Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
கொன்றன்ன இன்னா செய்யினும்...
- உமா அருண்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeநான் அன்று ஒரு தீர்மானத்துடன் எழுந்தேன். இந்த 66 வயதில் தனியாக இருக்கும் எனக்கு, எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யும் சுதந்திரம் இருந்தாலும் சளைக்காமல் காலையில் எழுந்து வேலை செய்வது என்னுடைய வழக்கம். நான் என் வழக்கங்களின் அடிமையென்றே சொல்லலாம். நான் இருப்பதோ காஞ்சீபுரத்திலிருந்து செய்யாறு செல்லும் வழியில் உள்ள ஒரு சிறு கிராமம். நான் இருப்பதை வைத்து என்னை வாழ்நாள் முழுக்க கிராமவாசி என்று நினத்துவிட வேண்டாம். 5 வருடங்களாக என்னுடைய பூர்விகக் கிராமமான இக்கிராமத்தில் சென்னையிலிருந்து நிரந்தரமாக வந்து தங்கி விட்டேன். இந்த வீடு, எனது தந்தையின் புராதன வீடு.

உள்ளறையிலுள்ள சி.டி. ப்ளேயரில் சுப்ரபாதம் போட்டுவிட்டுத் தாழ்வாரத்தைத் தாண்டி முற்றத்தில் உள்ள தண்ணீர் அண்டாவை ஒரு நோட்டம் விட்டுவிட்டு, புழக்கடைக்கு வந்தேன். கிணற்றுப் பக்கத்தில் உள்ள துணிக்கல்லின் மேல் காபிக் கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் மதுரக் குரலோடு கிணற்றின் பக்கத்திலிருந்து வைகறை மல்லி மணமும் சேர்ந்து மனதுக்கு ஒரு இதத்தை அளித்தது. அடுக்கு மல்லிச் செடியும் இருவாட்சியும் சேர்ந்து எனது கவனத்தைக் கவர்ந்தன. அதன் பக்கத்திலுள்ள அந்தி மந்தாரை செவ்வந்தி நிறத்தில் மாலையில் பூத்துவிட்டு காலையில் சோம்பேறித்தனமாகக் கண் மூடித் தூங்கிக் கொண்டிருந்தது. மல்லியோ அந்தியில் பூத்து காலையிலும் உற்சாகத்தோடு குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தது. கிணற்றின் மறுபக்கம் உள்ள நெருப்புக் கொன்றை அதன் பெயருக்கு ஏற்றால் போல் மரமெல்லாம் கொழுந்துச் சிகப்பாக மலர்ந்திருந்தது.

அந்தி மந்தாரை செவ்வந்தி நிறத்தில் மாலையில் பூத்துவிட்டு காலையில் சோம்பேறித்தனமாகக் கண் மூடித் தூங்கிக் கொண்டிருந்தது. மல்லியோ அந்தியில் பூத்து காலையிலும் உற்சாகத்தோடு குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தது. கிணற்றின் மறுபக்கம் உள்ள நெருப்புக் கொன்றை அதன் பெயருக்கு ஏற்றால் போல் மரமெல்லாம் கொழுந்துச் சிகப்பாக மலர்ந்திருந்தது.
சாரதி இறந்தபின் என் மனதை மாற்றுவதற்கு, எனது இயற்கை ரசினைதான் உதவியது. என் பெண் கலிபோர்னியாவில், பையனோ டிட்ராய்ட்டில். சென்னையில் சாரதி இல்லாத தனிமை என்னைக் கொடுமைப்படுத்தவே, என் தந்தையின் விற்றுவிட்ட வீட்டை மறுபடியும் வாங்கிச் செப்பனிட்டுக் குடி புகுந்தேன். இங்கு தூரத்துச் சொந்தக்காரர்கள் தவிர யாருமில்லை. சென்னை வீட்டை விற்று இக்கிராமத்தில் வீடு வாங்கி மீதியைத் திருவத்திபுரத்தில் இருந்த வங்கியில் வைத்திருந்தேன். எல்லோரும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என மறைமுக மாகப் பேசினார்கள். "பத்மா, என்ன சூடா காபியோட, மறுபடியும் இலை, தழை, பூவா. உன் உலகமே தனிதான். உன்னோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் இப்போதெல்லாம் வானம், பூமி, பூவுன்னு பார்க்கத் தோண்றது" என்றாள் பங்கஜம், என் நெருங்கிய தோழி. நான் எழுந்து சமையலறைக்குச் சென்று, அவளுக்குக் காபி போட்டு எடுத்து வந்தேன்.

