Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
உமர் தம்பி
- பா.சு. ரமணன்|ஜூன் 2010|
Share:
கல்வெட்டுக்களிலும், சுவடிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தமிழ் படிப்படியாக வளர்ந்து அச்சு ஊடகங்களில் கோலோச்ச ஆரம்பித்தது. மொழியின் இவ்வித வளர்ச்சிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம் செய்த வீரமாமுனிவர் முதல் ஏடு தேடித் தந்த ஏந்தலார் உ.வே.சா வரை பலர் காரணமாக அமைந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்காலத்தில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருந்து உழைத்தவர், உழைத்து வருகிறவர் பலர். மின் ஊடகங்களில் இன்று பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதன் அடிப்படையான எழுத்துரு ஆக்கத்திற்கு 'ஆதமி' ஸ்ரீனிவாசன், பேரா. ஜார்ஜ் ஹார்ட், 'பாரதி' முத்துக்கிருஷ்ணன், முரசு நெடுமாறன், கே. கல்யாண சுந்தரம், முகுந்தராஜ், நா. கணேசன் எனப் பலர் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுள் முக்கியமான ஒருவர் உமர் தம்பி.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan1953 ஜூன் 15 அன்று தஞ்சையை அடுத்த அதிராம்பட்டினத்தில், அப்துல் அமீது-ரொக்கையா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் உமர் தம்பி. பள்ளிப்படிப்பு அங்கேயே கழிந்தது. இயல்பாகவே ஆராய்ச்சி நோக்கும், சிந்திக்கும் திறனும் மிகப் பெற்று விளங்கிய உமர் தம்பி, பள்ளிக்கல்வி முடிந்ததும் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். தனிப்பட்ட ஆர்வம் காரணமாக மின்னணுவியலிலும் பட்டயம் பெற்றார். மாணவனாக இருக்கும்போதே வானொலிப் பெட்டி, தொலைக்காட்சி பழுது நீக்குதல், பராமரிப்பு, வானொலி ஒலிபரப்பு போன்றவற்றில் உமர் தம்பி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படித்த காலத்திலேயே உயர்நிலைப் பள்ளியிலிருந்து வானொலி அலைவரிசையொன்றை உருவாக்கி அதனை ஊரிலுள்ளவர்கள் கேட்குமாறு சோதனை ஒலிபரப்பை நிகழ்த்திக் காட்டினார்.

கணினியில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் அதற்காக உலகில் உள்ள அனைத்துத் தமிழரும் ஒன்றிணைந்து ஒருங்கே பயன்படுத்தக் கூடியவகையில் ஓர் எழுத்துரு ஆக்கப்பட வேண்டும் என்பதும் உமர் தம்பியின் கனவாகும்.
1977ல் கல்லூரிக் காலத்திலேயே பெளஸியாவுடன் திருமணம் நடந்தது. படிப்பை முடித்தபின், சொந்த ஊரிலேயே வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுநீக்கும் கடை ஒன்றைத் தொடங்கிச் சிலகாலம் நடத்தினார். இந்நிலையில் துபாய் நிறுவனம் ஒன்றில் மின்னணு சாதனங்களை பழுதுநீக்கும் பொறியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதை ஏற்று துபாய்க்குச் சென்றார் உமர் தம்பி. செம்மையாகப் பணியாற்றி நல்ல பெயர் பெற்ற அவர், தனது ஓய்வு நேரத்தில் கணினித் தொழில்நுட்பத்தைப் பயிலத் தொடங்கினார். விரைவிலேயே அதில் முழுத் தேர்ச்சி பெற்றவர், மென்பொருள் உருவாக்கம், வன்பொருள் பராமரிப்பு என இரண்டிலுமே தேர்ந்த திறன் படைத்தவராக விளங்கினார். நாளடைவில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்திலேயே கணினித் தொழில்நுட்ப வல்லுனராக உயர்ந்தார்.

