|
|
|
|
கலைப்பிதாமகர், சங்கீத கலா ஆச்சார்யா என்று போற்றப்பட்ட எஸ். ராஜம் இசை, ஓவியம், நடிப்பு, எழுத்து, புகைப்படம் என்று கலையின் சகல பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர். சுந்தரம் ஐயர், செல்லம்மாள் தம்பதிக்கு 1919ஆம் ஆண்டில் ராஜம் மகவாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் இரண்டு தம்பிகள், மூன்று தங்கைகள். பள்ளிப்படிப்பு மயிலையின் புகழ் பெற்ற பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில். தந்தை சுந்தரம் ஐயர் ஒரு வக்கீல். இசை ஆர்வலரான சுந்தரம் ஐயர், கலைஞர்களை ஆதரிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தார். இசைத்துறையைச் சேர்ந்த பல ஜாம்பவான்கள் சுந்தரமய்யருக்கு நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து போவார்கள். ராஜத்துக்குச் சிறு வயதிலேயே இசையில் ருசி ஏற்பட இது வழி வகுத்தது. ராஜத்துக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவரது தந்தை மயிலாப்பூர் சங்கீத சபா இருந்த தெருவில் ஒரு வீடு வாங்கிக் குடிபுகுந்தார். அது ராஜத்தின் ஆர்வம் மேலும் வளரக் காரணமானது.
முத்துஸ்வாமி தீட்சிதர் பரம்பரையில் வந்த அம்பி தீட்சிதரிடம் முதலில் சங்கீதம் பயின்றார் ராஜம். தொடர்ந்து அரியக்குடி ராமனுஜ ஐயங்கார், சௌந்தரம், ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், மதுரை மணி ஐயர், பாபநாசம் சிவன், மயிலை கௌரி அம்மாள் போன்றோரிடம் பயின்றார். மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, வீணை தனம்மாள், திருவாலங்காடு சுந்தரேச ஐயர், பிடாரம் கிருஷ்ணப்பா, காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை, பாலக்காடு ராம பாகவதர் போன்ற ஜாம்பவான்களின் இசையைக் கேட்டும், வாய்ப்புக் கிடைத்தபோது அவர்களில் சிலரிடம் பயின்றும் தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார். முதல் கச்சேரி 13 வயதில், சித்தூரில் தங்கியிருந்த காஞ்சிப் பெரியவரின் திருமுன் நிகழ்ந்தது. அதற்குத் தம்புரா வாசித்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். தொடர்ந்து பல கச்சேரிகளிலும், ராதா கல்யாணம், சீதா, மீனாட்சி கல்யாணம் போன்ற இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அவரது கச்சேரிகளுக்கு பக்கவாத்தியமாக ஹார்மோனியம், தபலா, கஞ்சிரா வாசித்த சகோதரர் பாலுதான், பிற்காலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞராகவும், நடிகராகவும் இயக்குநராகவும் பரிணமித்த வீணை எஸ். பாலசந்தர்.
ராஜத்தின் முதல் கச்சேரி 13 வயதில், சித்தூரில் தங்கியிருந்த காஞ்சிப் பெரியவரின் திருமுன் நிகழ்ந்தது. அதற்குத் தம்புரா வாசித்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்.