எங்களுக்குள் இது ஒரு பழக்கம். காலை காபி என் வீட்டில், மாலை காபி அவளது வீட்டில். அவளும் நானும் 5 வருடங்களாகப் பழக்கம். அவளும் என்னை மாதிரித் தனி ஆள்தான். மருமகளுடன் சதா சச்சரவோடு இருக்கப் பிடிக்காமல் இக்கிராமத்தில் தன் கணவனின் பூர்வீக வீட்டுக்கு வந்துவிட்டாள். அவளுக்கு 63 வயது. பங்கஜத்தின் உடம்பு சரியில்லை என்றால் நானும், எனக்கு ஒன்று என்றால் அவளும் பார்த்துக் கொள்வோம். ஒருநாள் அவள் காலையில் வராமல் போகவே, அவள் வீட்டுக்குச் சென்றால் அவள் உடம்பு அனத்திக் கொண்டிருந்தது. நான்தான் டாக்டரைக் கூப்பிட்டது, ஒரு வாரம் அவளைப் பார்த்தது. சாரதியின் திவச நாளன்று நான் மிகவும் கவலையோடு இருப்பதை மாற்ற, அவள் நாள் முழுவதும் பேசிக்கொண்டே என் கவனத்தைத் திருப்புவாள். நாங்கள் இருவரும் கோயில், கடை, வங்கி என ஒன்றாகச் செல்வோம்.

நேற்றிலிருந்து மனதைத் துளைத்துக் கொண்டிருந்த விஷயத்தை அவளுடன் அலசினேன். அவள் எனது கருத்தை வெகுநேரம் கழித்துதான் ஆமோதித்தாள்.

"பங்கஜம், திருவத்திபுரத்தில் வங்கிக்குப் போகணும், வரியா என்னுடன்?" என்றேன். "இங்கே நாள் பூரா என்னத்தை செய்யப் போறேன், உன்னோட வந்தா பொழுதாவது போகும்" என்று கூறிப் புறப்பட்டாள். அன்று வங்கி சென்று, சென்னை மாண்டியத் ரோட்டில் இருக்கும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரில் காசோலை வாங்கினேன். திரும்பி வரும்போது, அந்தி வானம் பரங்கிக்காய் நிறத்தில் சிவந்து ஜொலித்தது.

அந்தச் செவ்வானம், எனக்கு பர்மாவில் பகான் என்னுமிடத்தில் அடுக்கடுக்காக இருக்கும் புத்தக் கோயில்களை நினைவுபடுத்தியது. ஒரு தொலைவிலிருந்து அந்திநேரத்தில் மணியோசையுடன் பார்த்தால், வாழ்க்கையில் இயற்கை அன்னையின் விந்தைகளைப் பார்க்க வேண்டியது எவ்வளவோ எனத் தோன்றும். சாரதியுடன் அங்கே சென்றபோது அந்த இடம் செவி, கண், மனதுக்கு விருந்தாக இருந்தது. அச்செவ்வானமும், வங்கியின் காசோலையும் என் நினைவுகளை பர்மாவை நோக்கி மீண்டும் இழுத்துக்கொண்டு ஆயிரம் மைல் வேகத்தில் ஓடின.

நான் இந்த கிராமத்தில் வறுமைக் கோட்டுக்குச் சற்றே மேல் உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையின் கடினங்களை சிறு வயதிலேயே உணர்ந்தவள். என் வீட்டிலிருந்து முன்று தெரு தள்ளிப் பார்த்தசாரதியின் வீடு. அவர்கள் குடும்பம் என் குடும்ப நிலைமையைவிடச் சுமாரான நிலையில் இருந்தது. என் அக்கா எட்டாவது வரைதான் படித்தாள். அக்காலத்தில் அதுவே பெரிய விஷயம். நான் அடம்பிடித்து 11வது படித்துக் கொண்டிருந்தேன். அண்ணாவும் பெரிதாகப் படிக்கவில்லை. அவன் கிராமத்தில் குத்தகை விவசாயம் செய்து கொண்டிருந்தான். அக்காவோ பக்கத்துக் கிராமத்தில் விவசாயம் செய்யும் ஒரு தூரத்துச் சொந்தக்காரருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.