பதினேழு ஆண்டுகள் துபாயில் பணியாற்றிய பின்னர் உமர் தம்பி விருப்ப ஓய்வு பெற்றுத் தாயகம் திரும்பினார். தன் மகனின் துணையோடு நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்துக் கொடுத்துப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார்.

கணினியில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் அதற்காக உலகில் உள்ள அனைத்துத் தமிழரும் ஒன்றிணைந்து ஒருங்கே பயன்படுத்தக் கூடியவகையில் ஓர் எழுத்துரு ஆக்கப்பட வேண்டும் என்பதும் உமர் தம்பியின் கனவாக இருந்தது. அதற்கென்று உழைக்கத் துவங்கினார். தம்மைப் போன்ற ஒத்த ஆர்வம் கொண்டிருந்த நண்பர்கள் பலருடன் ஒன்றிணைந்து அந்தப் பணியில் ஈடுபட்டார். அதே பணியில் ஈடுபட்டிருந்த பலருக்குச் சிறந்த ஆலோசகராகவும் விளங்கினார்.
தமிழில் அதற்கான எழுத்துரு கணினியில் நிறுவப்பட்டிருந்தால் மட்டுமே, தமிழ் இணையப் பக்கங்களைக் காண முடியும் என்ற நிலை அன்றிருந்தது. அதனை மாற்ற விழைந்த உமர் தம்பி, மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெஃப்டைத் தமிழில் அறிமுகம் செய்தார். அதன் மூலம் கணினியில் தமிழ் எழுத்துரு நிறுவப்படாமலே தமிழ் ஒருங்குறியில் (யூனிகோட்) அமைந்த இணையதளங்களை வாசிக்க முடிந்தது.

தேனீ எழுத்துருவை உருவாக்கிய உமர் தம்பி அதை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு இணைய தளங்களில் இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். தமிழ் இணைய அகராதி உருவாக்கத்திற்கு உமர் தம்பியின் பங்களிப்பு மிக அதிகம். தமிழ் மணம், தமிழ் உலகம் குழுமம், ஈ-உதவி குழுமம், ஒருங்குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் போன்ற பல தமிழ் இணையக் குழுமங்களுக்கு ஆலோசனைகளை நல்கியிருக்கிறார் உமர் தம்பி.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மக்கள் பயன்பாட்டுக்குரியதாக்கத் தன்னலம் பாராமல் உழைத்த உமர் தம்பி, கணினித் தமிழ் முன்னோடிகளுள் ஒருவராக வைத்து எண்ணப்பட வேண்டியவர்.
எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி, ஒருங்குறி மாற்றி, தேனீ ஒருங்குறி எழுத்துரு, வைகை இயங்கு எழுத்துரு, தமிழ் மின்னஞ்சல், AWC Phonetic Unicode Writer என்று உமர் தம்பி உருவாக்கிய பல வகைச் செயலிகளும், கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சிகளாக உள்ளன.

சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்ட உமர் தம்பி, அதிரை பைத்துல்மால் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து பல சேவைகள் செய்துள்ளார். 'குழம்பி நிற்கும் குமுகாயம்', 'நமக்கு கண்கள், செவிகள் இரண்டிரண்டு ஏன்?', 'தவிடுபொடியாகிறது டார்வின் கொள்கை' போன்ற பல ஆய்வு விளக்க நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு 2006 ஜூலை 12 அன்று உமர் தம்பி காலமானார். இணையத்தில் தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் தம்பி அன்று எடுத்த முதல் முயற்சிதான் இன்று பலவகையில் தமிழ்க் கணினித் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக உள்ளது என்றால் அது மிகையல்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மக்கள் பயன்பாட்டுக்குரியதாக்கத் தன்னலம் பாராமல் உழைத்த உமர் தம்பி, கணினித் தமிழ் முன்னோடிகளுள் ஒருவராக வைத்து எண்ணப்பட வேண்டியவர்.

பா.சு.ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline