தமிழ் வகுப்பு
|
|
எலி தந்த வலி |
|
- லதா|செப்டம்பர் 2008| |
|
|
|
|
திருவல்லிக்கேணியின் சந்து வீடுகளில் வளர்ந்த எனக்கு, எலி என்றால் ஏதோ அங்கங்கே ஓடும்; பொறியில் மசால் வடை வைத்தால் மக்குத்தனமாக மாட்டிக் கொள்ளும்; அதை அப்பா கூவக் கரையிலோ, பீச்சிலோ விட்டு விடுவார்--இதுதான் நான் அறிந்த எலி. பிறகு திருமணமாகி இரு சிறிய குழந்தைகளுடன் பாஸ்டன் நகருக்கு வந்து சேர்ந்த எனக்கு, எங்கள் நண்பரின் பத்து வயது மகன் அவனுடைய அமெரிக்க நண்பனின் வெள்ளெலியைக் காணாமல் போனதற்காக, இருவருமாகச் சேர்ந்து தேடி ஊரையே ரணகளப்படுத்தியது, வெகு வேடிக்கையாகத் தோன்றியது. வயிறு வலிக்கச் சிரித்தேன். பின்னாளில் நடக்கப்போவது தெரியாமல்...
| விளக்கைப் போட்டுப் பார்த்தால் இதற்கெல்லாம் காரண கர்த்தாவான அந்த வெள்ளெலி கிடுகிடுவென்று தன்னுடைய சக்கரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தது! | |
என்னுடைய மக்கள் வளர்ந்து பள்ளிப்பருவம் அடைந்ததும் வந்தது வம்பு! பள்ளி ஆசிரியர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், புத்தகங்களுமாகச் சேர்ந்து 'வளர்ப்புப் பிராணி' என்றால் அழகான நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், குண்டு குண்டு கண்ணோடு வண்ணப் பறவைகள் என்று ஆசைகாட்ட, எங்கள் பிள்ளைகள் தாங்களும் கண்டிப்பாக ‘செல்லப் பிராணி' வளர்க்க வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். சாம, பேத, தான தண்டங்களைக் கையாண்டும், அவர்களைச் சமாளிக்க முடியாததால், கடைசியில் (எப்பொழுதும் போல) நாங்கள் சரண்டர் ஆகி, வளர்ப்புப் பிராணி வாங்கச் சம்மதித்தோம்.
என்ன வளர்க்கலாம்? என்னுடைய விருப்பம் மீன். அதை ஒரு சின்னத் தொட்டியில் போட்டு, தினமும் துளி சாப்பாட்டைப் போட்டால் போதும். தூய்மைப்படுத்தும் வேலை குறைவு. அங்கேயிங்கே வீட்டுக்குள் ஓடாது. என் மகளோ, இந்தக் காரணங்களுக்காகவே மீன் வாங்கக்கூடாது நாயோ, பூனையோ வேண்டும் என்றாள். மகனும் மீன் என்றால் நாங்கள் விளையாட முடியாது. குறைந்த பட்சம் குருவியாவது வேண்டும் என்றான். பேச்சு வார்த்தைகளின் இறுதிச்சுற்றில் வெள்ளெலி வாங்குவது என்று முடிவாகியது. நான் வீட்டில் வேலையாக இருந்ததால் என் கணவரும், குழந்தைகளுமாக வளர்ப்புப் பிராணி விற்கும் கடைக்குச் சென்றார்கள். சிறிது நேரத்தில் தொலைபேசியில் என் கணவர் கோபமாக 'உன் பசங்களுக்கு எலியோ புலியோ நீதான் வாங்கணும். என்னால் முடியாது' என்றார். எனக்குத் தலைகால் புரியவில்லை. ஓடினேன் கடைக்கு.
அங்கே கடை வாசலில் மூவரும் மூன்று திசைகளைப் பார்த்தபடி கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். என்ன விஷயம் என்றால், என் கணவருக்கு ஊறும் பிராணிகளைக் கண்டால் சிறிது (பயம் இல்லை) அதைரியம். கண்ணாடிப் பெட்டியில் ஓணானைப் பார்த்த அவருக்கு திகில். கொஞ்சம் தள்ளி இன்னொரு பெட்டியில் பாம்பு. போதாதா? கடைசியில் எலியைப் பார்ப்பதற்குள், 'அப்படி என்ன வளர்ப்புப் பிராணி வேண்டி இருக்கிறது. ஒரு மண்ணும் வேண்டாம் போ' என்று கூறிவிட்டார். அதனால் வந்தது ரகளை, எனக்கு போன்.
எல்லோரையும் சமாதானப்படுத்தி, என் கணவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நானும் குழந்தைகளும் கடைக்குள் நுழைந்தோம். அவர்களுக்குப் பிடித்த நிறத்தில் எலியை வாங்கிக் கொண்டு, அதன் விலையைப் போல பத்து மடங்கு அதிகமாக அதற்கு வீடு, விளையாட்டுச் சாமான்கள்(?), தண்ணீர் பாட்டில், பந்து இவற்றை (மூக்கால் அழுது கொண்டே) வாங்கினேன். போதாததற்கு அதற்கு தனிச்சாப்பாடு, படுக்க வசதியாக வைக்கோல் என்று வகை வகையாக வாங்கிக் கொண்டு வந்தோம். வீட்டுக்கு வந்ததும் ஒரே மூச்சில் அத்தனையும் சரி செய்து எலியை அதன் கூண்டுக்குள் விட்டதும், ஏதோ பெண்ணுக்குக் கல்யாணம் முடித்து, அவளை மாமியார் வீட்டில் விட்டது போன்ற அலுப்பு எனக்கு. ஆனால் என் மகளின் பூரித்த முகத்தைப் பார்த்ததும் அலுப்பு பறந்துவிட்டது. சரி, ஏதோ இந்தமட்டும் அந்த எலி அங்கே இங்கே ஓடாமல் ஒரு கூண்டுக்குள்ளேயே ஓடப் போகிறது என்று பெரிய கனவு கண்டு கொண்டிருந்தேன்.
அன்று இரவு படுத்த சிறிது நேரத்திற்குள், சடசடவென்று ஏதோ ஓடும் சத்தத்தைக் கேட்டதும், ஐயையோ திருடனோ என்று பயந்து, சாமியை நினைத்துக்கொண்டு, விளக்கைப் போட்டுப் பார்த்தால் இதற்கெல்லாம் காரண கர்த்தாவான அந்த வெள்ளெலி கிடுகிடுவென்று தன்னுடைய சக்கரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தது! |
|
| இந்தியாவிலிருந்து வரும் வாராந்திர போன்கால்களில் எல்லாம் எங்களை நலம் விசாரித்தார்களோ இல்லையோ, வெள்ளெலி சௌக்கியமா என்று கேட்கத் தவறவில்லை. | |
பிறகு எங்கள் மகள் விஷயத்தை விளக்கினாள். வெள்ளெலி பகலில் தூங்கி இரவில் கண்விழிக்கும் பிராணி. அது கண் விழிக்கும்போது அதன் சக்கரத்தில் ஓடிக் கொண்டிருக்கும். ஏனெனில் அதற்கு உடற்பயிற்சி செய்யவேண்டுமாம். ‘அட, நாசமாய்ப் போக' என்று மனதுக்குள் திட்டிவிட்டு மறுபடி படுத்தோம். மாம்பலம் கொசுக்கடியைப் போலச் சிறிது நாட்களுக்குள் நாங்களும் எலியின் சத்தத்தோடு தூங்கப் பழகி விட்டோம்.
எங்கள் பெண் அதற்குச் செய்த நாமகரணத்தில் கடைசிப் பெயராக எங்கள் குடும்பப் பெயரையும் சூட்டிவிட்டாள். அந்த வெள்ளெலியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்தியாவிலிருந்து வரும் வாராந்திர போன்கால்களில் எல்லாம் எங்களை நலம் விசாரித்தார்களோ இல்லையோ, வெள்ளெலி சௌக்கியமா என்று கேட்கத் தவறவில்லை. சிறிது சிறிதாக எலியும் எங்கள் வீட்டின் ஒரு அங்கத்தினர் ஆனது. வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும், விருந்தினர்களுக்கும் எங்கள் பொக்கிஷமாகக் காட்டப்பட்டது.
எங்கள் வீட்டுக்கு வந்த நண்பர்களின் குழந்தைகளும், நேராக எலியைப் பார்த்து, குசலம் விசாரித்து விட்டு, விளையாடி விட்டுத்தான் எங்களிடம் பேசினார்கள். மணி போன்ற கண்களை உருட்டி அந்த எலி என் மகளின் கையில் ஏறி விளையாடும் போது, என் கணவர் கூடத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
இப்படியாக எங்கள் வாழ்க்கையில் புகுந்த வெள்ளெலி, ஒரு நாள் திடீரென்று விளையாடுவதை நிறுத்தி விட்டு, சோகமாக ஒரே இடத்தில் படுத்திருந்தது. இதைப் பார்த்த என் மகளின் கண்களில் கண்ணீர். இன்டர்நெட்டிலும் நூல் நிலையப் புத்தகங்களிலும் பார்த்தும் எங்களால் என்ன பிரச்சனை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு நாள்கள் இப்படியே கழிந்தது. என் மகள் மிருக வைத்தியரைப் பார்க்க வேண்டுமென்று கேட்டாள். எங்களுக்கோ, சிறிய எலிக்காகப் பணம் செலவழித்து மருத்துவரிடம் போக வேண்டுமா என்று ஒரு பக்கம்; ஆனாலும் பாவம் அதுவும் ஒரு உயிர்தானே என்று தர்மசங்கடமான எண்ணம். இதைப் பார்த்து, எங்களுடைய மகன், தன்னுடைய உண்டியலை எடுத்துக் கொண்டு வந்து மருத்துவத்துக்கு வேண்டிய பணத்தை இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். தயவு செய்து டாக்டரிடம் போகலாம் என்றதும் மிகவும் வெட்கமாகி விட்டது. சரியென்று மிருக மருத்துவருக்கு போன் செய்ய, அவர்கள் அடுத்த நாளைக்குக் கூட்டிக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டனர்.
அன்று இரவே அந்தச் சிறிய எலி மூச்சை நிறுத்திவிட்டது. காலையில் எழுந்ததும் எலியின் இறந்த உடலைக் கண்டு குழந்தைகள் கண்ணீர் விட்டனர். எங்களுக்கும் மனதைப் பிசைந்தது. அதை சகல மரியாதைகளுடன் எங்கள் தோட்டத்திலேயே புதைத்தோம்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று முன்பு படித்தது அன்று ஏனோ என் நினைவுக்கு வந்தது. அந்த வெள்ளெலி எங்கள் நினைவில் என்றென்றும் தங்கி விட்டது.
அதன் பிறகு நாங்கள் வாங்கிய மூன்று எலிகளுக்குப் பின்பும் பல சுவாரசியமான கதைகள் உண்டு...
லதா, சிகாகோ |
|
|
More
தமிழ் வகுப்பு
|
|
|
|
|
|
|