ஓவியம் வரைவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார் ராஜம். பிரபல ஓவியர் மணியத்தின் சித்தப்பாவான லிங்கையா ராஜத்தின் நெருங்கிய நண்பர். அவரது ஓவிய ஆர்வம் ராஜத்தையும் தொற்றிக் கொண்டது. சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதுடன், தங்கப் பதக்கத்தையும் வென்றார். ஆனாலும் தான் பயின்ற மேற்கத்திய பாணி ஓவியங்களை வரைவதை விட இந்திய பாணி ஓவியங்கள் வரைவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார். அதற்காகத் தஞ்சை, மகாபலிபுரம், அஜந்தா, எல்லோரா என்று பயணங்களை மேற்கொண்டார். பல்லவச் சிற்பங்களும், சோழர் செப்புப் படிமங்களும் அவரை பாதித்தன. அஜந்தா ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட ராஜம், அதே பாணியில் வரையத் தொடங்கினார். கி.வா. ஜகந்நாதன், தொடர்ந்து கலைமகளில் இவரது ஓவியங்களை வெளியிட்டார். இலக்கியம், புராணங்கள் தொடர்பான ஓவியங்கள் வரைய ராஜத்திற்கு அது வாய்ப்பாக அமைந்தது. இசையில் இருந்த தேர்ச்சியால், வாக்கேயக்காரர்கள், கீர்த்தனங்கள், ஸப்தஸ்வரங்கள் என்று இசை சம்பந்தமான எண்ணற்ற ஓவியங்களைப் பத்திரிக்கைகளுக்காகவும் தன் தனிப்பட்ட நிறைவுக்காகவும் வரைந்தார். பகவான் ரமணரை சிறுவயதில் மிகவும் கவர்ந்த பெரிய புராண நிகழ்ச்சிகளை வண்ண ஓவியங்களாகத் தீட்டி காஞ்சிப் பெரியவரிடம் சமர்ப்பித்து ஆசி பெற்றார். அதுவே பின்னர் சித்திரப் பெரிய புராணம் என்று புத்தக வடிவம் பெற்றது.
புகைப்படக் கலையிலும் ராஜம் நிபுணர்தான். விதவிதமான பல கேமராக்களை வாங்கி, தாம் சென்ற இடங்களில் இருந்த கோவில்களையும் சிற்பங்களையும் புகைப்படம் பிடித்தார். பகவான் ரமணரையும் சிலமுறை சந்தித்திருக்கும் ராஜம், அவரையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அவர்முன் பாடல்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.
திரைப்படத் துறையிலும் முத்திரை பதித்தார் ராஜம். 1933ல் வெளியான 'சீதா கல்யாணம்' படத்தில் ராமராக நடித்துத் திரைப் பயணத்தைத் துவக்கினார். அவரது தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தந்தை சுந்தரமய்யர் ஜனகராகவும், தம்பி பாலசந்தர் ராவணன் தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவராகவும் அப்படத்தில் நடித்திருந்தனர். அப்படம்தான் பாபநாசம் சிவன் இசை அமைத்த முதல் படம். 'சிவகவி' படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைந்து நடித்த ராஜம் பின்னர் 'ராதா கல்யாணம்', 'ருக்மணி கல்யாணம்' போன்ற சில படங்களிலும் நடித்தார். ஆயினும், தொடந்து நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டு இசை மற்றும் ஓவியத்திலேயே கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். |
|
|
சென்னையில் அகில இந்திய வானொலி ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே கச்சேரி செய்த ராஜத்திற்கு, அங்கேயே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகாலம் நிகழ்ச்சி மேற்பார்வையாளராக, தயாரிப்பாளராகப் பணியாற்றினார். வானொலியில் கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். நிகழ்ச்சிகளில் பல புதுமைகளைப் புகுத்தியதுடன், பல பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபட்டார். அக்காலத்தில், விவாதி ராகங்கள் எல்லாம் தோஷ ராகங்கள்; அவற்றைப் பாடினால் கேடு விளையும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. மேளகர்த்தா ராகங்கள் 72-ல், 40 ராகங்கள் விவாதி ராகங்கள் என்ற போதிலும், இந்தக் கருத்து ஓங்கி இருந்தது. இந்த எண்ணத்தை மாற்றியமைக்க எண்ணிய ராஜம், கலைஞர் டி. சங்கரனின் உறுதுணையுடன் அக்கீர்த்தனைகளை வானொலியில் ஒலிபரப்ப முனைந்தார். ராஜமும், பாடகி ஜி. வைதேஹியும், கோடீஸ்வர ஐயரிடம் நேரில் கற்றுக்கொண்ட ஆர்.எம்.சுந்தரத்திடம் 72 கீர்த்தனைகளையும் பயின்று, அவற்றைப் பாடி வானொலியில் ஒலிபரப்பினர். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமுதல் கோடீஸ்வர ஐயரின் கிருதிகளையும், விவாதி ராகங்களையும் பரப்புவதையே தனது வாழ்நாளின் முக்கிய லட்சியமாகக் கொண்டார் ராஜம். அத்துடன் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் அரிய கிருதிகளையும் ஒலிபரப்பிப் பலரும் அறியும்படிச் செய்தார்.
அஜந்தா ஓவியங்களைப் பின்பற்றி தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி ராஜம் வரைந்த ஓவியங்கள் காலத்தால் அழிக்க இயலாதவை. சங்கீத மும்மூர்த்திகளை ஓவியமாக முதன்முதலில் வடித்தவர் ராஜம்தான். இவர் வரைந்த நவக்கிரக ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவாவரண கிருதிகளுக்கும், திருவிளையாடற் புராணச் சம்பவங்களுக்கும், பெரிய புராணத்திற்கும் அற்புதமான ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். சங்கீத விற்பன்னர்கள், புராண நிகழ்வுகள், சம்பவங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களைப் பிரபல இதழ்களுக்காக வரைந்துள்ளார். நூற்றிற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை கோட்டோவியம் மற்றும் விளக்கவுரையுடன் இவர் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களுக்கும் வடிவம் கொடுத்து இவர் தீட்டிய ஓவியங்கள் புகழ் பெற்ற எல் அண்ட் டி நிறுவன காலெண்டரில் இடம்பெற்றன. தீக்ஷிதரின் பூலோக பஞ்சலிங்க கிருதியின் முழு சாராம்சத்தையும் உள்ளடக்கிய ஓவியத்தை அவர் வரைந்திருக்கும் அழகு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்ற ஒன்று. திருக்குறளுக்கு அற்புதமான ஓவியங்கள் வரைந்திருப்பதுடன், அதற்கு இசை வடிவமும் அளிதிருக்கிறார்.
கோடீஸ்வர ஐயரின் கிருதிகளையும், விவாதி ராகங்களையும் பரப்புவதை தனது வாழ்நாளின் முக்கிய லட்சியமாகக் கொண்டார் ராஜம். அத்துடன் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் அரிய கிருதிகளையும் வானொலியில் ஒலிபரப்பிப் பலரும் அறியும்படிச் செய்தார்.
பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கவும் அவர் அறிந்திருந்தார். பல ஓவியப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். Musings on Music என்ற இசைக்குறிப்புகள் அடங்கிய நூல் அதில் மிக முக்கியமானது. ஹவாயில் உள்ள சுப்ரமண்யா ஆலயத்திற்கு ராஜம் வரைந்த ஓவியங்கள் சிறப்பானவை. இவரது ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட ஹவாய் சுவாமிகள், இவரது 500க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தருவித்து பாதுகாத்து வைத்ததுடன் சிலவற்றை அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் குரலிசை வகுப்பு ஆசிரியராக ராஜம் பணியாற்றியிருக்கிறார். பல புகழ்பெற்ற சபாக்களில் நடைபெற்ற இசை நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்குகளில் சிறப்புரையாற்றியிருப்பதோடு ’ஸ்ருதி’ இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தனது 72வது வயதில் 72 கிருதிகளை, ராகம் நிரவல் கல்பனை ஸ்வரங்களுடன் பாடி குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளார். கோடீஸ்வர ஐயரின் கிருதிகளை நூலாகவும் வெளியிட்டுள்ளார். 87 வயதில் அவர் வானொலியில் கச்சேரி செய்தபோது கேட்டவர்கள் இளமை மாறாத அவரது குரலை வியந்து பாராட்டினர். மேளகர்த்தா ராகங்களில் ராஜம் பாடியதை அடிப்படையாக வைத்தே இன்று பலரும் பாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கீத கலா ஆச்சார்யா, சங்கீத நாடக அகாடமி விருது, இசைக்கடல், நாதக்கனல் எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் ராஜம் பல வெளிநாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்திருக்கிறார். இசை, ஓவியப் பயிற்சி அளித்திருக்கிறார்.
கலைகளின் பல துறைகளிலும் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் ராஜம், 2010 ஜனவரி 29 அன்று, 91ம் வயதில் காலமானார். அவரிடம் பயின்ற மாணவர்கள் இன்று உலகமெங்கும் பரவி இசை வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருகிறார்கள் என்பதே கலை முன்னோடியான அவரது பெருமைக்குச் சான்று.
(தகவல் நன்றி: மணியம் செல்வன்)
பா.சு.ரமணன் |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|
|