சாரதி இரண்டாவது பையன். மிகவும் புத்திசாலி படிப்பில், சாமர்த்தியத்தில், பேச்சில். அவன் பேசப்பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவன் அரசாங்க உதவித் தொகையில் எம்.காம். படித்தான். படித்த கையோடு பர்மா-ஷெல் என்னும் பிரிட்டிஷ் எண்ணெய்க் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை கிடைத்தது. பர்மாவுக்குச் செல்லுமுன் அவன் அம்மாவிடம் அக்கிராமத்தின் ஒரு பணக்காரப் பெண்ணின் குடும்பம் சம்பந்தம் பேச வந்தது. சாரதி அப்பெண் பணக்காரப் பெண்ணாக இருந்தாலும் படிக்காதவள், பத்மாவதியைத் தான் (அதாவது என்னைத்தான்) மணம் செய்வேன் என்றான். அக்கிராமத்துப் பெண்களிலேயே அப்போது நான்தான் நிறையப் படித்தவள். நான் படிக்கும்போது மிகவும் எதிர்ப்பு மற்றவர்களிடமிருந்து. அவர்கள் பெண்கள் படிக்காமல் நான் மட்டும் படிப்பதில் ஒரு பொறாமை. "இவள் படித்தால், இவளுக்கு ஏற்றாற்போல் மாப்பிள்ளை கிடைக்கவேண்டுமே" என்பார்கள். அப்பாவோ "அவள் தலையில் என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்" என்பார். வரவேண்டிய லக்ஷ்மியை உதறிவிட்டதாகச் சாரதி அம்மாவுக்குக் கோபம். நல்ல வேளையாக எனக்கும் சாரதிக்கும் கல்யாணம் ஆனவுடன் நான் பர்மா சென்றுவிடவே எல்லோரும் கொஞ்சம் அமைதி அடைந்தார்கள்.
ரங்கூன் வந்திறங்கினேன். பர்மாவைப் பற்றி இங்கு கூற வேண்டும். பர்மா ஒரு ரம்யமான இயற்கைச் செல்வச் செழிப்புள்ள அழகான நாடு. எண்ணெய்ப் பனை மரங்கள், கடற்கரைகள், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், தேக்கு மரங்கள், உயர்மதிப்புடன் விளங்கும் நகைக்கற்கள், இன்னும் பலப்பல, துத்தநாகம், தாமிரம் என உலோகங்கள் இருக்கும் நாடு. அப்போது, பர்மா யாவரையும் இரு கரங்களையும் நீட்டி வரவேற்றது, இக்காலம் மாதிரி இல்லை. வெளிநாட்டாரை வித்தியாசம் பார்க்காமல் வரவழைத்தது நாட்டு முன்னேற்றத்துக்காக. பர்மா இங்கிலாந்து அரசின் காலகட்டத்தில் இந்தியாவுடன் ஓர் இணைப்பாக, இந்தியப் பகுதியாகக் கருதப்பட்டு வந்தது. இந்திய சுதந்திரத்திற்கு அடுத்த வருடம் பர்மா தனி நாடாக்கப்பட்டதால், இந்தியர்கள் வர போக இருந்தார்கள்.

சாரதியும் நானும் சாரதியின் படிப்பு ஒன்றையே நம்பி பர்மாவில் காலடி வைத்தோம். என் அப்பா "வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் நிலைப்பதில்லை" என்பார். பல்லைக் கடித்துக் கொண்டு மொழியையும் உணவையும் சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்தேன். பர்மா பாஷையான பாமார் எனக்குப் புரியவில்லை. தெரியவில்லை என்பதால் அவர்கள் ஏதோ கத்துகிற மாதிரி, சண்டை போடுகிற மாதிரி இருக்கும். என்ன மூடத்தனம்! சாரதி பிரிட்டிஷ் கம்பெனி என்பதால் ஆங்கிலம் பேசியே சமாளித்தாலும் எனக்குக் காய்கறி மற்றும் பொருட்கள் வாங்கப் பாமார் மொழி தேவைப்பட்டது. மெது மெதுவாக சாடைமொழியிலிருந்து பாமார் கற்றுக் கொண்டேன். மொழி புரிய ஆரம்பித்ததும் மேன்மேலும் சராசரி பர்மியரிடம் என்னைப் பேசத் தூண்டியது.

