் வரலாறு போன்ற அரிய நூல்களை ஆக்கியதுடன், பல ஊர்ப் பெயர்களைப் பற்றி ஆராய்ந்தும் ஔவை எழுதியிருக்கும் நூல் மிக முக்கியமானது.
ஔவைக்கு ‘சித்தாந்த சிகாமணி’ (தூத்துக்குடி சைவ சித்தாந்தச் சபை), ’சைவ சித்தாந்தச் செம்மல்’, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), ‘உரைவேந்தர்’ (திருவள்ளுவர் கழகம்) முதலிய பட்டங்கள் வழங்கப்பட்டன. உரைவேந்தர் என்றே ஔவை அழைக்கப்படலானார்.
| கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தினார். தமக்கிருந்த கல்வெட்டுப் புலமை காரணமாக, தாம் வரைந்த பல உரைகளுக்குச் சான்றாக அக் கல்வெட்டு ஆதாரங்களையே எடுத்துக்காட்டி உண்மையை நிறுவினார். | |
”நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்” என்கிறார் ஔவை அவர்களைப் பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன். ”அழுத்தம் திருத்தமாக இவர் தமிழை ஒலிக்கும் பாங்கு ஏதோ சங்கப் புலவர் ஒருவர் பாடம் நடத்துகிறாரோ என்று எண்ணத்தோன்றும்” என்கிறார், ஔவையின் மாணவராக விளங்கிய பேரா. மறைமலை இலக்குவனார். ”எங்கும் தயங்காமல் சென்று தமிழ் வளர்த்ததாலே தாங்கள் அவ் ஔவைதான், ஔவையேதான்” என்கிறார் மாணவர், கவிஞர் மீரா. கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை தமிழில் பெயர்த்து வழங்கியதுடன், தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றிய புலவர் கா.கோவிந்தன் ஔவையின் மாணவரே. ’சித்தாந்த சைவத்தை உரையாலும், கட்டுரையாலும் கட்டமைந்த சொற்பொழிவுகளாலும் பரப்பிய அருமை வாய்ந்த பெரியார்’ என ஔவையைப் புகழ்ந்துரைக்கின்றார் தமிழறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கனார்.
உரைவேந்தர் ஏப்ரல் 03, 1981 அன்று இயற்கை எய்தினார். இவரது நூற்றாண்டு விழா 2003ஆம் ஆண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இன்று ஔவை வழி நின்று தமிழ்த் தொண்டாற்றி வருகிறார், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி உட்பட பல்வேறு பதவிகள் வகித்த அவரது மைந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள். புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் மெய்கண்டான் அவர்களும் ஔவையின் புதல்வரே.
(நன்றி: இந்திய இலக்கியச் சிற்பிகள் - உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை; ஆக்கியோன்: முனைவர் ச. சாம்பசிவனார், சாகித்திய அகாதெமி நிறுவன வெளியீடு)
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|