ஓமனா என் பக்கத்து வீட்டுக்கு அவளது கணவனுடன் கோழிக்கோட்டிலிருந்து வந்து சேர்ந்தாள். அவள் கணவனும் சாரதி மாதிரி ஒரு அக்கவுண்டண்ட். அவளின் குடும்பமும் என் குடும்ப நிலைமையில் இருந்தது. நாங்கள் இருவரும் குறுகிய காலத்தில் மிக நெருங்கிய தோழிகளானோம். சம்பளம் வரவர அதை எப்படிச் சேமித்து இனி வறுமைக்கோட்டுக்குக் கீழே மீண்டும் போகவே கூடாதென்ற முடிவோடு சிக்கனமாக இருந்தோம். ஓமனாவோ பர்மா தேக்குமரச் சாமான்களாக சேர்த்தாள். பீரோ, கட்டில், நாற்காலிகள், பல மேசைகள் என வீடு முழுக்க. பீங்கான் பூச்சாடிகள் என அலங்காரச் சாமான்கள். அடிக்கடி வீட்டில் மற்ற பர்மா ஷெல் இந்தியர்களுக்கு விருந்துகள். வெளிநாட்டில் யாவரும் கேளிர் தான். அதற்காக எப்போதும் கேளிக்கை என்பது எனக்கு அதிகமாகப் பட்டது. கருத்துக்கள் வேறுபட்டாலும் நாங்கள் இருவரும் தோழிகள். அவளது விருந்துகளில் தடபுடல் சமையலில் அவளுக்குச் சென்று நான் உதவுவேன். அவள் திரும்பிச் செல்லும் போது எல்லாத் தேக்குச் சாமான்களையும் கப்பலில் எடுத்துச் செல்லும் எண்ணம். பர்மாப் பணமான கயட்டுகளை அடுக்கடுக்காகச் சேர்த்தாள்.

மனித உள்ளமே கெட்ட சம்பவங்களைத்தான் நினைவில் வைத்திருக்கும். நடந்த நல்லவைகளைச் சுலபத்தில் மறந்துவிடும். எதை வேண்டுமானாலும் என்னால் மறந்துவிட முடியும். ஆனால் என் பர்மா வாழ்க்கையையும் அதனால் பிறகு வந்த வாழ்க்கையையும் என்னால் மறக்கவே முடியாது
பர்மா விலை மதிப்புள்ள நகைக்கற்கள் வளமாக உள்ள நாடு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தெரிந்த நகைக் கடையில் சென்று முதல்முதலாக விலை உயர்ந்த பழுத்தசிவப்பு கெம்புக் கற்களை உதிரியாக வாங்கினேன். ஒரு வெல்வெட் சுருக்குப்பையில் நகைக்கடைக்காரர் அவற்றைப் போட்டுக் கொடுக்க வாங்கி வந்தேன். சாரதியும் ஓமனாவும் அதை வீணென எண்ணினார்கள். முன்னே பின்னே நான் மிகுந்த நகைகளைப் பார்த்ததில்லை. இன்னும் வேகமாகப் பல அளவுகளில் வைரம், மரகதம், கெம்புக்கற்கள் எனப் பத்து சிறு சுருக்குப்பைகளில் சேர்த்தேன்.

பல இடங்கள் சுற்றிப் பார்த்தோம். அப்படிப் பார்த்த இடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது நான் முன்னமே சொன்ன பகான் என்னுமிடம். அங்கிருந்த புத்தக் கோயில்கள், இவர்களுக்கு எப்போதாவது கோபம் வருமா என வியக்க வைக்கும் சாது முகத்துடன் புத்தம் சரணம் கச்சாமி சொல்லும் புத்த பிக்ஷுக்கள், இயற்கைச் சூழல்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தோம்.

1962ம் வருடம். ராணுவ ஆட்சி வந்தது. எல்லா வெளிநாட்டவரையும் பர்மாவை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு தனிச் சாலை வழியாக 5 மணி நேரம் நடையாக நடந்து சென்று கப்பல் பிடித்து மெட்ராஸ் வந்து சேர்ந்தோம். என் கையில் எடுத்து வந்ததெல்லாம் எங்களது துணிகளும் நகைக்கற்களும்தான். ஓமனாவின் குடும்பம் எல்லாச் சாமான்களையும் பர்மாவில் விட்டுவிட்டு, பர்மாப் பணமான கயட்டுகளுக்கு மதிப்பு இல்லாமல் வெறுங்கையோடு இந்தியா வந்து சேர்ந்தார்கள்.

இந்தியாவுக்கு வந்தவுடன் எனக்கு நகைக் கற்கள்தாம் உதவின. சாரதிக்கும் உடனே வேலை கிடைத்தது. மெட்ராஸ் அடையாறில் சில நகைக்கற்களை விற்று வீடு வாங்கினோம். சாரதி படிப்படியாக முன்னேற, பெண், பையன் கல்யாணத்திற்கு, மிச்சமிருந்த வைரக்கற்களைக் கொண்டு வைர செட் போட்டோம். எனக்குச் சாரதி தங்க நகைகள் வாங்கினாலும், எனக்கென்று எதுவும் அந்தக் கற்களைக் கொண்டு நகை செய்யவில்லை, பர்மா நினைவாகக் கொஞ்சம் கற்கள் மிஞ்சி இருந்தன.

இன்று அக்கற்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். அந்தப் பணத்தையும் காசோலை ஆக்கி ரெட் கிராஸுக்கு அனுப்பினேன்.

பர்மா மக்கள் நர்கீஸ் புயலில் கஷ்டப்படுவதைப் படித்து மனது உடைந்தேன். அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய எண்ணி, 25 லட்சம் ரூபாய் செஞ்சிலுவைக்கு அனுப்பிவிட்டேன். பர்மாவினால்தான் நான் வறுமைக்கோட்டிலிருந்து, ஒரு சராசரி வாழ்க்கையைவிட நல்ல நிலைமையில் இன்று இருக்கிறேன். என் குழந்தைகளும் தான். நான் மிச்சமிருந்த விலையுயர்ந்த நகைக்கற்களை விற்றுவிட்டேன் என என் பெண் கேள்விப்பட்டாள். மிகப் பழமை பொருந்திய கற்களை விற்றேன் என்பது அவளுக்குப் பிடிக்காது. ஆனால் அவளைவிட அக்கற்கள் பர்மா மக்களுக்கு இப்போது தேவைப்பட்டன.

பங்கஜம் "பர்மா உன்னைத் துரத்தி அனுப்பியதில் உனக்குக் கோபமில்லையா? எவ்வளவு துன்பம் கொடுத்தார்கள், எவ்வளவு அல்லல்பட்டு இந்தியா வந்ததாய்ச் சொல்வாய், அதை மறந்து விட்டாயா?" என அன்று காலை கேட்டாள்.

நானோ "மிலிட்டரி ஆட்சி எங்களைத் துரத்தி ஒன்றுமில்லாமல் அனுப்பியது ஆனால் பர்மியர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள், பாவம் என்ன செய்வார்கள். பர்மா இல்லையென்றால் என் வாழ்க்கையே வேறுவிதமாக முடிந்திருக்கும். மனித உள்ளமே கெட்ட சம்பவங்களைத்தான் நினைவில் வைத்திருக்கும். நடந்த நல்லவைகளைச் சுலபத்தில் மறந்துவிடும். எதை வேண்டுமானாலும் என்னால் மறந்துவிட முடியும். ஆனால் என் பர்மா வாழ்க்கையையும் அதனால் பிறகு வந்த வாழ்க்கையையும் என்னால் மறக்கவே முடியாது" என்றேன்.

எங்கிருந்து என் வாயில் தத்துவம் வருகிறது என்று யோசித்தேன். "ஓ, வள்ளுவர்! அவர்தானே 'ஒருவர் உன்னைக் கொலை செய்தாற்போன்ற தீமை செய்தாலும் அவர் செய்த ஒரே ஒரு நன்மையை நினைத்தால் போதும், அவர்மீதான கோபம் மாறிவிடும்' என்று கூறியிருக்கிறார்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்றுஉள்ளக் கெடும்

'இதைத்தான் நான் என்னுடைய மொழியில் சொல்லியிருக்கிறேன்!' என்று நினைத்துக் கொண்டேன்.

என்னுடைய இந்த தானத்தைப் பற்றி என் பெண்ணிடமும் பையனிடமும், அவர்களுக்குப் பிடிக்காது என அறிந்தும், சொல்வதற்காகத் தொலைபேசியை எடுத்தேன்.

உமா அருண்
More

மாத்தாடு மாத்தாடு மல்லிகே
Share: 




© Copyright 2020 Tamilonline